‘விரித்தால் சுவை குன்றுவது கவிதை’ என்பதே பொதுவான அபிப்ராயம். ஆனால் விரித்து விரித்து மேலும் சுவை கூட்டும் கட்டுரைகள் இவை. ஒரு கவிதையை எவ்வளவு நீட்டிப் பார்க்க முடியுமோ அவ்வளவு நீட்டிப் பார்க்கிறார் கல்பற்றா. அதாவது மனித குல வரலாற்றில் எவ்வளவு நீளம் போகுமோ அவ்வளவு நீளம் நீட்டிப்பார்க்கிறார். இந்தக் கட்டுரைகளை வாசித்து முடித்ததும் எனக்குத் தோன்றியது…” உலகிலேயே மிக நீளமானது கவிதைதான் போல?”
கவிதை என்றால் என்ன என்கிற பழம்பெரும் கேள்வி பேசித் தீராதது.
ஆயிரம் கவிதைகள் எழுதி முடித்து விருதுகள், பாராட்டுகள் என்று வாங்கி அடுக்கி வைத்திருக்கும் ஒரு கவியும், அந்தக் கேள்வியின் முன்னே ஆர்வம் கொப்பளிக்கும் ஓர் இளம் மாணவன்தான். ஏற்கனவே சொன்ன பதிலை கொஞ்சமே கொஞ்சமாக மாற்றிச் சொன்னால், அதைப் புதிது போன்றே கேட்பவன் . . ஏற்கனவே சொன்ன பதிலை அப்படியே திருப்பிச் சொன்னால், அதையும் புதிது போன்றே கேட்பதில் வல்லவன் . ஒவ்வொரு முறையும் ஒரு ரகசியத்தைக் கேட்கும் கூர்த்த கவனத்துடனும், இன்பத்துடனும் அதற்குச் செவி மடுக்கிறான் அவன்.
“ஒரு வகையில் கவிதை என்பதே கழிவிரக்கத்தின் வெளிப்பாடு தானோ? செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டிய தருணத்தில் செய்யாமல் இருந்தவனின் மொழியா?.....பெரும்பாலான கவிதைகளும் ஒரு வகையான பெருமூச்சுக்கள்தான்”
“சொல்லா முடியாததைச் சொல்வது என்கிற மொழியின் புராதன கடமை கவிதையில் ஒவ்வொரு முறையும் நிறைவேற்றப்படுகிறது”
“கவிதையின் வடிவில் அல்லாமல் வேறெப்படியும் சிலவற்றை வெளிப்படுத்த முடியாது”
“மொழியின் எல்லையால் பத்தி தாழ்த்தப்பட்ட பாம்பு போல நிறைவின்மை கொண்ட சில மனங்கள் மொழியில் நிகழ்த்தும் எல்லை மீறலாக கவிதையை நாம் யோசித்துப் பார்க்கலாம்”
கவி புனையும் கட்டுரைகளுக்கென்றே ஒரு பிரத்யேக நறுமணம் உண்டு. அந்தக் கிறங்கடிக்கும் தன்மை வியாபித்துள்ள எழுத்துக்கள் இவை. கட்டுரையின் சில வரிகளை தீவிரமாக மனம் கொண்டு தொடர்ந்தால் செறிவான இன்னொரு கட்டுரை பிறக்கும் வாய்ப்புண்டு. இதில் கிடைக்கும் தொன்மக் கதைகளும் சுவாரஸ்யமானவை. சில வரிகள் மனித குல வரலாற்றின் கவித்துவமான திருப்பங்களைத் தொட்டுச் சுடர்கின்றன.
“எப்போது என்று உறுதியாகச் சொல்லமுடியாத தொல் பழங்காலத்தில் , இன்றைய நவீன மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியுடன் ஒப்பிட்டால் அதன் குழந்தைப் பருவத்திலிருந்த மனிதன் தன் தோற்றத்தை / ‘ சுய’ ரூபத்தை நீர்ப் பிம்பத்தில் கண்டுகொண்டுதான் அவனாக ஆகத் தொடங்குகிறான். அது நீர்ப் பிம்பமாக இருக்கலாம் அல்லது பிளாட்டோ சொல்வது போல எரியும் நெருப்பிற்கு பின்புறம் உள்ள குகைச் சுவற்றில் பதிந்த நிழலாக இருக்கலாம்…
“இரவில் நெருப்பைச் சூழ்ந்து அமர்ந்திருத்தலிருந்துதான் கதையும், கவிதையும், இசையும், நடனமும், தத்துவசிந்தனையும் வரலாறும், அறிவியலும் உருவெடுத்தது”
கவிஞர் உடற்பயிற்சியை ‘பரிகாசத்திற்கு உரிய விஷயம்’ என்கிறார். அதனால் பலன் அடைந்தவன் என்பதால் என்னால் அப்படிக் கருத முடியவில்லை. ஆனால் அவர் சொல்வது போன்றே நடைப்பயிற்சிக்கும் எழுத்திற்குமான உறவை நான் உறுதியாக வழி மொழிகிறேன். என் பெரும்பாலான கவிதைகள் காலை நடையில் எழுதப்பட்டவைதான். “காலை நடை முடித்து வீட்டிற்கு திரும்புவது புறப்பட்ட நான் அல்ல” என்கிறார். நானும் அப்படியே உணர்ந்திருக்கிறேன். ஆயிரம் துரதிர்ஷ்டங்களுக்கு மத்தியிலும் அள்ள அள்ளத் தீராத பொக்கிஷமாக வெளி திறந்து விரிந்து கிடக்கிறது.
கல்பற்றா தீவிர விராட் கோலி ரசிகர். கிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஹாக்கி, வாலிபால், கபடி , கூடைப்பந்து என எல்லா விளையாட்டிலும் கோலியை “ Non playing captain “ஆக நியமிக்க வேண்டும் என்று அனுஷ்கா ஷர்மாவோடு சேர்ந்து அரசுக்கு கோரிக்கை வைக்குமளவு ரசிகர். இந்தக் கட்டுரைகளை கோலியின் ஸ்டைலான பவுண்டரிகள் மற்றும் ஆக்ரோஷமான சிக்ஷர்கள் என்று வர்ணனை செய்தால் நிச்சயம் அவர் மகிழ்வார். அப்போது அவர் முகத்தில் தவழும் அந்தப் புன்னகையையே தமிழின் பரிசாக அவருக்குச் சூட்டி மகிழ விரும்புகிறேன்.
படைப்பாளி படைப்புக்கான ஊக்கம் பெறும் வழியும் அவ்வளவு துலக்கமாக இல்லை. கவி கண்ணீரையும் இரத்தத்தையும் சரிவிகித சமானத்தில் கலந்து வார்த்தாலும், சமயங்களில் அங்கு கவிதைக்கு பதிலாக வேறொன்றே தோன்றி நிற்கும். அப்போது அவன் எவ்வளவு பாவம் என்பதை அவன் மாத்திரமே அறிவான்.
“சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்த நாட்களில், மிகச் சொற்பமான ரன்களில் வெளியேறிய நாட்களில் , நான் ஆற்றிய மேடையுரைகளின் வரைபடம் உயர்வு தாழ்வுகளாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்… பொறுமையில், படைப்பூக்கத்தில், விழிப்பு நிலையில் எல்லாம் எனக்குச் சிறந்த விளையாட்டு வீரர்கள் தூண்டுதலாக இருந்திருக்கிறார்கள்..” என்கிறார். ஜனரஞ்சக சினிமாக்கள் என்று எள்ளப்படும் சினிமாக்களிடம் இருந்து கூட நான் தூண்டுதல் பெற்றிருக்கிறேன். கார்த்திக் சுப்புராஜின் “ பீட்சா” படம் எனக்குப் பிடித்திருந்தது. அதன் சுவாரஸ்யம் புத்துணர்ச்சி அளித்தது. அந்தப் படம் பார்த்து வந்த மாலையில்தான் “ லியூகோடெர்மா கன்னியின் விநாயகர்” என்கிற கவிதையை எழுதினேன். இப்போதும் எனக்குப் பிடித்த கவிதைகளின் பட்டியலில் அது உண்டு. அந்தப் படத்திற்கும் கவிதைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இல்லை, அப்படி ஒரேயடியாக சொல்லிவிட முடியவில்லை. அந்தக் கவிதையின் புனிதத்தில் தூசு படிந்துவிடும் என்று இத்தனை நாளும் இந்த ரகசியத்தை மறைத்து வந்தேன்.
“கவிதைக்கு வெளியே நடந்த சில வரிகள்” என்கிற கட்டுரையில் குறிப்பிட்ட கவிதைக்கு வெளியே மேலும் சுதந்திரமாகும் , மேலும் காத்திரம் கொள்ளும் வரிகளைக் குறித்து எழுதியுள்ளார். கம்பனில் ஒரு வரி உண்டு “ கைகடக்க விட்டிருந்து கட்டுரைப்பதென் கொலோ?”. சீதை தன் நெஞ்சிற்குச் சொல்வதாய் அமைந்த எளிய காதல் கவிதை. இராமனைக் கண்ட மாத்திரத்திலேயே அவனை இறுக அணைத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படியல்லாமல் அவனைக் கடந்து செல்ல விட்டுவிட்டு இப்போது புலம்பித் தவித்து என்ன பயன்? என்று கேட்கிறாள். இவ்வரி அந்தக் கவிதைக்குள் அப்படியொன்றும் ஆகச்சிறந்த வரியல்ல. ஆனால் அவ்வரியை அக்கவிதையிலிருந்து விடுவித்து வெளியே கொண்டு வந்து வைத்தால், காலாதி காலமாக மனிதன் தவற விட்டுவிட்டுத் தவிக்கும் அத்தனை துன்பங்களையும் கோர்த்துக் கட்டிவிடுகிறது இவ்வரி.
இந்த நூலின் வழியே 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மலையாளத்தில் செல்வாக்கு செலுத்திய பல கவிஞர்களின் முக்கியமான வரிகள் தமிழுக்கு அறிமுகமாகின்றன. அவ்வரிகளின் வழியே அவர்களும். மலையாளக்கவி பி. ராமனுடனான ஒரு உரையாடலில் 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மலையாளத்தில் பல முக்கியமான கவிகள் தோன்றியதாகவும், ஆனால் அவர்கள் எல்லாரும் கடினமான செய்யுள் வடிவங்களில் எழுதியதால் அவற்றை பிற மொழிகளுக்கு மொழி பெயர்க்க முடியாமல் போய்விட்டது என்றும் வருத்தப்பட்டார். அந்த மலையாளக் கவிதைகளின் வரிகளை வாசிக்கையில். அதே காலத்தில் தமிழில் செய்யுள் வடிவில் இயற்றப்பட்ட கவிதைகளுக்கும் அவற்றுக்குமான வேறுபாட்டை உணர்ந்து கொள்ள முடிகிறது. செய்யுள் வடிவில் எழுதப்பட்டாலும் மலையாளக் கவிதைகள் நவீனக் கூறுகளுடனேயே வெளிப்பட்டிருக்கின்றன. மனித அகத்தை ஊடுருவிப் பார்ப்பதையே அதிகம் விரும்பியிருக்கின்றன. குறிப்பாக அக்கவிதைகளில் உள்ள கசப்பையும் இருட்டையும் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் நாம் ஒரே ஒரு பாரதியோடு வாழ்ந்து வந்துள்ளோம். அவரும் ‘ அன்புசெய்தால் போதும் பாடுபடாமலேயே பயிர் விளையும்’ என்று பாடும் அளவு பொன்னுலகப் பித்தராக இருந்திருக்கிறார்.
இத்தொகுப்பு முழுக்கவே இருள் நிரம்பியுள்ளது.
“குற்றம் மீதான ஈர்ப்பு எவ்வளவு அபாயகரமானது! ஆனால் எவ்வளவு உண்மையானது.”
“நம் ஒழுக்கநெறிகள் அசைந்தபடியே உள்ள ஒரு கல்லில் அஸ்திவாரம் அமைத்து ஆலயம் போல நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது”
“எந்தப் பசியும் ஒன்றை விட மற்றது எளிமையானது அல்ல”
“தொன்மங்களும், மூட நம்பிக்கைகளும் மனிதனுக்கு அளித்த பாதுகாப்புணர்வை வரலாற்றாலும் அறிவியலாலும் அளிக்க முடியவில்லை”
“உறக்கம் ஒரு பிழையான செயல் அல்ல. ஆனாலும் அதில் தன்னலம் இருக்கிறது. ஒரு வகையான கண்டுகொள்ளாமை உண்டு. பாவம் உண்டு. நல்ல தூக்கம் என்ற சொல்லில் மேலே சொன்ன எல்லாமே உண்டு”
“மாண்பான நபர்கள் கொலையை கனவு காண்கிறார்கள். அப்படி அல்லாதவர்கள் அதை நிகழ்த்துகிறார்கள்”
“வெண்மை எவ்வளவு அருவருப்பானது. நன்நம்பிக்கை எவ்வளவு பொய் ஆனது இல்லையா?”
கும்மிருட்டு என்றாலும் இவை ஒரு கவி கட்டாயம் காண வேண்டிய இருட்டல்லவா? கவிதை எரி மூண்டு எழும் இருட்டல்லவா?
கொஞ்ச காலமாக எனக்கு ‘சித்தார்’ பைத்தியம் பிடித்திருந்தது. எப்போது காரைக் கிளப்பினாலும் அதை அனுஷ்கா ஷங்கர்தான் ஓட்டினார். பிறகு ‘சரோட்’ அறிமுகம் ஆனது. அதன் ஆழமான ‘ ட்வாங் ‘கை கேட்டதும் அதுவே என் வாத்தியம் என்பதை உணர்ந்தேன். ஒரு நண்பருடனான சமீபத்திய உரையாடல் இப்படி அமைந்தது
“சித்தார் இல்ல, சரோட்தான் என் வாத்தியம்”
“ஏன், சித்தார்க்கு என்ன குறை?”
“துக்கம் பத்தல”
“கொஞ்சம் கண்ணீர் கலக்காத வாழ்கைப் பலகாரம் எதற்கு?” என்று கேட்கிறார் இடச்சேரி கோவிந்தன். நீங்கள் கவலைப்படாதீர் கவிஞரே! கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டாலும் அது கிடைக்காது.
இந்த மொழியாக்கத்தின் வழியே தமிழ்க் கவிதையியலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார் மணவாளன். கவிதை மொழியாக்கத்தைப் போன்றே கவிதை குறித்த எழுத்தை மொழி பெயர்ப்பதும் அடிப்படையில் சிக்கலானதே. ஆனால் அந்தச் சிக்கலை தீவிரத்துடனும் பரவசத்துடனும் எதிர் கொண்டிருக்கிறார். அடிக்குறிப்பு என்பதே விளக்குவதை நோக்கமாகக் கொண்டது மணவாளன் அதிலும் செறிவைக் கைவிடாதவராக உள்ளார். “ உம்பம்” என்கிற சொல்லிற்கான அடிக்குறிப்பு இது… “ உம்பம்- அம்மாக்கள் குழந்தைகளிடம் உரையாடும் மலையாளத்தில் தண்ணீர் ‘உம்பம்’ என்று சொல்லப்படுகிறது” எனக்கு மலையாளம் தெரியாது. ஆனால் அம்மாக்கள் குழந்தைகளிடம் உரையாடும் மலையாளம் தெரியும் என்று தோன்றியது. அது போன்றே அம்மாக்கள் குழந்தைகளிடம் உரையாடும் தெலுங்கும், அம்மாக்கள் குழந்தைகளிடம் உரையாடும் உருதும் எனக்குத் தெரியும் என்கிற எண்ணம் என்னை குதூகலம் கொள்ள வைத்தது.
கல்பற்றாவுக்கு சிரம் தாழ்ந்த வந்தனங்களைச் சொல்கிறேன். மணவாளனை இறுக அணைத்துக் கொள்கிறேன்..
“தீர்வு உள்ள பிரச்சனைகளுக்கு அல்ல, தீர்வே இல்லாத பிரச்சனைகளுக்குத்தான் எழுத்தாளன் உடனிருக்க வேண்டும்” என்கிறார் கல்பற்றா.
தீர்வு இல்லாத சிக்கல்களில் சும்மா கூட இருப்பதில் என்ன அருமை வந்துவிடப் போகிறது? தீர்வே இல்லாத சிக்கல்களில் கூடவே இருப்பவனைக் காட்டிலும் அருமையானவன் இன்னொருவன் உண்டோ?
(கல்பற்றா நாராயணனின் கருப்பு இருட்டல்ல கட்டுரை தொகுப்பிற்கு கவிஞர் இசை எழுதிய முன்னுரை)
கருப்பு இருட்டல்ல (தமிழில் அழகிய மணவாளன்) நூல் வாங்க...
***














