கவனப்படுத்த விரும்பும் விஷயம் வாசகனின் கண்ணிற்கு தெரிகிறதா? இல்லையா? என்பதே கேள்வி. அதனால்தான் “என்கவிஞர்” என்றும் “என்கவிஞர் இல்லை” எனவும் வாசகர் சொல்வதைக் கேட்க முடிகிறது.ஆக, கவிஞனின் சுயத்திற்கும் வாசகனின் இயல்புக்கும் கணநேர உரையாடலைதான் நாம் கவிதானுபவமாக சொல்கிறோம்.பின்பு, அதை ஒட்டியப் பேச்செல்லாமே அந்த அனுபவத்தை விளக்குவதே.இதனால் புனைவில் கவிதானுபவத்தை உத்தேசிக்கும் ஆக்கங்கள் வெற்றியடையாமல் போய்விடுவதையும் பார்க்கிறோம்.
கீழே வரும் இரு கவிதைகள் பற்றிப் பேசவதே என் நோக்கம்.
துக்கம் ஒரு பரிசுப்பொருள் நெடுநாள்
என் மேசை மீது கிடக்கிறது ஒவ்வொரு நாளும் அதைப் பிரிக்கிறேன்
சரிகை முடிச்சிடுகிறேன்
தூங்கச் செல்கிறேன்
அது அங்கேயே கிடப்பதில்
சந்தோஷம்தான் எனக்கு
பிறந்த குழந்தை போல
அது அங்கேயே கிடக்கிறது
அது தவழ்வதில்லை
நடக்கவும் செய்யாது
அது ஒரு எளிய அற்புதப் பொருள்
அதன் தொனி மெளனம்
அதன் பணி பிணியறுப்பு
- மதார் (வெயில் பறந்தது)
துக்கம் — ஒன்றினுள்
இன்னொன்று
அதனுள்
பிறிதொன்று என
எண்ணிறந்த பெட்டிகளை
உள்ளடக்கிய
ஒரு பெரிய பெட்டியைப் போன்றது.
மகிழ்ச்சி — சளைக்காமல்
அவற்றை
ஒவ்வொன்றாகத்
திறந்துகொண்டேயிருப்பது.
-வே.நி.சூர்யா (அந்தியில் திகழ்வது)
இவ்விரு கவிதைகளும் ஒரே பேசுபொருளைக் கொண்டிருந்தாலும் முற்றிலும் வேறான அனுபவத்தைத் தருகிறது. மதார் கவிதையில் வெளிப்படும் சுயம்: அனைத்தும் அதன் கையில் இருப்பதாக முன்வைக்கிறது. துக்கத்தை நயந்து அணிந்துக்கொள்ளும் வஸ்திரத்தைப் போல சுட்டுகிறது. மேலும் அந்தத் துக்கத்திற்கு ஒரு பொறுப்பை தருகிறார். பொறுப்பின் நிமித்தம் நிவாரணம் சாத்தியப்படுகிறது. "பிணியறுப்பு" அதன் வேலை என்று சொல்லும் போது, துக்கம் எடை குறைந்து குழந்தையாகவே மாறுகிறது. ஒவ்வொரு குழந்தையும் நோய் தீர்க்கும் வேலையைச் செய்கிறது. அது நம்மை மகிழ்விக்க முயற்சி செய்வதில்லை. துக்கத்தை எடுப்பார் கைப்பிள்ளையாக்கி வேடிக்கை பார்க்க செய்யும் மனநிலையே தீர்வு என்று எண்ணவைக்கிறது.
இறுதியில் யாவுமே தருணங்கள்தானா?
என்ற தலைப்பில் உள்ள பத்து பிரிவுகளில், ஒன்றில் உள்ளதே மேலே உள்ள வே.நி. சூர்யாவின் இக்கவிதை.
இதில் மகிழ்ச்சியை உத்தேசிக்கிறார். அவர் எதையும் மாற்ற விழையவில்லை. மேலும் அனைத்துமே தருணமா? என்று சந்தேகிக்கிறார். துக்கம் எடுத்து கையாளக் கூடிய, ஒன்றுடன் ஒன்று பிணைந்தது. அதை எதுவாகவும் அறிதியிட முடியாது.அது ஒரு “எண்ணிறந்த” பெட்டி. அதனாலேயே அது எடையுடன் இருக்கிறது. ஏனெனில் அது “பெரிய”தாக உள்ளது. இதற்கு சரிக்கு சரியாக நிற்கும் வல்லமை மகிழ்ச்சிக்கு உள்ளதாக கவிஞர் முன்வைக்கிறார். ஆனால் நாம் மகிழ்ச்சியை அடைய “சளைக்காமல்” இருக்கவேண்டும்.
இருவேறு தருணத்தில் சிக்கலையும் தீர்வையும் காணவாய்ப்பதாகவும் யோசிக்கமுடியும்.
ஒரு மனம் துக்கத்தை தன்வயப்படுத்த உருமாற்றத்தை கோருகிறது. பிரிதொன்று துக்கத்தை எதிர்கொள்ள உத்தியை கற்றுத் தருகிறது.(சளைக்காமல் இருப்பது)
பேசுபொருளில் உள்ள ஒற்றுமையால் இவ்விரண்டு கவிதைகளையும் ஏதோவொரு கணத்தில் அருகருகே வைத்துவிட முடிகிறது. துக்கம் ஒரு பொருளாக இருப்பது இந்தத் தசாப்தத்தின் கவிதையாக இக்கவிதைகளை மாற்றுகிறது. கவிதையில் நிகழ்வுகளுக்குதான் பஞ்சமிருக்காது. பொருள்கட்கள் வந்து விழுவது அபூர்வமே. கவிதையில் ஒரு பறவை வருகிறது என்றால் பறத்தல் என்ற நிகழ்வு கவிதையில் பேசபொருளாக உள்ளது என்று கொள்ளலாம்.ஆனால் பொருட்கள் நிகழ்வதில்லை. நிகழ்வு வந்தால் கூடவே காலமும் வந்துவிடும். மாறாகப் பொருட்கள் அணுகுமுறை சார்ந்து அர்த்தம் தரும் ஒரு வஷ்து மட்டுமே. மேலும் துக்கம் என்ற அகவயமான உணர்வை புறவயமான பொருளாக மாறியிருக்கிறது. ஆகவே சற்றே உறுதி கூடுகிறது.
இந்தச் செருப்பைப் போல்
எத்தனைப் பேர் தேய்கிறார்களோ
இந்தக் கைக்குட்டையைப் போல்
எத்தனைப் பேர்/பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப் போல்
எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்ளுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு
(நன்றி நவிலல்)
- ஆத்மாநாம்
ஆத்மாநாமின் இக்கவிதையில் பொருளுக்கும் தனிமனிதனுக்கும் இருக்கும் இடைவெளி இன்மையை சுட்டுவதாக வாசிக்கமுடியும். துயர் பொருளாக பிரியாமல் இருப்பதைப் பார்க்கலாம். ஒவ்வொரு இயல்புக்கும் ஒரு பொருளைக் கண்டறிந்த காலத்தின் ஆவணமாக இந்தக் கவிதையைச் சுட்டலாம். ஆனால் மேற்கண்ட இரு கவிதைகள் இந்தத் தசாப்தத்தின் கவிதையாக மாறியிருப்பதற்கு காரணம், மனிதனின் இயல்புக்கு ஒரு பொருளை சுட்டமுடியாது என்பதும், மனிதர்கள் பொருட்களைப் போன்றவர்கள் அல்ல என்பதும், அவர்களுக்கு துக்கம் பொருட்களின் பெயரில் யாராலோ அல்லது அவனாலேயேகூட ஏற்படுத்திக் கொள்ளும் விஷயம் மட்டுமே என்ற கண்டுபிடிப்புதான். தீர்வை மேலேயே பார்த்து விட்டோம் அல்லவா?
“துக்கத்திற்கு காரணம் ஆசை” என்ற பழைய கண்டுபிடிப்பு உயிர்ப்புடன் இருக்கக் காரணம், தீர்வு இயல்பாகவும் எளிதாகவுமில்லை என்பதோடு அது காலம்தோறும் மாறக்கூடியதாகவும் இருக்கிறது என்பதால்தான். இந்தக் காலத்திற்கான இரு தீர்வுகளால் இக்கவிதைகள் நினைவில் இருக்கிறது.
***
வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்
***









0 comments:
Post a Comment