பறவை அலகும் இரவின் இசையும் - ஈரோடு கிருஷ்ணன்

பொதிகளையும் பெட்டிகளையும் சிறு டப்பாக்களையும் திறக்கும் உபாயத்தை அதிலேயே எழுதி இருப்பார்கள். எண்களை சுழற்ற வேண்டும், திறப்பதற்கு கத்திரிக்க வேண்டும், பித்தானை அகற்ற வேண்டும், zip பை வலிக்க வேண்டும், விரல் நகத்தால் நிமிண்ட  வேண்டும் என்பது போல. அரிதாக ஷூ பாலீஷ் பெட்டிகள் போன்ற சில சிறு பெட்டிகளை மூடியுள்ள திசையிலேயே மேலும் அழுத்த வேண்டும் டக் என சிறு சத்தத்துடன் திறந்து கொள்ளும். அபி கவிதைகள் அவ்வாறு தான். ஒரு வாசனை திரவிய குடுவையின் உச்சியில் ஒரு சிறு அழுத்து. கணப் பொழுதில் காற்றில் நறுமணம் பரவும். வாசனை அருவமானது, நுகர்வு ஸ்தூலமானது.

"எதன் முடிவிலும்" கவிதை ஒரு தரிசனம். அதன் பின் தரிசித்தவனின் அனுபவம். அறிதலின் பாதை துவங்கும் முன்னே எதிர்பார்ப்பில் நம் மனம் மகிழும். பின்னொரு கட்டத்தில் பயணம் நம் தேர்வல்ல அதன் தேர்வு என உணர்வோம். துலங்கா இப்பாதையில் ஏட்டறிவு முன்னோர் வழிகாட்டல் அனைத்தும் பாதை மாற்றும், பின் நாமே கண்டுகொள்வோம். இலக்கை அடைந்த பின்னும் கனியை புசித்த பின்னும் ஒரு நிறைவின்மை இருக்கும், ஒரு நிறைவும் இருக்கும். நாம் மாறியது போலவும் மாறாதது போலவும் தோன்றும். பெற்ற அனுபவம் நெல்லிக்காய் தின்று நீர் அருந்துவது போல. 

இக்கவிதையில் இரண்டு சிறகுகள் என்பது நம் பிறப்புக்கு முன் கடந்த காலம் எனவும் இறப்புக்கு பின் எதிர்வரும் காலம் எனவும் இடையில் ஒரு பறவை அலகாக நாம் எனவும் வாசிக்க இடமுண்டு. 

***

எதன் முடிவிலும்

நினைக்க நினைக்க

நா ஊறிற்று

பறிக்கப் போகையில்


ஓ, அதற்கே எவ்வளவு முயற்சி!

இரண்டு சிறகுகள்

இங்கே கொண்டுவந்துவிட,

யார்யாரோ கொடுத்த

கண்களைக்கொண்டு வழிதேடி,

இடையிடையே காணாமல்போய்,

என்னைநானே

கண்டுபிடித்துக் கொண்டு

கடைசியில்

மங்கலான ஒருவழியில்

நடந்தோ நீந்தியோ சென்று சேர்ந்து

முண்டுமுண்டாய்ச்

சுளுக்கிக்கொண்டு நிற்கும்

அந்த மரத்தில் என்னை ஏற்றி

அதை பறிக்கச் செய்து


ஏறிய நானும்

கீழ்நின்ற நானும்

நாவில் வைத்தபோது

குடலைக் கசக்கும் கசப்பு


கீழே எறிந்துவிட்டு

மறுபடி நினைத்தால்

நினைக்க நினைக்க

நா ஊறுகிறது.

- அபி

***

"நீலாம்பரி" இரவுக்கான ராகம். இக்கவிதை இசைக்குள்ளும் உறக்கதுக்குள்ளும் அமிழ்ந்து போகும் அனுபவம். பகலில் அகன்று சென்றுவிட்ட உறக்கம் இரவில் கூடு திரும்புவது ஒரு அன்றாடப் புதிர். அது போலத்தான் நாம் அகத்தில் சஞ்சரிக்கும் இசையும், மெல்ல மெல்ல நம்முள் படரும். வடிவமற்ற கிண்ணம் என்பது ஒரு அபாரமான உருவகம், அது ஏந்தி நிற்கும் நமது அந்தரங்க வெளி என்பது ஒரு உயிர் ரகசியம் தான். இறுதியில் இக்கவிதை மரணம் குறித்து என உருமாருகிறது, அப்போதே அது ஒரு மயில் போல தோகை விரித்து நிற்கிறது. 

***

நீலாம்பரி

பகல்வெளியில் எங்கோ

பறந்து போயிருந்த உறக்கம்

இதோ

படபடத்து

விழிக்கூட்டிற்குத் திரும்புகிறது


இமை ஊஞ்சலில் சற்றே

இளைப்பாற ஆடிவிட்டு,

மௌனத்தின் மிருதுவின்மேல்

சிறகு பரப்பி,

என்னுள்ளிருக்கும் தன் குஞ்சுகளுக்கு

என் இதய அடியறைச் சேமிப்பை

எடுத்தூட்டி,

தன் உலகை

எனக்குள் விரிக்கவென

விழிக்கூட்டிற்குத் திரும்புகிறது...


நானும்,

வடிவமற்ற கிண்ணத்தில்

வந்த மதுவை உறிஞ்சியவனாய்,

சலனங்கள் அற்ற -

என் வேறுபகுதியை நோக்கி

என் சுமைகளின்மேல்

நடந்து போகிறேன்


மரண மயக்கம்

சுழித்துச் சுழித்து

உறக்கமாய் நுரைக்கையில்,

அந்த நுரைகளிடையே 

ஏதோ புதுப்புதுச் சாயைகள்

வண்ணம் கொள்ளும்

வனப்பைப் பார்க்க

மிதந்து போகிறேன்


உள் உலகின் வானத்தில்

சரிகைத் தூற்றலில் நனைந்துகொண்டே

என்னைத்தானோ,

அன்றி வேறு எதையோ தேடிப்

பறந்து போகிறேன்


அடிநினைவு ரேகைகள்

தடந்தெரியாது ஓடும் இடங்களில்...

சோகத்தின் வீறல்கள்

உறைந்த மின்னலாய்க் கிடக்கும் இடங்களில்...

கண்ணீரின் ரகசியங்கள் கருவாகும் இடங்களில்...


நான் உலாவப் புறப்படுகிறென்


மூலமுத்திரையற்ற

அனாதைக் கனவுகளின்

ஆவேச அரவணைப்பில் -

உறக்கத்தின் பட்டுவிரல் மீட்டலுக்கு

நானே வீணையாகிடும் மயக்கத்தில் -


இருளின் திகைப்புகள்

அடர்ந்துவிட்ட

இரவின் மந்திர முணுமுணுப்பில் -


என்னைநான் இழந்துவிடப் போகிறேன்...


இதோ -

உறக்கம் விழிக்கூட்டிற்குத் திரும்புகிறது

- அபி

***

அபி தமிழ்.விக்கி பக்கம்

அபி கவிதைகள் வாங்க: அபி கவிதைகள்

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தேடு

Labels

Most Popular

Labels

அபி (10) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (1) ஆனந்த் குமார் (7) இசை (3) இளங்கோ கிருஷ்ணன் (2) க. மோகனரங்கன் (1) கட்டுரை (4) கப (1) கமலதேவி (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (78) காஸ்மிக் தூசி (1) கோ யுன் (1) ச. துரை (2) சதீஷ்குமார் சீனிவாசன் (1) சபரிநாதன் (2) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (1) ஞானக்கூத்தன் (1) தேவதச்சன் (3) தேவதேவன் (12) நகுலன் (1) நேர்காண (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) போகன் சங்கர் (1) மதார் (2) மோகனரங்கன் (1) யுவன் சந்திரசேகர் (1) லட்சுமி மணிவண்ணன் (1) லதா (1) லாரா கில்பின் (1) விக்ரமாதித்யன் (5) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1)

Blog Archive