பழந்தமிழ் இலக்கியம் நிலவகைகளின் படி ஐந்திணைகளைக் கொண்டு பகுக்கப்படுகிறதை நாம் அறிவோம். இவை ‘அகநிலக் காட்சிகள்’ (Interior Landscapes) என்று A.K. ராமானுஜம் போன்றோர் அடையாளப்படுத்துகின்றனர். நிலக் காட்சிகள் அகமுணரும் அனுபவத்தின் உருவகங்களாய் புனையப்படுவதை அறிய உதவும் கருவிகள் திணை பகுப்புக்கள். பழந்தமிழ்க் காலம் மட்டுமல்ல பழங்கால மானுட வாழ்வே முற்றிலும் நிலம் சார்ந்த ஒன்றே. ஒப்பீட்டளவில் பதினாறாயிரம் அடிகள் பாய்ந்திருக்கும் இந்த அதி நவீன காலத்திலும் நிலத்திலிருந்து, பூமியிலிருந்து மனிதன் முற்றிலும் விடுபடவில்லை. உணவு, தட்பவெப்பம், பருவகாலங்கள், பண்பாடு, வளம், வளமின்மை என நிலம் நம் வாழ்க்கையை கட்டுக்குள் வைத்திருக்கத்தான் செய்கிறது.
ஆனால் ஐந்திணைகளை விட்டு மேலெழுந்து அந்தரங்க வெளியில் ஒரு புதுத்திணையை உருவாக்கி அதில் விதவிதமான நிலக்காட்சிகளையும், மானுடர்களையும் உருவாக்கி உலவவிடுபவர்கள் கவிஞர்கள். மனமும் மனம் சார்ந்த இடமும் அந்தரத் திணை எனப்படும். அங்கே தொழில் சிந்திப்பதும் சிந்தனையைத் தூண்டுவதும். அதன் நிலம் அரூப வெளி. அதன் மக்கள் சாமானியன் சாமானியத்தி. அங்கே இரவும் பகலும் பொழுதுகளும் பருவங்களும் நினைத்தாற்போல் தோன்றும், இருளும் ஒளியும் ஒரு சேர உலவும், எண்ணற்ற சூரியன்கள் எண்ணிய கணம் தோன்றி மறையும், அங்கே தூரங்கள் ம்னதின் வேகத்தில் கணக்கிடப்படுகின்றன, ஒற்றை மணல் ஒழுகும் கடிகாரம் ஒன்று காலத்தை அளக்கிறது, இன்னொரு நீர்க்கடிகாரத்தில் காட்டாறு மேலிருந்து கீழே வழிகிறது. பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்து மறைந்த ஒரு நட்சத்திரத்திலிருந்து விடுபட்ட ஒற்றை ஒளித்தூளாக. பூமியை நெருங்கி வருகிறான் கவி. அவனே பூமியில் நின்று அதைக் காணவும் செய்வான். அந்தரத் திணையில் ஒழுங்கற்றிருப்பதே ஒழுங்கு. சீரற்றிருப்பதே சீர். அங்கே கடுகளவு மலை உண்டு, மலையளவு மடு உண்டு, காலைச் சூரியனில் கொழுந்துவிட்டெரியும் ஆறுகள் ஓடுகின்றன, பற்றி எரியும் வயல்களும், குளிரான நெருப்பும் தரும் தலைகீழ் உணர்வுகள் நம் புலன்களைத் தீட்டும். வண்ணங்கள் மாறி வெவ்வேறாய்த் தோன்றும். அந்தரத் திணையின் வேதியல் விதிகளற்றது, அதன் இயற்பியல் நியமங்களற்றது. அதன் வரலாறு கலைத்துப்போடப்பட்ட ஜிக் சா புதிர்போன்றது. அதன் தெய்வம் முருகனோ, வேந்தனோ, வருணனோ அல்ல, அதைப்படைத்த கவிஞனே அதன் கடவுள்.
ஆ. அமிர்தராஜின் கவிதைகள் இத்தகைய அந்தரத்திணை கவிதைகளே. குறிப்பாக அவரது முதல் தொகுப்பான ‘பொற்கணம்’ முற்றிலும் இவ்வகைக் கவிதைகளால் ஆனது. மௌனியின் கதைகளை நவீன ஒவியங்களைப் போல புரிந்துகொள்ள முடியும். அவை போன்றவையே இக்கவிதைகள். கோணம் மாறிய வடிவங்கள், பொருந்தா வண்ணங்கள், புலன்களைத் தூண்டும், ஏமாற்றும் யுக்திகள், எதிர்பாராத இடைவெளிகள், சீரற்ற சீர்மை என நவீன ஓவியம் கையாளும் அனைத்தும் இக்கவிதைகளில் கையாளப்படுகின்றன. முதல் பார்வையில் அவை நம்மை ஈர்க்கின்றன, பின் நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றன, தியானத்தில் ஆழ்த்துகின்றன.
ஆ. அமிர்தராஜின் ஒவ்வொரு கவிதையிலும் ஓரிரு வரிகள் நேரடியானவையாகவும் வியப்பூட்டுபவையாகவும் இருக்கின்றன. ‘விரைந்துகொண்டிருந்த இருக்கையில் நான்’ என்ற வரி அவர் கவிதைகளில் என்னை ஈர்த்த முதல் வரி. அது ஒரு இயற்பியல் மனச் சோதனையை நினைவூட்டுவதுபோல இருந்தது. ‘தட்டையான சிக்கலான தாமரையாய்’ சிலந்திவலை ‘உள்ளேயிருந்து பூட்டப்பட்டு கதவு வாயடைத்து நிற்கிறது… நாசியற்ற அறையில் சுற்றியலைவதில் அர்த்தமில்லாததால் கதவடியில் நுழைந்து ஆள்தேடி வெளியேறுகிறது புகை.’ ‘வெறுமையிலே உண்டான வெளிச்சப் புள்ளி விரிந்து உதடானதும் மலர்ந்தது சொல்.’ ‘வெறுமையல்ல இன்றின் இருள்’ ‘சீறி நோக்கக் குழையும் இரத்தச் சிவப்பு’
இரண்டாம் தொகுப்பில் சற்று தரையிறங்கி பூமியில் முளைத்த கவிதைகள் சில காணக் கிடைக்கின்றன. காதலின் வசந்தம் காற்றில் வீச, தத்துவத்தின் போதை நம்மை மீண்டும் அந்தரத்தில் அழைத்துச் செல்கிறது. எண்ணம் எதுவானாலும் அது நிகழ்வது அமிர்தராஜ் சமைத்த ஒரு தனியுலகில். கவிஞனின் சிருஷ்ட்டியில். ஒரு ஆதிக் கதையின் முதல் மொழி போல கவி சொல்லத் துணிவதெல்லாம் ‘கவிதை உண்டாகக்கடவது!’ என்பது மட்டும்தான். வார்த்தைகள் உருவாகிப் பலுகிப் பெருகி மனவுலகை நிரப்புகின்றன.
மூன்றவது தொகுப்பில் சிங்களமும் தமிழும் இலங்கையில் காதலிக்க முடியாமல் கடல் கடந்து சென்று ஐரோப்பாவில் உறவு கொள்கின்றன. சாலமனின் இனிமைமிகு பாடல்களின் நிழல்வரிகளாக நீள்கின்றன இக்கவிதைகள்.
அமிர்தராஜ் இக்கவிதைகளை எழுதிய காலத்தில் ஈழப்போராட்டத்தின் வெடிமருந்து மணம் கடல்கடந்து நம் கரைகளை அடைந்த காலம். எனவே ஈழப் போர் குறித்த சில கவிதைகளைத் தவிற காதலும், இருத்தலின் சுமையும், தத்துவங்களும் அவர் கவிதைகளின் பாடு பொருட்களாக உள்ளன. புதுக்கவிதை என்றாலும் அமிர்தராஜ் காட்சி வழியே கவிதையைச் சொல்வதில் சங்கக் கவிகளை ஒத்திருக்கிறார். அதேபோல தமிழ் புதுக்கவிதைகளில் வழக்கமாகக் காணக் கிடைக்காத சங்கப் பாடல்களில் திகட்டத் திகட்டக் காணக் கிடைக்கிற உரிச்சொற்றொடர்களை நுட்பமாக பயன்படுத்தியுள்ளார். ‘உன்முகப் பெண்மையின்..’ ‘வெகு பார்வையைக் கோரும்…’ ‘பனிமய அன்னம்’ ‘இணைவட்ட உறவு’ ‘வலைமலர்’ (சிலந்தி வலை), ‘நனி பேரிஷ்டம்’ ‘நீணிலம்’ எனப் பல பதங்களை பயன்படுத்தியுள்ளார். அமிர்தராஜின் கவிதைகளில் இது ஒரு தனிச் சிறப்பு என்றே சொல்லலாம்.
தமிழ்க் கவிதையைப் பொறுத்த மட்டில் நான் ஒரு சாதாரண வாசகன்தான் தமிழின் புகழ் பெற்ற கவிதைகள் பலவற்றையும் ஒருமுறையேனும் வாசித்திருப்பேன். நண்பர்களுக்கு சில கவிதைகளை செப்பனிட உதவியிருக்கிறேன். தேவதேவன் எனக்கு மிகப் பிடித்த தமிழ்க் கவி. ஒருமுறை ஹேமா என்ற பெயர ‘ஹே… மா…!’ என உச்சரித்து அதையே ஒரு கவிதையாக நிகழ்த்திக்காட்டினார் தேவதேவன். அதைப் புரிந்துகொண்டு மலைத்துப் போகும் அளவுக்கு எனக்கு தமிழ்க் கவிதைகள் பரிச்சயம் என்று சொல்லலாம். ஆ. அமிர்தராஜின் கவிதைகள் ஒரு வினோத தனித்தன்மையுடையவையாக எனக்குப் பட்டன. அவரது புது மொழி, abstract பாணி, அவர் உருவாக்கும் உலகம், விரிந்து பரவி அந்தரத்தில் அவர் நிகழ்த்திக் காட்டும் கலை எல்லாம் என்னைக் கவர்ந்தன. ஒரே தொகுப்பில் ஒளிவேகத்தில் நகரும் காட்சிகளைக் கொண்ட கவிதைகளையும் படிக்கட்டில் ஏறும் உடலை தியானிக்கும் காலத்தை மெல்லோட்டக் காட்சியாக்கிக் காண்பிக்கும் கவிதையையும் அவரால் எழுதமுடிகிறது.
ஆ. அமிர்தராஜின் அடர்த்தி மிகுந்த கவிதை வரிகளுக்கு மிகச் சிறந்த உதாரணமாக பொற்கணம் தொகுப்பின் ‘நிலாக் குருவி’ கவிதையில் வரும் ஒரு வரியைச் சொல்லலாம்.
‘நேய நிலவில் திளைத்து - சிட்டின்
உற்சாக சிறுநிழலோ கீழே
தடமற்ற கோடிழுத்து உற்ற - உறவின்
அட்ச தீர்க்க வலையில்
வளைக்கும் புறஉலகை.’
இந்தக் காட்சியே மிக மாயத் தன்மை உடையது. பறக்கும் சிட்டின் உற்சாக நிழல் தனித்த உயிர் பெறுகிறது. அட்ச தீர்க்க ரேகைகள் தடமற்றவை, கற்பனையானவை, அவை வலைபோலப் பின்னி பூமி மீது கிடக்கின்றன. அதைப் பற்றிக்கொண்ட அந்தக், குருவி அல்ல, குருவியின் நிழல் ‘புற உலகை வளைக்கும்’. நிஜம், நிழல், கற்பனை மூன்றையும் ஒரே கோட்டில் இணைக்கும் இந்த வரியில் ஆ. அமிர்தராஜின் கவிநுட்பம் அபாரமாக வெளிப்படுகிறது.
1980களின் இறுதியிலும் 90களின் துவக்கத்திலும் எழுதப்பட்ட ஆ. அமிர்தராஜின் இக்கவிதைகளை மீண்டும் தொகுக்கும் இப்பணியை எனக்கு அளித்த பதிப்பாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவை தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் அல்ல, முந்தைய தொகுப்புக்களின் தொகுப்பாகும். இத்தொகுப்புக்கு ஒரு சிறப்பான முன்னுரையை அளித்து சிறப்பித்த எழுத்தாளரும் நண்பருமான ஜெயமோகன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். மிக சிரத்தையுடன் இதை பதிப்பிக்கும் முயற்சி எடுத்த பதிப்பாளர் ஜீவ கரிகாலன் அவர்களுக்கும் என் நன்றிகள். ஊக்கமளித்து ஆதரவு தந்த நண்பர் கவிஞர். மோகன ரங்கன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
இக்கவிதைகள் மெதுவாக, மீண்டும் மீண்டும் வாசிக்கத் தகுந்தவை. ஆ. அமிர்தராஜின் கவிதைகள் தமிழ் மொழியின் நவீன சாத்தியங்களை செய்து காட்டியவை, தமிழ்க் கவிதை பரப்பில் ஒரு திருப்பதைக் கொண்டு வந்தவை என்று சொல்லத் தகுந்தவை.
தமிழவன் பொற்கணத்தின் முன்னுரையில் குறிப்பிடுவதைப் போல ‘ஒட்டுமொத்தமாகப் படித்துப் பார்க்கும் போது நமக்குத் தெரிந்த மொழிக்கு ஒரு மாற்றுத் தமிழை இவர் கவிதைகள் உறுதிப்படுத்துகின்றன…. அமிர்தராஜிடம் மிகவும் முதிர்ச்சியடைந்து வெளிப்படும் கவித்வம் தமிழுக்கு மாற்றுத் தமிழை சிருஷ்டிப்பதாய் மாறுகிறது.” (1996)
ஆ. அமிர்தராஜின் சில கவிதைகள்,
போர்க் காலம் 1984
மருத்துவமனைப் படுக்கையில்
கிடந்தாலும்
வாசிக்க ஆரம்பித்துவிட்ட
புஸ்தகத்தின் எழுத்துக்களில்
தோய்ந்துள்ளது
வெடிமருந்து
உனது வலது தோளில்
காயம்
வேகமாய் ஆறிவருகிறது
இயக்கத் துவக்காகி
உன் தோள் தொங்கத்
துடிதுடிக்கிறது
நாளைய காலம்
அன்றைக்கோ
உன் வீட்டுப் படிப்பறையின்
தனிமையில்
விரும்பி ஒதுங்கியிருந்தாய்
வசதியான மேஜையில் ஊன்றி
கை உயர்ந்து
தடித்த பாட புஸ்தகத்தை
விரித்துப் பிடித்திருந்தது
பாதி சாய்ந்து போய்
உன் முகம் பார்த்திருந்த
அப்புத்தகத்தின் வெளியிலோ
காடையர் வீசிய தீ
நெருங்கிக் கொண்டிருந்தது
வீடு வீடாய்த் தின்று
சூறையாட
வழியமைத்து
சீறி வந்த தோட்டா ஒன்று உன் படிப்பைத் துளைத்து
தோள் மூட்டை
உடைத்தது
சிகிச்சை பெற்று
கண்விழித்த பின்
மயிர்கண் எங்கும்
சமர் நெருப்பின் தெறிப்புடன்
நீ படிக்கின்ற புது
புஸ்தகத்திலிருந்து சில வரிகள்:
“ஞாலமே குலை நடுங்க
எம் குரல் நாண் தெறிக்க
ஓலமிட்டுத்
தன் தலை முதல் கால்வரை
தர்மம் எம்மூரில் தீப்பற்றி எரிகிறது.
தனியே நேரமொதுக்கி
சர்வதேச மேடையிட்டு
எவ்வேளையும் வேண்டிய
தாட்சண்யம் பற்றிய
கூட்டு ஆராய்ச்சி
தற்சமயம் எந்த புத்தனுக்கும் அடுக்கா
தர்ம விரோதம்.”
(1984)
காலப் படியேறும் கால்கள்
முதற் திட்டாய் உள்ள படிக்கு
கால்களிரண்டில் ஒன்று
முழங்கால் மடங்க மேலெழும்பி
அமரும்
புரிந்து கொண்டு
உடல் கொஞ்சம் முன் சரியும்
மேற்படியில் இருக்கும்
அவ்வொற்றைக் கால் மேல்
பளு இறங்கும்
கீழ் மறுகாலின் பாத நுனி
தன் படியில் உடனே அழுந்தி
மேல் முகமாய் உந்தி உடலை
ஏற்றிவிடும்
துணிந்து மேலேறி மடங்கி நின்ற
முழங்கால் மாயமாய் நிமிர்ந்திருக்கும்
தன் சுமை உடலை
அம் மேற்படியினிலே சேர்ந்திருக்கும்
ஒரு நொடி முன்னர்
கீழ் நின்ற கால் ஆனால்
முந்திக் கொண்டு மேலெழும்பிச் சென்று
முடிந்த மேற்படியிலிருந்து உயர்ந்து
அடுத்ததாய் உள்ள புது மேல்படிமேல்
அமரும்
அக்கணமே
உடல் சரி சொல்லும்
முன்போல் முன் சரியும்.
(1986)
பொற் கணம்
கீழ் வானில்
மத்தளம் முழங்க
விழித்த வெறுங்காலடியில்
செம்மண்ணிலிருந்து
தாளம் கிளம்ப
அம்மத்தளமும்
என் தசைத் திரளும்
கிளர்ந்து
உயரச் சுழன்றன
அதிரும் காற்றில்
அந்தரத்தில்
புணர்ந்தன
தம் நொடிகளின் வியர்வையைக்
கீறிக் கடந்து
உன்மத்தமாய்
ஆகாயத்திலோர்
ஒத்திசைவுப் பொறியாகி
எரிந்துள்ளொடுங்கின
தாளாது நெகிழ்ந்து
தணியாச் சுடர் முன்
தரை சரிகின்றன
என்
கரித்த செந்நீரும்
புளித்த நிணமும்
திரும்பிப் பாராது
அகன்று தொலைந்தன
நினைவும்
பயமும்
நானும் யாரும்
ஆடுபவன் ஓய
இசைப்பவன் இரசிப்பவன்
முகங்கள் கலைய
தீயிசைப் பொறி
தித்தித்து
ஒரு மௌன முறுவல்
உயிர்த்த விழ்கிறது
வழிகிறது
அனாதரவெளி நிரப்பி
பிரக்ஞையின் பாடலாய்
இரகசியக் குரலில்
நிலமிறங்கி
தானே முகம் அமைத்து
சீராய் உடலசைத்து
அசல்
ஐம்பூத அபிநயசரங்களின்
நேரமற்ற தொடர்பதிவாய்
என்புலன் வழியாயும்
நேரடியாய்
ஒய்யார ஆட்டம்
மினுக்கும்
சொற்சேற்றை
நாகரீக நாணலை
நதிக்கரையை
நகர்சேரிகளை
நரகலை
ஆசை நட்சத்திரத்தை என
எல்லாம் விழுங்கி
துள்ளி விரிகிறது
கொண்டாட்டம்
இசைந்தாடி வியந்து
எண் திசையும்
உச்சந்தலையில்
பளிச்சென சூரியன்கள்
கோடியுகம் கழித்து
மீண்டும்
தன்னுணர்வில் சிலிர்த்து
உள்ள ஒரே சாட்சியென
கால் செம்மண் பொன்னாகிறது
(1995)
நிலாக் குருவி
கோடையென் றாலும் அந்திவரை
கொட்டிய அடை மழையால்
கரைதொட் டோடும் ஆற்றிலே
யாரும் அள்ள நினையாத
கலங்கல் நீர் நடுவே
வடிவு கலங்கா அழகாய்
அபூர்வ முழுமையிலே நிலா
பகலிலே படுநிஜம் போல
கண்ட இரு கரைகள்
நிலாநாடி நீரிறங்கி நெருங்கிய
காலடியி லோ நிலைகுலைய
நனைந்த நடை நிலவொளித்
தெளிவிலே கண்டதோ சித்தம்
வெவ்வே றாய்ச் சிதறா
ஒருமை அச்சில் பதிந்த வினோத
வட்ட சதுர பூமி
கால்சொல்லித் தலைதட்டும் பொறியி
லேயுருகி உடன்பட்டு ஒன்றாகும்
ஊனுட லோடு மனம்
ஆள்முழு தாகிக் காணாக்
குரவராகக் கரை மீண்டு
மூச்சிரைத்தும் நடந்த போது
முந்தி நெருங்கியது மலைமுகடு
தடுத் தாண்டு கீழே நிறுத்தவோ
கனன்றது பின் னிருந்து பட்ட
வினை நெருப் பூ!
விடா வெறுங் காலிருந்து பற்றிக்
கொண் டெரிந்து நித்தி யத்தின்
நீறான வேளை
நகல் மனிதங் கடந்து காடுமலை
கட்டறுத்த காற்று காட்டாறு வேண்டி
விடுபட்டுக் கிளம்பியது உயிர்ச் சிட்டு
இவ்வினிய குருவியினி நனிபே ரிஷ்டம் போல்
அகாலக் காற்றலையில் மிதக்க வழிசொல்லி
விரியும் நிலவொளி ஆரம்
சிட்டின் அசலுயிர் மூச்சு சப்தத்தில்
பசும்புல் வெளியெல்லாம் பனியீரம்
நுரைத்துத் தெளிந்த பாசத்தில்
கோடைமீறிச் சிலிர்க்கிறது ஆகாசம்
மோகத் திரையற்ற கர்மத்
தீயற்ற வெளிர்நீல உயர்வில்
நிமிர்கின்ற பயணி யாருக்கும்
மிக அருகில் பனியில் கரையாமல்
நொடியும் அகலாமல் அதே நிலா.
நிலவொளி நிசப்த ஆணையில்
சிட்டுக் குருவி நெஞ்சில்
குன்றி அணைகிறது நாட்பட்ட நெருப்பு
திசையின் வயற் சதுரம்
இரவோ டிரவாக காய்கனியாய்
விளைந்து சொரிகிறது வான்தொட்டு
வட்டமிடும் ஒற்றைக் குருவிக்காய்
நேய நிலவில் திளைத்து சிட்டின்
உற்சாக சிறுநிழலோ கீழே
தடமற்ற கோடிழுத்து உற்ற உறவின்
அட்ச தீர்க்க வலையிலே
வளைக்கும் புற உலகை
வட்ட சதுரம் பாரம்
துருவங்கள் தூர மென்றாலும்
லாவகமாய் மென்னலகால் மேலிழுத்து
சலிக்காமல் சிறகடிக்கும் நீரெங்கும்
நீணிலமெங்கும்
(1996)







0 comments:
Post a Comment