கவிதை எழுத எழுத கவிதை பற்றிய குழப்பம் அதிகமாகிறது என்ற வரியை பொருத்திப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் உரைநடை எழுத்திலும் யுவனின் பங்களிப்பு அதிகம். யுவனின் முதல் தொகுப்பான முதல் 74 கவிதைகள் வெளியான போது அவர் கவிதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். அடுத்தடுத்த கவிதைத் தொகுப்புகளில் யுவன் உரைநடையை நோக்கி நடந்து செல்லும் தடத்தைக் காண முடிகிறது. கவிதை, உரைநடை இரண்டையும் ஒரு கவிஞன் ஒருசேர எழுதிச் செல்வது சவாலானது. கவிதையில் வார்த்தை வார்த்தையாகச் சிந்தித்தால் உரைநடையில் வாக்கியம் வாக்கியமாக சிந்திக்க வேண்டி வரும். தேவதச்சனுக்கும் அபிக்கும் கவிதையே வெளிப்பாட்டு மொழி. யுவனுக்கும் சுகுமாரனுக்கும் கவிதை, உரைநடை இரண்டும். அது ஒவ்வொரு படைப்பாளிகளையும் பொருத்தது. அந்த வகையில் எம்.யுவன் இரண்டிலுமே சிறப்பான பங்களிப்பைச் செய்தவர் ஆகிறார்.
பங்களிப்பு
இந்த வரியை
நான் எழுதும்போது
கொஞ்சப்பேர் செத்துப்போனார்கள்.
கொஞ்சப்பேர் கொல்லப்பட்டார்கள்.
சில பேர் சத்தியத்துக்காக
சிலபேர் காரணமறியாமல்.
கொஞ்சப்பேர் பிறந்தார்கள்.
சிலபேர் சாவதற்காக
சிலபேர் கொல்லப்படுவதற்காக.
மீதிப்பேர் இடைவெளியை
நிரப்பவென்று ஏதேதேதோ
செய்து விட்டார்கள்
ஒருவருமே கவனிக்காது
கடந்து போய்விட்ட நிமிஷத்துக்கு
என்னுடைய பங்களிப்பாய்
ஒரு பதினாறு வரிகள்.
விலாசம்
தீர்மானத்தின் ஆணிகள்
அறையப்படாத சவப்பெட்டி
என்று என் கபாலத்தைச்
சொல்லலாம் நீங்கள்.
ஒரு பதம் ஒரு வாக்கியம் தேடி
மொழியின் புதைமணலில்
கழுத்திறுக மூழ்கும்
முட்டாள் ஜென்மம் என்றும்.
இரவின் வைரம் விடிந்
ததும் காக்காப்பொன்னாக
மறுகும் லோபியாய்
தூண்டிமுள்ளில் மாட்டி
கூடைக்குச் சேரும் மடமீனென்று.
நழுவிப்போகும்
கணத்தின் சிலிர்ப்பை
ஒற்றை அதிர்வில் சிறைப்படுத்தும்
வீணைத்தந்தி என்று.
அல்லது
இரா.சு.குப்புசாமி,
23 செக்கடித்தெரு,
மேலகரம்,
காறையூர் (வழி)
என்று.
கொண்டுவந்த கடல்
இந்தமுறை சங்கு கொண்டு வந்தேன்
சென்ற முறை சிப்பி.
அதற்கு முன்னால் சோழி
பாலிதீன் பைகளில்
செதில் கலந்த மணலும்,
கரைக்கோயில் குங்குமமும்
கொண்டு வந்ததுண்டு.
ஒரு முறைகூட
கடலின் பரிதவிப்பை
பரிவை ஆறுதலை
கொண்டு வர முடிந்ததில்லை.
சீசாவில் கொண்டுவந்த கடற்குஞ்சு
பாதியாகிச்
செத்துக் கிடக்கிறது அலமாரியில்.
தொலைந்தது எது
தொலைந்தது எதுவென்றே
தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறேன்.
தொலைந்ததின் ரூபம்
நிறம் மனம் எதுவும்
ஞாபகமில்லை.
மழையில் நனைந்த பறவையின்
ஈரச்சிறகாய் உதறித் துடிக்கும்
மனதுக்கு
தேடுவதை நிறுத்தவும் திராணியில்லை.
எனக்கோ பயமாயிருக்கிறது
தேடியது கிடைத்தபின்னும்
கிடைத்தது அறியாமல்
தேடித் தொலைப்பேனோ என்று.
***
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment