கவிதையின் பாதை - மதார்

 தரிசனம்


கடவுளைக் கண்டேன்

எதையும் கேட்கவே தோன்றவில்லை

அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்

ஆயினும் மனதினிலே ஒரு நிம்மதி 


ஆத்மாநாமின் இந்தக் கவிதையில் வெளிப்படும் மனிதன் கடவுளை நேரில் காணும்போது என்ன பேச என்று வியந்து போய் நிற்கிறான். நல்ல கவிதைகளை அணுகும்போதும் இதே மனநிலைதான் உண்டாகிறது. எனவே கவிதை பற்றி விமர்சன ரீதியாக அன்றி கவிதையின் ஒரு சிறு அம்சத்தை மட்டும் குறிப்பிட்டு பேசுகிறேன்.

ஏன் கவிதை வாசிக்க வேண்டும்? கவிதையின் தேவை என்ன? என்ற கேள்வி அன்று தொட்டு இன்று வரை பலராலும் கேட்கப்பட்டு அதற்கான பதிலும் அன்றுதொட்டு இன்றுவரை பலராலும் சொல்லப்பட்டு  வருகிறது.  ஏன் கவிதை வாசிக்க வேண்டும் என்பதற்கு சமீபத்தில் வாசித்த ஒரு நூலிலிருந்தே உதாரணம் சுட்டுகிறேன். எல்.எஸ்.கரையாளரின் 'திருச்சி ஜெயில்' புத்தகத்தில் ஒரு பகுதி வருகிறது. தனி நபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதற்காக எல்.எஸ்.கரையாளரையும் அவரோடு சேர்த்து சில சுதந்திர போராட்ட வீரர்களையும் பிரிட்டிஷ் அரசு கைது செய்து சிறையில் அடைக்கிறது. பின்பு அவர்கள் வேலூர் சிறையிலிருந்து திருச்சி சிறைக்கு மாற்றப்படுகிறார்கள். அப்படி மாற்றலாகி செல்லும்போது கரையாளர் ஒரு விஷயத்தை அதில் குறிப்பிடுகிறார். திருச்சி சிறைக்கு அவர்கள் வருவதற்கு முன்பு வரை திருச்சி சிறையின் வெளிப்பக்க சுற்றுச்சுவர்கள் முள்வேலிகளால் அமைக்கப்பட்டிருந்திருக்கிறது. உள்ளே உள்ள சிறைக் கைதிகள் வெளியே தெரியும் காட்சிகளை பார்ப்பதற்கு ஏற்ற வகையில் அது இருந்திருக்கிறது. தனிநபர் சத்தியாகிரக கைதிகள் வருவது உறுதியானதும் திருச்சி ஜெயிலின் வெளிப்பக்க சுற்றுத் தடுப்புகள் உயர்த்தப்பட்டு வெளிக்காட்சிகள் தெரியாத வகையில் கட்டமைக்கப்படுகிறது. இந்த இடத்தில் கரையாளர் ஒரு ஏக்கமாக குறிப்பிடுகிறார். இப்படி சுற்றுத் தடுப்பு எழுப்பினால் எப்படி வெளிக் காட்சிகளை நாங்கள் பார்ப்பது? ஆடு மேய்த்துப் போகும் சிறுவனை எப்படி பார்ப்பது? பள்ளி செல்லும் குழந்தைகளை எப்படி பார்ப்பது? என்று சொல்லிக் கொண்டே போகிறார். 

இதை ஏன் கவிதையின் இடத்தில் பொருத்துகிறேன் என்றால், இதில் கரையாளர் சிறைக்குள் இருக்கிறார் அவரது கனவு வெளியாக இருக்கிறது. இந்த கனவைத்தான் கவிதை நமக்கு திருப்பித் திருப்பித் தந்துகொண்டே இருக்கிறது. சிறையில் இருந்தவருக்கு சரி, வெளியில் திரியும் நமக்கும் ஏன் கவிதை வாசிப்பு அவசியம் என்று கேட்டால் நாமுமே ஒரு கட்டமைக்கப்பட்ட சிறைக்குள் தான் இருக்கிறோம் என்று சொல்லலாம். வீடு, வீட்டை விட்டால் அலுவலகம் என்று குறிப்பிட்ட ஒரு சட்டகத்துக்குள்ளேயே நவீன மனிதனின் வாழ்வு அடைந்துள்ளது. எனவே 'வெளி' என்பது நமக்கும் ஒரு கனவாகவே உள்ளது. இப்போது இந்த அரங்கில் அமர்ந்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் வானத்தை எப்போது கடைசியாக, தன்னிச்சையாக பார்த்தீர்கள் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள் ?...... 

