(1)
சமீபத்தில் லி பெர்க்கர் எனும் மானுடவியல் ஆய்வாளர் ஆப்ரிக்கா ஜோகன்ஸ்பர்க் இல் ரெய்சிங் ஸ்டார் குகையில் கண்டு பிடித்த ஹோமோ நலேடி எனும் ஹோமோ இனம் குறித்து வாசிக்க கிடைத்தது. ஹோமோ சேபியன்ஸ் ஆகிய நம்மை விட பல்லாயிரம் வருடம் முன்னரே முறையாக நீத்தார் வழிபாடு செய்த அந்த இனத்தின் மூளை சற்றே பெரிய தக்காளியின் அளவு மட்டுமே கொண்டது. அவர்களுக்கு இவ்வுலக வாழ்வு மற்றும் மேலுலக வாழ்வு சார்ந்த அறிதல் உண்டு என்பவை அளித்த ஆச்சர்யத்தை தாண்டிய வியப்பை அளித்தது, அவர்கள் நெருப்பின் பயன்பாட்டை அறிந்தவர்கள் என்பது. எனில் ஹோமோ சேப்பியன்ஸ் ஆகிய நாம் நெருப்பை வசப்படுத்தக் 'கண்டுபிடித்து' இயற்கையை வென்ற ஆசாமிகள் இல்லை. நெருப்புதான் ஹோமோ சேபியன்ஸ்ன் ஆழத்திலிருந்து பயன்படுத்தச் சொல்லி 'தன்னை' வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது என்பதே அதன் பொருள்.
உண்மையில் இன்றைய ஹோமோ சேபியன் ஆகிய நமது தனி மனித ஆழம் என்பதும் மானுட சாரம் என்பதும் 'நம்முடன்' மட்டுமே துவங்கி முடிந்து போகும் ஒன்றல்ல, மானுட ஆழம் என்பதின் வேர் நம்மையும் தாண்டி, நமக்கும் முந்தய பல்லாயிரம் வருடத்துக்கு முன்பான ஹோமோ நலேடி போன்ற பல்வேறு உயிர்குலத்துடன் பிணைந்தது. எனில் ஹோமோ நலேடிகள் கொண்ட ஆழம் அதன் வேர் எதனுடன் பிணைந்தது?
ஹோமோ சேபியன்ஸ் ஆகிய நாம் நமது கடந்த 5000 வருட கலாச்சாரம் வழியே தனி மனித ஆழம் மானுட சாரம் நோக்கிய பயணத்துக்கு இரண்டு பாதைகளை செப்பனிட்டு வைத்திருக்கிறோம். ஒன்று அறிவின் பாதை. மற்றது உணர்வின் பாதை. உணர்வின் பாதையில் மிக உன்னதமானது இசை. ஒரு மிக சிறந்த, மிக சிறிய மாத்திரையில் அமைந்த ஒரு வயலின் தீற்றல் நம்மை மெய் மறக்க செய்து, ஆழத்துடன் சாராம்சத்துன் 'தன்மையம்' ஆகி விடும் நிலையை நமக்கு அளிக்க வல்லது. அறிவின் பாதையில் அந்த அடுக்கில் உயரத்தில் இருப்பது தத்துவம். உணர்வு என்பதின் நேர் எதிர் துருவம். ஆழம் நோக்கிய ஒவ்வொன்றையும் புறவயமாக, பொதுவாக, பரிசோதிக்க தக்க வகையில், நிரூபணமாக, பொய்பிக்க தக்க வகையில் ஆன்டி தீஸிஸ்கான இடத்தை விட்டு, துல்லிய வறையரைகளாக முன்வைப்பது அது.
மூன்றாவது பாதை ஒன்றும் உண்டு. கலைகள். குறிப்பாக இலக்கியம். இலக்கியம் உணர்வு அறிவு இரண்டையும், வில்லாகவும் அதன் நாண் என்றும் கொண்டது. தேர்ந்த படைப்பாளி மொழியை அம்பாக்கி குறி வைத்து எய்தான் எனில் அது சென்று தைக்கும் ஆழம், மேற்சொன்ன இரண்டாலும் தொட இயலாத தனித்துவமான ஒன்றாக இருக்கும். இலக்கியக் கலையின் இடம் அதுதான்.
பேரிலக்கியங்கள் அறிவு உணர்வு கச்சிதமாக முயங்கிய பிரத்யேக மொழி வெளி கொண்டு, மொழிக்கும் அப்பால் இலங்கும் சாராம்சமான ஒன்றை தொட்டுவிடும் வல்லமை கொண்டவை. இதில் இலக்கியம் எனும் வகைமைக்குள் வந்தாலும் கவிதைகள் தனித்ததொரு பிரத்யேக கலை வடிவம். அதன் அறிவுத் தளம் அர்த்தங்களால் ஆன ஒன்று அல்ல. அர்த்த மயக்கங்களால் ஆன ஒன்று, நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் எனும் கவிதை வரி சிறந்த உதாரணம். அதன் உணர்வு தளம் பெரிதும் தூய இசைக்கு அருகே நிற்பது. மொழியோ ஒரே சமயத்தில் குழந்தையின் மழலை, மந்திரத்தின் தீவிரம் இரண்டும் முயங்கியது. இது அனைத்தும் மானுட உணர்வு தளம், கற்பனை சாத்தியம், ஆழம் இவற்ருடன் வினை புரியும் படிமங்கள் உடன் பிசிறின்றி முயங்கி அமைவது.
புற விரிவில் இருந்து அக சாராம்ச ஆழம் நோக்கி இயங்கும் இலக்கியக் கலைக்குள், பருண்மையில் இருந்து நுண்மை நோக்கி இயங்கும் கவிதை வகைமைக்குள் அதன் உடலின் உயிர்க்கூறான படிமங்கள் இரண்டு நிலைகளில் காணக் கிடைக்கிறது. ஒன்று நவீன படிமம், மற்றது தொல் படிமம். ரயில் செல்போன் என நவீன படிமங்கள் பற்பல, புறத்தில் இருந்து அகத்தில் இறங்கி அது புரியும் வினைகள் கொண்ட கவிதைகள் அடையும் ஆழம் ஒரு வகை எனில், மானுடனுக்கும் முன்பாக தோன்றி, மானுடம் தோன்றும்போதே அதன் உள்ளுரையாக அமைந்து போனவை தொல் படிமங்கள். உதாரணம் பஞ்ச பூத வடிவங்கள். ஆத்மீக இலக்கியங்களான வேதங்கள் முதல் இன்றைய நவீன கவிதை வரை, இந்த தொல் படிமங்கள் மிகச் சரியாக வந்து விழுந்த கவிதைகள் கொள்ளும் ஆழம் அபாரமானது. உதாரணம் யுவன் சந்திரசேகர் எழுதிய கீழ்கண்ட இந்தக் கவிதை.
ஜ்வாலையின் நாட்டியம்
ஜ்வாலையின் நாட்டியம் அழைக்கிறது என்னை
எனக்கோ
பேழைக்குள் நெளியும் பாம்பும் மரணத்தின் குறியீடு.
நெருப்பின் செயல் திறனும் பௌதீகப் பயன்பாடும் போதுமென்று விலகும்போதும்
தானாய்ப் பிறந்து சுடர்கிறது
உள்ளே ஒரு கணப்பு.
கவிதை சொல்லியின் பார்வைக் கோணத்தில் வெளிப்படும் இந்த கவிதையில் முதலில் ஒரு வசீகர அழைப்பு, அடுத்து உயிர் பயம், அடுத்து தீர்மானம் என்ற, ஸ்தூலத்தில் இருந்து சூக்ஷுமத்துக்கு எனும் ஆர்க் வழியே கவிதை சொல்லி அடையும் இறுதிப் புள்ளியின் உணர்வு நிலை வாசகனுக்கு கடத்தப்படுகிறது.
குரு நித்ய சைதன்ய யதி ரிக் வேதம் முதல் துவங்கித் தொடரும் நெருப்பு எனும் தொல் படிமத்தை மானுட அக ஆழத்தில் இருந்து எழுந்து போத மனம் வழியே வெளியே விரியும் ஒன்றாக கட்டுரை ஒன்றினில் குறிப்பிடுகிறார். புறத்திலிருந்து விரிந்து இத்தகு தொல் படிமங்கள் கலைகள் வழியே மீண்டும் அகத்துக்கு திரும்பும் ஒரு முழுமை வட்டம் குறித்து வேறொரு கட்டுரையில் பேசுகிறார்.
அதே போல இயற்கை ஆற்றல்கள், பாம்புகள் போன்ற நச்சு உயிர்கள் மீதான மனித பயமே அவனது வணங்கும் கலாச்சாரத்தின் தோற்றுவாய் எனும் மேலை சிந்தனையின் பார்வையையும் யதி மறுக்கிறார். உதாணமாக பாம்பு குறித்த பயம் என்பதை மனிதன் மரம் விட்டு இறங்கி நிலம் தொட்ட காலம் முதலே அவனுள் பதிந்த ஒன்றுதான் என்றாலும், அவன் பாம்பை வணங்கிய காரணம் அது நகரும் போது நதி போலும், எழுந்து பத்தி விரிக்கும் போது, நின்றெரியும் சுடர் போலும் தோற்றம் தருவது. நீர் நெருப்பு எனும் இந்த தொல் படிமங்கள் கொண்ட வேறொரு தோற்றம் என்றே பாம்புகள் வணங்கப்பெற்றன என்கிறார் யதி.
மேற்கண்ட கவிதையில் நெருப்பின் நடனம் என்பது வசீகரம் கொண்டு அழைக்கிறது. அது பாம்பு போல பீதி அளிக்கும் ஒன்றாக இருக்கிறது. நெருப்பின் செயல் திறனும் பௌதீக பயன்பாடும் போதும் என்று தீர்மானம் செய்து கவி சொல்லி விலகினாலும், அவரது முயற்சி அனுமதி இன்றியே புற வயமான அந்த ஜுவாலையின் நடனம் அவரது அகத்துக்குள் சுடர்கிறது.
இதில் ஜுவாலை எனும் பதம் மிக்க வசீகரம் கொண்டது, வசீகரிக்கும் நீல நிற நெருப்பே பெரும்பாலும் ஜுவாலை எனும் சொல்லுடன் இணைந்த படிமமாக இருக்கிறது. இந்த வசீகரம், போத மனதின் தீர்மானம், அபோத மனதின் பயம் இவற்றைக் கடந்து, ஆழத்தில் சென்று சுடர் பொருத்துகிறது. 'சுயம்ப்ரகாசம்' எனும் நிலை மேல் எழுந்த அழகிய அபூர்வ கவிதைகளில் ஒன்று இக் கவிதை.
(2)
அக்னி எனும் ஸ்தூலத்திலிருந்து 'அக்னித்துவம்' எனும் சூக்ஷுமத்துக்கு சென்றதே பண்டைய வேத கால ரிஷிகளின் முதற் பெரும் அறிதல் என்கிறார் குரு நித்ய சைதன்ய யதி.
//மண்ணை மீறி விண்ணில் உளமெழுந்த அறவோர், திசையழிந்த வெளியெங்கும் நிறைந்திருக்கும் ஒளியே மண்ணில் தீ என்று உறைகிறது என்று உணர்ந்தனர். தீ உறையாத பரு என மண்ணில் எதுவும் இல்லை. பச்சைப் பசுங் குருத்திலும், மென் மலரிதழிலும், குளிர்ச்சுனை நீரிலும், தாய் முலைப்பாலிலும் தீ உறைகிறது.//
கொற்றவை நாவலில் ஜெயமோகன் எழுதிய மேற்கண்ட வரிகள் தீ எனும் தொல்படிமம் குறித்த உன்னதப் பார்வை என்று சொல்லலாம். மனிதனில் கண்ணில் ஒளியாக, மூச்சில் பிரணனாக, வயிற்றில் பசியாக, பீஜத்தில் காமமாக எரிவதும் நெருப்பே. இப்படி சர்வமும் என வியாபித்திருக்கும் அந்த பெரு நெருப்புக்கு ரிஷிகள் இட்ட பெயர் வைஸ்வாநரன் என்கிறார் குரு நித்யா.
அது பெரு நெருப்பு எனில் பெரும் பசியும் கூடத்தான். எதையும் அது உண்ணும். உண்ணுதலே அதன் பணியும் இருப்பும்.
தீண்டும் அனைத்தையும் தாவியேறி உண்டு தன்னைப் பெருக்கிக் கோடி கோடி இதழ் விரித்து எங்கும் விரியும் முடிவற்ற நாக்கு அது என்கிறது கொற்றவை நாவலின் வரிகள். அந்தப் பெரும்பசிக்கு உலகே அன்னம் எனில் மானுடனும் அந்தப் பசிக்குப் பிடி அன்னமே. அந்தப் நெருப்பு எனும் பெரும்பசிக்கும் அதற்கு ஆகுதியும் அன்னமும் என்றாகும் மானுடம் குறித்த கவிதை என்றே யுவன் சந்திர சேகரின் கீழ்கண்ட கவிதையை சொல்வேன்.
பாடுபொருள்
அடுத்த முறை வாய்ப்புக் கிடைக்கும்போது நெருப்பைப் பாடாதே உஷ்ணத்தைப் பாடு.
பார்க்க முடிந்த நெருப்பின் பார்க்கவியலாத வெம்மையில்தான் கருகக் கிடைக்கிறது எப்போதும், இல்லையா.
பகலும் இரவும் குழம்பி நொதித்த உன் அன்றாடத்தின் தகன மேடையில் தடையற்று நீ பொசுங்கவேண்டி நா உயர்த்தி எழுகிறதே ஜ்வாலை,
ஆதிக் குகைகளில் பதனமுற்று கைமாறிக் கைமாறி கைபடாமல் கைமாறி உன் கையறுநிலைமேல் வந்து சேரும் வெம் புலம் அது.
சாம்பல் பூத்த உன் எலும்புகளில் மிதமாய்க் கனலும் அதன் உஷ்ணப் பூ உன்னை நடத்திச் செல்கிறது
இன்னும் திறவாத நாளொன்றின் முடிவற்ற தாழ்வாரத்தில்.
நெருப்பிலிருந்து உஷ்ணத்துக்கு, பார்க்க முடிந்த நெருப்பில் இருந்து பார்க்க இயலா அதன் வெம்மைக்கு எனும் வரிகளில், அக்னியில் இருந்து அக்னித்துவதுக்கு நகர்ந்த அந்த ரிஷிகளின் தொடர்ச்சி இங்கே நிகழ்ந்து விடுகிறது.
பார்க்க முடிந்த நெருப்பு அல்ல, பார்க்க இயலா அதன் வெம்மைதான் பஸ்பமாக்குகிறது அனைத்தையும். பகலும் இரவும் குழம்பிய அன்றாடத்தில் நொதித்தவனின் தகன மேடை மேல் வந்து அமர்ந்தது ஜுவாலை. மானுடனுக்கும் முன்னர் தோன்றி, கை மாறி கை மாறி கை படாமலே இன்று வரை வந்திருக்கும் அந்த ஜுவாலை.
சாம்பல் பூத்த உன் எலும்புகளில் மிதமாய்க் கனலும் அதன் உஷ்ணப் பூ உன்னை நடத்திச் செல்கிறது
இன்னும் திறவாத நாளொன்றின் முடிவற்ற தாழ்வாரத்தில். சாம்பல் பூத்த எலும்பு, கனலும் உஷ்ணப் பூ, திறவாத நாள் ஒன்றின் முடிவற்ற தாழ்வாரம் எனும் விரிகளில் நிகழும் ஆர்க் வழியே இக் கவிதை கிளர்த்தும் கற்பனையும் சென்று தொடும் ஆழமும் தனித்துவம் கொண்டது.
அன்றைய வேத கால ஆத்மீக இலக்கியங்கள் தொட்டு, இன்றைய இந்த நவீன கவிதைகள் வரை அதில் தொழிற்படும் தீ எனும் தொல் படிமம் இயங்கும் விதம், பல்லாயிரம் ஆண்டுகளாக மொழியில் இலங்கும் அதன் அறுபடா தொடர்ச்சி குறித்து அறிய மிகச்சிறந்த கவிதைகள் என யுவனின் மேற்கண்ட இரண்டு கவிதைகளையும் சொல்வேன்.
[எம் . யுவன் கவிதை நூல்களின் தொகுப்பாக காலச்சுவடு வெளியிட்ட தீராப் பகல் தொகுப்பில் இருந்து மேற்கண்ட இரு கவிதைகளும் எடுத்தாளப்பட்டுள்ளன.]
0 comments:
Post a Comment