இருள் ஒளிரும் அருத்திரள் கவிதை - ரமீஸ் பிலாலி

அபியின் கவிதைகள் குறித்து ஒரு கட்டுரை என்று கோரிக்கை காதில் விழுந்த மாத்திரத்தில் கொஞ்சம் அச்சமாகவும் அபத்தமாகவும் உணர்ந்தேன். கட்டுரை என்னும் சொல்லே அவரது கவியுலகிற்கு முரணாகத் தொனிக்கிறது. கட்டுரை என்றால் கட்டி உரைத்தல் அல்லவா? அபியின் கவிதைகள் குறித்துக் கட்டுரை என்றால் வானத்தைக் கட்டும் காரியம் அது. 

வானத்தைக் கட்டுவது எப்படி? “மண்ணிலும் வானந்தானே நிரம்பி யிருக்கின்றது? மண்ணைக் கட்டினால் அதிலுள்ள வானத்தைக் கட்டியதாகாதா?” என்கிறார் மகாகவி பாரதி. 

அபியின் கவிதை வானம் என்றால் வாசகனின் மனமே அந்த வானம் வந்து வதியும் மண். வாசகன் உறும் அனுபவத்தைக் கட்டுவதே மண்ணைக் கட்டுவது. 

கவிதைக்கு மூன்று தோற்றங்கள் உண்டு என்கிறார் அபி. படைப்பாளியின் தனி அனுபவம் (அக அனுபவம்) அதன் முதல் தோற்றம்; புறவுலகின் உணர்வு அறிவு அனுபவப் பரப்பிற்கு அவன் தரும் பிரதியே அதன் இரண்டாம் தோற்றம்; வாசகன் அடையும் தனி அனுபவம் (அக அனுபவம்) அதன் மூன்றாம் தோற்றம். அபியின் கவியுலகை அவதானித்தால் இம்மூன்றும், சைவ சித்தாந்தம் பதிக்குக் கூறும் முந்நிலைகள் போல், முறையே அரு, அருவுரு மற்றும் உரு என்றிருப்பதைக் காணலாம். 

மூன்றாம் தோற்றத்தை வைத்து அபியின் கவிதைகளின் முதல் தோற்றத்தை அனுமானிக்கலாகுமா? முதல் தோற்றம் என்னும் மூலப் பிரதி கவிஞரிடமேகூட இருக்குமோ என்னவோ? “முன்பொரு பாடல் எழுதினேன் / அதன் மூலப் பிரதி என் வசம் இல்லை / எரவாணத்தில் செருகி இருந்தேன் / எடுத்தவர் யாரோ பதுக்கிக் கொண்டார்” என்கிறார் திருலோக சீதாராம். 

சரி, முதல் தோற்றத்தை விட்டுவிடுவோம். அது முற்றும் அரு. அவர் நமக்கு வழங்கியிருக்கும் இரண்டாம் தோற்றத்தை எடுத்துக் கொள்வோம். அதை வைத்து என்ன செய்யலாம்? 

இருபது ஆண்டுகளுக்கு முன் பேராசிரியர் பீ. மு. மன்சூர், “இவர் கவிஞர்களின் கவிஞர். இவரைப் படி” என்று சொல்லி “மௌனத்தின் நாவுகள்” நூலை என்னிடம் கொடுத்தார். அவ்வழிதான் அபி அறிமுகம். தியானம் போல் அந்நூலை வாசித்திருந்தபோது உடன் பயின்ற ஒருவன் கையில் வாங்கிச் சில பக்கங்களை வாசித்தான். “உருப்படாத கவிதைகள், இதையெல்லாம் படித்தால் நீயும் உருப்பட மாட்டாய்” என்று விமர்சனம் உதிர்த்தான். அவன் உரைத்த ‘தொனி’ வேறுதான். என்றாலும், அவன் வாய்க்குச் சர்க்கரை போடலாம். அபியின் கவிதையுலகம் ‘உருப்படாத’ ஒன்றுதான்! ஜெயமோகன் சொல்வது போல் அது “அருவக் கவியுலகு.”  (“இதையெல்லாம் படித்தால் நீயும் உருப்பட மாட்டாய்” – அடடா! மகத்தான வாழ்த்து!)

மனப்பாடம் செய்தல் அல்லது மனனம் செய்தல் என்பதை ‘உருப்போடுதல்’ என்று குறிப்பிடுவார்கள் அல்லவா? அது ஓரு தத்துவச் சொலவம். மனம் என்ன செய்கிறது? அருவாகிய அனுபவத்திற்கு உருவேற்றுகிறது. ‘புதுக்கவிதை நிற்காது, அதை நெட்டுருப் போட முடியாது’ என்று சொல்வார்கள் (கண்ணதாசனும் அப்படிச் சொல்லியிருக்கிறார். ) ஆனால், அபியின் கவிதைகள் வாசகனின் கையில் அருவுருவாகக் கிடைப்பன. அவற்றை அவன் தன் மனத்துள் உருப்போடலாம். அல்லது அருவுருவை மீண்டும் அருவ நிலையை நோக்கிச் செலுத்தி அனுபவம் அடையலாம். அது வாசகனைப் பொருத்தது. 

ஆய்வுலகு என்று ஒன்று இருக்கிறதே, அதில் கவிதைகள் எப்படியெல்லாம் உருவேற்றப் படுகின்றன! ஓர் ஆய்வாளன் என்னும் முறையில் யானும் அப்படி உருவேற்றும் கலை அறிந்தவன். “அபி கவிதைகள்” தொகுப்பை வாசிக்கும்போதே குறிப்புகள் எழுதிக் கரிக்கோல் கரைத்திருக்கிறேன். அவற்றை எல்லாம் ஒன்று திரட்டி கட்டுரைக்கலாம் என்று யோசிக்கும்போதே உள்மனம் கேட்கிறது: “எதற்கு?” வேறெவரிடமும் இப்படித் தோன்றியதில்லை. அபியிடம் இப்படித் தோன்றுகிறது, பண்டிதம் காட்டுவது அபத்தம் என்று. 

அவரே ஓர் எச்சரிக்கை உரைக்கிறார்: “வாசகன், உறைபடங்களின் (stills) தொடர்ச்சியாக இருக்கிற கவிதைகளில் சூசக இடைவெளிகளைக் காண்பதோடு நிறுத்திக் கொள்வதே நல்லது; அவற்றுக்கு அர்த்தம் தேடும் முயற்சி இடைவெளிகளைப் பழுதாக்கிவிடும்.” 

அரூப நிலைகளையும் மௌனத்தையும் நோக்கிச் செல்லும், செலுத்தும் அபியின் கவிதைகளைக் கரம் பற்றிக் கொண்டு யாமும் கவியனுபவம் உறலாம், நம் பெயரில் கவிதைகள் ஆக்கித் தரலாம். அதுதான் அவரின் கவிதைகளை வாசிக்க வேண்டிய வழி என்றாலும் இக்களம் அதற்கன்று. இங்கே அனுபவம் நோக்கி நகரும் ஆசையைச் சற்றே அணைத்து வைத்துவிட்டு, ‘கருத்து’ நோக்கி நகர்ந்து சில சொல்லியாக வேண்டும். 

அபியின் கவிதைகள் குறித்துப் பேசும் பலரும் சூஃபி மரபைக் குறிப்பிடுகிறார்கள். அதனால், ‘அபி ஒரு சூஃபிக் கவிஞரா?’ என்னும் கேள்வி எழுகிறது. ஏன் சூஃபித்துவம் பற்றிக் குறிப்பிட வேண்டும்? அவரின் இயற்பெயர் ‘ஹபிபுல்லாஹ்’ என்றிருப்பதால் மட்டுமே அப்படி யோசிக்கிறோமா? அவரை வேதாந்தக் கவி என்றோ ஜென் கவி என்றோ குறிப்பிட முடியாதா? என்றெல்லாம் சிந்தனைகள் எழுகின்றன. 

