ராமகிருஷ்ணர் வசம் சாதகர் ஒருவர் இந்த வாழ்வின் துயரம் குறித்து புலம்புகிறார். குருதேவர் அவருக்கு "தன்னை தேடி வரும் யாருக்கும் கடல் உப்பைத்தான் அளிக்கும். உபாயம் அறிந்து முக்குளிப்போருக்கே கடல் தன் முத்தை அளிக்கும்." என்று பதில் சொல்கிறார்.
ரமணர்.அவர் மூப்பு தளர்வு நோய் அனைத்தாலும் ஆட்கொள்ளப்பட்டாலும் அவர் " ஆன்மாவின் இயல்பு ஆனந்தம்" என்றே சொல்கிறார்.
இது எல்லாமே இந்த வாழ்வின் சாரம் குறித்த இந்திய நோக்கு. இந்த நோக்குக்கு மேலை சிந்தனை மரபில் பிளாட்டோ துவங்கி எமர்சன் தொடர்ந்து, அங்கிருந்து இங்கே ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி வரை நீளும் மரபு தொடர்சி உண்டு.அந்த வாழ்க்கை நோக்கை என் சொல்லில் இப்படி தொகுக்கிறேன். காணும் யாவும் அழகே. அந்த அழகு புறம் என்ற யதார்த்தம் என்ற உண்மை மேல் நிலைகொள்கிறது. கண் புலன் ஆகும் பிரிக்க இயலா இந்த உண்மையும் அழகும், இதற்கும் அப்பால் கண் புலனாகாத இவற்றின் சாராம்சமான அருவமான முழு முதல் நன்மை ஒன்றின் ஸ்தூல வெளிப்பாடு. இங்கே தீமை என்பது இல்லை. தீமை என்று சொல்லப்படுவது நன்மை குறைந்த நிலை மட்டுமே.
இந்த வாழ்க்கைப் பார்வையின் பகுதியாக வந்த ஜிட்டு கிருஷ்ணமூர்தி அவர்களின் தொடர்சி என்று தேவதேவன் அவர்களை சொல்லலாம்.
அவரது சமீபத்திய கவிதைகளில் ஒன்று இது.
கொக்குகள் திகைக்கச்
சிறகுகளின்றியே
செம்மாந்து நிற்கும் ஆம்பல் மலர்கள்
காலடியில்
தவம் கிடக்கும் பெருவெளி.
ஒற்றைக்கால் கொக்கு, ஒற்றைக்கால் ஆம்பல் மலர் இவை நேரடியாகவே ஒற்றை கால் கொண்டு தவத்தில் நிற்கும் யோகியை நினைவூட்ட, கவிதை அதை தலைகீழாக்கி அதன் காலடியில் பெருவெளியை தவம் செய்ய வைக்கிறது. கொக்கு பறக்கும் வானப் பெருவெளி என்பது சென் புத்திச மரபில் நேரடியாகவே ஞானம் நோக்கிய பயணத்தை குறிப்பது. ஓஷோ தியான மையம் ஒன்றின் லோகோ அதுதான்.
கொக்குக்கு நேர் எதிரான ஆம்பல் மலர் கொக்கு போலவே ஒற்றைக்கால் தவ யோகி ஆனால் கொக்கு போல வான வெளி அதற்கு கிடைக்குமா? வானம் உயிர்த்து, நிகழ்ந்து, மறையும், யாவற்றையும் தன்னில் கொண்டு, ஆனால் தான் மாறாத, மாற்றமே அற்ற காலமே அற்ற, விரி வானம். கொக்கு பறந்து எழுந்து அடைய வேண்டிய விரி வானம், எதுவுமே செய்யாது வெறும் காத்திருப்பு மட்டுமே கொண்ட அந்த ஆம்பல் மலரின் காலடியில் கிடக்கிறது. ஒரே காட்சி கொண்ட இக்கவிதை, வாசகர் மனதில் ஒரு கணம் தியான அனுபவத்துக்கு நிகரான அமைதி ஒன்றை தொட்டுக் கிளர்த்திவிடுகிறது.
வாழ்வு குறித்த இந்த பார்வைக்கு நேர் எதிரான வலுவான பார்வை கொண்ட தத்துவத் தரப்பு, இந்த கவிதை சுட்டும் காட்சியை கண்டால் என்ன சொல்லும்? ஆம்பல் மலரால் பறக்க முடியாது. அதற்கு வானம் கிடைக்காது. அதன் காலின் கீழ் கிடப்பது வானம் போன்ற மாயை. அதற்கு கீழே இருப்பது உண்மையின் சேறு. ஆம்பல் நிற்பது அந்த உண்மையின் சேற்றில்தான். கொக்கு விரி வானை அளைந்து திரிந்தாலும், உயிர் வாழ ஒரு பிடி உண்ண வேண்டின் அது இந்த சேற்றில் இறங்கி நின்றுதான் ஆக வேண்டும். மேலை மரபில் இந்த வாழ்க்கை நோக்கு சார்ந்து பண்டைய காலம் தொட்டு ஷோபனாவர், நீட்சே தொடர்ந்து இன்றுவரை நீளும் தத்துவவாதிகள் தொடர்சி உண்டு.
அவற்றை என் சொல்லால் இப்படி தொகுப்பேன். புற உலகுக்கு தன் இயல்பில் அழகு என்ற ஒன்றோ சாரம் என்ற ஒன்றோ இல்லை. இங்கே நிகழ்வது அனைத்தும் குருட்டுத்தனமான ஆற்றல்களின் முட்டி மோதல் மட்டுமே. மனிதனுக்குள் அதுவே குருட்டுத்தனமான விழைவாக, அதற்கான யத்தனமாக வெளிப்படுகிறது. இது ஒரு நிறைவின்மை. இங்கே செயல்பாட்டில் இருக்கும் அந்த துயருக்கே வாழ்க்கை என்று பெயர். இந்த வாழ்வில் உண்மை நன்மை அழகு என்பவை எல்லாம் இந்த நிறைவின்மை நிலையை ஒரு கணம் நிற்க வைப்பதில் எழும் ஆசுவாசம் மட்டுமே. மேலே தெரியும் அந்த அழகு நன்மை இவற்றின் ஆழத்தில் மானுடம் அறியாத எல்லையற்ற இருளின் ஆழம் மட்டுமே உண்டு. மனிதனால் தேர்வு செய்ய முடியும். ஆனால் எதன் வழியாகவும் இந்த அடிப்படை துயர் அதில் இருந்து அவனால் வெளியேற முடியாது. ஏன் எனில் அவன் "இதில்" இருந்து வெளியேறி செல்ல "அப்பால்" என ஏதும் இல்லை.
இந்த வாழ்க்கை நோக்கு சார்ந்த இலக்கியப் பிரதிகள் தமிழ் உட்பட உலக மொழிகள் யாவற்றிலும் நிறைய உண்டு. இந்த வாழ்க்கைப் பார்வை மேல் அமைந்த கவிதை என்று சசி இனியன் எழுதிய இந்த கவிதையை வகைப்படுத்தலாம்.
கண்
பழைய படித்துறை பாசி படிந்திருந்தது.
அவ்விடத்தில்
வெவ்வேறு விதமான பாத்திரங்களுடன்
பிச்சைக்காரர்கள்
அமர்ந்திருந்தனர்.
கூடவே அந்தச் சூழலில் நிலவும் சத்தம் வேறு.
எனக்குக் கால்கள் மிகுந்த சோர்வாக இருந்தது.
அவ்விடத்திலே அவர்களோடு
அமர்ந்து விட்டேன்.
பாசிகளும் அழுக்குகளும் குப்பை கூளங்களாக
இருந்த இடத்தில்
அவர்களின்
இடையே உட்கார்வது
ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.
ஆனாலும்
கண்களைச் சற்று தாழ்த்தியபடி
அமர்ந்து கொண்டேன்.
அவ்விடத்துக்குச் சற்றும்
பொருந்தாத ஏதோ ஒன்று
என்னை உற்றுப் பார்ப்பது போல இருந்தது.
நான் என் தலையை இன்னும்
சற்று தாழ்த்தி அதைப் பார்த்தேன்.!
எனக்கு
மிகச் சமீபமாகக்
மிகச் சிறிய கோலிக்குண்டு போல
ஒன்று
கிடந்தது!
நான்
ஏதோ பொம்மைக் கண் என்று நினைத்து
அதைக் கைகளில் எடுத்துப் பார்த்தேன்.
ஈரப்பசையோடு வெண்மையும் சிவப்பும்,
அடர் நீலநிற ரத்த நாளங்களுமாகத் தோல்
நீக்கப் படாமல் இருந்தது.
அதன் மெல்லிய சவ்வுப் படலத்தை நீக்கினேன்.
அது சட்டென்று விழித்துப் பார்த்து அலறியது!
அதன் வாயின் மெல்லிய நீள் கோடுகளை
அதன் ரத்த நாளங்களை எல்லாம் பார்த்தேன்.
அதன் குரல்
அந்தக் குளத்தை
அதைச் சுற்றி உள்ள மனிதர்களை நடுங்கச் செய்தது.!
கண் கிடைத்ததும் அதற்குத் தலை வந்துவிட்டது.
பின்பு ஒவ்வொன்றாக..
நான் திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன்!!
மிக மெல்லிய
மிகச் சிறிய என்று
நினைக்கிற எல்லாமும் இப்படித்தான்
அச்சுறுத்துகிறது
அல்லது
இப்படி
திறந்து காண்பிக்கிறது.
சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தேன்.
குளத்தில் வெண்கொக்கு
ஒன்று
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்குமாக பறந்துக் கொண்டிருந்தது.
(சசி இனியனின் முதல் தொகுப்பாக நீலி வனம் வெளியாகி இருப்பினும், அதில் இருப்பவை எல்லாம் கவிதைக்கான கச்சா பொருள்களே அன்றி கவிதைகள் அல்ல. அந்த தொகுப்புக்கு பிறகு எழுதிய இந்த கவிதைதான் அவரது "முதல் கவிதை". இங்கிருந்துதான் கவிஞர் தனது கவிதை பயணத்தை துவங்க வேண்டும்)
மேற்கண்ட கவிதை திடுக்கிட்டு விழித்துக்கொள்ளும் கவிஞனின் ஒரு அறுபடல் வழியே அவன் அமர்ந்திருக்கும் குளக்கரை மேலே பறந்து கொண்டிருக்கும் கொக்குகள் கொண்ட புற உலகுக்கு மீள்கிறது.
திடுக்கிட்டு விழிக்கும் முன் அவன் தியான தருணத்தில் அதன் ஆழத்தில் அந்த குளம் பாசி படிந்த பண்டைய கால குளமாக கிடக்கிறது. அருகே வெவ்வேறு பாத்திரம் கொண்ட பிச்சைக்காரர்கள். ஆம் வெவ்வேறு விதமான பாத்திரங்களை ஏந்தி அமர்ந்திருப்பது தவிர அவர்கள் கையில் எதுவும் இல்லை. அவர்கள் செய்ய ஏதும் இல்லை. எவரேனும் இருந்து அவர் வந்து பிச்சை இட்டால்தான் உண்டு. அதில் எந்த நிச்சயமும் இல்லை.
இதற்கெல்லாம் இடையில் எவராலும் கோரப்படாது மிக சாதாரணமாக அங்கே கிடக்கும் ஒன்று. (தியானிகள் தேடும் மூன்றாவது கண் என்றும் கொள்ளலாம்) அதன் வழியே திறக்கும் ஆழம். அதன் இருள் சித்திரம். பீதி அளிக்கும் உணர்வை பொதிந்து வைத்திருக்கும் கவிதை இது. இதுவும் தியான அனுபவம் ஒன்றின் பகுதிதான். சரியான குரு இன்றி பயின்று இத்தகு தியான காட்சிகள் வழியே சித்தம் கலங்கிய பலர் உண்டு.
சமகாலத்தில் எழுதப்பட்ட மேற்கண்ட இரண்டு கவிதைகள் கொண்ட தனித்தன்மை என்பது அது சமகாலத் தீவிர தமிழ் இலக்கியத்தில் எழுதி குவிக்கப் படும் (அரசியல் அநீதி, காதல், வப்பாட்டி ,கைகால் வலி இப்படி ஏதோ ஒன்று, அய்யய்யோ போச்சே அல்லது அய்யய்யோ வந்துருச்சே வகையறா) காண்டம்பரரி கவிதைகளை உதறி வெளியேறி என்றும் உள்ள ஒன்றை சுட்டி நிற்கும் நிலை. மேற்கண்ட இரண்டு கவிதைகளும் கொண்ட பலம் என்பது இந்த வாழ்க்கை அதன் சாரம் குறித்த உசாவலின் கவி வடிவமாக நிற்கும் நிலை.
பிளாட்டோ காலம் துவங்கி இன்றுவரை தத்துவவாதிகள் எல்லோருக்கும் இலக்கிய (குறிப்பாக கவிதை) ஈடுபாடு உண்டு. காரணம் அறிவு சார்ந்த எல்லா பலத்துடனும் தந்துவம் இயங்கினாலும் (அறிவின் இயல்பு அது முற்ற முழுதான இறந்த காலத்தை சேர்ந்தது) அது கலைக்கு ஒரு வினாடி பின் தங்கியே நிற்கும். தூரத்தில் பட்டாசு ஒளிக்கு பிறகு சில வினாடி விட்டு ஒலி அதனோடு ஓடி சேர்ந்து கொள்வது போல தத்துவம் கவிதைக்கு பின்னால் ஓடி வந்து சேர்ந்து கொள்ளும். காரணம் கவிதை இந்த வாழ்வுடன் பிரிக்க இயலா வகையில் "இக்கணத்தில்" "நிகழ்வது".
ஒரு ஃபிராய்டிய அறிஞன் தி ஜா வின் அம்மா வந்தாள் நாவலும், தாஸ்தாவெஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலும் படித்தான் என்றால் அம்மா வந்தாள் நாவலை ஆம் சரிதான் என்று ஆமோதித்து வைத்து விடுவான். மாறாக கரமசோவ் சகோதரர்கள் நாவலுடன் உரையாடுவான். காரணம் தி ஜா அவன் அறிந்ததை கலை வழியே அவனுக்கு திருப்பி காட்டுகிறார். மாறாக தாஸ்தாவெஸ் கியோ அந்த அறிஞன் அவன் கொண்ட துறையில் எதை அறிந்திருக்கிறானோ அந்த அறிதல் எல்லையை மேலும் கொஞ்சம் விஸ்தரிக்கிறார்.
மேற்கண்ட இரண்டு கவிதைகள் ஒரு தத்துவவாதி வாசித்தால் ஆமாம் சரிதான் என்று சொல்லி கடந்து விடுவான். ஆம் அந்த கவிதைகள் தத்துவம் அடைந்தவற்றை சித்திரங்கள் வழியே உணர்ச்சி ஏற்றி வாசகனுக்கு அளிக்கிறது. அந்த வகையில் இந்த கவிதைகள் தத்துவத்தின் கலை வடிவம் என்று சொல்லலாம். ஆனால் தத்துவத்தை கடந்து தத்துவத்துக்கு கவிதையால் அளிக்க முடிந்த ஒன்றை தரும் கவிதைகள் அல்ல இவை. அந்த வகையில் தமிழில் நிகழ்ந்த, இந்த திறன் மிகுந்த, சீரிய நல்ல கவிதைகள், அவை கொண்ட எல்லையும் இதுவே.
***
தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்:
சசி இனியன் தமிழ் விக்கி பக்கம்:
***







0 comments:
Post a Comment