காதல் இணையர்கள்
தன் மனைவியிடமிருந்தோ
கணவனிடமிருந்தோ
ஒவ்வொரு கவிஞரும்
காதலின் ஆழத்தோடேயே
‘அதை’த் தெரிந்துகொள்கிறார்கள்;
‘இத்துணை’ எளிய காரியாம்
‘எத்துணை’க் கடினமாகியிருக்கிறது
என்பதை.
***
கண்ணாடிக் குளம்
வெளியைத் தனக்குள்ளே வைத்திருந்தது
குளம்.
எல்லையின்மையை நோக்கியே இருந்தன
அதன் கரைகள்.
நீரில் துளைந்து மகிழ்ந்து திரிந்தன
மீன்கள்.
ஆன்றடங்கிய அமைதியில் மிதந்தன
ஆம்பல் இலைகள்.
காண்பவனையே காட்டியது
காணப்படுவதற்காய் அமைந்த
கண்ணாடிக் குளம்
ஒளிபட்டு உடைந்து
வைரத் துளிகளாய்த் தெறித்தவை
கூடி இணைந்து
மலர்ந்தது தவம்.
எது தொட்டாலும்
(கல்லெறி படும்போதும்)
விண்ணளவாய் விரியும்
தன் வட்டத்தையே காட்டுகிறது
விசாலம்.
***
தூரிகை
‘வரைந்து முடித்தாயிற்றா?
சரி
இனி தூரிகையை
நன்றாகக் கழுவிவிடு
அதன் மிருதுவான தூவிகளுக்குச்
சேதம் விளையாதபடி
வெகு மென்மையாக
வருடிக் கழுவி விடு
கவனம்
கழுவப்படாத வர்ணங்கள்
தூரிகையைக் கெடுத்துவிடும்.
சுத்தமாய்க் கழுவிய
உன் தூரிகையை
அதன் தீட்சண்யமான முனை
பூமியில் புரண்டு
பழுதுபட்டுப் போகாதபடி
எப்போதும் மேல்நோக்கிய
வெளியில் இருக்க
இப்படிப் போட்டுவை
ஒரு குவளையில்’
***
ஒரு சிறு குருவி
என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டைக் கட்டியது ஏன்?
அங்கிருந்தும்
விருட்டென்று பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
விருட்டென்று தாவுகிறது அது
மரத்துக்கு
மரக்கிளையினை
நீச்சல் குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்தும் தவ்விப் பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி
தேவதேவனின் தூத்துக்குடி வீட்டு மொட்டை மாடி |
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின் ஆனந்தப் பெருமிதத்துடன்
நீந்திய படியே திரும்பிப்பார்த்தது வீட்டை
ஓட்டுக் கூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
வீட்டு அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்.
***
***
0 comments:
Post a Comment