“அபி ஒரு சூஃபியா?” என்னும் வினா எனக்கு இதே போன்ற வேறொரு கேள்வியை நினைவூட்டுகிறது. “திருமூலர் ஒரு சித்தரா?” என்னும் கேள்வியை எழுப்பிக்கொண்டுதான் கரு. ஆறுமுகத் தமிழன் “திருமூலர் – காலத்தின் குரல்” என்னும் ஆய்வு நூல் எழுதினார். சித்தர்கள் கட்டுடைப்பாளர்கள்; திருமூலரோ சைவ சித்தாந்தம் என்னும் கட்டமைப்பை அழுத்தமான கோடுகளால் வரைந்து கொடுத்தவர். அப்படியிருக்க, அவரை என்னனம் சித்தர் என்று கூற முடியும்? என்பது கரு. ஆறுமுகத்தமிழனின் வாதம். “அபி ஒரு சூஃபியா?” என்னும் வினாவில் உள்ள வாதம் அதற்கு நேரெதிர்: “சூஃபி மரபுக் கட்டமைப்பின் தோற்றச் சாயல் எதையுமே காட்டாத அபியை ஒரு சூஃபி என்று எப்படிச் சொல்ல முடியும்?” வெளிப்படையில் இக்கேள்வி அர்த்தமுள்ளதுதான். ஏனெனில், சூஃபி மரபின் பெருங்கவிகள் என்று நாம் காணும் எந்தவொரு சூஃபியும் தன் கவிதைகளில் அதன் கட்டமைப்பைக் காட்டும் சொல்லாடல்களை மீண்டும் மீண்டும் கையாள்கின்றனர் – மவ்லானா ரூமி உட்பட. 

ஆனால் அபி அன்னனம் செய்தவர் அல்லர். “இதோ என் கண்முன் என் கவிதைகள், என் வார்த்தைகளை வெளியேற்றிவிட்டன...” என்று மொத்தத்துக்கும் மொழியை விட்டே ஆவியாகி மேலெழுகின்றன அவரின் கவிதைகள். ஆனால், மௌனம் குறித்துப் பேசும் மவ்லானா ரூமியின் கவிதைகள் (மரபுச் செய்யுள் வடிவம் கொண்டவை என்பதாலும்) அழுத்தமாக வாசகனின் நினைவில் நிற்கக் கூடிய வசீகரமான உருவ அழகு கொண்ட சொற்றொடர்கள். அவரின் சில ஆயிரம் கண்ணிகளாவது மனனம் ஆன சூஃபித்துவச் சாதகர்கள் பலர் எக்காலத்திலும் இருந்து வந்துள்ளனர். எஞ்ஞான்றும் மவ்லானா ரூமி ஒரு சொற்கொல்லர் (Wordsmith; சொற்களைக் கொல்பவர் அல்லர்). “வார்த்தைகளிடம் இருந்து என்னை விலைக்கு வாங்கிச் செல்ல எவரேனும் வாராரோ?...” என்று ஏங்கிப் பாடியவர். 

மீண்டும் கேள்வி: “அபி ஒரு சூஃபியா?” இதற்கு விடை, ஆம்-இல்லை என்பதுதான், அவரது பாணியிலேயே. ஆம் என்றாலும் இல்லை என்றாலும் என்ன ஆகிவிடப் போகிறது? 

சொல்லாடல்கள் (இஸ்திலாஹாத்) என்பது சூஃபித்துவ மரபின் மேற்கட்டுமானம் மட்டுமே. பொருண்மைகளே அதன் அடித்தளம். அவற்றை நாம் அபியிடம் காண்கிறோம். அவற்றை அவர் தமிழ்ச் சொற்களால் குறிக்கிறார் (தமிழுலகில் கிரகிக்கப்பட்டுள்ள வடமொழிப் பதங்களையும் சேர்த்துக் கொள்க. ) சூஃபி மரபில் புழங்கப்படும் அரபு அல்லது ஃபார்ஸி மொழிகளின் சொல்லாடல் அறவே அவரின் கவியுலகில் இல்லை. அச்சொற்களை இடம் பெறச் செய்தால் ‘அபி ஒரு சூஃபி’ என்று சொல்லிவிடுவார்கள். (வேறு எந்த ஆன்மிக மரபிற்குரிய கலைச்சொற்களை இடம் பெறச் செய்தாலும் அபி அம்மரபின் கவியாகவே தெரிவார். கலத்தின் உருவே உருவொன்றிலாத நீருக்கு உரு.)

அபியின் கவிச் சொற்களுள் ஒன்று ‘மௌனம்’ மார்க்க அறிஞராக இருந்த குணங்குடி மஸ்தான் சாகிபை சூஃபி நெறிக்குள் உந்தியது மௌனம் குறித்த நபி மொழியே என்பது இங்கே நினைவுக்கு வருகிறது: “மன் சமி(த்)த நஜா” – ‘மௌனித்தவன் ஈடேறினான். ‘ஆனால், தமிழின் முக்கியமான சூஃபிக் கவிஞராகக் கருதப்படும் மஸ்தான் சாகிபின் பாடல்களில் மௌனம் முகங்காட்டும் (‘சாயல் காட்டும்’ என்றால் இன்னும் பொருத்தமோ?) வரிகள் மிகவும் குறைவே. அபியின் கவிதைப் பரப்பில் மௌனத்தின் ருசி தட்டாத சொல்லே கிடையாது. “என்னைத் / தன்மேலொரு / படலமாக்கிப் / படர்த்திற்று / மௌனம்.” என்று முடிகிறதொரு கவிதை. ஒவ்வொரு அபி கவிதையின் முடிவிலும் சித்தத்தில் இதன் ‘பாவனை’யை வாசகன் அடையலாம். 

“மௌனத்தின் நாவுகள்” என்னும் தலைப்பு அபியின் அனைத்துக் கவிதைகளுக்கும் பொருத்தம். அவை சொற்களை உரத்துப் பேசுவன அல்ல. “மௌனத்தின் பின்னணியில், த்வனிகளால் இவை பேசின என்று நினைக்கிறேன்,” என்கிறார் அபி. (“கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனி கூட எனக்குக் கேட்கிறது” – லா. ச. ரா-வின் சீர்த்தி பெற்ற வரி. அவர் கதையுலகின் அபி; இவர் கவியுலகின் லா. ச. ரா அல்லரோ?)

“த்வனி” என்பது இந்தியக் கலையியலில் முதன்மைக் கோட்பாடுகளுள் ஒன்று. குறிப்பாக, இசைத் துறை சார்ந்தது அது. அபியின் கவியுலகில் அது ஒரு முக்கியமான குறிச்சொல். உண்மையில் இசையைச் சாதிக்கவே கவிதை முனைகிறது என்று மகாகவிகள் யாவரும் உணர்ந்து உரைத்துளர். “ஓவியமும் இசையும் மௌனத்தில் வேர் பாய்ச்சி நிற்பவை; சொல்லையும் பொருளையும் விட்டு வெளியேறியவை. கவிதையையும் இந்த மௌன நிலைக்குக் கொண்டு வரக் கவிஞன் தீவிரப்படுகிறான்” என்கிறார் அபி. 

மௌன நிலை என்பது அருவ நிலை. “அனைத்துக் கலைகளிலும் விஞ்ஞானங்களிலும் நிச்சயமாக இறைவனைக் காணலாம். ஆனால், இசையில் மட்டுமே அவனை நாம் எல்லா வடிவங்களும் எண்ணங்களும் நீங்கிய நிலையில் காண்கிறோம். பிற கலை ஒவ்வொன்றிலும் உருவணக்கம் (idolatory) உள்ளது,” என்றும், “அக மரபின் வழி செல்வார்க்கு அவர்தம் ஆன்மிக வளர்ச்சிக்கு இசை மிகவும் இன்றியமையாதது. காரணம் யாதெனில், உண்மையைத் தேடும் ஆன்மா உருவற்ற இறைவனையே தேடுகிறது” என்றும் ஹஜ்ரத் இனாயத் கான் கூறுவது இங்கே நினைவுக்கு வருகிறது. 

கவிதையின் மூலமும் இலக்கும் மௌனம் என்றே அபியின் கவிதைகள் உணர்த்துகின்றன. இசையின் மூலமும் இலக்கும் மௌனமே என்று இசை ஞானியர் கண்டுள்ளனர். 

பொதுப் புழக்கத்தில் மௌனம் என்னும் சொல் சப்தமின்மை / நிசப்தம் என்னும் நிலையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அபி சொல்லும் மௌனம் என்பது வேறு. அது வெறும் சப்தமின்மை அன்று. “மௌனம் என்பது நிசப்தமன்று; அல்லவா! நிசப்தம் சப்தத்தின் தற்காலிக ஒதுக்கம்; சப்தத்துடன் மட்டுமே தொடர்புடையது. மௌனமோ சப்தம், நிசப்தம் உள்ளிட்ட பிரபஞ்ச சலனங்கள் எல்லாவற்றையும் தன்னுள் கொண்டு அசைவற்றது போல் ஒன்றுமற்றது போல் சமைந்திருப்பது,” என்கிறார் அபி. இங்கே மௌனம் என்று இவர் குறிப்பிடுவது சூஃபித்துவ நோக்கில் இறைவனையே சுட்டுகிறது. இறைவனின் திருக்கல்யாண குணங்களுள் “கலாம்” (பேச்சு) என்பதுமொன்று. ஆனால் அது மொழி அன்று. மொழிக்கு இரண்டு வடிவங்கள் உள்ளன. வரிவடிவம் (எழுத்து) மற்றும் ஒலி வடிவம் (சப்தம்). இறைவனின் பேச்சோ ஓசையும் எழுத்தும் அற்றது – பிலா சவ்த்தின் பிலா ஹர்ஃபின் – என்று சூஃபிகள் கூறுகின்றனர். அதைத்தான் மௌனம் என்னும் சொல்லால் அபி சுட்டுகிறார். எனில், மௌனம் என்பது இறைவனின் திருப்பெயர். அது இறைவனின் குணப்பெயர் என்பதற்கும் அப்பால் அவனின் சுயத்தையே குறிப்பதாகிறது. “இஷ்க்” (காதல்) என்னும் சொல்லை அத்தகைய அர்த்தத்தில் சூஃபி ஞானக் கவி ஃபக்ருத்தீன் இராக்கீ கையாண்டுள்ளார். அபி, “மௌனம்” என்னும் சொல்லினை அன்னனம் கையாள்கிறார் எனலாம். 

“இன்றைய படிமங்கள் அரூப நிலைகளை நோக்கியவை; மௌனத்தைத் தொட முயல்பவை,” என்கிறார் அபி. மவ்லானா ரூமியின் கஜல்கள் பலவும் “ஃகாமூஷ்” (மௌனம்) என்னும் சொற்கொண்டு முடிகின்றன. அது பற்றி, “தன் கவிதைகள் எந்த மூலத்தினின்றும் வெளிப்பட்டனவோ அந்த மூலத்திற்கே அவற்றை அர்ப்பணிக்கின்றார்” என்று விளக்கம் தருகிறார் கோல்மன் பார்க்ஸ். 

உள்ளமை அல்லது இருத்தல் (‘உஜூது’; Existence) என்பது பற்றிய அபியின் கவிதை வரிகள் நாம் ஆழ்ந்து பார்க்க வேண்டியவை. சூஃபித்துவத்தின் நோக்கு “வஹ்தத்துல் உஜூது” (ஏக உள்ளமை) என்பதாகும். (இருப்பது ஒன்றே மற்றது அன்று.) எனில், படைப்புக்களின் – வஸ்துக்களின் (ஷை / அஷ்யாஉ) இருத்தல் பற்றி சூஃபித்துவம் என்ன சொல்கிறது? அவற்றின் சுயத்தை அது ஜாத்தே அதம் (சூன்ய சுயம் – இன்மை சுயம்) என்கிறது. அவை வெறும் நாம ரூபம் மட்டுமே. அவற்றிற்குச் சொந்தமாக உள்ளமை இல்லை. எனவே அவற்றின் இருத்தல் என்பது ‘இல்லாது இருத்தல்’ என்பதே. இது அபியின் கவியுலகில் மீண்டும் மீண்டும் சுட்டப்படுகிறது. “இல்லாதிருக்கும் இருப்பு / புலப்பட்டது / மங்கலாக” (‘நிசப்தமும் மௌனமும்’) என்கிறார். “என்ற ஒன்று” என்னும் தொகுப்பின் தலைப்புக் கவிதை சூன்ய நிலை (அதமிய்யத்) பற்றிப் பேசுகிறது: “சூன்யம் என்ற ஒன்று / இருந்தவரை / எல்லாம் சரியாயிருந்தது. “இவ்வரி, படைத்தல் நிகழுவதற்கு முந்திய நிலை என்று சூஃபி மரபு பேசுவதுடன் இயைகிறது. “தூய காலத்தினின்றும் மனிதனின் மீதொரு நிலை இருக்கவில்லையா? அவன் நினைக்கப்படாததொரு பொருளாய் இருந்தான்” (“ஹல் அதா அலல் இன்சானி ஹீனும் மினத் தஹ்ரி லம் யகுன் ஷைஅம் மத்கூரா” – 76:1) என்கிறது குர்ஆன். (இவ்வசனத்தில் சூஃபி நெறியில் ஆளப்படும் முக்கியமான கலைச் சொற்கள் சில இருக்கின்றன. இன்சான்: மனிதன், ஹீன்: நிலை; தஹ்ரு: தூய காலம் (Absolute Time), ஷை: பொருள் / வஸ்து, திக்ரு – நினைவு. ) 

இந்நிலையை நோக்கி நகர்வதைத் தன் கவிதையின் இயல்பாகவும் தன்னின் இயல்பாகவும் அபி குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும். “எப்பொருளாயினும் விதிப்புகளும் தன்மைகளும் விலகி முற்றவும் எதேச்சையாய் ஒன்று கிட்டினால் அது அரூபம். எந்த உணர்வும் மூலத்தில் அரூபம். அந்த அரூபத்தைத் தொட முயல்கிறது கவிதை,” என்றும், “மூல அருவுலகு இவன் இயல்புக்குப் பொருந்தி வருகிறது,” என்றும் அவர் கூறுவதை ஓர்க. 

இந்த நிலை இப்போதும் நிகழக் கூடும். சூஃபியாக்கள் அதனை ‘ஃபனா’ என்றுரைப்பர். அபி இதனை ‘அனுபவத்தைத் தாண்டிய நிலை’ என்றும், ‘அனுபவம் abrupt ஆகத் தொடர்ச்சி அற்று நின்றுவிடும் ஒரு கணம்’ என்றும் குறிப்பிடுகிறார். 

“இல்லாது இருத்தல்” என்னும் சொற்றொடர் அபியின் கவியுலகில் முக்கியமான ஒன்று (காண்க: ‘என்ற ஒன்று’, ‘நிசப்தமும் மௌனமும்,’ ‘இருத்தல்’, ‘நானும் இந்தக் கவிதையும்’ ஆகிய கவிதைகள்.) ‘ஏக உள்ளமையில் அனைத்தும் இல்லாது இருக்கின்றன’ என்பது சூஃபி தரிசனங்களுள் ஒன்று. இன்மை ஆகிய தான் இறைவனில் இருப்பதை உணர்வது சூஃபியின் நிலை. அந்நிலைக்கு ‘பகா’ (baqa) என்று பெயர். 

  “நான்” என்னும் தன்னுணர்வு இறைவனுக்கு – “ஹக்” என்னும் சத்தியப் பரம்பொருளுக்கு – மட்டுமே சுயமாக உரியது என்கிறது சூஃபித்துவம். அந்த சுயாதீனம் ‘கண்ணாடியில் பிம்பம் பிரதிபலிப்பதைப் போன்று’ படைப்புக்களின் சுயத்தில் பிரதிபலிக்கின்றன. இறைவனின் சுயப்பண்புகளும் படைப்புக்களில் பிரதிபலிப்பாகின்றன. ஆனால், அவற்றுக்கெல்லாம் முந்தியதும் முதலானதும் ‘நான்’ (அனா) என்னும் தன்னுணர்வு அருளப்படுவதே. தன்னுணர்வுடன் இருத்தலை அபி இப்படிச் சொல்கிறார்: “பாவனைகளில் / மிக மூத்த / நான் என்ற பாவனையை / மெல்ல முகர்ந்து / விரல் நுனியால் / தொட்டுப் பார்த்துக் கொண்டு / நான்.” (‘ஏற்பாடு’). இங்கே ‘பாவனை’ என்னும் சொல்லினை எப்பொருளில் கையாள்கிறார் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அவரே விளக்கம் தருகிறார்: “பாவனை கற்பனை அல்ல; பாவித்துக் கொள்ளுதல் அல்ல; தான் இன்னொன்றாக உணர்தல் அல்ல. மாறாக, தான் தானேயாக அழுத்தம் காட்டி நிற்றல். தன்னுள் வரம்பின்றிப் பொதிந்து கிடக்கும் சாத்தியம் ஒவ்வொன்றும் கூர்மையாகத் தோற்றம் காட்டச் செய்வது பாவனை. அதன் மூலம் அனுபவப் பரப்பின் வெவ்வேறு எல்லைகளைத் தொட்டுத் தன்னைத் தனக்கு உணர்த்துவது.”

இங்கே, மகாகவி இக்பால் முன்வைத்த “ஃகுதி” (சுயம்) என்னும் தத்துவத்தை அபி அடைந்திருக்கிறார் என்று உணர்கிறேன். ‘திருக்கலிமா’ என்னும் இஸ்லாமிய மூல மந்திரத்தை (“லா இலாஹ இல்லல்லாஹ்” என்னும் வாசகத்தின் உட்பொருளை) “சுயத்தின் மறை ரகசியம்” (‘ஃகுதி கா சிர்ரே நிஹான்’ – the hidden secret of the self) என்று இக்பால் குறிப்பிடுகிறார். “சுயாதீனத்தின் எழுச்சியில் கடுகு மலையாகும்; சுயத்தின் சோர்வில் மலை கடுகாகும்” (‘ராயீ ஸோரே ஃகுதீ சே பர்பத் / பர்பத் ளு’ஃபே ஃகுதீ சே ராயீ) என்கிறார் அவர் உரைப்பதை, “மனிதனின் அனுபவம் கடலுக்கு மேல் உள்ள பனிப்பாறை என்றால் அவனது அனுபவ சாத்தியம் கடலுக்கடியில் உள்ள பனிமலை” என்று அபி கூறுவதுடன் ஒப்பு நோக்கத் தகும். 

அனைத்துப் பொருட்களையும் அவற்றின் அருவ நிலைக்கு மீட்டுவதால் அபியின் கவிதைகள் சூஃபித் தன்மையில் இருக்கின்றன எனலாம். ஏனெனில், ‘உருவங்களை அழிப்பதே சூஃபிகளின் பணி’ (நுகூஷ் கோ மிட்னா) என்பர். அதனால், அவரின் கவிதையில் பொருட்களின் இயற்பெயர்கள் அழுத்தம் பெருவதில்லை. பொருட்கள் பெயரிழந்து ‘அது’ என்று சுட்டப்படுகின்றன. அபியே கூட அவன் என்றும் இவன் என்றும் சுட்டப்படுகிறார். 

அபியைப் பொருத்த மட்டில் வாழ்வும் கவிதையும் ஒன்றே. “நான் இல்லாமலே / என் வாழ்க்கை / எதேச்சையில் / அருத்திரண்டது” என்று அவர் சொல்வது அவரது கவியுலகுக்கும் பொருந்தும். “நான்” என்பது உருத்திரளும்போது ஆணவம் ஆகிறது. அத்தகைய ‘நான்’ என்பதையே சூஃபித்துவம் “திரை” என்கிறது (சைவத்தில் அது மும்மலங்களுள் முதல். ) அருத்திரளும் நான் என்பது இன்மையாய் இருப்பது. அது உள்ளமையை மறைக்காது. மாறாக, சத்திய தரிசனத்துக்கான ஊடகமாகிறது. 

ஆன்மிகத்தில் ‘ஒளி’ என்பது இறைவனைக் குறிக்கும் சொல். ஒளி (நூர்) என்பது இறைவனின் திருப்பண்புகளுள் ஒன்று என்றுரைக்கிறது குர்ஆன். சூஃபி பரிபாஷையில் இறைவனின் சுயத்தை அல்லது உள்ளமையைக் குறிக்கும் வகையில் ‘இருள்’ என்னும் சொல் கையாளப்படுவதுண்டு. இருத்தல் பற்றிய ரகசியங்களை சூசகமாகச் சொல்லும் கவிதைகளை இருள் ஒளிரும் கவிதைகள் எனலாம். அபியின் கவிதைகள் அத்தகைய. அவர் சொல்கிறார்: “பார்வைக்குப் பிடிபடும் ஒளியின் அடியில் தேங்கி மறைந்துள்ள இருள் சமுத்திரம் கவிதைகளில் கொந்தளிக்கிறது.” மேலும் சொல்கிறார்: “நவீன ஓவியங்களில், இசையில் இடைவெளி இருள்கள், வெற்றிடங்கள் மௌனத்தை நோக்கி நம்மைச் செலுத்துவது போலவே கவிதையிலும் மொழியிடைப்படும் இருள் செயல்படுகிறது.” ஆம், அபியின் கவிதைகளை நாம் ‘இருள் ஒளிரும் அருத்திரள் கவிதை’ என்று வருணிக்கலாம். 

அபியின் கவியுலகில் இன்னொரு முக்கியமான குறிச்சொல் “புள்ளி.” அரபியில் அதனை ‘நுக்தா’ என்றுரைப்பர். அச்சொல் சூஃபி நெறியில் ஒரு கலைச்சொல். படைத்தல் என்னும் செயல்பாட்டின் தொடக்க நிலையை அது குறிக்கும். இன்னும் ஆழமாகச் சொல்வதெனில், சித்தில் எழுந்த முதற்குறிப்பை (தஅய்யுனே அவ்வல்) அது சுட்டுகிறது. அந்த முதற்குறிப்பின் உட்பொருள் இறைவனின் உள்ளமையேதான். “புள்ளியைத் தொட்டுத் தடவி/ அதன் முடி திறந்து/ உள் நுழைந்து/ விடு” என்கிறார் அபி. இவ்வரியில் புள்ளி என்பதை சூஃபித்துவக் கலைச்சொல்லாகக் கொண்டு விளக்கம் எழுதினால் சில பக்கங்களுக்கு நீண்டு விடும். 

சூஃபித்துவக் கோணத்தில் அபியை அணுகினால் இப்படியெல்லாம் விளக்கங்கள் தோன்றுகின்றன. பிற ஆன்மிக நெறிகளின் கோணத்திலும் அவரை அணுகி வேறு விளக்கங்களைச் சொல்லலாம். (எளிமை பற்றிய அவரின் கவிதைகளிலும் சிந்தனையிலும் ஜென் ருசி (zen flavour) இருப்பதாக உணர்கிறேன். ) மொத்தத்தில் ஆன்மிகம் (mysticism) என்பது என்ன? “மண் துகளுள் ஒரு பேருலகு காணல்/ விண்ணுலகை ஒரு கான் மலருக்குள்;/ அங்கையில் முடிவிலி பற்றியெடுத்தல் / காலாதீதம் ஒரு நாழிகை தன்னுள்” (To see a World in a grain of sand / and a heaven in a wild flower / Hold infinity in the palm of your hand / And Eternity in an hour.)” என்கிறார் வில்லியம் பிளேக். இப்போது அபி சொல்வதைக் கேளுங்கள்: “உள் பக்குவ வேளையில் ஒருவன் புலனில் அவனைச் சுற்றியிருக்கும் எந்தப் பொருளிலும் அவனுக்குத் தரிசனம் கிட்டலாம். எந்தச் சாதாரணச் சிறு பொருளையும் பற்றித் தொற்றிக்கொண்டு சத்தியம் பளீரெனத் தோன்றிவிடலாம்.”

இப்படித் தத்துவங்களைப் பேசிக்கொண்டே போகலாம். ஆனால், அனுபவமும் தரிசனமுமே கவிதையின் நோக்கம் என்று அபி நமக்கு அழுத்தமாக உணர்த்துகிறார். அதுதான் ஆன்மிகம். தத்துவப் பேச்சு ஆன்மிகம் அன்று. இதுவரை பேசியதிலும்கூட, அபியின் கவிதைகளை விட “கவிதை இயல்” என்னும் பிரிவில் அவர் தந்திருக்கும் ஆழமான கட்டுரைகளைத் தொட்டே இங்கே அதிகம் பேசியிருக்கிறேன். அதுதான் என்னால் முடிந்தது. 

