1712ல் பிறந்த அருணாசலக் கவிராயர் தனது அறுபதாவது வயதில் ராமநாடகக் கீர்த்தனைகளைப் பாடினார். அதற்குப் பிறகு அறுபத்தேழாவது வயது வரையில் இருந்துவிட்டு 1779ல் இறந்தவர். மாயூரத்துக்கருகிலுள்ள தில்லையாடி என்னும் கிராமத்தில் பிறந்த அருணாசலக் கவிராயர் சீர்காழி அருணாசலக் கவிராயர் ஆனதற்கு அவருடைய மதியையும் கவித்துவத்தையும் உணர்ந்த ஒரு சீர்காழி நண்பரான போஷகரின் செயல்தான் காரணம் என்று கதை சொல்வார்கள். காசுக்கடை வைத்துப் பொருளீட்ட முயன்றவர் அருணாசலக் கவிராயர். கவிராயருக்குக் காசுக்கடைக் கணக்குச் சரியாக வந்திராது என்றே நாம் ஊகித்துக்கொள்ளலாம். காசுக் கடையுடன் ராமாயணப் பிரசங்கமும் பிழைப்புக்காகச் செய்துவந்தவருக்குக் கம்ப ராமாயணத்தில் நல்ல பரிச்சயமிருந்ததில் ஆச்சரியமில்லை. பிரசங்கி என்று ஒருவன் எடுத்துச் சொன்னாலொழிய, கம்ப ராமாயணத்தில் பல பகுதிகள் சாதாரண மக்களுக்குப் புரிவதில்லை. அதற்குக் காலம் மட்டும் காரணமல்ல. இலக்கியமென்பது பேச்சு பாஷையை விட்டு விலகி நின்றதுதான் காரணமென்று புரிந்துகொள்ள அவருக்குப் பொதுவான சந்தர்ப்பங்கள் இருந்திருக்கத்தான் வேண்டும்.
ராமநாடகக் கீர்த்தனங்களைத் தவிர, அவர் சீர்காழிப் புராணம், சீர்காழிக் கோவை, அநுமார் பிள்ளைத் தமிழ், அசோமுகி நாடகம் முதலியனவும் பாடினார். ஆனால் அவருடைய ராமநாடகம்தான் முக்கியமாக மக்களின் மனத்தைக் கவர்ந்தது. ஸ்ரீரங்கத்தில் ராமநாடகக் கீர்த்தனங்களை அரங்கேற்றிவிட்டு அடுத்தபடியாக, தஞ்சை மராட்டிய அரசனாகிய துளஜராஜரிடம் அதை அரங்கேற்ற விரும்பினாரென்றும், அது அப்போது சரிப்படாது போகவே துளஜராஜருக்கு நெருங்கிய நண்பரான புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை முன் அரங்கேற்ற விரும்பினாரென்றும், துளஜராஜா கேட்காதபோது நான் கேட்பது சரியல்ல என்று ஆனந்தரங்கம் பிள்ளை அவரைத் தமது நண்பர் சென்னை முத்துக்கிருஷ்ண முதலியாரிடம் அனுப்பினார் என்றும் ஒரு கதையுண்டு. அந்த நாட்களில் கவியென்றால் உலகம் அறிந்திருக்கவும் வேண்டும், உலகில் அங்குமிங்கும் ஓடியாடி உலகை ஒத்துப் பாடியாடித் திருப்தி செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பத்திரிகை யுகமாகிய இந்தக் காலத்துக்கும் அந்தக் காலத்துக்கும் அப்படி வித்தியாசம் ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
புராணம், கோவை முதலிய நூல்களால் கவியாக யாருடைய பெயரும் இனிப் பரவவில்லை என்பது பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியிலேயே தெளிவாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தும் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாகவே இந்தத் துறைகளில் உழைப்பவர்களுக்குப் பஞ்சம் ஏற்படவில்லை. பத்தொன்பதாம் நூற்றண்டின் முடிவு வரையில் எழுதிக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அருணாசலக் கவிராயரும் தம் நூலைப் போஷகர் முன் அரங்கேற்ற முற்பட்டாலும்கூட, ஒரு பொதுஜன யுகம் வர இருப்பதை உணர்ந்துதான் இந்தக் கீர்த்தனங்களை இயற்றினார் என்று சொல்வது மிகையாகாது. ஆனால் பொதுஜன யுகம் வந்துவிடவில்லை அப்போது. பெஷி வசனத்தில் கடத்திய காரியத்தை, ஆனந்தரங்கம் பிள்ளை தமது தினசரிக் குறிப்புகளைத் தமக்காக எழுதிக்கொண்ட காரியத்தை, அருணாசலக் கவிராயர் ஒருவிதத்தில் சாதித்தார். இசையும் நாடகமும் தமிழும் கலந்து செய்தார். அறுபது வருஷங்கள் அப்பெயர் தமிழ்நாட்டில் அப்படியொன்றும் அதிகமாகப் பரவிவிடவில்லை. தில்லையாடியிலிருந்து சீர்காழி வரையில்தான் பரவியிருந்தது. ராமநாடகக் கீர்த்தனைகளுக்குப் பிறகு அவர் புகழ் தமிழ்நாடெங்கும் பரவிவிட்டது. அறுபத்தியேழாவது வயதில் அவர் இறக்கும்போது அவர் கீர்த்தனங்கள் எங்கும் பிரசித்தமாக இருந்தன. அவரே பல இடங்களிலும் பாடி அவற்றைப் பிரசங்கித்தார். அவர் சிஷ்யர்கள் பலரும் வெற்றிகரமாகச் செய்தார்கள். ஒரு நூற்றைம்பது வருஷங்களாகத் தமிழ்நாட்டிலே ராமநாடகக் கீர்த்தனைகள் பிரபலமாகவே இருந்திருக்கின்றன என்று சொல்வது பிசகாகாது.
கம்பராமாயணப் பிரசங்கத்தையும் தன் தொழிலாகக் கொண்ட அருணாசலக் கவிராயருக்கு ராமகதையை இசையாகத் தொகுக்க வேண்டுமென்று தோன்றியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அவரிடம் தமிழ் கற்றுக்கொண்ட மாணவர்கள் இருவர் இசை வல்லவர்களாகவும் இருந்ததனால் இது சுலபமாகவே சாத்தியமாயிற்று. எளிய சந்தம், எளிய பதங்கள், எளிய கதை என்று பாரதியார் பிறகு - ஒரு நூற்றைம்பது வருஷங்களுக்குப் பிறகு, சொன்னாரே - அத்துடன் இசையையும் சேர்த்துச் செய்துவிட்டார் அருணாசலக் கவிராயர். அதை நாடகமாகச் செய்யலாம் என்று செய்ததை ஒரு தனிப்பெருமையாகச் சொல்லலாம்; ராமகீர்த்தனைகளாக மட்டுமில்லாமல் இவை ராமநாடகக் கீர்த்தனைகளாகவும் அமைந்ததுதான் விசேஷம் என்று சொல்ல வேண்டும்.
இன்று நாம் சொல்லிக்கொள்வது போலவே, அன்றும் முத்தமிழ் என்றும், இயல், இசை, நாடகம் என்றும் முழங்கிக்கொண்டுதான் இருந்திருப்பார்கள். கோயில்களில் நாட்டிய நாடகங்கள் இருந்தன என்பது நமக்குப் பலதரப்பட்ட கல்வெட்டுக்களால் தெரியவருகிறது. அருணாசலக் கவிராயர் காலத்திலே நாடகம் அப்படியொன்றும் பிரமாதமான வளர்ச்சி பெற்றிருக்கவில்லை என்பதும் உண்மைதான். வடமொழிக் கதையான ராமாயணத்தைக் கம்பன் அற்புதமான காவியமாகச் செய்துவிட்டான். சிலப்பதிகாரத்தைப் போலவே அந்தக் காவியத்திலும் நாடகப் பண்பு நிறைந்திருக்கிறது என்பது உண்மைதான். கம்பராமாயணப் பிரசங்கியாகிய அருணாசலக் கவிராயருக்கு, இன்றைய கம்பராமாயணப் பிரசங்கிகளைப் போலவே கம்பராமாயணத்தின் நாடகப் பாங்கு முழுதும் நன்கு தெரிந்துதானே இருக்க வேண்டும்? இந்நாடப் பாங்கை அழுத்தமாக வெளிக்கொணர ஒருவர் முயன்றால் தவறு ஒன்றுமில்லை. கம்பராமாயணத்தை யொட்டியேதான் அருணாசலக் கவிராயர் தமது ராமநாடகக் கீர்த்தனைகளைச் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். தெளிவான தமிழில் அரும்பத அகராதியையோ வியாக்கியான கர்த்தாக்களின் உதவியையோ நாடாத வகையிலே நாடகப் பாங்கை மட்டும் மனத்தில் கொண்டு அருணாசலக் கவிராயர் இந்தக் கீர்த்தனங்களைப் பாடிவிட்டார்.
இசையாக ராமநாடகக் கீர்த்தனைகளை மதிப்பிட எனக்குத் தெரியாது - அப்படி மதிப்பிட வேண்டிய இடமும் இதுவல்ல. ஆனால் நாடகமாகவும் இலக்கியமாகவும் மதிப்பிடும்போது ராமநாடகக் கீர்த்தனைகளின் நயம் தெளிவாகவே விளங்குகிறது என்று சொல்லலாம். இந்த நாடகம் நமக்குப் பழக்கமான இன்றைய நாடகங்களைப்போல இல்லைதான். ஆனால் இதில் நாடகத்தன்மை இருக்கிறது என்பது வெளிப்படை. சிலப்பதிகாரத்தை நாடக நூல் என்று பலவகைகளில் சொல்லலாம். பழைய பந்தாவில் நாட்டியத்தைப்பற்றிச் சொல்லியது என்பதாலும், நாடகத்தன்மை, அதாவது சம்பவ மோதல்கள் சிறப்பாக உள்ளது என்பதாலும் அதை நாடக நூல் என்று சொல்லலாம். சீர்காழி அருணாசலக் கவிராயர் காலத்தில் சிலப்பதிகாரம் வழக்கத்திலிருந்ததா? அவர் அதை அறிந்திருந்தாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அந்த அளவுக்கில்லாவிட்டாலும், குறிப்பிட்ட ஒரு அளவுக்குள் ராம கதையை நாடகமாக்கிவிட்டார் அவர். தமிழில் பிற்காலத்தில், அதாவது பத்தொன்பதாவது நூற்றண்டின் தொடக்கத்திலிருந்து இறுதிவரையில் வெளிவந்து நடிக்கப்பட்ட நாடகங்களுக்கெல்லாம் ஆதர்சம் என்று ராமநாடகக் கீர்த்தனையைத்தான் சொல்ல வேண்டும். இன்றுள்ள நாடக மேடை, சினிமாவுக்கும் ராமநாடகக் கீர்த்தனை வழிகாட்டியாக, முன்னோடியாக இருந்துவருகிறது என்று சொல்வது பொருந்தும் என்றே தோன்றுகிறது. தெரிந்தோ தெரியாமலோ, இந்த முதல் நூலை ஓரளவு பின்பற்றித்தான் கோபாலகிருஷ்ண பாரதியார் தம் நந்தன் சரித்திரத்தில் பிரமாதமான வெற்றி பெற்றார் என்று சொல்ல வேண்டும். வேதநாயகம் பிள்ளை தம்முடைய பெண்மதி மாலையிலும், சர்வ சமரஸக் கீர்த்தனைகளிலும்கூட இந்தக் கீர்த்தனைகளின் நாடகப் பண்பையும் இசையையும் பின்பற்றி எழுதவே ஓரளவு முயன்றார் என்றுகூடச் சொல்லலாம்.
இலக்கியமாக மதிப்பிடும்போது, இந்த ராமநாடகக் கீர்த்தனைகளுக்கு எந்த அளவில் இடமுண்டு என்று கேட்கத் தோன்றலாம். ‘மக்கள் இலக்கியம், மக்கள் இலக்கியம்’ என்று இந்தக் காலத்தில் ஒரு கொள்கை பரவிப் பிரமாதப்படுகிறதே - அதற்கு ராமகதை ஆதாரமாக அமையக்கூடாது என்று வேண்டுமானால் மக்கள் இலக்கியக்காரர்கள் சொல்லலாம். ஆனால் அருணாசலக் கவிராயர் இந்த ராமநாடகக் கீர்த்தனைகளை மக்கள் இலக்கியமாகக் கருதியேதான் செய்து வெளியிட்டார் என்று சொல்ல வேண்டும். ராவணனுக்கு விபீஷணன் புத்தி கூறும்போதும், ராமனுக்கும் சூர்ப்பனகைக்கும் சம்வாதம் கடக்கும்போதும், அநுமான் சீதையைச் சந்தித்து அசோகவனத்தில் பேசும்போதும் இசையை விலக்கிவிட்டு நாடகமாக மட்டும் நாம் கவனித்தால், இது தெளிவாகவே விளங்கும். மக்கள் மாறிவிடுவதில்லை. மேலெழுந்தவாரியான பல வியவகாரங்கள் மாறுகின்றன; சுலோகங்கள் மாறுகின்றன. மனிதர்கள் இன்னும் ராமராஜ்யத்தை எண்ணிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறர்கள். மகாத்மா காந்தி ராமராஜ்யம் என்கிற பெயரைச் சொல்லித்தான் சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார். அந்த ராம ராஜ்யத்தையும், அதற்கு ஆதாரமான ராஜ்யத்தையும் தமிழருக்கெல்லாம் தெரிவிக்க இக் கீர்த்தனைகளும் பிரயோசனப்பட்டன என்பது அவற்றின் தனிப்பெருமை.
மற்ற இந்திய மொழிகளிலே ராமாயணத்துக்குப் பலப்பல மொழிபெயர்ப்புகள் உண்டு. தமிழிலோ கம்பனுடையதும், அருணாசலக் கவிராயருடையதும்தான். இலக்கியபூர்வமாக அவையே போதும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
***
‘கல்கி’, 8 பிப்ரவரி 1959







0 comments:
Post a Comment