பதிவுகள்
இன்று வாசலில்சிமெண்டுத் தரைபோட்டிருக்கிறது
நாளைக்கு
இறுகிவிடும்.
காக்கையின் கால்விரல்
கழுதையின் குளம்படி
குழந்தையின் காலடி
பிச்சைக்காரன்
குடுகுடுப்பைக்காரன்
உஞ்சிவிருத்தி பிராமணன்
தெரிந்தவர், தெரியாதவர்
ஸ்கூட்டர் சக்கரம்
இரவின் சுவர் நிழலில்
எவனுக்கோ
இரகஸியமாய் காத்து நின்ற
கால் மெட்டி நெளிவு
இளங்கன்றின் வெள்ளைமனம்
பசுவின் நிதானம்
காளையின் கம்பீரம்
நாயின் குலப்பகை
பூனையின் கபடம்
பன்றியின் அவலட்சணம்
இறுகிய தரையில்
நிரந்தரம்
விரிசல் கண்டு
தூள் ஆனாலும்
புதியவை பதியாது
பதிந்ததும் நிலைக்காது
உருண்டுவரும் கோலிகள்
நில்லாது போகலாம்
அல்லது
குழிக்குள் விழிக்கலாம்
- தி.சோ. வேணுகோபாலன்
எழுத்து காலகட்ட கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான தி.சோ.வேணுகோபாலனின் ஒரு நல்ல கவிதை இது.
வாசலில் சிமெண்ட் தரை போட்டிருப்பதைப் பார்த்ததிலிருந்து தோன்றியிருக்கும் வாழ்வு சார்ந்த கவிதை. சிமெண்ட் பூசியுள்ள வாசல்தரையில் மனிதனின் பாதங்கள் மட்டுமல்ல, பிராணிகளின் பாதங்களும் பதிய வாய்ப்புண்டு; நிறைய இடங்களில் கண்டிருப்போம். கவிஞரும் ஏற்கெனவே பார்த்ததில் இங்கேயும் அதுபோல நிகழலாம் என்று நினைத்துப் பார்க்கிறார்.
கவிதை, ஏதோ சாதாரண விஷயத்தைச் சொல்வதுபோலப் படலாம்; அப்படி அல்ல. கவிஞனின் கற்பனையில், பார்வை விசேஷத்தில் ஒரு புதிய கோலம் கொண்டு விடுகிறது. இந்தக் கற்பனையும் பார்வையும் எதார்த்தத்திலிருந்தே எழும்புபவை.
சிமெண்ட் போட்டுள்ளது எதார்த்தம். அதில் தடங்கள் பதியலாம் என்பதும் நேரக்கூடியதே. எனில் கவிஞன் மனசு புனைவுகளை உருவாக்குகிறது என்பது தான் விசேஷம். எதார்த்தத்திலிருந்து முளைக்கும் புனைவுதான் இக்கவிதை. பெரிதாக என்ன இருக்கிறது என்று எண்ணத் தோன்றும். அவ்வாறல்ல.
கவிதை பெரிய விஷயங்களையே பேசவேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை. எளிய பொருள்களையும் சொல்லலாம். சொல்லப்போனால், அரிய விஷயங்கள் குறைவாகவும் எளிய விஷயங்கள் நிறையவும் இருப்பதுதான் வாழ்வே. எளிய பொருளின் இயல்பையும் அழகையும் கவிதையில் கொண்டு வருவதும் செய்யப்பட வேண்டியதே.
“இரவின் சுவர் நிழலில்/எவனுக்கோ காத்து நின்ற/ கால் மெட்டி நெளிவு” என்ற வரிகள் – நுணுக்கமான அவதானிப்பில் கண்டறிந்த வாழ்வம்சம் பொதிந்தவை.
கவிதைத் தொடக்கம், நிரம்பத் தன்மையாகத்தான் இருக்கும். ஆனால் பிறகு என்று ஓர் எதிர்ப்பார்ப்பைத் தோற்றுவிக்கும். தொடரும் இரு பத்திகளும் அடுக்கிச் சொல்லும் முறையில். நான்காவது, பதிவுகளின் இயல்பு. ஐந்தாவது விளக்கம். ஆறாவது பத்தி, முத்தாய்ப்பு. ஐந்தாவது பத்தி தேவையில்லை என்றே கருத வைக்கிறது.
கவிதை, எளிமையாக இருக்கக்கூடாது என்பதில்லை. அவ்வாறு இருப்பது கவிதை இல்லை என்றும் சொல்ல முடியாது. இருண்மை, மயக்கம், பூடகம், புதிர்த்தன்மை இவையெல்லாம் பின்நாள்களில், பெரும்பாலும், கவிதையின் வகைமைக்காக, நவீனத்துக்காக, புத்திசார்ந்து ஏற்படுத்திக் கொண்டவைதாம். தன்போலத் தோன்றாது என்பது இல்லை.
கவிதை, தன்னளவிலேயே, கவிதையாக இருக்கையில், நகாசு வேலைகள் எதற்கு. எப்படிப்பார்த்தாலும் கவிதையின் விஷயம்தான் முதலில். பூவேலைகள் பிறகுதாம். அது அந்தந்த கவி ஆளுமையைப் பொருத்தது. ஏற்படுத்திக் கொண்டவையே இயல்பு போலாகிவிடக்கூடாது. வேலைப்பாடுகள் இல்லாதது வெள்ளைக்கவிதை என முடிவு கட்டலாகாது. ‘பதிவுகள்’ பொருளுள்ள கவிதை என்பதோடு பொருத்தமான பூவேலைகள் உள்ளதும்தான்.
- விக்ரமாதித்யனின் 'மாயம் செய்யும் கவிதை தொகுப்பிலிருந்து'
***
விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்
***







0 comments:
Post a Comment