ஊன் வாழ்க்கை மற்றும் கவி வாழ்க்கை என்று தான் இரட்டை வாழ்க்கை வாழ்ந்ததாக ஃபிரான்சிஸ் தாம்ஸன் கூறுகிறார்: “A double life the Poet lived, / And with a double burthen grieved;/ The life of flesh and life of song, / The pangs to both lives that belong.” பருவுலகச் சமூக வாழ்வையும் தன் அக வாழ்வையும் சமனப்படுத்தும் (சமாதானப்படுத்தும்?) தேவை கவிஞர்கள் அனைவருக்கும் இருப்பதுதான். “நடைமுறை வாழ்வைச் சந்தித்து உழல்பவன் இவனுடைய ஒரு ‘அவன்.’ இவன் எழுத்து மனிதன். எதை எப்படி எழுதுவது என்பதைத் தன் சுதந்திரமாகக் கொள்கிறான்,” என்று அபி எழுதியிருப்பதை வாசித்தபோது உள்ளத்தில் ஒரு வலியை உணர்ந்தேன். 

தனது நெடிய கவிதை வாழ்வில் அவர் எளிமை என்னும் நிலைக்கு வந்தடைந்திருப்பதாகச் சொல்கிறார். ‘சாதாரணமாய் இருப்பதே அசாதாரணமானது’ என்கிறது ஜென். எளிமை என்பதுதான் என்ன? தன்னை இல்லாமல் ஆக்குவதே. அந்நிலையில் பருப்பொருள் – நுண்பொருள், நான் – பிறர் என்னும் பேதங்கள் மறைந்துவிடுகின்றன. அப்போது அபி கேட்கிறார்: “இப்போது தெரிகிறது, இவைகள் – என் கவிதைகள் – என்னுடையவை அல்ல; என் மூலமாக வந்தவை. வாழ்க்கை எந்தத் தனி ஒருவருக்குச் சொந்தம்? நம் உள்ளுணர்வுகள்கூட நம்முடையவை மட்டுமா?” இந்நிலையில் அபி, “மனித குலத்தின் தொகை நனவிலி (Collective unconscious) கவிஞன் வழியே படைப்பாக வெளிவருகிறது” என்னும் யுங்கின் கோட்பாட்டை நினைவு கூர்கிறார். அது சரி என்றே அவருக்குப்படுவதாகத் தெரிகிறது. அதனால்தான் இந்த முடிவுக்கு வருகிறார்: “எழுத்து மனிதன் எவற்றை எல்லாம் எழுதுகிறானோ, ஒன்று விடாமல் அவை எல்லாம் எல்லாருக்கும் சாத்தியமே என்ற நிச்சயம் இவனுக்கு உண்டு. தான் தனித்தவன், வேறுபட்டவன் என்ற உணர்வே இவனுக்கு இல்லை. அதனால் தனக்குச் சிறுமையோ பெருமையோ இல்லை என்பதும் இவன் உணர்ந்தது.” 

இதனைப் படித்தபோது, அபி இந்த தரிசனத்தில் கணியன் பூங்குன்றனாரின் தோள் மீது ஏறி நிற்கிறார் என்று தோன்றிற்று. பிறரை வியத்தலும் இகழ்தலும் இல்லை என்னும் தரிசனத்தைக் கணியன் அடைந்தார். தன்னையே வியத்தலும் இகழ்தலும் இல்லை என்னும் தரிசனத்தை அடைந்திருக்கிறார் அபி. 

பேசாப் பொருளைப் பேசத் துணிந்தோரே பெருங்கவிகள். தமிழ் பெற்ற பெருங்கவிகளுள் அபியும் ஒருவர் என்றுரைத்துத் தலைக்கட்டுகிறேன். 

***


Share:

ஞானத்தின் பாதைக்கு கற்பனைகள் தடையா? - பாலாஜி ராஜூ

குரு நித்யாவிடம் ஜெயமோகன் தன்னை யோகியாக பயிற்றுவிக்கும்படி வேண்டுகிறார். குரு நித்யா யோகியாக மாற கற்பனை ஒரு மிகப்பெரிய தடை, முற்றிலுமாக கற்பனைகளை அழித்துவிட்டே யோகிக்கான பயணத்தைத் தொடங்க வேண்டும் என்று சொல்கிறார். இதற்கு பிறகான ஜெயமோகன் எனும் எழுத்தாளுமையின் இயக்கங்களை வரலாறு தன் பக்கங்களில் ஆழமாய்ப் பொறித்துவைத்துள்ளது.

'ஞானத்தின் பாதைக்கு கற்பனைகள் தடையா?' எனும் இதே கேள்வியை பிரமிள் கவிதையாக்கியிருக்கிறார். பிரமிளின் தொடக்க காலக் கவிதைகளில் ஒன்று இது (எழுத்து இதழ், 1961, வயது 22). ஒரு படைப்பாளியின் ஆரம்பகால படைப்புகளை வாசிப்பது, கலைஞர்களின் பழைய புகைப்படங்களை நோக்கி வியக்கும் அனுபவத்திற்கு ஒப்பானது. பிரமிள் இளமையிலேயே தத்துவார்த்தமான கேள்விகளைத் தாங்கி அலையும் கவிஞராக இருந்திருக்கிறார் என்பதற்கு சான்றாக அவருடைய தொடக்க காலக் கவிதைகள் பலவற்றைச் சுட்டலாம், அதிலொன்று இது.

ஞானத்தை அடைய மனதை வெண்தாள்ச் சூன்யமாக்கிக்கொள்ளவேண்டுமா? ('வெண்தாள்ச் சூன்யம்' – பிரமிளின் 'இறப்பு' கவிதையின் கடைசி வரிகள்). இந்தக் கவிதையில் பிரபஞ்சத்தின் இயக்கங்களை முன்வைத்து ஒரு தேடலைச் சொல்லி, பின் அங்கிருந்து பதிலின் இழையற்ற, திரையகன்ற கேள்விகளின் பாதையை உத்தேசிக்கிறார்.

கேள்விகள்


தாய்ப்பரிதி ஆகர்ஷண

முலையுறிஞ்சும் பூமிக்கு

வானெல்லாம் தொட்டிலோ?

சந்திரனில் வழிகின்ற

விந்தின்னும் கருவுற்றுத்

திரளாத காரணமென்?

தீ முளைத்துக் காற்று எனும்

பூமியிலே வேரைவிட்டால்

பூக்கிறது எத்திசையில்?

தெரியாது?

அறிவின் குரலடைத்த

கவிதைக் கவளத்தைக்

கக்கிஎறிந்துவிடு.

ஞானத்துப் பயணத்தில்

இடறும் கற்பனையின் கல்

எட்டி உதைத்துப்போ.

மூளை மலர்த்தடத்தில்

ஏதோ நாற்றமிது

மூக்கைப் பொத்திநட.

அப்பால்…

பதிலின் இழையற்ற

கேள்வித் திரையகலும்…

பாதை எதிர் செல்லும்…

***

இந்தக் கவிதையின் வரிகளில் பிரமிள் காட்சிப்படுத்தும் வீடும், சுவர்களும் எத்தகையது? அது பருவடிவமானதல்ல. லௌதிகன் ஒருவனுடைய வீட்டின் சுவர்கள் உறவுகள், செல்வம், எதிர்பார்ப்பு, அதிகாரம் போன்ற பல கூறுகளால் ஆனது. கவிஞன் இருண்ட கானகக் குரல்களுடன் நகரச் சந்தையில் அலைபவன். சராசரி வாழ்வின் சுவர்கள் மூடும் வீட்டை அருவறுக்கிறான், அதன் பசியால் விழுங்கப்பட மறுக்கிறான். இந்தக் கவிதை சுட்டும் வீட்டின் சுவர்கள் தத்துவம், ஆத்மஞானம், விடுதலை என ஆதர்ச நிலைகளால் ஆனது. கவிஞன் வாழ்வின் சாரத்தை அறிய, எல்லாவற்றுக்குமான ஆதிக் காரணத்தைத் தேடி, அதனுள் நுழையும் கருவாக மாற விரும்புகிறான். அந்தக் கரு வளர்ந்தால் அனைத்தும் அறிந்த மெய்ஞானியாக உருமாறுமோ? பிரமிள் இதைத்தான் விழைகிறாரா?

சுவர்கள் (1973) 

மனசின் இருண்ட அநுஷ்டானங்கள் என்னை வீடு திரும்ப

விடாது தடுத்துக் கொண்டிருக்கின்றன.

இருண்ட கானகக் குரல்களின் ஊர்வலம் ஒன்று நகரச் சந்தையில்

அலைகிறது.

வீடு திரும்பும் வழி தெரியவில்லை.

அன்று –

ஒரு மாட்டுக் கொட்டிலின் மஞ்சள் வைக்கோல் மீது பிறந்து

கிடந்த சிசு மூன்று சக்ரவர்த்திகளை நோக்கித் திறந்த பாலை

வெளியினூடே ஒரு நக்ஷத்திரத்தின் அழுகையில் அழைத்து வழி

காட்டிற்று.

நான் சக்ரவர்த்தியுமல்லன்.

சூழச் சுவர்களின் இனம் மூடும் நகர் ஒரு திறந்த வெளியுமல்ல –

பாலையாயினும்.

வீடுகள் யாவும் வாயிளித்து ஆபாசமான பசியைப் போன்று

நிற்கக் கண்டவனாயினும்,

வீடு,

ஒன்றுண்டெனவே எண்ணுகிறேன்.

இந்தச் சுவர்களினுள் விழுங்கப்பட அல்ல.

கருவாகி

புனிதத் தசைகளில் ஊறும் ரத்தச்சுனையைக் காண.

 ***


பிரமிள் தமிழ் விக்கி

எழுத்து இதழ்

எழுத்து கவிதை இயக்கம் 

***

Share:

ஐந்து காதல் கவிதைகள் - கடலூர் சீனு

தமிழிலக்கியத்தில் காதல் கருப்பொருளாக அமைந்த பனுவல்களுக்கு சங்க இலக்கியம் முதல் பக்தி இலக்கியம் தொட்டு பாரதி காலம் வரை ஒரு நெடிய தொடர்ச்சி உண்டு. பின்னர் வந்த பிதுமைப்பித்தன் துவங்கி இத்தகு உணர்வெழுச்சிகளுக்கு எதிரான பகுத்தறிவு ரதியான பார்வை தீவிர தமிழிலக்கியத்தில் எழுந்து, காதல் போன்ற கருப்பொருள் எல்லாம் வெகுஜன கேளிக்கை எழுத்துக்குரியவை என்று புறம்தள்ளப்பட்டு, ( விதி விலக்கான கதைகள் இருப்பினும்)  மிகப்பின்னர் ஜெயமோகன் எழுந்து வந்து இன்று 'மைத்ரி' அஜிதன் வரை காதல் வழியே மானுடம் சென்று தொடும் சாராம்சமான ஒன்று குறித்த அம்சம் தீவிர தமிழ் இலக்கியத்தில் கையாளப்பெருகிறது.

மாறாக தீவிர கவிதைகளில் காதல் குறைந்த பட்சம் அதன் பிரிவாற்றாமை துயரேனும் வெவ்வேறு விதமாக கையாளப்பட்டு வருகிறது.

உண்மையில் காதல் எனும் நிலையில் என்னதான் இருக்கிறது? முதல்கட்டமாக அது சாமானியனின் ஆத்மீகம் என்று சொல்லலாம். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி நிற்பது மெய்யடியவருக்கு மட்டும் அல்ல, ஒரு சாதாரணனுக்கும் சாத்தியம் என்பதை காதல் காட்டிவிடுகிறது. 

எனில் அந்த மெய்யடியவருக்கும்  காதல் வசப்பட்டவருக்கும் என்ன வேறுபாடு? முற்ற முழுதான வேறுபாடு என்பது மெய்யதியவர் தன்னில் தான் நிறைந்தவர். அங்கே பிறன் என்பதே இல்லை. ஆன்மாவின் இயல்பாம் ஆனந்தம் என்கிறார் ரமணர். தன்னில் தான் நிலைக்கும் உவகை அது. மாறாக காதல் துல்லியமான பிறனில் நிலை கொள்வது. அவன்/அவள் என்பதை அச்சாக்கி சுழலும் சக்கரம் அது. (பக்தி இலக்கியம் அவன் அல்லது அவள் என்று மாறி அந்த அச்சில் பரம்பொருளை நிறுத்தி சுழல்வதைக் காணலாம்). உங்கள் உணர்வு நிலை மொத்தமும் பிறன் எனும் ஒன்றால் மட்டுமே இயங்குவது எத்தகு உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கான நிலை. இந்த நிலைகளின் தொடர்ச்சியே ஒருவரை ஒருவர் கலந்து நிறைவுகொள்வதற்கான தவிப்பு. 

எழுதித்தீராத அந்தக் தவிப்பை மீண்டும் எழுதிக் காட்டிய கவிதை இது.

***

நம் புலப்பெயல்

இறுதி வரைக்கும்

இணையவே போவதில்லை

எனத் தெரிந்த பின்னும்

விட்டு விலகாது

நெடுங் கோடுகளென

நீளக்கிடக்கும்

நம் உடல்களின் மீது

தடதடத்துக் கடக்கும்

இருப்பூர்திப் பெட்டிகளில்

தொலைதூரம் சென்று

மறையட்டுமென நாம்

நிறைத்து அனுப்பிய

ஏக்கப் பெருமூச்சுகள்தாம்

கண்ணே 

உலர்ந்த இந்நிலம் முழுவதையும்

ஒருசேர நனைக்கவல்ல பெருமழையை அடிவானத்தில்

கருக் கொள்ளச் செய்கின்றன.

***


மோகனரங்கனின் இக்கவிதை ஒரே சமயத்தில் சங்க இலக்கியம் கைக்கொள்ளும் அகம் புறம் அழகியலில் நின்று நவீன காலம் கொண்டு வந்த தொடர்வண்டி வரை வந்து அன்று முதல் இன்றுவரை அறுபடாமல் தொடரும் ஆதாரமான தவிப்பு உணர்வு ஒன்றை பேசுகிறது.

இதே உணர்வு நிலையின் மற்றொரு நிலையான சமநிலையின்மை அதன் ஆற்றாமை குறித்தது கீழ்கண்ட கவிதை.

***

 அணுக்கம்

நான்

ஆயுள் பரியந்தம்

நீந்தினாலும்

கடக்கமுடியாத

கடலுக்கு அப்பால்

அக்கரையில்

நிற்கிறாய்!


நீ

நினைத்தால்

நிமிடங்களில்

நீர்மேல் நடந்துவந்து காணும்படிக்கு

இதோ

இக்கரையில்தான் இருக்கிறேன்.

நான். 


***

அன்புடை நெஞ்சம் தாம்கலந்து நிகழ்ந்ததோர் மெய்தோய் இன்பம். ஒருவரில் ஒருவர் திளைத்து, ஒருவர் மற்றவரில்  அங்கே தன்னைத் தான் கண்டு கொள்ள,  பொலிகிறது பாலன்ன ஒளி.

ஒளியறிதல்


இருளில்

ஒன்றையொன்று

கண்டு கொண்ட இரண்டு நட்சத்திரங்கள் 

பரவசத்தில்

நடுங்க,

பொலிகிறது

பாலன்ன ஒளி!

ஒரு நூறு வருடங்கள்

கடந்து 

எதேச்சையாய் வானத்தை ஏறிட்டு நோக்குகிற இரு ஜோடிக் கண்கள் 

அந்த இரகசியத்தைத் தமக்குள் பகிர்ந்துகொள்கின்றன.

***

நீந்திக் கரை காண இயலாக் கடும் புனல் என காமத்தை அறிய நேர்வது போல, பாறை மேல் விழுந்த நீர்த்துளி மேல் காயும் வெயிலாகத் தன் மேல் பொழியும் காதலை உணர நேரும் தருணமும் உண்டு.

இம்மை

என்பிலதனைக் காயும் நண்பகல் வெய்யில்

உனதன்பு.

பிறகும்

பிழைத்திருக்க வேண்டிப்

பிடி நிழல் தேடி,

நெடுக அலையும் உடலின் தவிப்பு

இவ் வாழ்வு.

***

இத்தகு காதலின் பிரிவுத் துயரை இத்தனை பரிதவிப்புடன் சொன்ன கவிதைகள் குறைவே.  

கடாகாசம்

கண்ணீரின் ஈரம் இன்னும் காயாத நினைவைப்

பிசைந்து பிசைந்து

பிரிவின் கரங்கள் பெரிதாக வனைகிறது எனக்கான ஈமக் கலனை. 

பொழுதின் அச்சில் நழுவாமல் சுழலும் திகிரியின் 

விரைவிற்குத் தக விளிம்பு கூடி விரிய 

நடுவில் திரள்கிறது பாழ் 

அதில்

அளவாய் நிறையும் ஆகாயத்தோடு

அறிதாகச் சில

நட்சத்திரங்களும் புகுகின்றன.

என் அந்திம இருட்டிற்கு

விழித்துணையாக.

***             

மேற்கண்ட கவிதைகளை அதன் ஆதார உணர்வு என்ற அளவில் மட்டுமே அவற்றை காதல் கவிதை எனும் வகைமைக்குள் அடக்கினேனே அன்றி அதன் கற்பனை சாத்தியங்கள் பல.

உதாரணமாக ஒளியறிதல் கவிதையை ஆத்மீகமாக ஒரு குரு சீடன் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளும் தருணமாக, நூற்றாண்டுகள் கடந்தும் அவ்வண்ணமே தொடரும் மற்றொரு குரு சீடனாக அதன் உணர்வு நிலையாக ஒரு வாசிப்பை அக்கவிதைக்கு அளிக்க இயலும். இப்படி மேற்கண்ட ஒவ்வொரு கவிதைக்குமே அவை வாசக தனி அனுபவம் சார்ந்து கிளர்த்தும் கற்பனை சாத்தியங்கள் உண்டு.

எனக்கு தனிப்பட்ட முறையில் அணுக்கம் கவிதை அத்தகையது. 

சித்தம் பேதலித்த என் அம்மாவைக் காணும் தோறும் நான் அடைந்த உணர்வுக்கு நேர் நிற்கும் கவிதை வரிகள் இவை. அன்று அவள் இருந்த உலகில் எனக்கு இடம் இல்லை. என்னை ஒரு மனிதனாக கூட அவள் கண்கள் அறிந்து கொண்ட அடையாளம் அதில் இல்லை. அவள் அப்போது இருந்த உலகை சென்று சேர ஆயுள் முழுதும் பயணித்தாலும்என்னால் ஆகவே ஆகாது. ஆனால் அவள் நினைத்தால் (அப்படி ஒரு மாயம் அவள் அறிவாள் என்று அன்று நான் மனதார நம்பினேன்) காலாதீதத்தின் மொக்கவிழ்த்து ஒரே கணத்தில் என்னை வந்து சேர்ந்துவிட முடியும்.

மேலும் இந்த கவிதைகளின் தனித்துவம் என்பது இந்த அகக் கவிதைகள் இயற்கையுடன் கொள்ளும் உறவு. தண்டவாளக் கம்பியாக நம்மை உணர்ந்து, அதில் நாம் உணர்வது தடதடக்கும் ரயிலின் பேரெடை. அதை நீராவி ரயில் என்று கற்பிதம் செய்து கொண்டால், கவிதை உருவாக்கும் காட்சி இன்பம் இன்னும் உயர்கிறது. அந்த ரயில் வெளியிடும் நீராவியே நமது பெருமூச்சுக்கள். அதுவே அடிவானில் கருத்துத் திரளும் மேகம். கடாகாசம் கவிதையில் சுற்றி உள்ள புறம் முழுமையும் அவனைப் பூட்டி, புறம் முழுமையுமே அவனது ஈமத்தாழி என்றாகும் சித்திரம். அனைத்துக்கும் மேல் ஒலியறிதல் கவிதையின் தொடர்ச்சியாக இந்த கவிதையைக் கொண்டால் இப்போது இக்கவிதையில் வரும் நட்சத்திரம் அளிக்கும் உணர்வு நிலை பல மடங்கு அழுத்தம் கூடுகிறது.

( தமிழினி வெளியீடாக மோகனரங்கனின் கல்லாப்பிழை கவிதைத் தொகுப்பிலிருந்து).

Share:

கிரகணத்தில் ஒளிரும் பாதைகள் - சங்கர் கணேஷ்

கவிதைகள் அவை கூட்டிச்செல்லும் மனவெளிப் பயணங்களுக்குள் ஏதோவொரு விதத்தில் உள்ளார்ந்த சாகச உணர்வைக் கொண்டிருக்கின்றன. அவ்வாறான கவிதைகள் தன்னைப் புதிரவிழ்க்கும் வாசகனிடமும் அவ்வுணர்வைக் கோருகின்றன. அவற்றின் மீயதார்த்த வழிகளில் நமக்குத் துணையாக மந்திரக்கோலைத் தூக்கிக்கொண்டு கூடவே வருவதும், பல சமயங்களில் ஏழு கடல் தாண்டி இருட்டான ஒரு மலைக்குகைக்குள் நம்மைத் தள்ளிவிட்டு கடந்து செல்வதுமான விளையாட்டுக்களை நிகழ்த்துகின்றன. பிரபஞ்சக் கரைசலில் இருந்து தன்னைப் பிரித்தெடுக்கும் கவிஞனுக்காக சட்டையை உள்வெளியாக திருப்பிப் போட்டுக்கொள்வது போன்ற இலகுவோடு அவன் உள்ளுலகை அவனுக்கானப் புறவயமான உண்மையாக ஆக்கி அளிக்கின்றன. இப்படி மெய்நிலைகள் பிரிந்தும் கூடியும் நெய்யப்படுகிற வலையில் இருவேறு கவிஞர்களின் பார்வைகள் எப்போதாவது ஒரே பொருளின் மீது நேர்க்கோட்டில் சந்திக்கிற நிழலில் எனக்கென ஒளிர்ந்த அடிச்சரடொன்றைப் பற்றிச் செல்ல இங்கே முயல்கிறேன்.

வழக்கங்களைத் தின்று சலித்து புதியவைகளைத் தேடி வேட்டைக்குச் செல்லும் கவிஞன் முதலில் தன் கவசத்தைக் களைகிறான். நிறங்களும் வடிவங்களும் கலைந்த பெருவனமொன்றைத் தன் அறிதலின் சாயலற்ற காலடிகளால் நோட்டம் விடுகிறான். நெருங்கிப் பார்ப்பதால் விளங்கும் அர்த்தங்களால் மாசுபடாத உலகமொன்றைத் தனக்கெனப் படைத்து அங்கே தொலைந்து போவதாகக் கனவு காண்கிறான். இன்னும் சிறிது நேரத்தில் ஒரு விரல் அவனது குட்டிக் கைப்பிடிக்குள் நுழைந்துகொண்டு அவனை வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் சென்று கவசத்தை அணிவித்துவிடும். அதற்குள்ளாக, மங்கலான முகங்கள் நிரம்பிய அந்த உலகத்தை குழந்தையைப்போல வேடிக்கை பார்த்துச் சேர்த்துக்கொள்கிறான். பின், நம்மை ஆற்றுப்படுத்துவதாக இப்படிக் கவிதைகள் எழுதுகிறான்.

***

கண்களும் வெற்றிடமும்

அந்திக்கருக்கலில் எனக்குக் கண்ணாடியைக் கழற்றி வைக்கும்
ஆசை வந்துவிடுகிறது
கவசமற்ற வெறும் கண்களோடு நடை போகிறேன்
சும்மா சொல்லக்கூடாது
மங்கலாகத் தெரிவதிலும்
சில நன்மைகள் இருக்கவே செய்கின்றன
ஒரு நொடிதான்
எதிர்ப்படும் முகங்கள் யாவும் ஒரே முகங்கள் ஆகிவிடுகின்றன:
மங்கல் முகங்கள்
அவ்வளவு பேரும் புதியவர்கள்
இனிமேல்தான் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் போல
ஒருவரைக் கூட எனக்குத் தெரியவில்லை
பெயர்ப்பலகைகளில், சுவரொட்டிகளில், பேருந்துகளில் என
எந்த எழுத்தையும் படிக்க முடியவில்லை
வேறு ஏதோ மொழியில் இருக்கின்றன அவை:
அர்த்தம் தர மறுக்கும் ஓர் உலகம்
நிறங்கள் நிறங்கள் ஆகப் போராடுகின்றன இங்கு
இந்தத் தேவாலயச் சப்தம் மட்டுமில்லை எனில்
இத்தருணம் ஒரு கனவேதான்
வழியில் பிறகு பாரபட்சமின்றி இருட்டிவிட்டதைப் பார்க்கிறேன்
இனி நான் எனது ஊருக்குத் திரும்பவேண்டும்
நெருங்கி நெருங்கிப் பார்த்தும்
பின்பு கண்ணாடி அணிந்தும்

 ***

சுயத்தை நிரப்பும் முயற்சியில் புறத்தைக் குழைத்து உள்ளே ஊற்றிக்கொள்கிறது கவிமனம். தர்க்கங்களால் இருத்தலை விளக்க முற்படுகிற, பருப்பொருட்களின் தெளிவான வெளிக்கோடுகளைக் காட்டிவிடுகிற பூதக்கண்ணாடியைக் கேட்பாரற்று வீட்டுப் பரணில் தூசிபடிய விட்டுவிடுகிறது அது. தன்னை அச்சப்படுத்துகிற முகங்கள் தெளிவாகத் தெரிகிற தன் கண்களைக் கட்டிக்கொண்டு அச்சத்தைக் கிடக்கிற மனிதன், எங்கிருந்தோ இந்த உலகத்தின் சார்பாக வரும் ஒரு தேவ குரலிடம் தன்னை முழுத்தொத்து அளிக்கிறான். அவன் கை நீட்டுகிற திசைகளில் பாயும் அக்குரல் பிரதிபலித்து மீட்டு வந்த செய்திகளின் மூலமாக அவன் சகலத்தையும் காண்கிறான். ஒளியால் சென்று தொட முடியாத மனக் குகையின் எண்ணற்ற மடிப்புகளின் சுழற்பாதைகளை அறியும் தரிசனத்தைப் பெற்றுவிடுகிறான். அவன் கவிஞனாவது எப்போதெனில், தான் விழுந்த அந்த இருட்டான மலைக்குகைக்குள்ளேயே மாயக் கதவொன்றை சிருஷ்டித்து பின்வருபவர்கள் அதை திறந்துகொள்ளுவதற்கு வைத்துவிட்டு வெளியேறும்போது.

***

மூக்குக் கண்ணாடி அணியாமல்

தூரக்காட்சிகளின் மங்கல்
எனக்கொரு தைரியத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது
மேடை பயம் விலக
பள்ளி நாடகமொன்றில்
மூக்குக் கண்ணாடி அணியாமல்
நடித்த நாள்
நினைவிற்கு வந்தது
எதிர்வரும் மனிதர்கள்
கலங்கலாகிவிட்டனர்
இப்போது பயம் நீங்கிவிட்டது
பார்வைத் தெளிவெனும் அச்சம்
என் வீட்டுப் பரணில் கிடக்கிறது
எத்தனை நாள்
அதை
தூசி போகத்
துடைத்திருப்பேன்
அறியாமை
அறியாமை
அந்த பைனாக்குலர்
இனி எனக்கு வேண்டாம்
இனி தூரத்துப் பறவை
என் கண்களில் பறக்காது
அது வானத்தில் பறக்கிற செய்தியை ஏந்தி வரும்
தபால்காரர் போதுமெனக்கு

***

Share:

கடலும் துரையும் - மதார்

நவீன தமிழ் கவிதைச் சூழலில் ஒரே கருப்பொருளை வைத்து மட்டும் எழுதப்பட்ட தொகுப்புகள் குறைவு. யோசித்து பார்த்தால் சில தென்படலாம்.  பெரும்பாலும் தொகுப்பு முழுக்க ஒரே கருப்பொருளை மட்டும்  வைத்து எழுதும்போது மூன்று சிக்கல்கள் எழும்புகின்றன.

ஒன்று அந்த கவிதை உரைநடை தன்மை பெறும். (உரைநடை என்றால் உரைநடை கவிதை அல்ல. 

  1. வெறும் statement ஆக மட்டும் மாறுவது)
  2. கவிதைக்கான தருணம் நீங்கும்
  3. கவிஞனின் குரல் கவிதையின் குரலை மிஞ்சும்

இதில் இந்த மூன்றாவது சிக்கலான கவிஞனின் குரல் கவிதையின் குரலை மிஞ்சுவதில் இரண்டு நிலைகள் உள்ளன.

  • கவிதை உருவாதலின் ஒரு கட்டத்தில் கவிதை கவிஞனை இழுத்துச் செல்லும் (அல்லது)
  • கவிஞன் கவிதையை இழுத்துச் செல்வான்

பெரும்பாலும் மேற்காணும் இரண்டு நிலைகளும் ஏற்படும் இடம் கவிதை முடிவடைகிற இடமாக இருக்கும். இதில் முதல் வகையான கவிதை கவிஞனை இழுத்துச் சென்று உருவாகும் வகை கவிதைகளில் உலகம் முழுக்க எழுதப்பட்ட பெரும்பாலான சிறந்த கவிதைகள் அடங்கிவிடும். இதில் எந்த சிக்கலும் இல்லை. இரண்டாவது வகையான கவிஞன் கவிதையை இழுத்துச் செல்வதில் ஒரு சிக்கல் உண்டு. கவிஞன் அந்த நேரத்தில் கவிதையின் ஒரு உறுப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அந்தக் கவிதை நல்ல கவிதை அனுபவத்தைத் தரும்.அப்படி அல்லாது கவிஞன் கவிதையின் ஒரு உறுப்பாக இருப்பதைத் தவறவிடும்போது அவன் கவிதை சரிவை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம். இந்த ஒரே கருப்பொருளை வைத்து எழுதப்படும் கவிதைகளில் நிகழும் சிக்கல் இதுதானென நினைக்கிறேன். 

ச.துரையின் சங்காயம் தொகுப்பில் பெரும்பான்மை கவிதைகள் கடலும் கடல் சார்ந்தவைகளும். ஒரே கருப்பொருளின் கீழ் எழுதியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் அவர் எழுதவில்லை. மாறாக அவரது 'நான்' அமைந்திருக்கும் வெளியாக இயல்பாகவே கடல் அவரது கவிதைகளில் படிகிறது. இந்த தொகுப்பில் கடல் துரையின் கருவி அல்ல. கடல் துரையின் 'நான்'. இந்த அம்சம் ஒரே கருப்பொருளின் கீழ் எழுதப்பட்ட கவிதைகள் என்ற மாயத் தோற்றத்தை இந்த தொகுப்புக்கு அளிக்கிறது. இது இத்தொகுப்பில் இயல்பாக அமைகிறது. அபாயகர சொல்லல் முறைகளும், கவிதையின் குரலை விட மேலெழும்பும் கவிஞனின் குரலும் இல்லாமலாகிறது. ஒருவர் இத்தொகுப்பை ஒரே மூச்சில் வாசிப்பாரானால் அவருக்கு ஒரு குறுநாவல் அனுபவம் கிடைக்கக் கூட வாய்ப்புள்ளது. கடல்புரத்தில் நாவலில் அதன் மாந்தர்களை அழித்துவிட்டு கடலை மட்டும் மனதில் நிறுத்துவது மாதிரியான ஒரு அனுபவம். இந்த தொகுப்பு முன்வைக்கிற நிலத்தன்மையும், கவியின் இயல்பான குரலும் இந்த தொகுப்பை அழதாக்குகிறது. 

***

தரவை

பனைகள் பரந்த தரவையில்
ஏராளமான காளான்கள்
நானும் இளையோனும் சேகரித்தோம்

பனைகள் பரந்த தரவையில்
ஏராளமான கால்தடங்கள்
நானும் இளையோனும்
தடங்களை அழிக்க சிரமமித்து
பாதங்களை மாற்றினோம்

பனைகள் பரந்த தரவையில்
ஏராளமான மேகங்கள்
மடிசாய்த்த காளான்களைச் சிதறவிட்டு
நானும் இளையோனும் ஓடுகிறோம்
பின்னேயொரு நீல மழை.

***


Share:
Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive