ஒளியென்றானவன் - ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

தேவதேவன் பற்றிய ஒரு புகார் தமிழ் எழுத்தாளர்களிடம் உண்டு. குறிப்பாக அவர் தலைமுறை, தொட்டு அடுத்த தலைமுறை கவிகளிடத்தில். தேவதேவன் எங்கேயும், எப்போதும் அவரது கவிதைகள் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார் என்பது. ஆனால் உண்மையில் தேவதேவன் அவரது கவிதையில் சொல்லப்படாத விஷயங்கள் வேறு உலகில் இல்லை என்ற நம்பிக்கை கொண்டவர். அதனை எழுதியும் காட்டியவர். எழுபத்தைந்து வயது கடந்த தேவதேவன் இந்த ஆண்டு (செப்டம்பர், 2024) எழுதிய கவிதை தொகுப்புகள் மட்டும் பன்னிரெண்டு. இன்னும் ஐந்து தொகுப்புகள் கூட ஆண்டிறுதிக்குள் எழுதக்கூடும்.

தேவதேவனுக்கு கவிதையில் சொல்ல வாழ்க்கை இருந்துக் கொண்டே இருக்கிறது. அது குன்றாத உயிராற்றல் கொண்ட படைப்பூக்கம், அன்றாடம் செடியில் மலரும் மலர் போல. விடாது ஒன்று வாடினால் அடுத்தது அங்கிருந்தே முளைத்தெழும் விசைக் கொண்டது. 

தேவதேவன் பற்றிய மேற்சொன்ன குறை என் தலைமுறை கவிஞர்களிடம் நிறையாக செல்வாக்கு செலுத்துவதைப் பார்க்கிறேன். இப்போது எழுதிக் கொண்டிருக்கும் அனைத்து கவிஞர்களும் இது பொருந்தும். என் வாசிப்பில் குறிப்பாக கவிஞர் மதார், ஆனந்த் குமார் தேவதேவனின் நேரடி செல்வாக்கு உண்டு.

ஒரு பூக்கடையை

முகப்பெனக் கொண்டு

இந்த ஊர் 

திறந்து கிடக்கிறது


பூக்கடைக்காரி

எப்போதும் போல்

வருகிறாள்

பூக்களைப் பின்னுகிறாள்.

கடையைத் திறப்பதாகவும்

கடையை மூடுவதாகவும்

சொல்லிக்கொண்டு

ஊரையே திறக்கிறாள்

ஊரையே மூடுகிறாள் 

(மதாரின் வெயில் பறந்தது தொகுப்பிலிருந்து)

தளக்கற்களின் நூலிழை வெளியில்

ஒரு சிறு செடி

‘பேரியற்கையின்

பெருவெளியிலிருந்தல்லவா

வந்திருக்கிறேன்’ என்றது

(ஈரத்தளமெங்கும் வானம் தொகுப்பு)

தேவதேவன் கிருபாவின் பேறுகாலத்திற்கு முன்பாக சில நாள் வீட்டில் தங்க வந்தார். வீட்டு வாசலுக்கு வந்ததும் சிம்பாவின் வரவேற்பு (அவன் அனுமதியில்லாமல் யாராலும் வீட்டிற்குள் நுழைய முடியாது. அது தமிழின் தலைசிறந்த கவியாக இருந்தாலும் சரி. அவன் முகர்ந்து, நக்கி அன்பை பொழிந்த பின்னே உள்ளே அனுப்புவான்). விருந்தாளி உள்ளே வந்ததும் வீட்டைச் சுற்றி ஒரே ஓட்டம் தான். தீராத களி அவனுக்கு புதிதாக ஒருவர் வீட்டிற்கு வந்தால். 

கடவுள்

பையுடன் வருகிறார் விருந்தாளி

கொஞ்ச நாள் தங்கப் போகிறார்

என்பதில்தான் சிம்பாவுக்கு எத்துணை களி!

விருந்தாளி என்பவர் கடவுள் அல்லவா?


பையுடன் வீட்டைவிட்டு

விடைபெறுகிறார் விருந்தாளி

ஒரு வெறுமையை உண்டாக்கிவிட்டுப்

போகிறார் அதுதான் கடவுள் என்பதுபோல்!

எப்படி கண்டுகொள்கிறது சிம்பா அதையும் தான்!

(தேவதேவனின் சமீபத்திய கவிதை)

கவிஞர் ஆனந்த்குமார் சிம்பாவின் களிதோழன். (ஆனால் அவர் நான்கு காலில் அவனைப் போல் அமர்ந்தால் மட்டும் அவன் ஏனோ சண்டையாளனாகப் பார்ப்பான்.) 

வால்குட்டி

வாலாட்டி வாலாட்டி

தானாடியது நாய்க்குட்டி

முதுகாட்டி உடம்பாட்டி

வாலாகியது நாய்க்குட்டி


தான் சொல்லவருவதை விட

வால் மிக

மெதுவாக ஆடுவதாய்

நாய்க்குட்டி எண்ணியது


அது ஓடுகிறது

அறையெங்கும் நிறைத்து


“நீயாக்கும் நானாக்கும்”

என்மீது பாய்கிறது

“அதுவாக்கும் இதுவாக்கும்”

எல்லாவற்றிலும்

முட்டுகிறது


என்னையும் கொஞ்ச மறந்து

துள்ளித் துள்ளி

பறக்கிறது

தன்னையும் யாதென

மறந்துவிட்ட நாய்க்குட்டி

(சிம்பாவிற்கு)

- ஆனந்த்குமாரின் சமீபத்திய கவிதை

தேவதேவன் தன்னை சுற்றி தான் காணும் அனைத்தையும் மறுகணம் அவருள் கவிதையாக்கிவிடுவார். வெள்ளிமலையில் தங்கியிருக்கும் போது கடும் குளிர் நாளில் தேவதேவன் டெண்டில் தங்க வேண்டுமென ஒரே அடம். அந்தியூர் மணி அவருக்காக ஏற்பாடுகளை செய்துக் கொடுத்தார். மறுநாள் காலை ஜெயமோகன் சொன்னார். “இன்னும் சில நாளில் வெள்ளிமலையில் டெண்ட் ஒரு கவிதையாகிவிடும் பார்” என்றார். பெங்களூர் போய் மறுநாளே கவிதை எழுதிவிட்டார்.

குமரகுருபரன் விழாவிற்காக சென்னை வந்திருந்த தேவதேவன் கடற்கரை செல்ல வேண்டுமென ஒரே அடம். நானும், அஜியும் மாலை கூட்டிச் சென்றோம். காரை விட்டிறங்கி கடற்கரை மணலில் கால் வைத்ததும் தேவதேவன் தன் பேண்ட் பாக்கெட்டை தொட்டுப் பார்த்துக் கொண்டார். 

“என்ன பாக்குறீங்க சார்?” என்றேன்.

“ஒன்னுமில்ல என் பேப்பர் பேனா இருக்கான்னு பாத்தேன்” என்றார்.

“அப்போ தேவதேவனுக்கு அதுக்குள்ள ஒரு கவிதை தோனியாச்சு” என்றேன்.

“இல்ல சும்மா தான் இருக்கான்னு பாத்தேன் அவ்ளோ தான்” என்றார்.

“சரி சார். எழுதியதும் அனுப்புங்க” என்றேன்.

அங்கிருந்து கிளம்பி ரயில் ஏற்றிவிட்டு வந்த பதினைந்து நிமிடத்தில் ஒரு மெசேஜ்,

கடற்கரை

வைத்த பாதங்களைப் பற்றி பற்றி இழுத்தபடி

இங்கே தங்கிவிடேன், இங்கே தங்கிவிடேன்!

என்றது கடற்கரைமணல்

ஒவ்வொரு காலடியிலுமாய்க் கூடிய

மொத்த கடற்கரையும்!


அதெப்படி? அதெப்படி?

இடையறாத அழைகடலை நோக்கியல்லவா

அவன் நடந்து கொண்டிருந்தான்!

ஒரு அனுபவம் நமக்கு எண்ணமென சிந்தனையில் தோன்றும் கனத்திற்கு முன்பாகவே அவருள் கவிதையாகி விடுகிறது. மழையென எண்ணும் கனத்தில் மண் நிறைப்பது போல தான் தேவதேவனுள் கவிதையும். இத்தனை எழுதிய பின்னரும் அவருள் எழுதி தீராத மண்ணும், மனிதரும் எழுந்துக் கொண்டே இருக்கின்றனர்.

