அப்படி தன் தொன்மத்தில் உள்ள பெண் தெய்வங்கள் எத்தனை அம்பை, திரௌபதி, கண்ணகி, மணிமேகலை எனப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். சிறு தெய்வங்களில் இசக்கி, காட்டாளம்மன், பொன்னிறத்தாள், பொம்மி அம்மன் என 500 க்கும் மேற்பட்ட தெய்வங்கள்.
ஆனால் எல்லா தெய்வங்களுக்கும் ஏதோ ஒரு கணத்தில் மன்னிக்கும் கரமென ஒன்று தேவைப்படுகிறது. அந்த அஞ்சலி முத்திரை காட்டி அருள்பாலிக்கும் ஒரு கரம் தான் அவர்களை தெய்வமாக்குகிறது என நினைக்கிறேன். சதீஷ்குமார் சீனிவாசனின் இந்த கவிதையில் அன்றைய தினத்தை மன்னித்து செல்லும் பெசண்ட் நகர் அழகி போல.
பெசன்ட் நகர் அழகி
அவளைப் பார்த்தால் வீடிருப்பவள் போலத் தோன்றவில்லை
அந்த நாள் என்வரையில்
ஒரு மோசமான நாள்
அரை கிலோமிட்டரில் கடல் இருந்தது
விழுந்து சாவது நல்ல வழியாகப் பட்டது
ஆனால்
சாவதற்கு பதில் சிகரெட் குடித்துக்கொண்டிருந்தேன்
அள்ளி முடியாத கூந்தலுடன்
அருகில் வந்தவள்
ஒரு ரூபாய் தேங்காய்
எண்ணெயைக் காட்டி
வாங்கித் தரச் சொன்னாள்
அது யாசகக் குரலுமல்ல
வாங்கித் தந்த பிறகு
பாஞ்சாலி போல அள்ளி முடியாத கூந்தலுடன்
சாலையைக் கடந்து சென்றாள்
அவளுக்கு இந்த நகரத்தை அழிக்கும் நோக்கமெதுவும் இருந்த மாதிரி தோன்றவில்லை
உலகை
தினமும் மன்னிப்பவள் போல
எண்ணெய் மினுங்கிய கூந்தலை
ஒருவழியாய் அள்ளி முடிந்தாள்
இப்படியாக
அவள்தான் அன்றைய நாளை
மன்னித்தாள்
***
மேற்சொன்ன கவிதையின் அதே மனநிலையில் எழுதப்பட்ட இன்னொரு கவிதை ‘தணிந்த சாபம்’. தமிழ்நாட்டில் வெயில் நிலத்தில் வளர்ந்தவர்களுக்கு மட்டுமே அர்த்தப்படும் கவிதை இது. கவிஞர் மதார் வெயிலை விளையாட்டாக்கி அதில் முகம் கழுவி அதனை காத்தாடியாக பறக்க விடுகிறார். சதீஷ்குமார் சீனிவாசன் கவிதையில் வெயிலுக்கான சாபத்தை தன் சிசுவுடன் பேருந்துக்காக காத்திருக்கும் பெண்ணவள் தணித்து வைக்கிறாள்.
சதீஷ்குமாருக்கு அன்றைய நாளை மன்னிக்கவும், அதன் சாபத்தை தீர்க்கவும் ஒரு பெண்ணின் (அன்னையின்) கரம் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவை குருதிவிடாய் கொண்டு முற்றழிந்து ஓய்ந்த பின் தெய்வம் கொள்ளும் சாந்தமாக இருக்கலாம் முதல்கவிதையை போல். அல்லது தன் சிசுவின் மீது கருணைக் கொண்ட அன்னையின் தோளாக இருக்கலாம்,
தணிந்த சாபம்
எல்லோரும் வெயிலில் மிதந்தபடி
வெயிலை சபித்துக்கொண்டிருந்தார்கள்
தோளில் தன் சிசுவுடன்
பேருந்துக்காக வீற்றிருந்தாள்
எங்கும் நிழலே இல்லை
சுற்றி முற்றி பார்த்த வெயில்
சிசுவுடன் அவளது தோளில்
சாய்ந்துகொண்டது
சிசுவோடு சேர்த்து வெயிலையும் தட்டிக்கொடுத்தாள்
வெயிலுக்கு சாபம் தணிந்தாற்போல் இருந்தது.
***
மேலும் சில கவிதைகள்,
ஞாபகம் பிளந்துகொண்டது
எரியும் வெயில் பொழுதில்
ஒரு இருளை சுமந்தபடி நடப்பது
பிரத்யேகமான விசயமாகப்படவில்லை
ஹாரன் ஒலியில்
ஞாபகம் பிளந்துகொள்கிறது
வாழ்க்கைப்பற்றிய உபந்நியாசங்கள்
உயரமார கட்டிடங்களின் நிழல்
ஒரு தனித்த இலைமீது விழுவது மாதிரி
விழுகிறது
எந்தப் பக்கமும் தானே
நகரமுடியாத இலையை
அவ்வப்போது வீசும் காற்று
நான்கு திக்குகளிலும் சற்றே
புரட்டிப் போடுகிறது
இருளிலிருந்து இருளுக்காய்
இருளில் பறப்பதில்
ஒரு அற்ப சந்தோசம்
பிளந்துகொண்ட ஞாபகம்
வழியவோ ? என ததும்பி நிற்கிறது
யதார்த்தத்தின் ஒரு சிறு கல்லை
அதில் விட்டெறிந்தேன்
இப்போது
குறுதியாய் வழிகிறது
வழியாது என்று நினைத்த
சொந்தக் குருதி
***
உவர்ப்பின் சாரம்
ஒரு எளிய மனிதன்
பேருந்தின் ஐன்னலோர இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்தான்
நான் அவனருகில் அமர்ந்திருந்தேன்
போகிற ஊரின் பாதி தூரத்தில்
தூங்கிக் கொண்டிருந்தவனின் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது
தூக்கம் கலையாது
கண்ணீர் சிந்துபவனை
இப்போதுதான் முதன் முதலாக பார்க்கிறேன்
கனவில் எந்த நினைவை சந்தித்தானோ
கண்ணீர் சிந்தும்படி
எந்த மனதிலிருந்து வெளியேற்றினார்களோ
எந்த உடலிலிருந்து விலக்கிவைத்தார்களோ
எந்த அறையிலிருந்து
துரத்தினார்களோ
கண் மூடிய ஒரு சிற்பம்
கண்ணீர் சிந்துவது போலத்தான்
கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தான்
இன்னும் பாதி தூரம் இருக்கிறது
போகிற ஊருக்கு
அவன் கண்ணீரைப் பார்த்து
நானெதிலும்
என்னை நினைக்காமல்
ஊர் சேரவேண்டும்
சற்று நேரத்தில்
இடம் மாறி அமர்ந்துகொண்டேன்
***
பாதி மனதின் தீ
தீதான் அது
ஆனால் அதில் பெரிதான வெளிச்சங்களில்லை
வெப்பம் இல்லவே இல்லை
ஒரு சிகரெட்டைக் கூட அது பற்றவைக்கவில்லை
அந்தத் தீக்கு
தன்னளவிலான
நீதியோ அநீதியோ இல்லை
தீயின் நிழல் மாதிரி
தீயின் நிழல்மாதிரி
ஒரு தீதான்
என் காலம் ஆள்கிறது
வழியறிய என
உயிரின்
வெட்பமறிய என
பாதி மனதோடு
ஆளோடு ஆளாக போகவேண்டியிருந்தது
***
சதீஷ்குமார் சீனிவாசன் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment