தேவ குயில்
அதிகாலை
இரவெல்லாம் சுழன்றடித்த வெக்கையை
ஐன்னல் திறக்குமொரு தருணத்தில்
பாய்ந்து கவ்வி அழிக்கிறது
உந்தன் குரல்.
குரலில் ஒரு குளிருண்டு
விழிக்காது உருளுகிறேன்
பனிக்குடத்தின் நீரலைகளுக்குள்.
கன்னத் தசைகளில் கிளர்ச்சியூற
உதைக்கத்தான் வேண்டும் இப்போது
கால்பந்தாவதும் உந்தன் குரல்தான்
குளிர்குயிலே !
காலை
ரயிலை விட்டிறங்கினால்
காலைப் பிடித்திழுக்கும்
அலுவலக நாற்காலி
ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிவிடும்.
இப்போது ஏன் கூவுகிறாய் ?
குரலில் ஒரு ஏணியுண்டு
ஏறி மரத்துக்கு
ஏறி மேகத்துக்கு
ஏறி வெளிக்கு
ஏறி ஏதுமற்றதற்கு வந்துவிட்டேன்.
இறங்குவதற்கு
ஏணி இல்லையா
விண்குயிலே !
தேநீர் இடைவேளை
எலுமிச்சம் தேநீர்தான்.
அரசமரத்தில் இலைகளெல்லாம்
உன் குரல் உடுத்திக் கூவுகிறதா?
காணவே முடியாது
குரலில் ஒரு சுவையுண்டு
உறிஞ்சும்போதெல்லாம்
வாய்க்குள் விரியும் மண்டலங்கள்.
சுற்றிக் கொண்டிருகின்றன
சுவை கிரகங்கள்
நிறுத்தவே முடியாமல்.
பிரம்மக் கடலொன்றை உருவாக்கி
மூழ்கடிக்க வா
பச்சைக் குயிலே !
மாலை
ரயில் பிடிக்க ஓடிக் கொண்டிருக்கும்
அன்றாடத்தின் பாதைதான் அது.
பிரார்த்தனையின்
பொற்தூவல் தெளிக்கும்
குரலில் ஒரு பாதையுண்டு
கண்மூடித் தவழ்கிறேன்.
தூக்கிக் கொஞ்சத் தாயாருண்டு
அவரளிப்பதோ
வளரவே முடியாத சாபம்.
அழுகிற யாவரையும்
குழந்தையாக மாற்றிவிடுவாயா
தேவ குயிலே !
வெண்பாறை இட்லித் தட்டு
தெருவிளக்குகள்
சுவர்க்கோழிகளுடன்
உரையாடிக் கொண்டிருக்கின்றன
மழை விட்ட குளிரில்
விழித்திருப்பது குறித்து.
"அக்காஆஆஆஆ"
கேட்டைத் தட்டுகிறது குழந்தை
வெண்பாறை இட்லித் தட்டை
ஏந்தி நிற்கும் தாயுடன்.
சிடுசிடுப்பில்லை
அழுகையில்லை
கன்றைப் போல குதித்து
வாசல் வருகிறாள்
கனவுக்குள்ளிருந்து.
பாறை இட்லிகள்
சட்னி நதியில்
கரைந்தோடுகின்றன
வயிற்றுக்குள்.
தோளிலணைத்து "ரோரோ" சொன்னதும்
பூத்துப் பரவுகிறது ஏப்பம்.
அப்போதும்
" அக்காஆஆஆஆ"தான்.
உலகுக்கே செரித்து விட்டது.
***







0 comments:
Post a Comment