பைடணி*
-ஷாந்தா ஷேலகே
பழைய மர அலமாரியின் அடியில், பதுங்கி இருந்தது ஒரு துணி மூட்டை.
அதில் பழைய உடைகள்,
அலங்காரமாக கைவினை செய்யப்பட்ட குழந்தையின் குல்லாய்கள், ஷால்கள் இவற்றோடு, சதுரமாய் மடிக்கப்பட்ட பைடணி புடவை.
தேங்காய் நிற முந்தியும், தங்க ஜரிகையும் சேர்ந்து செல்வச் சீருடன் தெரிந்தது.
என் பாட்டி இதே பைடணியைத் தான் அவள் திருமணத்தில் உடுத்தி
இருந்தாள்.
இதன் முந்தானையை கையில் பிடித்த படியே மூத்தோர் கால்களை வணங்கி, ஆசிர்வாதம் பெற்றாள்.
இந்த பைடணியைச் சுற்றித் தவழ்கிறது ஒரு மென்மையான மணம்.
நான் அறிந்ததும், அறியாததுமான காலத்தை இணைக்கும் ஒரு உள்ளுணர்வு.
விளக்கு, தூபம் கற்பூரம் எரிந்த எத்தனை ஆவணி மாதங்கள்,
பண்டிகை நாட்கள் ஓடிவிட்டன.
அவளின் விரல்களின் ஈரத்தை, அதன் மென்மையை அவள் உடலை, அதன் நறுமணத்தை, ஏன் அவளின் மனதையும் கூட தெரிந்து வைத்திருந்தது, ஆண்டுகளாய் அவள் உடுத்திய பைடணி!
புதிதின் மிடுக்கில் இருந்த பைடணி மெல்ல மிருதுவாகி விட்டது.
அதன் ஒவ்வொரு மடிப்பிலும் வாழ்வு விரிந்ததில், வருடங்கள் ஓடி ,
தன்னை அறியாமலேயே, அவள் மரணித்தும் போனாள்.
எப்போதாவது இந்த பைடணியை நான் மார்போடு அணைத்துக் கொள்கிறேன்.
அதன் மென்பட்டு தொடுதலில் பாட்டி நெருக்கமாக அமர்கிறாள். எங்களுக்கு நடுவில் காலம் விலகி நின்று தாழிடுகிறது.
காற்றே, என் நலத்தைக் கூறி என் பாட்டியின் நலத்தை விசாரித்தேன் என்று சொல்லு!
------------------------------------------------------------
*பைடணி - பட்டுச் சேலையின் பெயர்
***
2
தாகினா*
- சஞ்சய் சௌத்ரி
அழகு மகள் கேட்டாள்,
"அம்மா, உன் கை விரல்களில்,
வைரம் போல ஜொலிக்கும் கற்களுடன், மோதிரம்
ஏன் இல்லை?
அம்மா சொன்னாள் ,
"கண்ணம்மா!
உன் பிஞ்சு விரலால் என் விரலை சுற்றிக்கொள்.
இதை விட விலையுயர்ந்த மோதிரம் இருக்கிறதா என்ன?"
ஆசை மகள் மீண்டும் கேட்டாள்,
"அம்மா ,
உன் கழுத்தில் மஞ்சள் மின்னும் தங்க மாலைகளும், அட்டிகைகளும்
ஏன் இல்லை?"
அம்மா சிரித்துக் கொண்டே சொன்னாள்,
"குட்டி , உன் மென்மையான கரங்களால் என் கழுத்தைக் கட்டிக்கொள்,
உன் சிறு இதயம் என் மார்பில் துடிக்கட்டும்.
இதைவிட மேலான ஆபரணம் உலகிலுண்டா?"
குழந்தை அம்மாவின் விரலைப் பிரித்துக் கொண்டு,
கழுத்தை இருக்கமாகக் கட்டிக்கொண்டு, மார்போடு அணைத்துக் கொண்டாள்!
அம்மாவின் கண்களிலிருந்து விழுந்த வெண் முத்துக்கள் மகளின் கருங்கூந்தலை நனைத்தது.
அம்மா சொன்னாள்,
"குட்டி ,
நம் உள்ளம் மலர்ந்திருப்பது தான் நமக்கு உண்மையான நகை!
எந்த மரமும் வேறொரு மரத்தின் பூவைச் சூடிக்கொண்டு தன்னை அழகாய்க் காட்டிக்கொண்ட வரலாறு இதுவரை நிகழ்ந்ததே இல்லை."
-------------------------------------
*தாகினா - அணிகலன்
***
(கவிதைகள், தமிழில்: தீபா.R)








0 comments:
Post a Comment