உறைபனி மூடிக்கிடக்கும் தகப்பன் - நவீன்.ஜி.எஸ்.எஸ்.வி.

விக்ரமாதித்யன் பற்றிய கட்டுரையில் ஜெயமோகன் இப்படி குறிப்பிட்டிருந்தார். “இல்லாமலாகிப்போன தன் குடும்பத்திற்கு நிகராக ஒரு தெய்வ குடும்பத்திஅக் கொண்டு வந்து வைக்கிறாரோ என்று கூடத் தோன்றும். திரிந்து கசந்து போன அன்னைக்குப் பதிலாக ஒருபோதும் திரியாத பாற்கடலாகிய உமையை எண்ணிக் கொள்கிறாரோ என்று தோன்றுகிறது. கைவிட்ட தந்தைக்கு பதிலாக அம்மைக்கு அடங்கி அவள் சொல்லில் அமைந்த தந்தையை கண்டடைகிறாரா?”

இந்த வரிகளை வாசித்துவிட்டு கீழுள்ள ஸ்தம்பதம் கவிதையை வாசிக்கும் போது மனதில் ஒரு துணுக்குரல் எழுகிறது. விக்ரமாதித்யன் சதா சிவனை ஏன் சாடுகிறார் என்று கேட்டால் ஜெயமோகன் சொன்னது தான் பதிலாக இருக்குமோ? இந்த ஸ்தம்பிதம் கவிதையை வாசிக்கும் போதே என் மனதில் ஒரு படிமம் உருவாகுகிறது. அது சிதைந்து கொண்டிருந்த விக்ரமாதித்யன் குடும்பத்தை நோக்கி முதுகை காட்டி அமர்ந்திருக்கும் அவர் தந்தையின் சித்திரம். வீட்டை விட்டு தன்னை வெளியேற்றி கொண்ட ஒவ்வொரு தந்தையரின் சித்தரம் அது. 

*** 

ஸ்தம்பிதம்

வெயிலடிக்கிறது
மழை பெய்கிறது
அவனுக்கொன்றுமில்லை

புயல் வீசுகிறது
பூகம்பம் வெடிக்கிறது
அவனுக்கொன்றுமில்லை

அரசுகள் கவிழ்கின்றன
ஆட்சிகள் மாறுகின்றன
அவனுக்கொன்றுமில்லை

கோபுரங்கள் சாய்கின்றன
குடமுழுக்குகள் நடக்கின்றன
அவனுக்கொன்றுமில்லை

தெய்வங்கள் தட்டழிகின்றன
பிசாசுகள் கூத்தாடுகின்றன
அவனுக்கென்ன

கனவுகள் கலைகின்றன
நினைவுகள் பிசகுகின்றன
அவனுக்கென்ன

தேவதைகள் அழுகின்றன
மோகினிகள் சிரிக்கின்றன
அவனுக்கென்ன

உறைபனி மூடிக்கிடக்கும்
உயிர்களுள் ஒருவன்தான் அவன்

- விக்ரமாதித்யன்

'ஓம் சக்தி'
ஜூலை 2001
 

***

நம் வாழ்வில் எப்போதும் நமக்கு ஒரு கை குறைந்து கொண்டே இருக்கிறது. நாம் வாழ்வை இயல்பாக வாழ்வதற்கு கூட அந்த ஒரு கை குறைகிறது அல்லது அவ்வாறு ஒரு வாழ்வை எண்ணுவதற்கு ஒரு கை குறைகிறது. நாம் எப்போதும் ஒரு கை வந்து உட்கார்ந்தால்தான் உருப்படியாய் ஏதாவது செய்யலாம் எனக் காத்துக் கொண்டிருக்கிறோம். உயிர் வாழ்வின் ஒவ்வொரு கணமும் அந்த கிட்டாத ஒரு குறைந்த கை நோக்கியே.

***

ஒரு கை குறைகிறது

ஒரு கை குறைகிறது
இருக்கிறவர்களுக்கு
ஒரு கை குறைகிறது

யாராவது வருவார்களா என்று
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
ஒரு கை குறைகிறது

நிரம்ப நேரமாக
காத்துக்கொண்டே இருக்கிறார்கள்
ஒரு கை குறைகிறது

ஒரு கை குறைகிறது
ஆரம்பிக்கவே முடியாமல்போய்
அவஸ்தைப் படுகிறார்கள்

ஒரு கை குறைகிறது
உட்கார்ந்திருக்க முடியாமல்
பதற்றத்துடன் தேடுகிறார்கள்
ஒரு கை குறைகிறது
இருந்த இடத்திலிருந்து
எழுந்தே விட்டார்கள்

நீங்கள்
ஒரு கையாக வரமுடியுமா
நான்
ஒருகையாகப் போகட்டுமா
அல்லது
அவனை ஒரு கைக்கு
அனுப்பி வைக்கலாமா

ஒரு கை இல்லாமல்
ஒன்றும் நடக்காது

ஒரு கை வந்து உட்கார்ந்தால்தான்
உருப்படியாய் ஏதாவது செய்யலாம்

ஒரு கை குறைகிறது
ஒரு கை குறைகிறது
ஒரு கை குறைவாகவே இருக்கிறது

- விக்ரமாதித்யன்

***

கவிஞர் விக்ரமாதித்யன் விக்கி பக்கம் 

விக்ரமாதித்யன் கவிதைகள் அமேசானில் வாங்க: விக்ரமாதித்யன் கவிதைகள்

 

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தேடு

Most Popular

Blog Archive