ஆகவே, கவிதைதான் நமக்கு வெளியைச் சுட்டும் ஒன்றாக எப்போதும் இருந்து வருகிறது. 'வானத்தைப் பார்' என்று திரும்பத் திரும்பச் சொல்கிறது. சோறூட்டும் அம்மா நிலவைக் காட்டி சோறூட்டுவாள். ஒரு கட்டத்திற்கு மேல் நாம் சாப்பிட ஆரம்பித்ததும் இறக்கி விடுவாள். அதன் பிறகு நாம் போய் ஏறி உட்காரும் இடுப்பு கவிதையாய்த்தான் இருக்க முடியும். 

மனிதனுக்கு எது தேவை? எது விடுதலை? என்பதையும் கவிதை நமக்கு சுட்டிக் காட்டிக் கொண்டேயிருக்கிறது. நாம்தான் அதைத் தவறவிட்டுக் கொண்டேயிருக்கிறோம். பயன்பாட்டை நோக்கியே நகரும் சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்ட வாழ்வை


என் வாழ்வில் மிதக்கின்றன

இனி மழையைத் தரவோ

புயலை உருவாக்கவோ 

இயலாத சில மேகங்கள்

ஆனாலும் அவை வண்ணம் சேர்க்கின்றன

எனது அந்தி வானத்துக்கு 

 - தாகூர்


போன்ற கவிதைகள் கேள்வி கேட்கின்றன. 

இன்று கவிதையும், அறிவியலும்  இயற்கையை நெருங்கிச் செல்கின்றன. இயற்கையை கவிதை நெருங்குவதற்கும், அறிவியல் நெருங்குவதற்கும் வித்தியாசம் உண்டு. அறிவியலின் பொருட்டு நன்மைகள் விளைந்தாலும்,  தீமைகளும் உள்ளன. கவிதையில் அப்படி இல்லை. உதாரணமாக ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 திரைப்படம். அதில் அறிவியலின் கொடிய விளைவுகள் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அழகியலின் உச்ச பட்ச மொழியாக கவிதைதான் பயன்படுத்தப்பட்டிருக்கும். தேவதேவன் சொல்வது போல் எந்த ஒன்றிலும் உயர்வாக இருப்பது எதுவோ அது கவிதை. எனவே, கவிதையும் அறிவியலும் இயற்கையை நெருங்கிச் செல்லும் இந்தச் சூழலில் கவிதை அறிவியலை முந்திச் செல்ல வேண்டும் என்பதே இன்றைய தேவை.

இப்போது உரையின் தலைப்புக்குள் வரலாம். 'கவிதையின் பாதை' - கவிதை என்னென்ன மாற்றங்களை அன்றுதொட்டு இன்றுவரை அடைந்திருக்கிறது என்றால் நாம் உடனே அதன் வடிவ மாற்றத்தைத்தான் கண்ணை மூடிக்கொண்டு குறிப்பிடுவோம். அப்படி அல்லாமல் கவிதை தனக்குத்தானே ஒரு மாற்றத்தை தனது நெடும்பயணத்தில் செய்துகொண்டே வருகிறது. அது கவிஞனை ஒரு கருவியாக மட்டுமே கொண்டு தனக்குத்தானே அந்த மாற்றத்தைச் செய்துகொண்டே வருகிறது. 

'அழிந்த கலைகள்', 'அழிந்து வரும் கலைகள்' என்றெல்லாம் பகுத்து அதைக்காக்க சில முன்னெடுப்புகளை செய்கிறோம். பொதுவாகவே, இந்த அழிந்த, அழிந்து வருகிற கலைகள் யாவும் காலத்தே முன்தோன்றியவை. அப்படி இருக்கும்போது வயது மூத்த கவிதை எப்படி இன்றும் இளமையோடு இருக்கிறது? சிலர் மொழிக்கும் முந்தையது கவிதை என்று சொல்கிறார்கள். எனில், கவிதை தன்னைத்தான் பாதுகாக்க என்ன செய்கிறது? கவிதை தனக்குத்தானே ஒன்றைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டே வருகிறது. அந்த மாயத்தைத்தான் 'கவிதையின் பாதை' என்ற தலைப்பில் பேசுகிறேன்.  

பொதுவாக தமிழ்க்கவிதையை சங்க காலம்,காவிய காலம்,பக்தி இலக்கிய காலம், சிற்றிலக்கிய காலம் பின்பு யாப்பை உதறி எழுத முற்பட்டபோது புதுக்கவிதை காலகட்டம், நவீன கவிதை காலகட்டம் என்று குறிப்பிடுகிறோம். இதில் ஒரு காலத்திலிருந்து இன்னொரு காலத்துக்கு கவிதை பயணிக்கும்போது ஒவ்வொரு கதவாகத் திறந்து திறந்து செல்கிறது. இதில் ஒரு காலம் முடிந்து இன்னொரு காலம் ஏன் துவங்குகிறது என்பது அந்தந்த காலகட்ட சமூக, அரசியல் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கிறது. அப்படி அல்லாமல் கவிதையே தனக்குத்தானே சில மாற்றங்களை காலகட்டம் மாறி பயணிக்கும்போது செய்துகொண்டே வருகிறது. Survival of the fittest என்பது போல் கவிதை தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டே வருகிறது. 

உதாரணத்துக்கு மேற்சொன்ன கவிதை காலகட்டங்களில் மூன்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். சங்க காலம், பக்தி காலம், நவீன காலம். இதில் சங்க கால புறநானூற்று பாடலொன்றில் கவிதை வீரத்தைப் பாடுகிறது. அந்தக் காலகட்டம் மாறி பக்தி காலத்துக்கு வரும்போது கவிதை வேறொன்றை பேசுகிறது. இது காலகட்டத்தையும், அரசியலையும் சார்ந்து மாறுபடுவதாக ஆய்வாளர்கள் கூறுவர். அப்படி சமூக அரசியல் காரணிகளைச் சாராமல் கவிதையின் பாதையில் தன்னளவிலேயே ஒரு மாற்றம் நிகழ்கிறது. அது என்ன மாற்றம்? 

  1. கவிதை ஒரு காலகட்டத்திலிருந்து இன்னொரு காலகட்டத்திற்கு மாறும்போது  பழைய காலகட்டத்திலிருந்த ஒரு அம்சத்தை கழற்றிவிட்டு முன்னே செல்கிறது. 
  2. பழைய காலகட்டத்திலிருந்த ஒரு அம்சத்தை விடாமல் தக்கவைத்துக் கொள்கிறது.
  3. புதிய காலகட்டத்தில் ஒரு புதிய அம்சத்தை உருவாக்குகிறது. 

இந்த மூன்றும் கவிதையின் பாதையில் அன்றுதொட்டு இன்றுவரை தன்னிச்சையாக நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. 

இதில் முதல் அம்சம் கவிதை எதை விட்டுவிடுகிறது? - இது பெரும்பாலும் அரசியல் சமூகக் காரணிகளை பொறுத்து அமைகிறது. உதாரணத்துக்கு புறநானூற்றில் போர்கள் பற்றிய செய்யுள்கள் மிகுந்திருக்கும். காலகட்டம் மாறும்போது சமூகம் போரைக் கைவிடுகிறது. கவிதையும் அதைக் கீழே போட்டுவிடுகிறது. காலகட்டம் மாறியபிறகு கவிதை அதை கேள்வி கேட்கிறது. அதைக் கழற்றி விட்டால் மட்டுமே கவிதை அடுத்த கட்டத்துக்கு நகர முடியும். எனவே, கவிதை தன்னளவிலேயே கவிஞனை ஒரு கருவியாக மட்டுமே கொண்டு அதை செய்து முடித்து விடுகிறது. 

இரண்டாவது அம்சம் கவிதை எதை விடாமல் தக்க வைத்துக் கொள்கிறது ? - இந்த அம்சம் கவிதையின் ஆதி தொட்டு இன்று வரை கவிதையில் திகழும் ஒன்றாக உள்ளது. இது பெரும் மாயம் தான். இது கவிதையின் அகம் சார்ந்தது. கவிதையின் 'உயிர்' என்று குறிப்பிடலாம்.கவிதையின் மாறாத குணம் எனலாம். எழுத்தாளர் சுஜாதாவின் 'ஹைக்கூ - ஓர் எளிய அறிமுகம்' நூலின் முதல் பத்தியில் ஹைக்கூ குறித்த ஒரு எளிய வரையறையை சுஜாதா அளித்திருப்பார்.ஏதாவது ஒரு இடத்தில் கவிதை பறக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருப்பார். ஹைக்கூ குறித்த இந்த வரையறையை நவீன கவிதைக்கும் பொருத்திப் பார்க்கலாம். கவிதை எப்போதும் கைவிடாத பண்பு இதுதான்.

மூன்றாவது அம்சம் - கவிதை எதை புதிதாகச் சேர்க்கிறது? இது மொழியில் நிகழக்கூடியது. அந்தந்த காலகட்ட சமூக, அரசியல் சூழலையும் பொருத்தது. 

ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் ஒரு கேள்வி எழுப்புகிறார். அதில் கவிதையின் வரலாற்றில் இயற்கை, தத்துவம் சார்ந்த கவிதைகளை முதல் தரக் கவிதைகள் என்றும் மண், அரசியல் சார்ந்ததை இரண்டாம் தரம் என்றும் பிரிக்கிறார்களே அது ஏன் என்று கேட்கிறார். இதற்கான பதில் மேலே குறிப்பிட்ட கவிதையில் நிகழும் மூன்று மாற்றங்களைப் பொறுத்தே அமைகிறது என்று நினைக்கிறேன். இயற்கை என்பது கவிதை எப்போதும் கைவிடாத ஒன்று. 

கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் தனது கவிதையொன்றில் நவீன கவிதைக்குள் தந்தை பெரியார் ஏன் இன்னும் வரவில்லை என்ற கேள்வியை எழுப்புகிறார். இதற்கான பதிலும் கவிதையில் நிகழும் இந்த மூன்று மாற்றங்களைப் பொறுத்தே அமைகிறது என்று நினைக்கிறேன். புதுக்கவிதை முடிந்து நவீன கவிதை துவங்கும்போது இயேசு மிக எளிதாக நவீன கவிதைகளில் அமர்ந்துவிடுகிறார். 'இயேசு' என்ற சொல்லை பயன்படுத்தும்போது 'கருணை' என்ற பொருள் வந்துவிடுகிறது. ஆகவே 'கருணை' என்ற சொல்லையே 'இயேசு' என்ற சொல்லாக நாம் பயன்படுத்தி வருகிறோம். 'கருணை' என்பது எப்போதும் கவிதை கைவிடாத பண்பு. பெரியார் நவீன கவிதைக்குள் வருவதில் என்ன சிக்கல் இருக்கிறது? பெரியார் புதுக் கவிதைக்குள் எளிதாக வந்துவிடுவதை பார்க்க முடிகிறது. பெரியார் குறித்து பாரதிதாசனின் ஒரு கவிதை உண்டு.

தொண்டுசெய்து பழுத்த பழம்

தூயதாடி மார்பில் விழும்

மண்டைச்சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும் 


இப்போது பெரியார் நவீன கவிதைக்குள் அடியெடுத்து வைக்கும்போது கவிதை அந்த மூன்று மாற்றங்களை தனக்குள் செய்து பார்க்கிறது. முதலில் கவிதை கைவிடும் ஒன்று - மேற்சொன்ன பாரதிதாசனின் பாடல் துதிப்பாடல் வகைக்குள் வந்துவிடுகிறது. நவீன கவிதை போற்றிப் புகழும் வரிகளை எழுத முற்படும்போது அது கவிதையை புறநானூற்று மன்னனின் அரசவைக்கு திருப்பிவிடும். எனவே கவிதை அதைக் கைவிடுகிறது. எனவே கவிதையின் இந்த பண்பை பொறுத்து பெரியாரால் நேரடியாக நவீன கவிதைக்குள் வருவது இயலாமல் போகிறது. 

இரண்டாவது, கவிதை எப்போதும் கொண்டிருக்கும் பண்பு - இதை வைத்து பெரியார் ஒரு கருத்தாக நவீன கவிதைக்குள் வந்துவிடுகிறார். வெயில், சந்திரா தங்கராஜ் மேலும் பல கவிஞர்களின் கவிதைகளில் இதைப் பார்க்கலாம். சந்திரா தங்கராஜின் ஒரு கவிதையில் சிறுமியின் பாவாடையிலிருந்து பறக்கும் பூக்களை பற்றி எழுதியிருப்பார். அது மறைமுகமாக பெரியாரின் கருத்துகள் ஏற்படுத்திய தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இது போல பல உதாரணங்களை நவீன கவிதையில் சொல்லலாம். இது ஒரு ஆளுமையாக அன்றி கருத்தாக பெரியார் நவீன கவிதைக்குள் வந்த வழியாகும். 

மூன்றாவது, கவிதையில் புதிதாகச் சேர்வது - இது நவீன மொழியைச் சேர்ந்திருக்கும். 

ஆகவே, இரண்டாம் வழிமுறையில் பெரியார் நவீன கவிதைக்குள் வந்துவிடுகிறார். 

கவிதையின் பாதையில் நிகழும் இந்த மூன்று மாற்றங்களையும் ஒரு சேர சுட்டுவது போல் ஒரு கொரியக் கவிதை உண்டு.

பெர்சிமன் மலர்கள் 

உதிரும் பெர்சிமன் மலர்களை எண்ணினேன்

என் இளம் வயதில்


படைவீரர்களின் தலைகளை எண்ணினேன்

போர்க்காலத்தில்


இப்பொழுது

பணத்தை எண்ணுகிறேன்

பெருவிரலில் எச்சில் தொட்டு


எதை

எண்ணப் போகிறேனோ

எதிர்வரும் காலத்தில் 


 - கிம் சின் டே

(தமிழில் : பா.ரவிக்குமார் - கல்பனா)


இதில்,

"படைவீரர்களின் தலைகளை எண்ணினேன்

போர்க்காலத்தில்"

என்ற வரியில் கடந்து வந்த காலத்தை கவிதை கேள்வி கேட்கிறது. இது தன் பாதையில் கவிதை கைவிடும் பண்பு.


"உதிரும் பெர்சிமன் மலர்களை எண்ணினேன்

என் இளம் வயதில்" 

இந்த வரிகளை ஒரு கனவாக கவிஞர் முன்வைக்கிறார்.  கவிதையின் தலைப்பே பெர்சிமன் மலர்கள் தான். இது தன் பாதையில் கவிதை எப்போதும் கைவிடாத பண்பு.


"எதை

எண்ணப் போகிறேனோ

எதிர்வரும் காலத்தில்" 

என்ற வரிகள் கவிதையில் புதிதாகச் சேர்வதைக் குறிக்கிறது. இது தன் பாதையில் கவிதை புதிதாகச் சேர்க்கும் பண்பு.


இதுதான் கவிதை தன் பாதையில் தன்னிச்சையாக செய்து வரும் மூன்று அம்சங்கள். 

இறுதியாக ஒரு சீனக்கவிதையை வாசித்து இந்த உரையை நிறைவு செய்கிறேன்.

எது கவிதை? 

 - யான் வாங் லீ

(தமிழில் : க.மோகனரங்கன்) 


கவிதை என்றால் என்ன

அது வெறும் வார்த்தைகளின் விவகாரம் என்று நீங்கள் சொன்னால்

ஒரு நல்ல கவிஞன்

சொற்களிலிருந்து விலகியிருப்பான் என்று நான் சொல்லுவேன்

அது அர்த்தம் சம்பந்தப்பட்டது

என்று நீங்கள் சொன்னால்

ஒரு நல்ல கவிஞன்

அர்த்தத்திலிருந்தும் விலகியிருப்பான் என்று நான் சொல்லுவேன்

அப்படியென்றால்

சொற்களும் அதன் அர்த்தங்களும் இல்லாமல்

கவிதை எங்கே இருக்கிறது

என்று நீங்கள் கேட்கும்பட்சத்தில்

உங்களுக்கு நான் விடை சொல்லுகிறேன் 

சொற்களிலிருந்து விடுபட்டபின்னும்

அர்த்தங்களிலிருந்து விலகியபின்னும்

அங்கே இன்னும் எது மிஞ்சியிருக்கிறதோ

அதுவே கவிதை. 

(பொருநை நெல்லை 6வது புத்தகத் திருவிழாவில் 'கவிதையின் பாதை' என்ற தலைப்பில் 06.03.23 அன்று பேசிய உரையின் கட்டுரை வடிவம்)

***

ஆத்மாநாம் தமிழ் விக்கி பக்கம்

க. மோகனரங்கன் தமிழ் விக்கி பக்கம்

***


Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தமிழில் புதுக் கவிதை - க.நா.சு

க.நா.சு வின் கவிதைக் கலை - ஸ்ரீநிவாச கோபாலன் ‘எளிய பதங்கள்‌, எளிய சந்தம்‌’ என்றும்‌, ‘தெளிவுறவே அறிந்திடுதல்‌, தெளிவு தர மொழிந்திடுதல்‌’ என்...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (2) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (161) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (2) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (161) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive