தமிழின் ஐம்பெரும்
காப்பியங்களில் ஒன்றாகக் கருதப்படும் சிலப்பதிகாரம், இலக்கியத் தரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது அவற்றில்
சிறந்ததாகத் திகழ்கிறது. பிற காப்பியங்களில் முழுமையான வடிவில் இன்று கிடைப்பவை
இரண்டு மட்டுமே. மற்ற இரண்டு காப்பியங்களும் சில துணுக்குகளாகவும் பின்னாளில்
எழுதப்பட்ட சுருக்கமான குறிப்புகளாகவும் மட்டுமே கிடைக்கின்றன.
இந்த ஐந்து
காப்பியங்களும் தமிழ்ப் பெண்கள் அணியும் அணிகலன்களின் பெயர்களால்
அழைக்கப்படுகின்றன: சிலப்பதிகாரம், காலில் அணியும் சிலம்பு. மணிமேகலை, இடையணியாகிய
மேகலை. சிந்தாமணி, கழுத்தணியான சிந்தாமணி மாலை. வளையாபதி,
கைகளில் அணியும் வளையல். குண்டலகேசி, காதில்
அணியும் குண்டலம். இந்த ஐந்து காப்பியங்களும் தமிழ்ப் பண்டிதர்களின்
சொல்வழக்குப்படி தமிழ்க் கலைமகளின் ஐந்து ரத்தினங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
எனினும், இலக்கியத் தரத்தின் அடிப்படையில் அவை அனைத்தும்
சமமானவை அல்ல. சிலப்பதிகார நாயகன்-நாயகியின் மகளுடைய கதையைப் பேசுவதே மணிமேகலை.
அது மதத்திலும் சமூகத்திலும் நிலவிய பல்வேறு அம்சங்களின் பின்னணியுடன் அக்கதையை
விவரிக்கிறது. சிந்தாமணி மரபான செய்யுள் வடிவங்களை நீண்ட கதை வடிவில் பயன்படுத்திய
விதத்தில் சாதனைமிக்க ஓர் இலக்கிய ஆக்கம். இதில் கதாநாயகனின் பலவிதமான மணவாழ்க்கை சார்ந்த
சாகசங்கள் கொஞ்சம் சலிப்பூட்டும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளன. மற்ற இரண்டு
காப்பியங்கள் குறித்து இன்று நமக்குக் கிடைப்பது அவற்றின் மேலோட்டமான கதைச்
சுருக்கங்கள் மட்டுமே. இங்கு கருத்தில்கொள்ள வேண்டியது யாதெனில், இந்த ஐந்துமே காப்பியத்திற்கான பண்புகள் கொண்டவை என்பது அக்காலத்தைய
சமஸ்கிருத மரபுவாதிகள் உருவாக்கிய பிம்பம் மட்டுமே. உண்மை என்பது அவ்வாறல்ல.
இன்று நமக்கு
முழுமையாகக் கிடைக்கின்ற மூன்று தமிழ்க் காப்பியங்களில், அநேகமாக சிலப்பதிகாரமே மிகப்
பழமையானது. இது இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த படைப்பாகவும், சந்தம் இல்லாத ஆனால் குறிப்பிட்ட தாள நடையில் [meter] அமைந்த அகவற்பா வடிவத்தின் (blank verse) உச்ச
நிலையாகவும் காணப்படுகிறது. இச்செய்யுள் வடிவம், இங்கிலாந்தின்
எலிசபெத்திய காலத்தைச் சேர்ந்த மர்லோவும் ஷேக்ஸ்பியரும் பயன்படுத்திய தாளக்
கவிதைகளுக்கு மிகவும் நெருக்கமானது. இக்காப்பியத்தின் காலத்தைப் பற்றிய கேள்வி
விவாதத்திற்குரியது; அதற்குப் பின்னர் வருகிறேன்.
இந்தக்
காப்பியத்தை சமணர், பௌத்தர்,
இந்துக்கள் எனப் பல மதக்குழுக்களும் தங்களுடையதாகக் கூறுகின்றன.
ஆனால், இதை எழுதியவர் பிற சமயத்தாரோடு இணக்கமாக வாழ்ந்த ஒரு
சமணத் துறவி என்பது கிட்டத்தட்ட நிரூபணமான விஷயம். கதைகளின்படி இளங்கோவடிகள்
(அதாவது ‘அடிகளான இளவரசன்’) என்பவர்,
தூரத் தெற்கிலிருந்த ஒரு சேர மன்னனின் இளைய மகன் ஆவார். ஒருநாள்
ஜோதிடர் ஒருவர், முடிக்குரிய மூத்த மகன் உயிரோடு
இருக்கும்போதே இளையவன் தந்தையின் அரசை ஏற்கப் போகிறான் என்று கணித்துள்ளார். உடனே
அந்த இளையவர் உலகத்தைத் துறந்து துறவியாக ஆனார்; இதனால்
ஜோதிடரின் கணிப்பு பொய்யாகி, தம் அண்ணன் அமைதியாக ஆட்சி
செய்ய முடியும் என நம்பினார். இந்த அண்ணன், சேர மன்னன்,
காப்பியத்திலேயே ஓரிடத்தில் இடம்பெறுகிறார்.
சமணத் துறவியாக
நம்பப்படும் இளங்கோவடிகளுக்கு பல்வேறு கலைகள், மதங்கள், அரசுகள் பற்றி இருந்த ஆழமான
புரிதல் சிலப்பதிகாரத்தை பல்வேறு களங்களைத் தொட்டு செல்லும் படைப்பாக
ஆக்குகின்றது. மனித நடத்தைகளின் மீதான நேர்மையான விசாரணை இதனை ஆர்வமூட்டும் மானுட
ஆவணமாகவும் வாசிக்க வைக்கிறது.
இளவரசராக இருந்த
துறவி எவ்வாறு காப்பியம் படைப்பவராக மாறினார் என்பதும் இந்தக் காப்பியத்திலேயே
சொல்லப்பட்டுள்ளது. காப்பியத்தில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு நேரில் சாட்சியாக
இருந்த ஒருவர், அவரிடம்
வந்து கதையை விவரிக்கிறார். அவர் தானே ஒரு கவிஞர் என்பதால், காப்பிய
நாயகியின் மகளைக் குறித்து ஒரு செய்யுள் படைத்ததையும் சொல்கிறார். இதுவே
இளங்கோவடிகளை அக்கதையைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டியது. அவர் தன் காப்பியத்தை
இயற்றியபோது, அவருடைய அண்ணன், சேர
மன்னன் படைப்பின் மீது கொண்ட ஈடுபாட்டால் வடக்கே போர் நடத்திச் சென்று, இமயமலையிலிருந்து கற்களையும், கங்கையிலிருந்து
நீரையும் கொண்டுவருகிறார். தெய்வ நிலையை அடைந்துவிட்ட காப்பிய நாயகிக்கு ஒரு
கோயில் அமைக்கிறார். இதுவே காப்பியத்தின் மூன்றாம் பகுதியாக விவரிக்கப்படுகிறது.
காப்பியத்தின் முதல் இரண்டு பகுதிகள் முறையே காவேரியின் முகத்துவாரத்தில் அமைந்த
புகழ்பெற்ற சோழர் தலைநகரான புகாரிலும் பாண்டியரின் தலைநகரான மதுரையிலும்
நடக்கின்றன. மூன்றாம் பகுதியோ சேர அரசின் தலைநகரமான வஞ்சியில் நிகழ்கிறது. இன்று
இந்நகர் வெவ்வேறு இடங்களுடன் அடையாளம் காணப்படுகிறது.
கதையின் சாரம்
முழுமையாகத் தமிழ் மரபிலிருந்து கிளைத்த ஒன்று. ஆனாலும், புத்த, சமண மரபுகளில்
இதேபோன்ற கதைகள் சமஸ்கிருதத்தில் பின்னாளில் தோன்றியிருப்பதாகத் தெரிகிறது. அவை
இக்கதையின் பாதிப்பால் தோன்றியிருக்க வேண்டும். உள்ளூர் நாயகி ஒருத்தி
அந்நிலத்தால் வழிபடப்படும் தெய்வமாக உயர்வது இக்காப்பியம் கூறும் முக்கிய
அம்சங்களில் ஒன்று. சமீப நாட்களில், சில அறிஞர்கள் தென்
தமிழகம் மற்றும் சேரப் (கேரள) பிரதேசங்களில் வழிபடப்படும் பகவதி எனும்
தெய்வத்துடன் இந்த நாயகி வழிபாட்டை ஒப்பிட்டுக் காண முயன்றுள்ளனர்.
காவிய ஆசிரியர்
தன் தனித்துவமான செய்யுள் பாங்கில், அக்கால மக்களிடையே பரவலாக அறியப்பட்ட ஒரு சமீபத்திய நிகழ்வின் கதையையே
விரித்துரைக்கிறார். மனிதர்களின் வாழ்க்கையில் விதியின் வழிகளைப் பின்தொடர்வதும்
அதை விளக்குவதுமே படைப்பின் நோக்கமாகத் தோற்றமளித்தாலும், மனித
வாழ்க்கை குறித்தோ அல்லது விதி குறித்தோ எந்தத் தத்துவார்த்தமான விவாதத்தையும்
அவர் முன்வைப்பதில்லை.
இந்தக்
காப்பியத்தை கவிஞரின் காலத்து மூடநம்பிக்கைகளையும் சமயப் பின்னணியையும் மட்டும்
நீக்கிவிட்டு பார்த்தால், இப்போது சொல்லப்படும் சமூக யதார்த்தவாத அழகியலியன்படி அமைந்த ஆவணமாகவே
கொள்ளலாம். இந்த அழகியலை ஆதரிப்பவர்கள், ஒரு தெய்வம்
உருவாகிவரும் சித்திரத்தை விரிவாகப் பேசும் காப்பியத்தின் மூன்றாம் பகுதியை
மட்டும் குறைவுடையதாய் கருதலாம். இப்பகுதி பின்னாளில் சேர்க்கப்பட்டிருக்கலாம்
என்றும் வேறொரு கவிஞரால் எழுதப்பட்டிருக்கலாம் என்று வாதிடுபவர்களும் உண்டு. ஆனால்
இந்த வாதம் ஏற்புடையதல்ல. காரணம், முதல் இரண்டு பகுதிகளிலும்
இதேயளவிற்கு அக்காலத்தின் பொதுவான பழக்க வழக்கங்களும் மத நம்பிக்கைகளும்
பேசப்பட்டுள்ளன. மூன்று பகுதிகளும் ஒரே மகத்தான தமிழ் கவிஞரின் படைப்புகளே. பல
நூற்றாண்டுகளாக நூற்றுக்கணக்கானப் பெரும் கவிஞர்கள் சிறிய படைப்புகளுக்கே
அகவற்பாவை சிறப்புற பயன்படுத்தி வந்தனர். அவ்வரிசையில் சற்றே சுதந்திரமளிக்கும்
செய்யுள் வடிவமான அகவற்பாவின் உச்ச நிலையில் உருவானது சிலப்பதிகாரம்.
சூரியனை, சந்திரனை, நட்சத்திரங்களை,
மழையைச் சுருக்கமாகப் புகழ்ந்து வர்ணித்தபடி காப்பியம்
தொடங்குகிறது. பின்னர் சோழ அரசின் தலைநகரமான புகாரைப் புகழ்கிறது. அங்கு பல
பெருவணிகர்கள் வாழ்ந்தனர்; அவர்கள் உள்நாட்டிலும் கடல்
வழியிலும் வியாபாரம் செய்து, செல்வ வளத்துடன் இளவரசர்களைப்
போன்று வாழ்ந்தனர். அப்படியான வணிக இளவரசர்களில் ஒருவரான கோவலன் என்பவரின் திருமண
நிகழ்வை ஆசிரியர் விரிவாக வர்ணிக்கிறார். அவர் மற்றொரு செல்வந்த வணிகரின் மகளான
கண்ணகியை மணக்கிறார். அக்கால வழக்கம்போல், திருமணத்தின்போது
நடன நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்நிகழ்ச்சியில் வசீகரிக்கும்
அழகும் நடனத் திறனும் மிகுந்த மாதவி அற்புதமாக நடனம் ஆடுகிறார். அவர் அங்கே இருந்த
அனைவரின் இதயத்துடன் மணமகனின் இதயத்தையும் சேர்த்தே கவர்ந்துவிடுகிறார். இது தமிழ்
அகத்துறை படைப்புகளில் பரவலாகக் காணப்படும் ஒரு வழக்கமான சூழல். கணவன் வேறொரு
கணிகையின் தந்திரங்களால் கவரப்பட்டு மனைவியைப் பிரிந்து செல்வான், மனைவியோ அவன் மனம் மாறித் திரும்ப வரும்வரை பொறுமையாகக் காத்திருப்பாள்.
அவன் திரும்பி வரும்போது பிரிவின் காரணமாக இன்னும் அதிகமான பாசத்துடன் அவனை
ஏற்றுக்கொள்வாள்.
இளங்கோவடிகளும்
இந்த இலக்கிய மரபைத் தொடர்கிறார், ஆனால் அதைத் தனக்கே உரிய தனித்துவத்துடன் உயர்த்துகிறார். காப்பியத்தில்
வரும் மாதவி அவைகளில் ஆடும் நடன மங்கை என்பதில் மாற்றமில்லை. ஆனால் அவள் தன்
கலையில் மிகுந்த தேர்ச்சியடைந்தவள். நடனத்தில் அவளின் தேர்ச்சியை விவரிக்கும்போது,
துறவியாகிய இளங்கோவடிகளுக்கும் அக்கலையில் உள்ள ஈடுபாடு
வெளிப்படுகிறது. மேடை அமைப்பு, நடனத்துக்குத் துணைபுரியும்
இசைக்கருவிகள், அவளது கலைநயத்தின் நுட்பங்கள் என அவர்
வழங்கும் நுண்விவரங்கள் யாவும் ஆழமும் வியப்பும் மிக்கவை. மேலும், இக்காப்பியத்தில் மாதவி ஒரு பத்தினியாகவே காட்டப்பட்டிருக்கிறார். ஒருமுறை
கோவலனின் அன்பைப் பெற்றதும், அவள் அவனை முழு மனதுடன்
நேசிக்கிறாள். அவனுக்கு உண்மையாக வாழ்கிறாள். இவர்களின் இணைவில் ஒரு மகள்
பிறக்கிறாள், அவளே பின்னர் வந்த புத்த மதக் காப்பியமான
மணிமேகலையின் நாயகி.
கணவன் மீது பற்று
கொண்டவளாகிய கண்ணகி, தன்
கணவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள். இல்லத்தரசியாக தன்
கடமைகளைத் தெய்வ நம்பிக்கையுடன் நிறைவேற்றிக்கொண்டு, விட்டுச்
சென்ற கணவனின் மீது கொண்ட அன்பை உள்ளத்தில் பாதுகாத்து வாழ்கிறாள். மாதவிக்கும்
கோவலனும் இடையே ஒரு தவறான புரிதலால் பிரிவு ஏற்பட்டபோது, கோவலன்
மீண்டும் தன் மனைவியிடமே திரும்புகிறான். பொருளாதார ரீதியில்
ஏழ்மையடைந்திருந்தாலும், மனைவியின் அன்பால் மகிழ்ச்சியுடன்
வாழ்கிறான். அவன் தான் இழந்த தனது செல்வத்தை மீட்டெடுக்க வேண்டிய நிலை வருகிறது.
தன்னை யாரும் அறியாத வேறொரு நகரில் அது எளிதாக இருக்கும் என்று எண்ணி, பாண்டியர்களின் தலைநகரமான மதுரைக்குப் புறப்பட முடிவு செய்கிறான்.
கண்ணகியும் அவனுடன் செல்லத் தீர்மானிக்கிறாள். பூம்புகாரிலிருந்து மதுரை வரையிலான
அந்தப் பயணம் விரிவான சூழல் விவரங்களுடன் வர்ணிக்கப்படுகிறது. அக்காலத்தில்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலைகளைப் பற்றிய
சித்திரம் நமக்கு இப்பயணத்தின் மூலம் கிடைக்கிறது. கணவனும் மனைவியும் பயணத்தில்
இருக்கும்போதே, தன் காதலனிடமிருந்து பிரிவைத் தாங்கமுடியாத
மாதவி உலக வாழ்க்கையைத் துறந்து துறவியாகிவிட்டாள் என்கிற செய்தி அவர்களுக்குக்
கிடைக்கிறது. பின்னர் அவளுடைய மகளும் அதே பாதையைத் தேர்ந்தேடுக்கிறாள்.
பயணத்தின் சோர்வு
காரணமாக மதுரையின் புறநகரை அடைந்தபோது,
கண்ணகி இடையர்களான ஆய்ச்சியரிடம் அடைக்கலம் பெறுகிறாள். கோவலன்
மட்டும் கண்ணகியின் மதிப்புமிக்க சிலம்பை விற்க நகருக்குள் செல்கிறான், அதன் மூலம் வியாபாரம் தொடங்குவதற்குத் தேவையான பணத்தைத் திரட்டிவிடலாம் என
நம்புகிறான். ஆனால் இங்கே விதி குறுக்கிடுகிறது. தமிழ் மரபில் காட்டப்படும்
அனைத்து பொற்கொல்லர்களைப் போலவே இங்கும் அரசின் பொற்கொல்லன் ஒரு கள்வனாக
இருக்கிறான். அவன் அரசியின் ஒரு சிலம்பைத் திருடி வைத்திருக்கிறான். அப்போது ஒரு
அந்நியன் சிலம்பை விற்க முன்வந்ததைப் பார்த்ததும், அவனைத்
திருடனாகக் காட்டி பாண்டிய மன்னரின் அவைக்குக் கொண்டு செல்கிறான். விதியின்
கொடுமையாக, மன்னன் விஷயத்தை ஆழமாக விசாரிக்காமலும் ஒருவேளை
அரசியை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும் உடனடியாக கோவலனுக்கு மரண தண்டனை
விதித்துவிடுகிறான்.
இதற்கிடையில், விசுவாசமான மனைவியான கண்ணகியைப்
பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த ஆய்ச்சியர் பல தீய சகுனங்களைப் பார்க்கிறார்கள்.
தங்கள் தெய்வத்தை சாந்தப்படுத்துவதற்காக அவர்கள் பாடல்களைப் பாடி, நடனம் ஆடுகிறார்கள். அவற்றை இன்றைய மொழியில் சொன்னால், நாட்டார் பாடல்கள் மற்றும் நாட்டார் நடனங்கள் என்று வகைப்படுத்தலாம்.
இதையும் கவிஞர் விரிவான விவரங்களுடன் வர்ணிக்கிறார். ஆனால் இவை யாவும்
பலனளிக்காமல் போகின்றன. கண்ணகி கணவனைத் தேடிப் புறப்படும்போது, கோவலன் ஏற்கெனவே இறந்துவிடுகிறான். இதை அறியும் கண்ணகி பழிவாங்கும்
தெய்வம் போல மதுரையின் வீதிகளில் நடந்து செல்கிறாள்.
கண்ணகி பாண்டிய
மன்னரின் முன் தோன்றி, அவன்
இழைத்தது மாபெரும் அநீதி என்கிறாள். இதை அவன் திட்டமிட்டே செய்ததாகவும் குற்றம்
சாட்டுகிறாள். அரசியின் சிலம்புகளுக்கும் தன் சிலம்புகளுக்கும் உள்ள வேறுபாட்டை,
நிரூபிக்கிறாள். தன் சிலம்புகளில் உள்ள ரத்தினங்களும் மணிகளும் வேறு
எனக் காட்டி, தன் தரப்பை கோபாவேசத்துடன் முன்வைக்கிறாள்.
தான் செய்த பெரும் அநீதியின் முழுப் பரிமாணத்தையும் உணர்ந்த பாண்டிய மன்னன்
அதிர்ச்சியில் உயிர்துறக்கிறான், அவனது அரசியும் உடன்
உயிர்நீங்குகிறாள். ஆனால் மன்னனும் அரசியும் இறந்தபோதிலும் கோபம் தணியாத கண்ணகி,
இறை ஆணையின் மூலம் மதுரை நகரைத் தீக்கிரையாக்குகிறாள். அந்நகரமே
அழிந்துவிடுகிறது. தன் கடமையை நிறைவேற்றிய விசுவாசமான மனைவியாக, கணவனுடன் சேர்ந்து அவள் விண்ணுலகம் சேர்கிறாள்.
மதுரையில் நடந்த
இந்த அதிசய நிகழ்வுகளுக்கெல்லாம் சாட்சியாக இருந்த ஒருவர், இவற்றை இளங்கோவடிகளுக்கு
எடுத்துரைக்கிறார். இளங்கோவின் சகோதரரும் சேர மன்னருமானவர், இந்த
தெய்வீகப் பெண்ணுக்கு ஓர் ஆலயம் அமைப்பதாக சபதம் ஏற்கிறார். தன் படைகளைத் திரட்டி,
வெற்றிப் பயணம் மேற்கொண்டு, இமயமலையிலிருந்து
கல்லையும் கங்கை நதியிலிருந்து நீரையும் வென்ற அரசர்களின் தலைமேலேயே சுமக்கச்
செய்து கொண்டுவந்து, தன் நகரத்தை ஒட்டிய காடுகளில்
கண்ணகிக்கான கோவிலை அமைக்கிறார். அந்த ஆலயம் அமைந்ததும் தெய்வமாகிவிட்ட கண்ணகி
வழக்கமான சமய மரபின்படி தன் பக்தர்களின் வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறாள்.
இப்பகுதியில் பக்தி இலக்கியக் கவிஞர்களின் மரபை ஒத்த பாடல்களும் இடம்பெறுகின்றன.
இந்தக் காப்பியம்
கதைசொல்லல், பாடல்வரிகள்
(lyric), இசைப்பாடல்கள் (song) ஆகியவற்றின்
ஒருங்கிணைந்த வடிவமாக உள்ளது. இதன் பெரும்பகுதி நெகிழ்வான அகவற்பா வடிவில்
அமைந்துள்ளது. இது கவிஞரின் காலத்திலிருந்த பேச்சு ஒலியமைப்புகளுக்கு நெருக்கமாக
இருந்திருக்கலாம். மிகுந்த உணர்ச்சியைக் கொண்ட இந்தக் கதை, எந்த
உணர்ச்சி வெளிப்பாடுமின்றி சொல்லப்படுகிறது. நிகழ்வுகள் ஒருவிதமான ஆர்வமற்ற,
விலகிய பார்வையுடன் முன்வைக்கப்படுகின்றன. இந்தக்
கட்டுப்படுத்தப்பட்ட வெளிப்பாடு அதிக விளைவை உண்டாக்கக்கூடியதாய் இருந்தாலும்
இளங்கோவடிகளுக்கு முன்பு தமிழில் இதைப் பயன்படுத்தியவர் யாரும் இல்லை. பின்னாளில்
கம்பன், தன் இராமாயண மறுகூறலில் இதே வகையான
கட்டுப்படுத்தப்பட்ட வெளிப்பாட்டை பயன்படுத்தியிருக்கிறார்.
கவிஞர் அகவற்பா
வடிவத்தில் மட்டுமல்ல, இசைநயத்துடன்
யாப்பில் அமைந்த செய்யுள்கள் புனைவதிலும் வல்லவராகத் திகழ்கிறார். மதுரையின் ஆய்ச்சியர்
பாடும் சமயப் பாணியிலான நாட்டார் பாடல்களை ஒத்த கவிதைகளைப் பற்றி முன்பே நான்
குறிப்பிட்டிருந்தேன். மாதவியும் கோவலனும் பிரிய நேரும் தருணத்தில், அது என்றென்றைக்கும் நிகழும் பிரிவாக, ஓர் இசைநயம்
மிக்க பாடல் காட்சி வருகிறது. அவ்வகையில் அது தமிழ்க் கவிதையில் எழுதப்பட்ட மிகச்
சிறந்ததாக படைப்பாகக் கருதப்படுகிறது. மீண்டும், இறுதிப்
பகுதிகளில், பக்திக் கவிஞர்களின் இசைநயத்தை கொண்டுவருவதிலும்
கவிஞர் தன் வல்லமையைக் காட்டுகிறார். மீண்டும் மீண்டும் பாடும் தன்மை கொண்ட அந்த
யாப்பு, ஆழ்ந்த சமய உணர்ச்சியைத் தூண்டுவதாகவும், ஓர் எல்லையில் தெய்வீகப் பரவசநிலைக்கு ஆட்படுத்துவதாகவும் உள்ளது. பல்வேறு
யாப்பு வடிவங்களோடு சேர்த்து, சில இடங்களில் கவிஞர்
உரைநடையையும் பயன்படுத்துகிறார். சில பகுதிகளை இணைக்க இந்த உரைநடை உதவுகிறது. அது
ஷேக்ஸ்பியர் பாணியை நினைவூட்டுவதோடு, தமிழ்மொழியின்
காலவரிசையில் முதன்முதலில் தோன்றிய உரைநடை முயற்சிகளில் ஒன்றாகவும்
கருதப்படுகிறது. இந்தக் காப்பியத்தைத் தவிர, இளங்கோவடிகள்
எழுதியதாக வேறு படைப்புகள் ஏதும் இல்லை.
பண்டைய
தமிழ்நாட்டின் மூன்று நகரங்களில் வாழ்ந்த மக்களிடையே நிலவிய மறைமுகமான மனநிலை
வேறுபாடுகள் இன்றைய வாசகனின் கவனத்திற்குரியவை. பூம்புகாரில் வாழ்ந்த மக்கள்
உலகியல் அறிவு கொண்டவர்களாகவும் பொருளாதார முன்னேற்றம் அடைந்தவர்களாகவும்
காணப்படுகிறார்கள். அது வணிகர்களின் நகரம்; பரத்தையரும் வாழ்க்கையின் பல இன்பங்களும் செழிப்பான
வாழ்விற்குரிய அம்சங்கள் பலவும் நிறைந்த நகரம். அவர்கள் அழிவின் விளிம்பில்
நின்றிருந்தாலும் அதை உணர்வதில்லை. ஒரு நகரத்தின் திருவிழா மிக நுட்பமாக
விவரிக்கப்படுகிறது, அதன் உளநிலை இன்றைக்கும் நாம் நெருக்கமாக
அறியக்கூடியதாகவும் உள்ளது. பயணிகள் பாலைவனங்களையும் காடுகளையும் கடந்து செல்வதும்
விரிவாக வர்ணிக்கப்படுகின்றன. பாண்டியர்களின் தலைநகரமான மதுரை நீதியின் நகரமாகத்
திகழ்கிறது. ஆனால் அந்த நீதி தவறும்போது, அந்நகரம் தன்
மன்னரையும் தன்னையும் அழிக்கக்கூடிய சக்தியாக ஆகிறது. நகர்ப்புற எல்லைகளில் வாழும்
ஆயர்கள் ஒழுக்கமும் எளிமையும் நிறைந்த சமய வாழ்க்கையை வாழ்கிறார்கள். பலருக்காக
ஆடப்படும் கணிகையரின் அவை நடனங்களுக்கு பதிலாக, இங்கு
தீமையைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மக்களின் நடனமும் பாடல்களும்
இடம்பெறுகின்றன. சேர நாட்டின் மக்கள் மூன்றாவதாக வேறொரு வர்ணத்தை அளிக்கின்றனர்.
அவர்கள் லட்சியத்திற்காகப் போராடும் வீரர்கள்; இறைநம்பிக்கையை
பக்திப் பாடல்களாக வெளிப்படுத்திப் போற்றி பாடுபவர்கள். தங்கள் மரபான தெய்வங்களை
வழிபடுவதோடு, புதிய தெய்வங்களையும் வரவேற்று, வழக்கமான பாணியில் பாடல்கள் பாடி வணங்குகிறார்கள். வெற்றிகொள்ளப்பட்ட ஆரிய
அரசர்கள் இமயமலையின் கல்லையும் கங்கை நீரையும் சுமந்து வருகிறார்கள் என்கிற விவரம்,
நெடுங்காலம் முன்பு ஆரியர்கள் தென்னாட்டை
ஆக்கிரமித்துக்கொண்டிருந்தபோது தோன்றிய ஒரு வீரக் கனவாகவே இருக்கலாம்.
இக்காவியத்தின்
காலக்கட்டம் எவ்வளவு பழமையானது என்பது முக்கியமான கேள்வியாக இருந்தாலும், தற்போது அதற்கான துல்லியமான விடை
இல்லை. அறிஞர்கள் இக்காவியத்திற்குப் பலவாறாக காலம் நிர்ணயித்துள்ளனர். பொதுவாக
இரண்டாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலப்பரப்பு
குறிப்பிடப்படுகிறது. இளங்கோவடிகள், காப்பியத்தில்
விவரிக்கப்படும் நிகழ்வுகளுக்கு சமகாலத்தவராகக் கருதப்படுகிறார். காப்பியத்தின்
நிகழ்வுகள், பூம்புகார் கடலில் மூழ்குவதற்கும் சோழர்கள்
உள்நாட்டிலுள்ள உறையூருக்கு இடம்பெயர்வதற்கும் முன்பு நடைபெற்றதாகச்
சொல்லப்படுகிறது. மேலும், கண்ணகி கோயில் குடமுழுக்கு
விழாவிற்கு இலங்கை அரசன் ஒருவன் வந்ததாகவும் காப்பியம் குறிப்பிடுகிறது. பிரதியில்
காணப்படும் ஜோதிட மற்றும் வானியல் குறிப்புகளும் முன்வைக்கப்படுகின்றன. இவை யாவும்
இந்தக் காப்பியத்தின் காலம் பழமையானது என்பதற்கு ஆதரவாகச் சொல்லப்படுபவை. ஆனால்
மறைந்த அறிஞர் வையாபுரிப் பிள்ளை இவ்வாதங்களை ஏற்க முடியாதவை என நிராகரிக்கிறார்.
தமிழில் சொற்களின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட மொழியியல் சான்றுகளை முன்வைத்து,
இக்காப்பியம் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என வாதிடுகிறார்.
இளங்கோவடிகள்
பயன்படுத்தும் அகவற்பா வடிவம் மிகுந்த நுட்பமும் செம்மையும் கூடியது. இத்தகைய
முழுமைநிலை பல நூற்றாண்டு பயிற்சியின் மூலம் மட்டுமே அடையக்கூடியது. மேலும், இக்காப்பியம் தன்னளவிலேயே நுட்பமான
நவீனப் படைப்பாகும்; முதிர்ச்சியற்ற தொடக்கநிலை படைப்பல்ல.
இது காவியங்களுக்கு உரிய சமஸ்கிருத மரபுச் சட்டங்களைத் திட்டவட்டமாக மீறுகிறது.
இதில் ஒரு பெண் நாயகியாக இருக்கிறாள்; இக்காவியத்தில் நிலம்,
நதி, அரசு அல்லது தலைநகரம் போன்றவற்றை அக்கால
சமஸ்கிருத காவியங்களில் காணப்படும் வழக்கமான வர்ணனைகளின் அடிப்படையில் விவரிக்கவில்லை.
இவ்வாறு, இளங்கோவடிகள் எனும் கவிஞர், மரபுகளுக்கு
எதிரான ஒரு மறைமுக எதிர்ப்பாக, தனித்துவமான, ஆழ்ந்த மானுட ஆவணமாகும் ஒரு படைப்பை உருவாக்க விரும்பினார் என்றே
தோன்றுகிறது.
தமிழில் டி. ஏ. பாரி
ஆங்கில மூலம்: Indian and Foreign Review,
March 15, 1967
***
க.நா. சுப்ரமணியம் தமிழ் விக்கி பக்கம்
சிலப்பதிகாரம் தமிழ் விக்கி பக்கம்
டி.ஏ. பாரி தமிழ் விக்கி பக்கம்
***












