கவிதைக்கலை : சில குறிப்புகள் - சீனு

1. சில வருடம் முன்னர் வாசிக்க எடுத்த கவிதைத் தொகுப்பு ஒன்றின் பின்னட்டையில், அந்த கவிஞரின் பிரகடனம் ஒன்று // பசிக்கு உண்ணத் தக்க கவிதைகளை நான் எழுதுவேன். அதன்பொருட்டே மொழிக்கு நான் என்னை தின்னக் கொடுத்தேன்.// இவ்வாறாக பொறிக்கப்பட்டிருந்தது.

இந்த தொகுப்பில் கவிதைகள் இருக்க வாய்ப்பு இல்லை எனும் முன் முடிவுக்கு மேற்கண்ட பிரகடனம் வழியே முதல் தர கவிதை வாசகனால் உடனடியாக வந்துவிட முடியும். காரணம் பிரகடனத்தில் கவிஞருக்கு இருக்கும் தனது கவிதைகள் எப்படி இருக்கவேண்டும், அது எதை செய்ய வேண்டும் எனும் போதம்.  

குறியீடாக அன்றி நேரடியாக எடுத்துக்கொண்டால் இந்த பிரகடனத்தில் இருக்கும் யதார்த்தமற்ற சமூக நோக்கு. இன்று இந்தியாவில் பட்டினி சாவுகள் ஒழிந்து கால் நூற்றாண்டு ஆகிறது. பல காப்பகங்களில் அரிசியும் தானியங்களும் தேங்கிக் கிடக்கிறது. இன்று ஒருவன் பசித்துக் கிடக்கிறான் என்றால் அவன் சோம்பேறியாக மட்டுமே இருக்கமுடியுமேயன்றி அதன் பின்னால் எந்த சமூக சீர்கேடும் இருக்க வாய்ப்பே இல்லை.

இந்த பின்புலத்தில் நின்று எழும் கவிதை எதுவும் இரண்டாம் தர கவிதை என்றே அமையும். ஒரு கவிஞன் தான் இத்தகையவன் தனது கவிதைகள் இவற்றை இயல்வதாக்க வேண்டும் என்ற போதம் கொள்ள நியாயம் உள்ள சமூக சூழல் இருக்கலாம். உதாரணம் முந்தைய போர்க்கால ஈழம். அங்கிருந்து கவிஞர் சேரன் போன்றோர் வசமிருந்து எழுந்த இரண்டாவது சூரிய உதயம் போன்ற முதல் தர கவிதைகளை சீர்தூக்கிப் பார்த்தால் அத்தகு கவிதைகள் அதன் படைப்பாக்க தனிஇயல்பாக  கவிஞனின் செயல்திட்டதுக்கு வெளியே நிகழ்ந்ததைக் காண முடியும். 

கவிதைப் படைப்புக் கணத்தின் தன்னெழுச்சி மீது  (நான் ஒரு வர்க்க பேதி தோழர், நான் ஒரு மூன்றாம் உலக நாட்டு உதிரி, நான் ஒரு பின்நவீனகால பேமானி இத்யாதி இத்யாதி போன்ற)  கவிஞனின் அறிவு சார் கட்டுப்பாட்டுகள் எதுவும் அக்கவிதையை இரண்டாம் இடத்துக்கு தள்ளவோ, அல்லது கவிதையல்லாததாக அந்த கவிதையை மாற்றவோதான் துணை செய்யும்.


2. மனிதத் தன்னிலை என்பது உயிரியல் விளைவா சமூக உற்பத்தியா என்பது  மேலைத் தத்துவ மரபின் விவாத எதிரிடை.  இந்த விவாத முகம் வழியே தெளிந்து வரும் மனிதத் தன்னிலை என்பதன் மூலம் எதுவாக இருப்பினும் அந்த பொது மனிதத் தன்னிலையில் இருந்து குறிப்பிட்ட தனிமனித தன்னிலை ஒன்றிலிருந்து தெறித்ததாக மேம்பட்டதாக இருப்பதே  கவித்தன்னிலை என்பது.

கவிதை என்பது கவிஞனால் எழுதப்படுவது என்பது கவிஞர் தேவதேவன் கூற்று.

கவித்தன்னிலை வாய்த்தவன் எவனோ அவனே கவிஞன்.

ஜூராசிக் பார்க் படத்தில் ஒரு அழகிய காட்சி உண்டு. நாயகன் நாயகியின் புறங்கையில் ஒரு சொட்டு நீரை விடுவான். அது ததும்பிக்கொண்டே இருக்க, இப்போது அது எந்த பக்கம் வழியும் என்று கேட்பான். நாயகி அது எப்படி சொல்ல முடியும் அதன் திசை வழி இயற்கையின் கையில் அல்லவா இருக்கிறது என்பாள்.

அந்த நீர் சொட்டு போலத்தான் கவித்தன்னிலை வழியே எழும் கவிதையும். அதன் திசை வழியை உயிரோட்டம் கொண்ட இந்த வாழ்வுதான் தீர்மானிக்கவேண்டுமே அன்றி கவிஞன் அல்ல. முதல் தர கவிதைகள் இவ்விதமே தொழிற்படுகின்றன. சென்ற கவிதை வரையிலான அவரது கவிதை உலகை முற்றிலும் மறுதலிக்கும் ஒரு கவிதை இக்கணம் கவிஞர் லட்சுமி மணிவண்ணன் வசமிருந்து எழக்கூடும். வாழ்வின் இயல்பு அதுதான். நல்ல கவிதையின் இயல்பும் அதுவே. 

தன்னைக் குறித்த போதம் அப்படிப்பட்ட தான் இருக்கும் இந்த சமூகம் குறித்த போதம், இந்த சூழலில் தனது கவிதைகள் செய்ய வேண்டிய பணி இவ்வாரெல்லாம் தொகுத்துக்கொள்ளும் ஒருவரால் கவிதையை 'எழுதத்தான்' முடியுமேயன்றி அவரிலிருந்து கவிதை 'எழாது'. 

சுருங்க கூறினால் கவிஞன் எனும் எழுவாய் 'எழுதும்' பயனிலை என அமைவது இரண்டாம் நிலைக் கவிதை. கவிஞன் எனும் எழுவாயில் 'எழும்' மொழிவெளிப்பாடே முதல் தர கவிதை.

                
3. பசிக்கு உணவாக வராது, நோய்க்கு மருந்தாக வராது, சமூக கீழ்மைக்கு ஒரு சாட்டையடியாக வராது, எனில் முதல் தர கவிதையின் பணிதான் என்ன? காலகாலமாக அதே காதல் உள்ளிட்ட இன்ன பிற இவற்றை பேச வந்ததுதானா அவை? 

காதல் எனும் கருப்பொருளை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டால் உலகின் கடைசி மனிதன் உள்ள வரை காதல் இருக்கும். காதல் கவிதையும் இருக்கும். இதற்கு மேல் காதல் குறித்து சொல்ல எதுவுமே இல்லை எனும்படிக்கு எழுத்தப்பட்டுவிட்ட மகத்தான காதல் கதைகளுக்கு பிறகும் காதல் கவிதைகள் எழுந்து கொண்டே இருக்கிறது. இதில் இங்கே என்னதான் நிகழ்கிறது?

கலிலியோ துவங்கி ஜேம்ஸ் வெப் வரை இன்று பிரபஞ்ச காட்சி சார்ந்து  இனி தெரிந்து கொள்ள ஏதும் இல்லை எனும் வகையிலான நிலைக்கு மானுடம் வந்து விட்டது. ஆனாலும் இன்று ஒரு பெரும் வால்வெள்ளி நட்சத்திர மண்டலத்தை கடக்கும் எல்லா வானவியல் விஞ்ஞானியும் ஓடிச்சென்று அதை பின்தொடர்வார்கள். காரணம் மிக முக்கியமானது. இந்த பிரபஞ்சத்தில் கண்டுபிடிக்க பட்டவை யாவும் பிரபஞ்சம் நெடுக ஒளிரும் நட்சத்திர ஒளியால் மட்டுமே அது வழியே நிகழும் பிரதிபலிப்பு வழியாகவே சாத்தியம் ஆனது. நட்சத்திர பிரதிபலிப்பு விழாத  காரணமாக இப்போதும் அறிதல் புலத்துக்குள் வராத பல கோள்கள் உண்டு. வால் வெள்ளி என்பது பயணம் போகும் நட்சத்திரம். நிலையான நட்சத்திர ஒளி தோற்கும் இடத்தில் நகரும் வால்வெள்ளி ஒளி வெல்லும். பல கோள்கள் இருப்பு வால் வெள்ளி வழியாக மட்டுமே தெரிய வந்தது.

நல்ல கவிதை என்பதும் இந்த வால்வெள்ளி போன்றதுதான். நீங்கள் அறிந்த வாழ்வுப் புலத்தை நல்ல கவிதை ஒன்று ஊடருக்கும்போது அது நாமறிந்த இந்த வாழ்வு சார்ந்து அதற்கு முன்பாக நமது அறிதலுக்கு வராத ஒன்றை தொட்டு ஒளி ஏற்றிக் காண்பிக்கிறது.

கவிதையின் பணி இதுவே. இதன்பொருட்டே காலகாலமாக கவிதைகள் வாசிக்கப்படுகிறது.
                   
4. கவிதைக் கலையில் விமர்சன ரீதியாக இந்த முதல் தர கவிதை இரண்டாம் தர கவிதை இவற்றின் செயற்களம் பண்பு பேதம் இவை குறித்து விவாதங்கள் தொடர்ந்து நிகழ்ந்தாலும் இந்த இரண்டு கவிதைகளிலும் சேராதவை என்று போலி கவிதைகளை சொல்லவேண்டும். 

இருட்டுக்குள் பாம்பைக் கண்டாலும் பாம்பு போன்ற ஒன்றைக் கண்டாலும் எழும் பீதி ஒன்றுதான்.  இருளே எனினும் பாம்புக்கு பயப்படுவது நியாயம். பாம்பு போன்ற ஒன்று பாம்பின் இடத்தை எடுத்துக்கொண்டு நம்மை பயமுறுத்த அனுமதிக்கிறோம் எனில் அது மடமை.

கவிதையிலும் அவ்வாறே. கயிறு எவ்விதம் பாம்பின் தோற்றத்தை எடுத்துக் கொள்கிறதோ அவ்விதம் போலிக்கவிதைகள் கவிதையை ஒரு மொழிக்கட்டுமானம் என்று மட்டுமே குறுக்கி அந்த மொழிக் கட்டுமானத்தின் வித விதமான கலவைகளை உற்பத்தி செய்துகொண்டே செல்லும். உற்பத்திக்கும் படைப்பிக்கும் இடையே மொழிக் கட்டுமானத்தில் மிக மிக மெல்லிய வேறுபாடு மட்டுமே உண்டு. இந்த அம்சம் கொண்டே இன்று கணினிகள் கூட செயற்கை அறிவு வழியே கவிதைகள் எழுதுகிறது. அசல் கவிதையை இனம் காணும் நுண்ணுணர்வு எதுவோ அதுவே போலி கவிதையை இனம் காணும் நுண்ணுணர்வாகவும் அமையும். 
                    

5. அசல் கவிதையின் மூலமாக விளங்குவது உண்மையான வாழ்வுத் தருணம் ஒன்றை, தீவிரம் கொண்டு தீண்டும் கவித்தன்னிலை ஒன்றின் இருப்பு. பிரிதொன்றில்லா உணர்வுக் கட்டுமானம். அதை வெளியிடும் மொழிக்கட்டுமானம். 

நல்ல கவிதைகளின் மொழி வசீகரம் அலாதியானது. குழந்தையின் மிழற்றல் கொண்ட உணர்ச்சிகரம், மந்திர ஒலி கொண்ட தாக்கம் இந்த இரண்டின் உன்னத கலவையே நல்ல கவிதையின் மொழியாக அமைகிறது. மந்திரம் போல சொற்கள் கேட்ட பாரதிதான் ஆடி வரும் தேனே என எழுதுகிறான். கனல் மணக்கும் பூக்கள் என எழுதுகிறான். இவற்றுக்கெல்லாம் பொருள் உண்டா என்ன? மழலையில் எழும் உவகை மந்திரத்தில் எழும் தாக்கம் இரண்டும் கலந்ததல்லவோ கனல் மணக்கும் பூக்கள் எனும் தொடர்.

பாரதி தொட்டு பிரமிள் சுகுமாரன் என நீளும் கவிஞர்கள் வழியே செழித்து வளர்ந்த இந்த ப்ரத்யேக கவிதை மொழி, அது அளிக்கும் படிமங்களும் காட்சியும் வேறு எங்கும் அன்றி அங்கு மட்டுமே காணக் கிடைப்பது. நகைக்கும் புல்லை, வியக்கும் பூவை பாரதியின் அந்த கவிதைக்குள்ளன்று வேறு எங்கு சென்று காண முடியும். கவிதை மட்டுமே கையாகும் மொழி, கவிதையின் வழியாக மட்டுமே காண முடிந்த ஒரு உலகம், அந்த உலகம் அளிக்கும் உணர்வு எழுச்சி இவையே அசல் கவிதைகளின் அடிப்படை.
 
6. அசல் கவிதையை அடையாளம் காண வாசகன் கைக்கொள்ள வேண்டிய கருவி அவனது இதயம்தானேயன்றி மூளை அல்ல. வாழ்வு என்பது போன கணத்திலோ வரும் கணத்திலோ அல்ல. இந்த கணத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. 2000 வருடத்துக்கு முன்பான  கபிலனோ 2000 வருடங்களுக்கு பிறகான தேவதேவனோ அவர்கள் கவிதையில் இலங்கும் வாழ்வு இந்த கணத்தை சேர்ந்ததே.  கவிதை எந்தளவு 'இந்த கணத்தில்' வாழ்கிறதோ வாசகனின் இதயம் கொண்ட அழகியல் ரசனையும் அதே அளவு 'இந்த கணத்தில்' வாழ்வதே. 

அறிவுக் கோட்பாடு அதன் அத்தனை வல்லமைகளுடன் வாழ்வு நிகழும் இக்கணத்துக்கு ஒருகணம் முன்பாகவே நின்று விடுவது. அறிவின் எல்லை அது. அறிவின்  கோட்பாடுகளின் மற்றொரு பலவீனம் என்பது அவற்றுக்கு இதயத்தின் வழிகாட்டல் இல்லை என்பது. தேவதேவன் அவ்வளவே ஒரு கோட்பாட்டால் ப்ரம்மராஜனிலும் கவிதையை கண்டுபிடித்துவிட இயலும்.

அசல் கவிதை என்பது இந்த வாழ்வு சார்ந்து அந்தக் கவிஞன் எய்தும் கண நேர உயர் பிரக்ஞையின் வரைபடம். அந்த வரைபடம் கொண்டு இதுவரை தனது அக உலகில் தான் கால்பதிக்கா நிலத்தில் வாசகன் கால் பதிக்கிறான். கவிஞன் தனது கவிதை வழியே ஏற்றி அளிக்கும் ப்ரக்ஞயின் சுடரை கொண்டு வாசகன் தானும் சுடர் கொள்கிறான். 

***

                                                          
Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தமிழில் புதுக் கவிதை - க.நா.சு

க.நா.சு வின் கவிதைக் கலை - ஸ்ரீநிவாச கோபாலன் ‘எளிய பதங்கள்‌, எளிய சந்தம்‌’ என்றும்‌, ‘தெளிவுறவே அறிந்திடுதல்‌, தெளிவு தர மொழிந்திடுதல்‌’ என்...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (2) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (161) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (2) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (161) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive