கடந்த வருடம் மார்ச் மாதம் வெள்ளிமலையில் வேணுவை சந்தித்தேன். இந்த ஒன்றரை வருடத்தில் அவர் பெரும்பாலும் உரையாடியது கவிதையியல் குறித்ததாகவே இருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் இரு கவிதை அரங்குகளை கவிதை வாசகர்களுக்காக நிகழ்த்தியுள்ளார். ஒன்று கவிஞர் தேவதேவனுக்கு. இன்னொன்று கவிஞர் முகுந்த் நாகராஜனுக்கு. எல்லா நேர்காணல்களும் ஆளுமைகளை அறிந்து கொள்ளவும், அவர்களின் படைப்புகளை அணுகுவதற்கான வாயிலாகவுமே முதன்மையாக அமையும். ஆனால் இந்த நேர்காணல் கவிதையை அணுகுவதற்கான ஒரு பார்வைக்கோணமாக அமையலாம்.
- ரம்யா
***
ரம்யா: நல்ல கவிதைன்னா என்ன? ஒரு வாசகரா அந்தக் கேள்வியை தான் முதல்ல வைக்கனும்னு நினைக்கிறேன்.
வேணு வேட்ராயன்: அது ஒரு 'பெரன்னியல் கொஸ்டின்' (Perennial question). ஏன்னா, அதை அவ்வளவு எளிதா வரையறுத்துட முடியாது. வரையறுக்க முடியாத ஒன்றுதான் கவிதை. அது ஒரு நிலையான வடிவத்தை, பேசு பொருளை கொண்ட இலக்கிய வடிவம் கிடையாது. அதனாலேயே அது வரையறைக்கு அப்பாற்பட்டதா இருக்கு.
கவிதைக்கு ஒரு Context-free nature உண்டு. எந்த context (சூழல்)-ல் ஒரு கவிதையை வாசிப்பது, உணர்ந்து புரிந்துகொள்வது எனும் ஒரு நிச்சயமற்ற தன்மை தன்னியல்பில் ஒரு கவிதையில் இருக்கிறது. தமிழ்ச் சூழல்ல எழுதப்படும் ஒரு கவிதை வேறொரு மொழியில எப்படி மொழியாக்கம் செய்யப்படுகிறது, எப்படிப் பொருள் கொள்ளப்படுகிறது எனும் கேள்வியை பார்க்கலாம். மொழியாக்கங்கள் வழியா பிற மொழிகள்ல இருந்தும் பிற நிலங்கள்ல இருந்தும் பிற இனங்களுடைய இலக்கிய வடிவங்கள் நம்மை வந்து சேருது. அதுல ரெண்டு விஷயங்கள் இருக்கு: ஒன்று, பொதுத்தன்மை (Commoness); இன்னொன்று தனித்தன்மை (Uniqueness).
எனக்கும் உனக்குமான உரையாடலுக்கு ஒரு பொதுவான அம்சம் தேவைப்படுது. அதே சமயம், எனக்கும் உனக்கும் பரிச்சயமில்லாத ஒரு தனித்தன்மையும் அங்க இருக்கணும். பொதுத்தன்மையும் தனித்தன்மையும் சேர்ந்துதான் ஒரு உரையாடலை நிகழ்த்த முடியும். எந்தவொரு பொதுத்தன்மையும் இல்லைன்னா உரையாடலே சாத்தியமில்லை இல்லையா? கொஞ்சமாவது ஒரு பொதுவான தளம், ஒரு 'காமன் கிரவுண்ட்' (Common ground) தேவைப்படுது.
அந்தப் பொதுத்தன்மைங்கிறது வெறும் மொழியால் ஆனது கிடையாது. இப்போ நான் ஒரு மொழியில இருக்கேன், நீ வேறொரு மொழியில இருக்க. அப்போ அது மொழியால் ஆன பொதுத்தன்மை கிடையாது. அது மனம் அல்லது அகம் சார்ந்த பொதுத்தன்மை. அது ஏதோ ஒரு விதத்துல பொதுவானதா இருக்கு. அதே சமயத்துல, உன் அகத்துக்கும் என் அகத்துக்கும் பிரத்தியேகமான, தனித்தன்மையான ஒரு அம்சமும் அதுல இருக்கு. இந்தத் தனித்தன்மைப் பரிமாற்றம்தான் எனக்குப் புதுசா இருக்கு. இது எல்லா இலக்கிய வடிவங்கள்லயும் சாத்தியம்தான். என்றாலும், கவிதைல இன்னும் ரொம்பத் தெளிவா கூர்மையா வெளிப்படுது. அதனால, நம்ம எது கவிதைன்னு வரையறுக்கும் போது இந்தப் பொதுத்தன்மை சார்ந்து நம்மால் எளிதா வரையறுக்க முடியும் இல்லையா?
ஆனா, இந்தப் பொதுத்தன்மைக்கு ஒரு தனித்தன்மையான அணுகுமுறை (Unique approach) இருக்கு. இதே பொதுத்தன்மையான வினாவுக்கு நான் ஒரு தனி வழியில விடையடைய முற்படுவேன். அதை நான் தனித்தன்மையா பார்க்கிறேன். ஒரே பொதுவான வினா அல்லது ஆச்சரியத்திற்குப் பிரத்தியேகமான ஒரு தனித்தன்மை வாய்ந்த பார்வை நமக்குக் கிட்டும். அதுதான் கவிதையில் வெளிப்படுது. அது ஒரு காட்சியா இருக்கலாம், ஒரு நிகழ்வா இருக்கலாம் அல்லது மொழி வழியாக நிகழக்கூடிய ஒரு சாத்தியமா இருக்கலாம். இந்தத் தனித்தன்மையை அடையாளம் காண்பதுதான் கவிதை. ரசனை. பொதுத்தன்மையான விஷயத்துல தனித்தன்மையான ஒரு குறு நிகழ்வு கவிதை. அதுக்குச் சூழல் (Context) தேவையில்லை.
இந்தத் தனித்தன்மை, நமக்கு ஏற்கனவே பரிச்சயமான பொதுத்தன்மையிலிருந்து வரக்கூடிய பழைய பார்வையால் பார்க்க முடியாது. அது ஒரு புதிய பார்வை. தனித்தன்மையான, புதிய, பிரத்தியேகமான பார்வை. அதை நம்மால பார்க்க முடியனும். அதுக்கான திறப்பு (Openness) அதுல இருக்கு. அதனாலேயே, "இதுதான் சிறந்த கவிதை" என்றோ "இதுதான் கவிதை" என்றோ நம்மால ஒரு திட்டவட்டமான வரையறையைச் சொல்லிட முடியாது. ஏன்னா, அது கணந்தோறும் நிகழ்ந்துகொண்டே இருப்பதால நாமலும் கணந்தோறும் அதை எதிர்கொள்ள வேண்டியிருக்கு. எதெல்லாம் கவிதை இல்லனு நம்மால சொல்லிட முடியும்.
ர: அப்போ 'நெகேஷன்' (Negation) வழியா நம்ம அதை அணுகலாம்னு சொல்றீங்களா? சரி, அப்போ எதெல்லாம் கவிதை இல்லைன்னு சொல்லுங்க.
வேணு வேட்ராயன்: ஆமா, Negation and Affirmation இரண்டு வழியிலும் சொல்ல முடியும் எது கவிதையா இருக்கோ அதைத் தவிர்த்து மத்த எல்லாமே கவிதை இல்லைன்னு சொல்லலாம்.
எப்பவுமே “Analysis of poetry” முக்கியம்னு நான் நினைக்கிறேன். 'அனாலிசிஸ்'ன்னா கவிதை எழுதுறவரே அதை அனலைஸ் பண்ணிக்கிறது. கவிதை எழுதும்போது (obviously) நம்ம அதை Analyse பண்ணப்போறதில்லை. எழுதின உடனேயே இருக்கக்கூடிய அந்தப் பொழுதுகள், அந்த ‘immediate aftermath’ இருக்கு இல்லையா, அந்தச் சமயத்துல அந்தக் கவிதையை ஒரு சுய ஆராய்ச்சியை நம்ம செய்ய வேண்டியிருக்கு. இதைப் பத்தி நான் தேவதேவன் கிட்டயும் பேசி இருக்கேன். ஆராய்ச்சி என்ற உடனே அகாடமிக் Research கிடையாது.
அந்தக் கவிதையின் ஊற்று எங்கிருந்து வந்தது, நான் அதை எழுத ஆரம்பிச்சப்போ என்னுடைய மனநிலை என்னவா இருந்தது, நான் ஏன் அதை அப்படிப் பார்த்தேன், எது என்னை அப்படிப் பார்க்க வச்சது, அதுக்குச் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்னவா இருந்ததுன்னு ஆராய்றது.
நான் ஒருநாள் ட்ரெயின்ல ஈரோடு டு சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்ல வந்துட்டிருக்கும்போது, திருச்சிக்கு முன்னாடி ஒரு பிரிட்ஜ். அதுக்கு கீழ ஒரு ஆறு போகும். காவிரி ஆறுதான்னு நினைக்கிறேன். அந்தக் ஆற்றைக் கடக்கும்போது சுத்தமா தண்ணி இல்லாத வெறும் வறண்ட மணல் வெளியா இருந்தது. அந்தத் டைம்ல நான் 'நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு'-ன்ற புத்தகம் படிச்சு முடிச்சிருந்தேன். சில நாட்கள் ஆறுக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த துறவி நிகமானந்த சரஸ்வதி(2011) பற்றிய புத்தகம். அந்த சமயத்துலதான், ஆற்றோட வறண்ட மணல் வெளியைக் கண்டபோது சில வரிகள் எழுதினேன்.
//
நான் தனித்திருக்கையில்
சூரியன் தகிக்கும் பால்வெளி
நீ வருகையில்
சுழித்தோடும் நதியின் படுகை
//
அந்த ஒரே விஷயம் எப்படி இரண்டா மாறுது. எனக்கு இந்த பால்வெளியும் படுகையும் ஒன்னாவே இருக்கு. நீ வரும்போது அது சுளித்தோடும் நதியின் படுகை, தனித்திருக்கும்போது அது பால்வெளி. ஆனா, இந்தக் கவிதையை அந்தப் புத்தகத்தைப் படிச்ச சமயத்துலதான் தான் எழுதினேன்.
இப்போ ஒரு வேர் இருக்குன்னா அதுக்கு பல கிளைகள் இருக்கு இல்லையா? ஆனா அடிப்படையில அது ஒரே வேர்தான். அது complex கிடையாது, simple, single structure. அந்த மாதிரி ஒரு கவிதை எழுதுறதும் ஒரு எளிமையான விஷயம்தான். ஆனா அதுக்கு பல கிளைகள் இருக்கிறதுனால அதோட கட்டமைப்பு காம்ப்ளெக்ஸா இருக்கு. இப்போ ஒரு கிளை இந்தக் கணத்துல இருக்குன்னா, அந்த வேரோட இன்னொரு கிளை பழங்காலத்துல இருக்கு. ஏற்கனவே உங்கிட்ட இது பற்றி சொல்லிருக்கேன் ஞாபகம் இருக்கா? நம்ம எப்பவுமே கவிதைங்கிறது அந்த ஒரு கணத்துல சட்டென்று நிகழ்வது நினைக்கிறோம். ஆனா அது அப்படி இல்லைனு நான் சொன்னேன்.
ர: ஆமா, கவிதைத் தருணங்களைப் பற்றி பேசும்போது 'ப்ரூவிங் ஸ்பான்டேனிட்டி' (Brewing spontaneity) என்று சொன்னீர்கள்.
வேணு வேட்ராயன்: ஆமாம். கவிதைக் முகிழும் கணங்கள் பத்திப் பேசிட்டிருக்கும்போது ‘Brewing spontaineity’ னு சொன்னேன். Brewing-அந்த நொதித்தல், wine உருவாக தேவையான ஒரு நீடித்த நிதானமான organic process. நான் கவிதை உருவாதை அப்படியும் சொல்றேன். ஒரு கவிதை, அது திடீரென்று உடனே தோன்றிவிடக்கூடிய spontaneous process? அதுவும் தான். ஆனா அதுமட்டும் கிடையாது, போதாது.
நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனம் தொடர் அவதானிப்பில் இருக்கும்போது ஏதோ ஒரு கணத்தில் கவிதை முகில்கிறது. இந்த 'Brewing spontaineity' அந்த கவிஞனுக்கே உரிய பிரத்தியேக அகத்துல நிகழக்கூடியது. ஆனா அந்த Brewing அவனுடைய அகம் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனிதகுல அகமும் சேர்ந்த ஒரு பேராழத்துல நிகழ்கிறது.
சலனமில்லாத ஒரு பெரிய குளம்தான் அந்தப் Brewing நடப்பதற்கான களம் (Ground). அதில் விழும் ஒரு சிறு துளி, அந்தச் சலனம், அந்த கணம், அந்த தன்னிச்சையான நிகழ்வு கவிதை. ஒரே வேர் இருந்தாலும், ஒட்டு மொத்த வேரும் ஒரு தொடர் நிகழ்வு.
ஒரு விதை முளைச்சு வந்த கணத்துல இருந்து, ஒரு வேர் இருந்து, இப்போ இந்த மொமெண்ட்ல வரக்கூடிய கிளை வேர் வரைக்கும் எல்லாமே ஒரே வேர்தான்.
அதே மாதிரிதான் இலைகளுக்கும். இப்போ முளைத்த ஒரு தளிரும் அதேதான், அந்தப் பெரும் மரமும் அதேதான்.
வேரும் கிளைகளும் இலைகளும் தளிரும் எல்லாமும் ஆன ஒரு ஒற்றைப் பெருமரம் ஒரு கவிதை.
இதுல இருந்து நாம் எது கவிதை, எது கவிதை இல்லைன்னு பார்க்க முடியும்.
ர: தேவதேவன் கூட, "தொடர்ச்சியாக ஒரு கவிஞரை வாசிப்பது. அதன் வழியாகவே ஒரு கவிஞரின் ஒட்டுமொத்த கவிதை உலகையும், நோக்கையும் புரிந்து கொள்ள முடியும்.” என்பார். ஆனா நீங்க அந்த நபர் மட்டும் இல்லாம, எல்லாமும் சேர்ந்தது, மனிதகுலத்தின் ஒட்டுமொத்த அகத்தோடவும் இதைப் பொருத்துறீங்க. இது இன்னும் ஆழமானது.
வேணு வேட்ராயன்:
ம், தேவதேவன் விட ஆழமா நான் எதையும் சொல்லிட போறதில்ல (சிரிக்கிறார்)
பிரமிளோட பாலைக் கவிதையை எடுத்துக்கலாம்:
//
பார்த்த இடமெங்கும்
கண் குளிரும்
பொன் மணல்
என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்
//
இதுல இருக்குற Spontainety அவருடையது. ஆனா இதுல இருக்குற Brewing space அவருடையது மட்டும் கிடையாது.
Brewing space, Sponteinity இந்த ரெண்டு அம்சமும் ஒரு கவிதையில இருக்கும்போது அதுக்கு ஒரு தனி ஆழம் (Depth) இருக்குன்னு நினைக்கிறேன். இதில் ஆதி முதல் நம்மைத் தொடரும் அடிப்படையான விசாரங்கள், அன்றாடம் சார்ந்த கேள்விகள், சிக்கல்கள் எல்லாமே அடங்கி விடுகிறது, அது கவிதையிலும் வெளிப்படுகிறது.
ர: உங்க முதல் கவிதைத் தொகுப்புல இருந்து இன்னைக்கு வரை எழுதும் கவிதைகளில் இருக்கும் ஒரு அம்சம் இரு வேறு முனைகளில் இருக்கும் விஷயங்களை "இதுதான் அது" என்று சொல்லும் பார்வை உள்ளது. ஆனா நிதர்சனத்துல ரெண்டுமே முற்றிலும் முரண்பட்ட விஷயங்கள். இந்தத் தொகுப்போட முதல் கவிதையே அந்த மாதிரி ஒரு முரண்பாட்டைத் தீட்டுறதுதான்.
//
கோடையில் உச்சியில்
சூரிய கிரணங்களில்
தகித்து கொதித்து
விழித்திருக்கும் அதுவே
ஒற்றைக் கரும் பனை மர உச்சியில்
குலை குலையாய்
காய்ந்திருக்கும் நுங்குகளில்
குளிர் கண்களில்
வெண்ணிற இமைகள் மூடி
துயில் கொள்கிறது.
//
வேணு வேட்ராயன்:
"சொல் வெறும் கூடு" அப்படின்னு ஒரு கவிதை. அதே கவிதையில் "சொல் ஒரு சுடர்" அப்படின்னு இருக்கும். ரெண்டுமே ரெண்டு பக்கம். ரெண்டும் ஒன்னா இருக்கு.
//
சொல் வெறும் கூடு
நம் அகத்தில் நிகழும்
அதன் உயிர்த்தெழல்.
சொல் ஒரு சுடர்
விழித்துக் கையேந்தி நாம் நடக்கையில்
வழிதோறும் இருள் நீக்கும்
ஒரு சிற்றகல்.
//
சொல் வெறும் கூடும்தான், சொல் ஒரு சுடரும்தான். "இன்னாதம்ம இவ்வுலகம் உலகம்” தான். வாழ்வு இனியதும் தான்.
நீ கேட்டது சரிதான். ஏன் இந்த முரண்பாடு எனக்குள்ள நிகழுதுன்னு நான் யோசிச்சிருக்கேன்.
‘சொல் வெறும் கூடு’ என எழுதும் அதே கணத்தில், ‘சொல் ஒரு சுடர்‘ என்றும் எழுதுகிறேன். இந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போறேன், அந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போறேன்.
நம் கண்ணுக்கு புலனாகும் நிறப்பிரிகையில் ஊதா முதல் சிவப்ப நிறம் வரை தோன்றுகிறேன். சில சமயங்களில் நம் கண்களுக்கு புலனாகாத நிறங்களிலும்.
கண்ணுக்குத் தெரிஞ்ச ஒளியிலும் இருக்கேன், இருளிலும் இருக்கேன்.
அந்த வண்ணப் பிரிகையில இருந்து பல வண்ணங்களை நாம தீற்றலாம். கவிதைங்கிறது ஒரே ஒரு வண்ணத்தால் ஆனது கிடையாது. அதனால நான் அந்த முரண்பாடுகளை அனுமதிக்கிறேன்.
ஒரு திட்டவட்டமான உண்மையையை நம்மால் சொல்லிட முடியாது. ஏன்னா, திட்டவட்டமான உண்மைன்னு ஒன்று இருக்கா என்பதே கேள்விக்குறியா இருக்கு. அதனால்தான்,
//
நிச்சயமற்ற
அந்தியில் வைகறையில்
நான் உலவுகிறேன்
நிச்சயமான
நண்பகலில் நடு நிசியில்
நான் ஒளிந்து கொள்கிறேன்
//
அப்படின்னும் சொல்றேன். இதுதான் அந்த முரண்பாட்டுக்கான காரணம். பகல்தான் இரவாகுது, இரவுதான் பகலாகுது. ஒரு பக்கம் பகலையும், இன்னொரு பக்கம் இரவையும் வைக்கும்போதுதான் அது முழுமையடையும் (Complete). அதுல ஒரு கம்ப்ளீட்னெஸ் (Completeness) கிடைக்கும்னு நினைக்கிறேன்.
ர: இந்தத் தொகுப்பில் இருக்கும் 'சார் ஜீரோ பாருங்க!' கவிதை...
//
சார் ஜீரோ பாருங்க!
எத்தனை எத்தனையோ முறை
எனக்கு இதை
சுட்டிக் காட்டி இருக்கிறாய்
என் நண்பா!
மறுபடியும் மறுபடியும்
பூஜ்யத்தில் இருந்து தொடங்குதல்
உன் விரல் நுனுச் சொடுக்கல் போல்
அவ்வளவு எளிதானதா?
//
இதுபோல சில கவிதைகள்ல தான் கவிஞர் இந்தக் காலத்தில் இருந்துதான் எழுதுகிறார் எனத் தோன்ற வைக்கும். உங்கள் கவிதைகளில் மிகப் பெரும்பான்மை இயற்கை சார்ந்தது.
உங்க வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைக்கும் நீங்கள் எடுக்கும் புகைப்படங்களில் கூட அடையாறு என எழுதியிருப்பீர்கள். ஆனால் அங்கு இருப்பது ஒரு பூ, ஒரு இலை, மரம், உச்சிக்கிளை, அதில் ஒரு காகம், ஒரு பறவை. பூனை இதெல்லாமும் தான். நான் அதைப்பற்றி கேட்கும்போது நீங்கள், ”அடையாறுலதான் இதெல்லாமும் இருக்கு" என்றீர்கள். அதுவும் தற்கணம் தான் என்பது புரிகிறது. நீங்களும் கவிதைங்கிறது தற்கணத்துல இருந்துதான் எழுதப்படணும்னு சொல்கிறீர்கள். நாம் பொதுவாக நினைக்கும் தற்கணமும் நீங்கள் சொல்லும் தற்கணமும் வேறு வேறாக இருக்கிறது. அதைப் பற்றி சொல்லுங்கள்.
வேணு வேட்ராயன்:
நேத்து ஒரு பூனையை நான் வீடியோ கேப்சர் (video capture) பண்ணேன். அது வீட்டுக்குள்ள மட்டும் வர்ற பூனையில்ல, வெளியவும் சுத்துற பூனை. A Part-time freelancing பூனை.
அதைப் பத்திக்கூட ஒரு கவிதை எழுதியிருக்கேன்.
//
ஒரு பொழுதில்உன் காலைச் சுற்றி வரும்
அதே கருப்பு வெள்ளைப் பூனைதான்
மறு பொழுதில்
இந்த கானகம் எங்கும்
தனித்து அலைகிறது.
//
இது வெறும் லிட்ரலா (literally) பூனையைப் பத்திச் சொல்றது இல்லை அப்படின்னு ஒரு எளிய புரிதல் இருக்கு இல்லையா? ஆனா உண்மையிலேயே அந்தப் பூனையும் அப்படித்தான் இருக்கு. ஒரு பொழுதுல நம்ம காலைச் சுற்றி வரக்கூடிய பூனை, இன்னொரு பொழுதுல கானகம் எங்கும் அலையுது. எந்த மொமெண்ட்ல எனக்கு இந்த வரிகள் தோணுச்சுன்னா...
ஒருநாள் நைட்ல கார் டிரைவ் பண்ணிட்டு வீட்டுக்கு வர்ற வழில அதே பூனை ரோட்டைக் கிராஸ் பண்ணிப் போச்சு. வீட்டுக்கு ஒரு இருநூறு முந்நூறு மீட்டர் தூரத்துல. அப்போ அதோட நடையைப் பார்த்தீங்கன்னா டோட்டலா வேற. அதோட பாடி லாங்குவேஜும் (Body language) நடையும் பார்த்தா அது ஒரு வைல்ட் அனிமல் மாதிரி இருந்தது.
ஆனா, அதுக்கு முன்னாடி ஒருநாள் நான் எடுத்த வீடியோவுல பார்த்தன்னா, அது கிட்டத்தட்ட ஒரு 'இன்பினிட்டி' (முடிவிலி) சிம்பல் மாதிரி என் காலைச் சுற்றிச் சுற்றி வளைய வந்துட்டிருந்தது. அப்போ இருந்த பாடி லாங்குவேஜ் முற்றிலும் வேற, அதோட மைண்ட் (mind) வேற, எல்லாமே வேற. ஆனா ரெண்டுமே ஒரே பூனைதான்.
இப்போ யோசிச்சுப் பாரு, என்னோட மைண்ட் ஒருத்தர்கிட்ட ஒரு மாதிரி பிஹேவ் (behave) பண்ணுது, இன்னொருத்தர்கிட்ட இன்னொரு டைம்ல வேற மாதிரி பிஹேவ் பண்ணுது. ஆனா அது அதே மைண்ட்தான். அந்த மொமெண்ட்லதான் எனக்கு எழுதத் தோணுச்சு. ஒரு யானை காட்டுல தனிச்சு நடந்து போகும்போது வேற, அதே யானையை நம்ம டொமெஸ்டிகேட் (domesticate - பழக்குதல்) பண்ணும்போது வேறயா இருக்கு.
நேத்து அந்தப் பூனையை வீடியோ எடுத்தேன்னு சொன்னேன் இல்லையா, இதுல ஒரு ஹாப்பினஸ், ஒரு ஜாய் இருந்தது. ஒரு வைல்ட்லைஃப் போட்டோகிராபரோ அல்லது கேண்டிட் மொமெண்ட்ஸ் (candid moments) கேப்சர் பண்ற சினிமேட்டோகிராபரோ அல்லது சாதாரண ஒரு மொபைல் போன் வச்சிருக்கிற ஒரு நபரோ, இதை கான்ஷியஸா (consciously) பண்ணும்போது அது ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்குது.
But for some reasons that Poem chooses itself to happen at that moment!
ர: உங்க கவிதைகள்ல இயற்கை அதிகமும் வருகிறது…
வேணு வேட்ராயன்: ஆமா. இப்ப கேள்விக்கு வருவோம்.
இப்போ நான் ஒரு சாதாரண அப்சர்வேஷனைச் சொல்றேன். நான் சில இலைகளையோ பறவைகளையோ போட்டோ எடுத்துப் போடும்போது, அதே மாதிரியான இமிடேஷன்கள் (imitation - நகல்கள்) உருவாகுறதை நோட்டீஸ் பண்ணியிருக்கேன்.
நண்பர்கள் என்னோட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ல சில நாட்களுக்குள்ள என்ன மாதிரியே போடுறத பாக்கறேன். எனக்கு அந்த பேட்டர்ன் ரெபெடிஷன் (pattern repetition) தெரியுது.
இப்போ என் வீட்டுப் பக்கத்துல ஒரு பட்டுப்போன அசோக மரம் இருக்கு. அதோட கிளைகள் பலவிதமா திருகி முறுகி வளைஞ்சிருக்கும். நல்ல உயரத்துல அது மட்டும் தனிச்சு நிக்கும். நீல நிற வானத்தோட பேக்டிராப்ல (backdrop) அந்தக் கிளைகள் எப்பவுமே கருப்பா தெரியும். அதுல மோஸ்ட்லி புறாக்கள் தான் இருக்கும்; காகங்கள் ரொம்ப ரேர். சம்டைம்ஸ் நாலஞ்சு புறாக்கள் இருக்கும், சம்டைம்ஸ் ஒன்னு ரெண்டு இருக்கும், சில சமயம் ஒண்ணுமே இருக்காது. ஆனா அந்த பட்டுப்போன மரக்கிளை அங்கேயே நிலைச்சு இருக்கு, அது ஒரு நிலையான இருப்பு.
ஆனா பறவைகள் அப்படி கிடையாது; எப்ப வேணாலும் வரும், போகும். வேற வேற பொசிஷன்ல இருக்கும், வேற வேற ஆக்டிவிட்டிஸ் பண்ணும், வேற வேற மூட்ல இருக்கும். வானமும் வேற வேற மூட்ல இருக்கும்; வானத்தோட நிறம், ஒளி, பொழுதுகளோட வெளிச்சத்தின் தன்மை எல்லாமே மாறிட்டே இருக்கும்.
நீங்க கிளாட் மோனே (Claude Monet) ஓவியரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீங்க இல்லையா? அவர் அந்த வைக்கோல்போரை (Haystacks) வச்சு நிறைய வரைஞ்சிருப்பார். இம்ப்ரஷனிசம் (Impressionism). அவர்தான் அதுக்கு முன்னோடி.
அந்த ஓவியங்கள்ல சும்மா வண்ணத் தீற்றல்கள்தான் இருக்கும். அதுக்கு ஒரு கச்சிதமான வடிவமோ அல்லது வடிவங்களின் அச்சு அசலான ரீபிரொடக்ஷனோ (reproduction) இருக்காது. அது ஒரு வடிவமற்ற தன்மை. அந்தப் பொழுதோட இம்ப்ரஷனை (impression) மட்டும்தான் அவர் பதிவு பண்ணியிருக்கார். அதாவது நிலக்காட்சியோட இம்ப்ரஷன். தமிழ்ல இம்ப்ரஷன்னா மனப்பதிவுன்னு சொல்லலாம். அந்த காட்சியைப் பார்க்கும்போது ஏற்படுற மனப்பதிவை ஓவியமா தீட்டும்போது அப்படி ஒரு வடிவத்தை அவர் படைச்சிருக்கார். இப்போ எதுக்குச் சொல்ல வரேன்னா, அவர் லோட்டஸ் (Water Lilies) ஓவியங்களையும் வரைஞ்சிருக்கார். அவர் காலையில, மத்தியானம், சாயங்காலம்னு வேற வேற லைட்டிங்ல (lighting) ஒரே வைக்கோல்போரை வச்சு ஒரு சீரிஸ் (series) வரைஞ்சிருக்கார்.
ஓரளவுக்கு ஆர்ட் பத்தி பேசிக்கா அவுட்லைன் தெரிஞ்சவங்களுக்குத் தெரியும், இது இம்ப்ரஷனிசம் மூவ்மெண்ட்ல வந்த பெயிண்டிங்னு. அவர் என்ன இம்ப்ரஷனிஸ்ட் பெயிண்டிங் வரையப் போறேன்னு நினைச்சா வரைஞ்சார்? கிடையாது. ஆனா ஓவியனாக கண்டிப்பா அதுக்கு முன்னாடி அதைப் பத்தின ஒரு அவேர்னஸ் அவருக்கு இருந்திருக்கும். ஆனா ஏன் அவர் அந்தப் பர்டிகுலர் ஃபார்மை (particular form) தேர்வு பண்ணார்? கான்ஷியஸா சூஸ் பண்ணாரா இல்லையாங்கிறது கூட இங்க கேள்வி கிடையாது. ஆனா கான்ஷியஸாவோ அன்கான்ஷியஸாவோ அந்த ஃபார்மை அவர் தேர்வு பண்ணியிருக்கார், அதுதானே உண்மை?
நான் ஒரு picture எடுக்கிறேன்னா, அந்த மரக்கிளையைத் தொடர்ந்து நான் பார்த்துட்டே இருக்கேன்னு அர்த்தம். நான் அதை கான்ஷியஸா ஒரு பிராக்டீஸா செய்யலை. ஸ்பான்டேனியஸா பண்றேன். கார் நிறுத்துன உடனே என் பார்வை அந்த மரக்கிளைக்குத்தான் போகும். அது ஏதோ கார் நிறுத்துன உடனே நெத்தியில் அடிச்சுக்கிற மாதிரியான ஒரு கடமை கிடையாது.
That's an observation with total complete attention. கணந்தோறும் நிறம் மாறும் தன் தன்மையால் இயற்கை, நம் தொடர் அவதானிப்பை, முழுமுற்றான கவனத்தை கோரி நிற்கிறது, கவிதையும். ஒரு ஆர்ட்டை கிரியேட் பண்ணும்போது அவேர்னஸும் அப்சர்வேஷனும்தான் முக்கியம்.
நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன். ஒரு விஷயத்தைப் பத்தி அதிகமாப் பேசப் பேச அந்த விஷயத்துல இருந்து நம்ம விலகிட்டே போறோம்னு. அது கவிதைக்கும் பொருந்தும். கவிதையைப் பத்தி அதிகமாப் பேசப் பேச கவிதையிலிருந்து விலகிடுவோம். 'பொயட்டிக்ஸ்' அதாவது கவிதை இயல் பத்தி நிறையப் பேசலாம், அதுக்கு முடிவே கிடையாது. ஆனா கவிதை பத்தி கொஞ்சம்தான் பேச முடியும். அதுக்கு மேல பேச முடியாத இடத்துலதான் கவிதை இருக்கு.
வாட்ஸ்அப்ல ஒரே படத்தை திரும்பத்திரும்ப நான் வைக்கறத பத்தி சொன்னல்ல. எனக்கு ஒவ்வொரு முறையும் அதைப் பார்க்கும்போது புதுசா இருக்கு. அந்த மொமெண்ட் ஸ்பான்டேனியஸா இருக்கு. பழசுல இருந்து இதோட கனெக்டிவிட்டி இருந்தாலும், இதைப் பார்த்ததுக்கு அப்புறம்தான் அது போய் கடந்த கால அறிவுல சேருது. ஆனா நான் அதை ரிஃப்ளெக்ட் பண்ணாததுனால, அதை அறிவா பார்க்காம அனுபவமாதான் அடிக்கடி பார்க்கிறேன்.
அனுபவம்ங்கிறது நினைவுகளா இருக்கு. நேத்து பார்க்கும்போது ஒரே ஒரு காகம் மட்டும் அந்தப் பட்டுப்போன கிளையில உட்கார்ந்து இறகுகளைக் கோதிட்டு இருந்தது. இப்ப எனக்கு அது ஞாபகம் இருக்கு, மத்ததெல்லாம் அவ்வளவா ஞாபகம் இல்லை. நேத்து இருந்த காகம் கூட முக்கியம் இல்லை, அது நேத்து இருந்தது, அவ்வளவுதான். ஆனா அந்தப் பட்டுப்போன மரக்கிளையின் வடிவத்துல ஏதோ ஒரு 'ஸ்டபர்ன்நெஸ்' (உறுதி) இருக்கு.
அதோட இருப்பிலேயே ஒரு உறுதி இருக்கு. அங்க பறவை வந்து உட்காருறதுல ஒரு பொருத்தமற்ற அழகிருக்கு. உட்காரும்போது ரெண்டுமே ஒரே வண்ணம் ஆயிடுது. நீல வானத்தின் பின்புலத்துல கருப்பா முன்னிக்குது. அது எனக்கு முக்கியமாத் தோணுது. அதனாலதான் நான் அதைத் தொடர்ந்து பிக்சர் எடுத்துட்டே இருக்கேன். ஸோ, பிக்சர் எடுக்குறது ஒரு ஆர்ட் ஃபார்ம்; ஆனா அதை உற்றுப் பார்க்கிறதுதான் பொயட்ரி.
அதை ரிப்ளிகேட் (replicate) பண்றது ரொம்ப கஷ்டம். இமிடேஷன்ல இருந்து ஒரிஜினாலிட்டியை நம்மால் எளிதா டிஃபரன்ஷியேட் (differentiate) பண்ணிட முடியும்.
ரம்யா: அருமை!
ஆனா கிரியேட் பண்றதுங்கிறது அந்தப் பக்கம் (other side) இருந்து பண்ற வேலை. ஆனா பார்க்கிறதுங்கிறது இந்தப் பக்கத்தில் (this side) இருந்து நடப்பது. Seeing happens only from this side, not from the other side. ஏன்னா, நான்தான் என்னை பார்க்கிறேன் (I see myself). அதனாலே பிரத்தியேகமா என்னோட பார்வைதான் எழுத்தாவோ, சொல்லாகவோ, கலையாவோ மாறுது. அதை இமிடேட் பண்ணினா, நான் பார்க்கிற விதத்துல உன்னால பார்க்க முடியாது. So howsoever intelligent you are, you can't imitate art.
ரம்யா: இப்போ கிளாட் மோனே பத்திச் சொல்லும்போது சொன்னீங்க இல்லையா, கான்ஷியஸா அவர் இம்ப்ரஷனிஸத்தை உருவாக்கலன்னு. ஆனா அவர் தனக்கு முன்ன உள்ள ஆட்களை தொடர்ந்திருக்கிறார். அதன் வழியாகத்தான் தன் கலைவடிவத்தைக் கண்டுகொள்கிறார். இயல்பாக.
ஆசிரியர்களை ரொம்ப ஆழமா உள்வாங்கும்போது, அன்கான்ஷியஸாவே அவர் அல்லாத வேறொன்றைத் தான் நம்ம உருவாக்குகிறோம்னு தோணுது. கான்ஷியஸா அவரைப் பின்பற்றினாலும் கான்ஷியஸா தொடரக்கூடாதுன்னு முடிவெடுத்து செய்தாலும் வெளியில் தெரிந்துவிடும்.
ஆசிரியர்கள் நம்மை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள அனுமதிப்பது அவர்கள் எத்தனை ஆழமாக ஒன்றைப் பார்க்கிறார்கள் என்பதைத்தான். ஆனால் பார்க்க வேண்டிய கண் நம்மளோடது. நாம உண்மையா இருக்கிற பட்சத்துல, அது வேறொன்னாத்தான் வெளிப்படும்னு தோணுது. சரியா?
வேணு வேட்ராயன்: நேரடி அனுபவம்னு ஒன்னு இருக்கு இல்லையா. 'உடன் இருத்தல்' என்று சொல்லலாம். இப்போ ஆன்லைன் கிளாஸ்கள், மாடியூல்கள்னு என்னதான் இருந்தாலும், நேரடியா ஒரு ஆசிரியரோட உட்கார்ந்து பேசுறது, ஒரு நபர்கூட உட்கார்ந்து அவங்களோட பாடி லாங்குவேஜ், அவங்களோட பிரசன்ஸ் (presence) எல்லாத்தையும் அப்சர்வ் பண்றது முற்றிலும் வேறான அனுபவம்.
எந்தவொரு பேரியர்ஸும் (தடைகள்) இல்லாம ஒரு விஷயத்தைக் கவனிக்கிறது இருக்குல்ல அதுதான் பைனஸ்ட் ஃபார்ம் ஆஃப் லேர்னிங் (Finest form of learning). Listening without barriers.
கற்றலுக்குத் தடையா இருக்கிறது என்னென்னன்னு ஜெ கூட ஒரு இடத்துல சொல்லியிருப்பார். அதுல ஒன்னு நம்மளோட மைண்ட் வாய்ஸ் (Mind voice). ஒரு விஷயத்தைக் கேட்டுட்டே இருக்கும்போது, "இது எப்படி சாத்தியம், அது எப்படி சாத்தியம்?" என்று நமக்குள்ளேயே எதிர்கேள்விகள் கேட்டுட்டே இருப்போம். அது ஒரு முக்கியமான பேரியர். அதுக்குக் காரணம் நம்மோட ஆணவமும், நமக்கு இருக்கிற எல்லைக்குட்பட்ட அறிவும்தான். அது நம்மோட கற்றலை இன்னும் லிமிட் பண்ணுது. Learning is all about observation, listening without any conditioning, without any barriers. அதுதான் கவிதைக்கும் ரொம்ப அடிப்படையான விஷயம். அதை சும்மா "நான் இனிமே நல்லா கவனிக்கப் போறேன்" அப்படின்னு பிராக்டீஸ் பண்ண முடியாது; உண்மையிலேயே அகம் ஹம்பிளா (humble) இருக்கணும். Can you actually listen to it with complete attention, or do you get distracted? அதான் கேள்வி.
அப்படித்தான் அந்த மரக்கிளையைப் பார்க்கும்போது எனக்குக் கம்ப்ளீட் அட்டென்ஷன் இருக்கு, ஏன்னா அது எனக்கு ஒரு மகிழ்ச்சியைத் தருது. ஆனா ஒவ்வொரு முறையும் அது வேற வேற அனுபவமாத்தான் நிகழுது. போட்டோ எடுக்கிறதுங்கிறது வெறும் 'பை-பிராடக்ட்' (Byproduct) தான். ஆனா நாம பை-பிராடக்ட்டை மட்டும்தான் பார்க்கிறோம். அதுக்கு அடிப்படையான அனுபவத்தைத் தன்னளவில் நிகழ்த்திக்கிறது இல்லை. If you can't go beyond the art, you can't appreciate the moment that resulted in that art itself.
அதை உன்னால் இமிடேட் பண்ணி வரையவோ போட்டோ எடுக்கவோ முடியும். ஆனா அது வரையும்போது இருந்த மனநிலையை உன்னால் அடைய முடியுமாங்கிறதுதான் கேள்வி. ஒரிஜினலுக்கும் இமிடேஷனுக்கும் உள்ள வித்தியாசம் அதுதான். ஒருத்தர் என்ன கிரியேட் பண்ணினாலும் தன்னோட சுய விஷனைத்தான் (own vision) வெளிப்படுத்தணும். ஒரு சாதாரண ஆர்ட்டை இமிடேட் பண்ணி நம்மால் பல நூறு ஒர்க்ஸ் பண்ணிட முடியும். போட்டோகிராபில அது ரொம்ப ஈஸி. அதனாலதான் ஒரு கவிதை எழுதப்படும்போது நிறைய இமிடேஷன் கவிதைகளும் வந்துடுது.
//ஓடும் ரயிலில் அடம் பிடித்து வாங்கிய குழலில், அதை விற்றவன் வாசித்த பாடலைச் சலிக்காமல் தேடிக் கொண்டிருக்கிறது ஒரு குழந்தை.//
என முகுந்த நாகராஜன் ஒரு கவிதை எழுதியிருப்பார். இது அவர் எழுதின ஒரு மொமெண்ட்.
இதை இமிடேட் பண்ணிப் பலர் எழுதிட்டாங்க. அதுக்கு முன்னாடி தேவதச்சன் கூட,
இலையின் நடனம்
காற்றில்
வினோத நடனம் புரியும்
இலைகளை
கைவிரலால் பற்றினேன்.
ஒவ்வொரு முறையும்
இலைதான் சிக்குகிறது
நடனம் எங்கோ
மறைந்துவிடுகிறது..!
-என எழுதியிருப்பார். ரெண்டும் கிட்டத்தட்ட ஒரே கவிதைதான். அரூவமான ஒரு விஷயத்தைக் கைப்பற்ற முடியாது, உணரத்தான் முடியும்ங்கிறதுதான் உண்மை. "உருவில்லாததை ஏன் உருவில் வைத்தாய்" என்று நானும் எழுதிருக்கேன். அருவம், உருவம் பற்றிய கான்செப்ட் (concept) எப்பவுமே இருக்கு. அருவம்தான் உருவமா இருக்கு; உருவத்தின் வழியாதான் நாம அருவத்தை அடைய முடியும்.
அந்தக் குழந்தை அருவத்தைக் கைப்பற்ற முயற்சி செய்யுது. அங்க குழந்தைங்கிறது குழந்தை இல்லை, நான்தான். It is repeatedly trying to grasp the abstract through the concrete. இதுதான் கவிதையியலில் இருக்கிற ஒரு 'டீப்பர் லேயர்' (Deeper layer). தேவதச்சன் அவரோட ஃபார்ம்ல சொல்லியிருக்கார், முகுந்த நாகராஜன் அவரோட ஃபார்ம்ல சொல்லியிருக்கார், நான் "உருவில்லாததை ஏன் உருவில் வைத்தாய்"னு வேற ஃபார்ம்ல சொல்லியிருக்கேன். நாம கவிதையிலயோ கதையிலயோ அந்த ஃபார்மைதான் புடிச்சுக்கிறோம். ஆனா, அதுவும் வெறும் சொல்தான். அதுல இருக்கிற 'ஃபார்ம்லெஸ்ஸை' (Formless) அப்ரிஷியேட் பண்றதுதான் சரியான வாசிப்பு.
அந்த 'ஃபார்ம்லெஸ்நெஸ்' (Formlessness) என்பது தனித்துவமானது. உனக்கு ஒரு ஃபார்ம்லெஸ்நெஸ் இருக்கு, எனக்கு ஒன்று இருக்கு. அதை 'இன்டிஸ்கிரைபபிள்' (Indescribable)-னு சொல்லலாம். சொல்லவே முடியாத ஒன்றைச் சொல்ல வேண்டியிருக்கு. சொல்ல முடியாததை நான் ஃபீல் பண்ணிட்டேன், நீயும் ஃபீல் பண்ணிட்டேன்னா அவ்வளவுதான். அதுக்கு மேல ஒன்னும் இல்லை. சொல்லப்பட்ட சொற்கள் வேண்டுமானால் பொதுவானதாக (common) இருக்கலாம். சொற்கள் பொதுவானவை, ஆனா அந்தச் சொற்கள் வழியா நாம சென்றடையக்கூடிய இடம் தனித்துவமானது.
ர: சோழ மண்டலா கலைக்கூடத்தில் நாம் ஓவியம் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்தக் கூடத்தின் நடுவில் ஒரு சிவப்பு நிற வண்ணத்தை மட்டும் தீட்டியிருந்த மார்க் ராத்கோவின் (Mark Rothko) ஓவியம் இருந்தது. அவரின் ஸ்டைலை பற்றி பேசி தெரிந்து கொண்டபின் அவருடைய ஓவியங்களை பிற இடங்களில் எளிதாக கண்டுகொண்டோம். போலவே கே.சி.எஸ். பணிக்கர் உட்பட பிற ஓவியர்கள் பாணியையும் கண்டுகொண்டபின் அவர்களின் பிற ஓவியங்களை வேறு அறைகளில் கண்டுகொண்டோம்.
ஒரு ஓவியர் தன் முன்னோடிகளில் இருந்து எந்தக் கூறை எடுக்கிறார், விலக்குகிறார், என்ற வித்தியாசத்தையும் சொல்ல முடிவதாக இருந்தது.
வேணு வேட்ராயன்: ஆமா, பேட்டர்ன் (Pattern).
ர: இதை நீங்க கவிதை பற்றி பேசியதோட தொடர்பு படுத்திக்கறேன் இப்ப. முன்னோடிகள் வேற வேற மாதிரி எழுதியிருக்காங்க, நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வது ஃபார்மைத்தான். ஆனா அங்களோட கேள்வி வேறு. உங்களோட கேள்வி வேறு. கேள்வியை இமிடேட் பண்ண முடியாது. அந்தத் தவிப்பை நடிக்க முடியாது. உங்களால மட்டும்தான் முதல் தொகுப்புல எழுதின அந்தச் சின்னத் தீற்றல்லை இரண்டாவது தொகுப்பின் முதல் கவிதை வரை கொண்டு வர முடியும். உங்களோட கவிதை தொகுப்புகள்ல வந்து கொண்டே இருக்கும் ஒன்று என்பது அதுதான். அப்போ அந்த ஸ்டைல் ஆஃப் யூனிக்நெஸ் (style of uniqueness) என்பது ஒரு ஆன்மாவின் கேள்வி அப்படின்னு எடுத்துக்கலாமா?
வேணு வேட்ராயன்: ஆமா, விக்ரமாதித்யன் கூட முகுந்த நாகராஜனோட புக்ல (தன்னறம் வெளியீடு) எழுதின முன்னுரையில இதை ரொம்ப கிரிஸ்ப்பா (crisp) எழுதியிருக்கார். "அவரவருக்கு அவரவர் இடம்" அப்படின்னு ஷார்ட்டா சொல்லியிருப்பார்.
வாழ்க்கையை ரொம்ப விரிவாச் சொல்றவங்க இருக்காங்க, ரொம்ப சிம்பிளாச் சொல்றவங்க இருக்காங்க, தீவிரமாப் பார்க்குறவங்க இருக்காங்க, விளையாட்டாப் பார்க்குறவங்க இருக்காங்க. எல்லாருமே கவிதை எழுதுறாங்க, எல்லாமே கவிதையாவும் இருக்கு.
அவரவருக்கு அவரவர் இடம். என் வாழ்வு சார்ந்து, என் தரிசனம் சார்ந்து, என் அகம் சார்ந்து, என் மொழி சார்ந்துதான் என் கவிதை. என் வாழ்வுதான் என் கவிதை, நான்தான் என் கவிதை. அவரவர் அகம் அப்படி இருக்கு, அதனால கவிதை அப்படி வெளிப்படுது. ரொம்ப சிம்பிளான விஷயம். அந்த அகத்துக்கு அந்தத் தவிப்பு, அந்தப் பார்வை, சபலங்கள், அலைச்சல்கள், துயரங்கள் எல்லாம் இருக்கு. அதனாலதான் அது அந்த மொழியைக் கையாளுது, அந்த வெளிப்பாட்டைத் தேர்ந்தெடுக்குது. ஒரு ஃபைனான பிரஷ்ஷை வச்சோ, அல்லது வாள் வச்சோ, அல்லது ஒரு இறகை வச்சோ கூட நாம ஒரு ஸ்ட்ரோக் (stroke) கிரியேட் பண்ண முடியும். அது அவங்களோட சாய்ஸ், அந்த மொமெண்ட் அதோட இயல்பு அதைத் தீர்மானிக்குது.
இயல்போடு இருக்கும்போதுதான் அது அழகா இருக்கு.
ர: நன்றி. 'இயல்பு' என்பது பற்றிதான் அடுத்த கேள்வி என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அந்த இடத்துக்கு வந்துட்டீங்க.
வேணு வேட்ராயன்: (சிரிக்கிறார்) எது கவிதை இல்லைன்னு பார்க்கும்போது, பேட்டர்ன்ஸை ரிப்பீட் பண்ணி புரொடியூஸ் பண்றது கவிதை கிடையாது. Imitation is not poetry. எது ஒரிஜினல் இல்லையோ அது இமிடேஷன். எது இமிடேஷன்னு உனக்கு எப்படித் தெரியும்னா, நீ ஒரிஜினலா இருக்கும்போது உனக்கே தெரிஞ்சிடும்; நீதான் அதுக்கான ஸ்கேல் (scale)."வாசகன் தனக்கான கவிதையைத் தானே கண்டடைய முடியும்"னு தேவதேவன் சொல்லியிருக்கார்.
இப்போ அந்தப் பேட்டர்னை ஏன் இமிடேட் பண்றாங்கன்னா, பேட்டர்ன் ரெப்ளிகேட் பண்றதுக்கு ரொம்ப ஈஸியா இருக்கு. ஃபெமிலியரா (familiar) இருக்கு. வாசிப்பதற்கும் அது எளிதா இருக்கு. வாசகர்கள் ஏற்கனவே படிச்ச தங்களுக்குப் பழகின விஷயத்தையே திரும்பப் படிக்கும்போது அவங்களுக்கு அது பிடிக்குது.
ர: தொடர்ச்சியா நாம முன்னோடிகளை நோக்கி ஆழமாகச் செல்லும்போது நமக்கான வெளிப்பாட்டை நாம கண்டடையலாம் எனினும் ”unaware imitation”-ஐயும் கவனிக்க வேண்டியுள்ளது. அதனாலதான் ஒரு நல்ல வாசகர் கொஞ்சம் கிரிட்டிக்கலா (critically), பகுத்தறிந்து வாசிக்க வேண்டியிருக்கு.
ஆனா, every time ஒரிஜினலா கிரியேட் பண்ண முடியுமான்னா கண்டிப்பா முடியும். அதுல ஏதோ ஒரு ஒரிஜினாலிட்டி இருக்கும்.
நீ சொன்ன மாதிரி, ரெண்டு மூணு பெயிண்டிங் பார்த்தா இது இன்னாரோடதுதான்னு நாம கண்டுபிடிச்சிடுவோம். அது பேட்டர்ன் ரெப்பட்டீஷன் (pattern repetition) கிடையாது. அது அவங்களோட சிக்னேச்சர் (signature). இப்போ நான் ஒரு கவிதை எழுதுறேன்னா, அதுல என்னோட இயல்பு, என்னோட சிக்னேச்சர் இருக்கும். நான் அதைத் திரும்பத் திரும்ப எழுதினாலும் அது என்னோட இயல்பு. வேறொருவர் என்னோட பேட்டர்னை ரிப்பீட் பண்ணும்போதுதான் அது இமிடேஷனா மாறுது.
நான் பண்றது என்னோட கையோட அமைப்பு. நான் எப்படித் தலைகீழா நின்னு வரைஞ்சாலும் என்னோட உடல் அமைப்பும் மன அமைப்பும் அப்படித்தான் இருக்கு. அதுதான் என்னோட இயல்பு, அது மாறாது. என்னோட இயல்புல இருந்துதான் நான் ஒரிஜினலா பண்ண முடியும்.
ர: ஒருவர் தான் எழுதிக் கொண்டிருப்பதிலிருந்து முற்றிலும் வேறான ஒன்றை எழுத இயலுமா?
வேணு வேட்ராயன்: ஒரு ஷிப்ட் (Shift), பாரடைம் ஷிப்ட் (Paradigm shift) இருக்கு தான். A sudden shift, a Paradigm shift is definitely possible. திடீர்னு ஒருத்தன் முற்றிலும் வேற மாதிரி எழுதுவான், பேசுவான், அல்லது வாழ்க்கையையே மாத்திப்பான். இத நாம முக்கியமான include பண்ணனும். மனம் மாறும்போது உடலும் மாறும், உடல் மாறும்போது மனமும் மாறும். அந்த Transformation பத்தி நாம அப்புறமா பேசலாம்.
(தொடரும்…)
