தேவதேவனுக்கு இஷ்டமான ஓரிடம் இருக்குமெனில் அவரது தூத்துக்குடி வீடு தான். வீட்டிலேயே ஒரு சிறு தோட்டமும், ஆம்பல் குளம் ஒன்றும் உள்ளது. தோட்டம் அத்தனை அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்கும். தேவதேவன் பொதுவாகவே நேர்த்திய விரும்புபவர். அதனை அவரது வீட்டில் ஒரு நெறியென கடைபிடிப்பவர். ஒழுங்கும், நேர்த்தியும் உலகில் அன்பை சொல்லும் வழிகள் என்பது அவரது கொள்கை. உலகில் அழகை காணும் வழியும் கூட நேர்த்தி தான், இயற்கையில் எப்போதும் எங்கும் உறைந்திருப்பது நேர்த்தி, மனித மூளையின் கோளாறு அதனை தனக்காக மாற்றிக் கொள்கிறது என்பது தேவதேவனின் மத நம்பிக்கை. அவரது வீடு எத்தனை கவிதையில் ஒரு படிமமாக வந்திருக்கிறது. 

நான் கட்டினேன் ஒரு வீட்டை 

வீடு தனக்காக கட்டிக் கொண்டது

வானம் இறங்க விரித்த 

தன் மொட்டை மாடிக்களத்தை

- பழைய தேவதேவன் கவிதை

ஆனால் மனைவியின் உடல்நிலை காரணமாக இரண்டாண்டுகளுக்கு பின் பெங்களூர் செல்லும் நிபந்தனை அவருக்கு. தூத்துக்குடி வீட்டை பூட்டி போட்டு அங்கே சென்றார். என்னால் தேவதேவன் போன்ற ஒருவர் பெங்களூர் நகரங்களில் அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை வாழ்வது பற்றி யோசித்துக் கூட பார்க்க முடிந்ததில்லை. அவர் அங்கே சோர்வடைவார் என நினைத்தேன். பல நாள் அங்கிருக்க வாய்ப்பில்லை என்றே நண்பர்களிடம் சொன்னேன். 

இரண்டாண்டிற்கு பின் பெங்களூர் சென்ற போது அவரிடம் நேரில் கேட்டேன் உங்களுக்கு இந்த ஊர் பிடித்திருக்கிறதா? என்று. தூத்துக்குடியில் இருக்கும் அதே குதூகலத்துடன் சொன்னார். “நம்மளோட சந்தோஷமும் துக்கமும் இந்த ஒரு இடத்துலயா இருக்கு? இரண்டாயிரம் கவிதைகள்,கவிதையை படிச்சு தான் பதில் சொல்லணும்” என்றார். 

எந்த நிறை குறைகளாலும் இக்கவியை அசைக்க முடியாது எனத் தோன்றயது. அவர் அந்தந்த கணங்களில், பொழுதகளில் வாழ்பவர். அந்த வேளைகளைத் தான் அவர் கவிதையென்றும் சொல்வதுண்டு.

தேவதேவன் பற்றிய ஒரு வேடிக்கை எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் என்னிடம் சொன்னது. “தேவதேவனை நியூயார்க்கில் கொண்டு விட்டாலும் அவர் தேவதேவனாக தான் இருப்பார். நாம் தான் இடத்திற்கு இடம் மாறுவோம்” என்றார்.

அழகு

இப்படிச் சொல்வதில்

எனக்கு எந்த ஒரு வெட்கமுமில்லை

தயக்கமுமில்லை.

மலர்களும் மரஞ்செடிகொடிகளும்

ஓய்வமைதியும் 

கொழிக்கும் இந்த உபவனத்தில்

பெண்களாலும் குழந்தைகளாலும் தான்

இந்த உலகம்

எத்துணை உயிர்ப்புடனும்

புத்துணர்ச்சியுடனும் ஒளிர்கிறது!

(உபவனம் அவர் பெங்களூரில் மகனுடன் வசிக்கும் அப்பார்ட்மெண்ட் சொசைட்டியின் பெயர்.)

11, 12 வது மாடி

11, 12 வது மாடி

விண்மாட மொன்றிலிருந்து

பார்த்துக் கொண்டிருந்தான்

துண்டுபடாத வானமும்

தொடுவானம் மொய்க்கும் 

மனிதக் குடியிருப்புகளும் தான்

நாற்றிசையும்.


விரிவானில் இரண்டு பறவைகள்

கூடி நிறைந்தது போலும்

கூடாதது போலும் 

கூடத் தவிப்பது போலும்

எல்லா உணர்வுகளையும் கடக்க

விரைவது போலும்.

- ஈரத்தளமெங்கும் வானம் தொகுப்பிலிருந்து

தேவதேவன் உடல் பற்றிய கவனம் கொண்டவர். அவரது மகன் அவருக்கு ஒரு ஸ்மார்ட் வாட்ச் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதில் ஒரு நாளின் நடை அளவு, இதய துடிப்பு அளவு, எஸ்.பி.ஓ.2 அளவு அனைத்தையும் சரி பார்த்துக் கொள்வார். அதற்கேற்ப தன் அன்றாடங்களை அமைத்துக் கொள்வார். அதனாலே அவர் வயதை மீறிய ஆரோக்கியமானவர். இருந்தாலும் அவர் வயதிற்குரிய நோய்கள் சில உண்டு. சில சமயம் அவருக்கு சர்க்கரை அளவு அதிகமாகும். அதனை உணவிலேயே அவர் சரி செய்துக் கொள்வார். மிக எளிய சைவ உணவுப் பழக்கம் கொண்டவர் என்றாலும் இனிப்புகள் என்றால் அவருக்கு அவ்வளவு இஷ்டம். மீண்டும் சர்க்கரை அளவை உணவின் மூலம் ஏற்றிக் கொள்வார்.

தனக்கு இந்த இனிப்புநோய் வந்ததன் காரணம் கடுமையான நோய்ப் படுக்கையில் இருக்கையில் மருத்துவர் நுழைத்துவிட்ட தீவிரமான ஒரு இன்ஜெக்‌ஷன் தான் என அவர் அறிந்திருந்தார்.

சமீபத்தில் அவருக்கு ஒரு கீழ் பல் ஆடத்தொடங்கியது. மருத்துவரிடம் சென்ற போது சர்க்கரை அளவு சீரடைந்த பின்னே பல்லை புடுங்க முடியும் எனச் சொல்லிவிட்டார். தேவதேவன் கடுமையான உணவு கட்டுப்பாட்டுடன், நடைபயிற்சியும் செய்து சர்க்கரை அளவை சீரமைத்தார். கோவை வந்த போது அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக இருந்தது. மீண்டும் பெங்களூர் செல்வதற்குள் முயன்று அதனை ஏற்றிக் கொண்டார். டாக்டர் திரும்ப வரும்படி சொன்னார். பிள்ளையார் கதையாக மாதம் ஒருமுறை போய் வருகிறார். இன்னும் பல்லை எடுக்கவில்லை.

விளையாட வந்துவிட்ட பல்

கீழ்த்தாடையின் இடதுபக்கத்தில்

ஒரு பல்

ரொம்பநாளாக அசைந்துகொண்டிருக்கிறது

ஓய்வுப் பொழுதெல்லாம் விரல் ஒன்று

அதைத் தொட்டு ஆட்டி ஆட்டி அசைத்து

விளையாடிக் கொண்டிருக்கிறது


“நீ இருக்க விரும்புகிறாயா?

போக விரும்புகிறாயா?” எனக்

கேட்ட கேள்விகளுக்கு 

பதில் சொல்லவே தெரியவில்லை

விளையாட வந்துவிட்ட அதற்கு.

இத்தனை கவிதைகள் எழுதிய பின்னரும் தேவதேவன் சமீபத்திய கவிதையில் வரும் ஒரு வரி, “இலட்சோப லட்சம் வயதுடைய இளமை”. கவிஞன் மட்டும் சென்று தொடும் சொற் ஆழங்களுள் இனியது.

இப்படி தேவதேவன் கவிதைகளை அதனுள் ஒழிந்துள்ள ஆன்மீகமான ஒன்றை அவரை, அவரது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து தான் புரிந்துக் கொள்ள முடியும். ஏனென்றால் ‘நான்’ என்ற இல்லாமல் தேவதேவன் கவிதை இல்லை. ஆனால் முன்னர் சொன்னது போல் தேவதேவன் கவிதையில் வரும் நான் வெறும் தன்னிலை சுட்டும் ஒன்றல்ல. அதற்கும் அப்பால் அவர் சென்று தொடும் ஆன்மீகமான ஒரு நானே அவரை மற்ற நவீனத்துவ கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்தி முதன்மையான ஒரு கவியாக மாற்றுகிறது.

தேவதேவன் மதப்பற்றாளர் கிடையாது. எந்த மத அடையாளத்தையும் தன்னுள் சூடிக் கொண்டவர் அல்ல. வரலாற்று பரிணாமத்தில் மதம் என்பது திரிபடைந்த ஆன்மீக தளமென்பது அவரது எண்ணம். அதற்கும் மேலுள்ள தூய நிலையே அவர் முன்வைப்பது. அந்த நிலை தன்னிலிருந்து தான் மட்டுமே அறிந்த ஒரு அகத்திலிருந்து தொடங்குகிறது என அவர் கருதுகிறார். அதனை மதம் போன்ற எந்த விதமான புறப்பொருளாலும் திரிபடைய விடக்கூடாதென்பது கவிஞன் அடைந்த அக தரிசனம்.


அந்த நிறைநிலை தருணங்களே தேவதேவன் கவிதைகளாகின்றன. தமிழில் பாரதிக்கு பின்பாக அத்தகைய உயரிய ஆன்மீக தளத்திலிருந்து கவிதை புனைந்தவர் தேவதேவன் மட்டுமே. பாரதிக்கு சுதந்திர போராட்டமும், அவர் கொண்டிருந்த ஆன்மீக பற்றும் உரமாகின. தேவதேவனுக்கு அவரையன்றி அவர் வாழும் இந்த லௌகீக உலகமன்றி பெரிதாக ஒன்றும் தேவைப்படவில்லை. நாம் சலிக்கும் இவ்வுலகமும், வாழ்க்கையும் அவருக்கு ஆழ்கடல் கொண்ட அருமணி முத்து போல, எந்த பக்கம் திருப்பினலும் ஒளிவிடும் வைரம் போல, அதற்கு அன்றாட பயன்மதிப்பில்லை. ஆனால் விலைமதிப்பற்றது. அதனை ஒவ்வொரு நாளும் கவிதையாக்குவதன்றி அவரால் செய்யக்கடவது வேறில்லை.

ஒரு முறை தேவதேவன் ஒரு டீக்கடையில் வைத்து ஒரு கேள்விக்குப் பதிலாக இன்பங்கள் நிறைந்த இவ்வுலகில் தன் கவனம் குறைகள் நிறைந்த துயர்கள் மீது குவியத் தவறவே தவறாது என்றார். அதற்கு விளக்கமான ஒரு சிறுகதையையும் சொல்லிக் கொண்டிருந்தார்.(ஐந்து பெண் மகள்களில் ஒன்று கொடுந்துயரில் மாட்டிக்கொண்ட பெண்). இது பைபிளில் வரும் காணாமல் போன ஆட்டுக்குட்டி கதை மாதிரி இருக்கு” என்றேன்.

“இருக்கலாம், இந்த கதையை அவரும் சொல்லியிருக்கக்கூடும். இயேசுவும் நம்மைப் போல தானே. என்ன நமக்கு கொஞ்சம் முன்னாடி சொல்லிட்டாரு” எனப் புன்னகை மாறாமல் சொல்லிவிட்டு தேவதேவன் சொன்ன கதை பற்றிய விளக்கத்தைத் தொடர்ந்தார்.

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

புதுக் கவிதை இரண்டு குறிப்புகள் - க.நா. சுப்ரமணியம்

[‘இலக்கிய வட்டம்’ இதழில் ‘புதுக்கவிதை’ என்கிற தலைப்பில் வெளியான இருவேறு குறிப்புகள் இந்த இதழில் இடம்பெறுகின்றன. முதலில் உள்ளது ‘மயன் கவிதைகள...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (1) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (171) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (22) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (4) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (1) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (171) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (22) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (4) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive