முதல்மழையில்
வானம்
நூலினால்
பூமியின்
சுழற்சியைத் தொட்டதை
அள்ளிக்கொட்டித்
தீரவில்லை
புல் நுனிகளுக்கு.
அழகியல் பேசும் கவிதை இது. வானில் இருந்து பெய்கின்ற மழை நூலினை போல் பெய்து பூமியினுடைய சுழற்சியைத் தொடுகிறது. அதனை உள்வாங்கிக் கொண்ட புற்கள் அகம் மகிழ்ந்து கொள்கின்றன. அதனைப் பறைசாற்றுவதற்கு நுனியில் மழையைச் சூடிக்கொண்டிருக்கின்றன என்று அழகியல் பேசி இருக்கின்றார்.
மறைபொருள்...
சீக்கிரம்
விடியட்டுமே
பிறந்தநாள்
உடனே வரட்டுமே
என்றெல்லாம்
ஆசைப்படுவதில் தப்பொன்றுமில்லை.
அதிலெல்லாம்
சீக்கிரம் மரணம்
வரட்டுமே
என்றொரு
பிரார்த்தனை அடங்கியிருப்பதை தெய்வம்
புறக்கணித்து விடுமெனில்
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பார் கண்ணதாசன். ஒவ்வொரு பிறந்த நாளும் ஆனந்தம் தரக் கூடியதே. ஆனால் வருடம் ஒவ்வொன்றும் கழியக் கழிய நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் மரணத்தை நமக்கு நினைவூட்டி கொண்டே இருக்கும். இந்த பிறந்த நாளில் நான் ஆனந்தத்தோடு உயிர்த்திருப்பதற்கான காரணம் தெய்வம் அந்த மரணத்தை புறக்கணித்து விடுவதால் என்று தெய்வக் கருணையே நம்மை உயிரோடு வைத்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள் என்கிறார்.
மலர்ந்து கொண்டிருக்கும் பூவைக் குறித்த கவிதை...
மலர்ந்து கொண்டிருக்கும்
பூவைப் பார்க்காதீர்கள் பார்வையால்
அதன் கவனம் சிதறிப்போகும் இலைகளைப் பாருங்கள் அசைந்து விடுமோ என்ற அச்சத்தில்
மூச்சு விடாமல் நிற்கின்றன. அரும்புகள்
பனித்துளி விழுகின்ற அமளியைத்
தன் குழைவு கொண்டு
உறிஞ்சிக் கொள்கின்றன தண்டுகளினூடே
ஏறி வருவதன் குறுமூச்சு
வெளியே கேட்காதிருக்க
தண்ணீர் வேண்டிக்கொள்கிறது. காம்பிலிருந்து
உதிர்ந்தவுடன்
வீழ்ந்து சப்தமாவதற்கு முன் காய்ந்த இலையை காற்று தூரமாக எடுத்துக் கொண்டு போகிறது காய்ந்த இலைக்
காற்று
தூரமாய் எடுத்துக் கொண்டு போகிறது .
காய்ந்த இலை சொல்கிறது
"மிக்க மகிழ்ச்சி.
உச்சியில் பூ மலரத் தொடங்கியிருக்கும்
செடியின்
தியானம் கலைக்காதிருக்க எவ்வளவு நேர்த்தியான முன்னேற்பாடு."
மலரும் பூவினைக் குறித்த
இந்தக் கவிதையின் கதியோ? அதனை யாரும் பார்த்து விடக்கூடாதே
என்ற பதட்டத்துடன்.
என்றாலும் குழந்தையின் அழுகையோ
தேநீர்க்கான அழைப்போ மீன்விற்கும் கூவலோ
பஸ்ஸிற்கு நேரமாகிவிட்டதன் ஞாபகமோ
உள்ளே வரும்.
பாவம் கவிதை
அது எப்போதும்
முழுவதுமாய்
மலராமலேயே இருக்கிறது."
பூ எவ்வாறு மலர்கிறது? அந்தப் பூ மலர்வதற்கு எவ்வாறு மற்றவை துணை புரிகின்றன. அது காம்பிலிந்து வீழ்வது ஒரு நிசப்தம். இலை மௌனம் காத்து எவ்வாறு மகிழ்ச்சி கொள்கிறது, தண்டு எவ்வாறு இதனைக் கடத்துகிறது. இவ்வளவும் தாங்கிக் கொண்டு வரும் கவிதை எதை நினைவுபடுத்துகிறது என்று ஒரு பட்டியல் தருகிறார். பூவோ மலர்ந்து விடுகிறது. ஆனால் கவிதை இன்னும் மலரவில்லை என்ற வருத்தம் தோய்ந்த வரிகளால் நம்மையும் வருத்தமுறச் செய்து விடுகிறார்.
மண்வீர்யம்...
தலையில்
சூரியனை
ஏந்தி,
கால்களில்
பூமியைத்
தூக்கிக் கொண்டு
ஒருத்தி ஓடுகிறாள்.
.
.
அந்த மண்ணை எடுத்து கண்காணாத ஓரிடத்திற்குக் கொண்டு போய்
வைப்பதற்குத்தான்
அவள்
ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.
கொன்றாலும்
இந்த மண்ணை
நான் தரமாட்டேன்
என்று
ஒருமுறை
அவள் வெடிகுண்டுகளிடம்
செய்த சத்தியத்தை
இன்று
நிறைவேற்றி விடுவாள்"
இந்தக் கவிதை எதைப் பேசுகிறது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மண்ணின் மீது வாஞ்சை கொண்ட ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டியவை இந்தக் கவிதை வரிகள். பெண்ணோடு பொருத்தி அவள் எவ்வாறு அதனைச் சுவீகரிக்கிறாள் என்று தாய்மையை நம் மீது நாம் உணர அவள் வழியே இந்தக் கவிதையை நமக்குப் படைக்கிறார். என்னை கொன்றாலும் இந்த மண்ணை நான் தரமாட்டேன் என்று வெடிகுண்டுகளிடம் சத்தியம் செய்வதை நாம் எப்போதும் மறந்து விடக் கூடாது. நம் மண் மீது செய்த சத்தியத்தை நிறைவேற்ற நாம் நம்மைத் துறக்கவும் நேரிடும். இருப்பினும் மண் வேறொரு வடிவில் வீறு கொண்டு எழும்.
தண்டனை...
உற்றாரின்
கண் முன்னால்
புதைத்து மூடுபடும்படிக்கு
அல்லது
பச்சை விறகில்
கிடைத்தி
எரித்துத் தொலைக்கும் அளவுக்கு என்ன பெரிய
தவறு செய்தார்
அவர்
உயிரோடு இருக்கும்போது?
இறக்கும் நாளைக் குறித்துக் கொண்டே ஒவ்வொரு பிறப்பும் நிகழ்கிறது என்பது பொதுவான மொழி. ஆனால், இறப்பு என்பதனை எப்பொழுதுமே ஏற்றுக் கொள்ள இயலாது என்பது நிதர்சனம். நாம் என்ன தவறு செய்தோம் இப்படி கடத்தப்பட்டு இருக்கிறோம் என்பதற்கான விடையை தேட இயலுமா என்ன?
ஏனம்...
இந்தப் பூமியை
உனக்கு விரிப்பாகவும்
வானத்தைப் போர்வையாகவும் தந்திருக்கிறேன் என்று
கடவுள் சொன்னதை
பூமியை ஏனமாகவும்
வானத்தை அதன் மூடியாகவும் தந்திருக்கிறது என்றே
மனிதன் கேட்டிருப்பான் போலும். அதன்படி
பூமியை எடுத்து
அவன்
அடுப்பில் வைத்து விட்டான்
தீயும் மூட்டி விட்டான்
கடவுளே!
கடவுள் நமக்குத் தந்த கொடையை நாம் எவ்வாறு நாசம் செய்து வைத்திருக்கிறோம் என்பதற்கான அறிவுறுத்தல் இந்தக் கவிதை. பூமியை எடுத்து அடுப்பில் வைத்து விட்டான் என்பதில் புதைந்திருக்கின்றது இன்றைய வெம்மை, புழுக்கம். 'ஏனம்' என்ற சொல் நெல்லை வட்டார சொல்லாகும் இந்த இடத்தில் அழகாக கையாழப்பட்டிருக்கிறது.
நடனம்...
நூல் கோக்கும் போது
லேஸ் கட்டும் போது
முடி பின்னும் போது
உன் கை விரல்கள் புரிகின்ற நடனம் போலொன்றை கண்டதில்லை நான்
இன்றுவரை
ஒவ்வொரு அசைவும் கவிதை என்பதற்கு சான்று இந்த வரிகள். கை விரல்கள் இயல்பாக செய்கின்ற செயல் கூட நடனம் போல காட்சி தருகிறது என்று அழகுற சொல்கிறது. அழகியல் கவிதை. பெண்கள் தலைவாரி சுருட்டி கீழே போடும் கூந்தல் அந்த அறைக்குள் சுற்றிக் கொண்டிருப்பதை அவள் நினைவாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று பாடிய கலாப்ரியாவின் கவிதை வரிகளை நினைவுக்கு கொண்டு வருகிறது இந்தக் கவிதை.
வாழ்வினோடு...
உன்னைப் புதைத்த இடத்தில் முளைத்த செடி நிறைய
எவ்வளவு பூக்கள்!
எவ்வளவு அதீத
காதல் ரகசியங்களைக் கொண்டிருந்ததா
உனது
பயணம்?
நம்பவே முடியவில்லை!
எத்தனை எத்தனை காதல் ரகசியங்களை நாம் நமக்குள் புதைத்துக் கொண்டிருப்போம். அத்தனையும் நாம் இறந்த பின்பு புதைத்த இடத்தில் முளைத்த செடி நிறைய பூக்கும் பூக்களாக இருக்கிறது என்பது எத்தனை ஆனந்தத்தைத் தருகிறது. என்ன கண்ணுறும் பேறுதான் கிடைப்பதில்லை. இதில் ஒருவகை பரிகாசம் இருப்பினும், உள்ளே புதைந்து கிடக்கின்ற அந்தக் காதல் உணர்வினை அழகாக வாசம் வீச செய்கிறது இந்த கவிதை.
காலம் ஒவ்வொன்றையும் அழகாகக் கோர்த்து பூச்சரங்களாக்கி வாசம் வீச வைத்திருக்கிறது இந்த வீரான் குட்டி கவிதைகள் தொகுப்பு. அழகியல், காதல் உணர்வு, படிமங்கள் என அனைத்தையும் பேசும் அற்புதமான ஒரு கவிதை தொகுப்பு இது.
ஜன்னல் வழி வானில் சொற்களை துழாவிக் கொண்டிருக்கும் என் கண்கள், இதுவே மொழியாக்கம் என்றதும் நினைவில் எழும் சித்திரமாக வந்து விழுந்தது என்று தன்னுரை வரிகள் சுஜாவின் மொழிபெயர்ப்பிற்குச் சான்றாக இருக்கிறது.
***
0 comments:
Post a Comment