பிறவிக்கு வெளியில்...
மீன்களும் இப்டித்தான்.
சின்னஞ்சிறு பூச்சிகள் புழுக்கள்
தன்னைவிடச் சிறிய மீன்கள்
இவை போக,
அழுக்கையும்
புசித்து உயிர்வாழும்.
பசியற்ற பொழுதில்
தூண்டில் புழு எதிர்ப்பட்டால்
அக்கரையற்றுத் தாண்டிப்போகும்.
பருவத்தே இனம்பெருக்கி
குஞ்சுகள் சூழ நடமாடும்.
உல்லாசமாய் விளையாடித் திரியும்.
அவ்வப்போது
பிறவிக்கு வெளியில் நகர்வதென
நீர்ப்பரப்பின் தரைசேர்ந்து
முகம் மலர்த்தி
செப்புவாய் திறந்து
ஆசையாய் உண்ணும்
ஒரு துளி
ஆகாயத்தை.
விளையனூர் எஸ்.ராமச்சந்திரன் எழுதிய உருவாகும் உள்ளம் எனும் புத்தகத்தை வாசிக்கும்போது அவர் அதில் கலை பற்றி கலைத்திறன் மிக்க மூளை எனும் பகுதியில் எலியின் உளவியலை உதாரணமாக்கி ஒரு கருத்தைச் சொல்கிறார்.எலி ஒரு குறிப்பிட்ட செவ்வக வடிவத்தைப் பார்க்கும் போது அதற்கு பாலாடைக்கட்டியை உணவாகக் கொடுத்து பழக்கப்படுத்தியிருந்தால் அதே எலி சதுர வடிவைப் பார்க்கையில் ஒன்றும் கொடுக்காமல் வைத்திருந்தால் நாளடைவில் அது செவ்வக வடிவமே தனக்கு உணவு வழங்கும் ஒன்றென கண்டுகொள்கிறது.மேலும் மெல்லிய செவ்வக வடிவமோ அதை யொத்த வடிவமோ அது பார்க்கும்போது அது முன்பைவிட மேலான ஒன்றென நினைக்கிறது.அது விதிகளை செவ்வக வடிமாகவே பார்க்க விழைகிறது. இதை உச்ச இடமாற்றம்(Peak shift)என்று சொல்கிறார்.
இக்கவிதையில் நீந்தும் மீனும் உச்ச மாக தனக்கான இருப்பிடத்தினை மீறிச்செல்கையில் கூட அதன் ஒரு துளிவழியாகவே செல்ல முடிகிறது.
ஏனெனில் அதுவே அதன் விதி. யுவன் சந்திரசேகரின் இக்கவிதை முன்வைக்கும் ஆசை தீவிரமானது. ஆசையின் துளிதான் எத்தனை பெரிது. அது தீராநதிபோல் ஆகாயமெங்கும் கங்கையென பாய்கிறது.
பிறவிக்கு வெளியே வரத்தீர்மானிக்கும் எவருக்கும் மீண்டும் இன்னொரு பிறவியே வாய்க்கிறது.பிறவியற்ற நிலையென்பது ஆசையின் ஒரு துளியெனவே கொள்ளப்படும்.
அத்தனை பெரிய ஆகாயம் ஒரு துளி சிந்தித் தீருமாயென்ன?
தீராப்பகல் தொகுப்பிலுள்ள இன்னுமொரு கவிதை,
நடக்க நடக்கத்திறக்கிறது
பாதை.அங்கங்கே
சிந்திக்கிடக்கும் அளவில்
சிறியதும் பெரியதுமான சொற்கள்
பாதத் தோலில் கீறிவிடாமல்
பதவாகமாக நடக்கிறேன்•
கல்லுக்குக் கல் என்று
யாரோ சூட்டிய பெயரால்
குறிப்பிடுவதற்கு
சிலசமயங்களில் வசதியாக
பலசயங்களில் கூச்சமாக
இருக்கிறது.
நடக்க நடக்கத்தான் திறக்கிறது
பாதை.
ஆனால்
எனக்கு முன்னால் பல்லாயிரம் காதம்
எனக்கு அப்பால் முடிவற்று
பாதை நீள்வதாகச் சொல்கிறார்கள்.
அது வெறும் அனுமானம்தான்
வெறும்
அனுமானம்
அனுமானத்தில் முடியுமிந்த கவிதை பிரத்யட்சமாக தன் பயணத்தையும், பாதையையும் காணும் போதே கல்லின் பெயரை கல் எனச்சொல்கையில் சுருதியாகவும் நிற்கிறது.
அறிதலின் பாதைகளை தேடிக்கொண்டும் அதே வேளையில் மூடிக்கொண்டும் போகிறது இக்கவிதை.இரண்டு முறை அழுத்திச் சொல்கிறது ஆம் வெறும் அனுமானம்தான் என.
திறக்கும் பாதைகளை மூடும் தர்க்கங்கள் வெறும் அனுமானமெனக் கொள்கவென விடுவிக்கிறது இக்கவிதை நம்மை.
***
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment