***
ஆலகால விடம் அருந்தி
அம்மை மடியில்
மயங்கிக் கிடக்கையில்,
காத்திருக்கும்
பக்தர்களின் வரிசைக்கு
காவல்,
தசைச்செழிப்பு புடைத்தெழும்ப
எந்நேரமும் எழுந்துவிடும்
ஆயத்தமாய்
பிரகதீஸ்வரர் முன்
வீற்றிருக்கும் நந்தி.
கயிலாயத்துள் நுழையும்
பக்தகோடிக்கு ஜருகண்டி.
அத்துமீறினால்
விஷ்ணுவே ஆனாலும்
விபரீதம்.
வெறும் மூச்சுக்காற்று போதும்
கருட பகவானை
தடுமாறி விழவைக்க.
உயிர் பிச்சைக்கு
அந்த சிவபெருமானே வந்து
சொன்னால்தான் ஆச்சு.
அவதார அதிகார கைலாச
சிறிய பெரிய, மற்றும்
சாதாரண நந்திகள் மத்தியில்
ஓரமாய் எங்கோ
உடனுறைகிறார்,
சிவபெருமான்.
காலத்தில் உறைந்த
கறுப்பு உலோகம்
விலாப்புறங்கள் சிலிர்த்து
திமில் சரிய
முன்னங்கால் உயர்த்தி
கொம்பசைத்து வாலைச்சுழற்றி
கழுத்துப்பட்டையின் மணி ஒலிக்க
எந்நேரமும்
எழுந்துவிடக்கூடும்.
என்றாலும்,
நந்திகள்
ஏன் எப்போதும்
அமைதியாக
அமர்ந்திருக்கின்றன?
பிரதோஷ நேரங்களில்
எண்ணற்ற நந்திகளுள்
ஏதோ ஒன்றை
தற்செயலாய் தெரிவுசெய்து
அதன் சிரசின்மேல்
தன் ஏழுதாண்டவங்களுள் ஏதாவது ஒன்றை
இடக்கால் வீசி
ஆவேசமாய் நடனமிடுகிறார்
சிவபெருமான்.
நடனம் முடியும்வரை
மூச்சைப்பிடித்தபடி
ஈட்டி முனை வேய்ந்த வேலிக்குள்
விழிபிதுங்க
அசையாமல்
அமர்ந்திருப்பதைத் தவிர
வேறு வழியில்லை.
நந்தி
இம்மி அசைந்தாலும்
போதும்.
அவரின்
அடவு
தப்பிவிடும்
***
அர்த்தமில்லாமல் நிற்கும் ஒரு காட்சி. அந்த காட்சிக்கு சாட்சியாக ஒரு அணில். அதன் விழித்திரையில் தெரிகிறது இப்பிரபஞ்சம்.
யார் சொன்னது, பிரபஞ்ச ரகசியத்தை நேர்க்கட்சியாக அறிந்தேன் என்று?
***
தனிமையின் விஷமேறி
நீலம்பாரித்து நிற்கும்
வானம்
மேகங்கள் அற்று
மேலும் வெறுமை கூட
நீலம் அடர்கிறது.
இலைகளற்ற கிளைகளில்
விளையாட யாருமற்று
நிறங்களை துறந்த கிரணங்கள்
உக்கிர வெண்மையை
ஓலமிடுகின்றன
நிறங்களின் வெறுமையில்
நிறையும் வெண்மையில்
திசையெங்கும் பிரதிபலித்து
மீண்டு வந்து சேரும்
மேலும்
சிறிதளவு
வெண்மை.
பனி பூத்து
பனி கொழிக்கும்
வனமெங்கும்
தானே எதிரொளித்து
சோம்பிக் கிடக்கும்
தூய வெண்மையின்
பொருளின்மையில்,
எப்படியாவது
ஒரு துளி அர்த்தத்தை
சேர்த்துவிட
முயல்வது போல்
பசியில்
வளை நீங்கி
வந்து நிற்கும்
மெலிந்த அணிலின்
மரத்தின் வேரோரம்
பனியில் புதைந்து துழவும்
என் கால்கள்
நெருங்கி நிலைப்பட
அசையாமல் ஆகும்
அணில்
இப்போது
எங்களுடன்
ஏரி தியானிக்கிறது
காற்று தியானிக்கிறது
வானம் தியானிக்கிறது
மரங்கள் தியானிக்கின்றன.
மலைத்தொடர்கள் தியானிக்கின்றன
அணிலின் விழித்திரையில்
ஒரு புராதன
ஓவியமாய்
அசைவின்றி
எஞ்சி
ஒருங்கும்
இப்பிரபஞ்சம்.
***
குறிப்பு: வேணு தயாநிதி மருத்துவ மரபியலில் விஞ்ஞானி; இலக்கியம், இசையில் ஆர்வம் கொண்டவர். இவரது சிறுகதை ஒன்று எழுத்தாளர் ஜெயமோகன் தேர்ந்தெடுத்த 'புதிய வாசல்' நூலில் இடம்பெற்றது. மொழிபெயர்த்த சிறுகதை ஒன்று 'நிலத்தில் படகுகள்' தொகுதியில் இடம்பெற்றுள்ளது. வேணு தயாநிதி, காஸ்மிக் தூசி ஆகிய பெயர்களில் கவிதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் பதாகை, சொல்வனம், தி ஹிந்து, கனலி இதழ்களில் எழுதி வருகிறார்.
***
0 comments:
Post a Comment