அந்த chillness ஐ எப்போதுமே தேவதேவனின் கவிதைகளில் உணர முடியும். " இனி அசையலாம் எல்லாம்" தொகுப்பிலும் இதைக் காண முடியும். எந்த மொழியானால் என்ன, அன்பில் நனைந்த சொல் இருந்தால் அது சிறப்பாகிடும் என்று சொல்லும் வரி இந்தத் தொகுப்பில் வருகிறது. தேவதேவனின் கவிதைத் தொகுப்புகளின் தலைப்புகள் மீது எனக்கு தனிப் பிரேமை உண்டு. குளித்துக் கரையேறாத கோபியர்கள், மின்னற்பொழுதே தூரம், நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம் என்று தலைப்புகளே கவிதையாய் இருக்கும். இனி அசையலாம் எல்லாம் என்ற இந்தத் தலைப்பும் கவித்துவமானது. கவிதைக்கு காலத்தை நிறுத்தும் வல்லமை உண்டு. தேவதேவன் தன் கவிதையில் காலத்தை நிறுத்தி இனி அசையலாம் என்கிறார். சூரியன் காலையில் சன்னலில் வந்து என்னை எழுப்புவான் என்று சொல்லும் அதே தேவதேவன். அதே கவிஞன்.
தமிழில் பாரதிக்குப் பின் தோன்றிய கவிகளில் ஆளுமையாக வெளிப்பட்டவர் என தேவதேவனையே சொல்லத் தோன்றுகிறது. இன்று நவீன கவிஞர்கள் வடிவம், யுக்தி என்று என்னவெல்லாமோ பேசுகிறார்கள். ஆனால் கவிஞனுக்குத் தேவையான 'கவிமனத்தை' தவறவிடுகிறார்கள். தேவதேவனின் கவிமனமே அவரது கவிதைகளின் ஆதாரமாய் விளங்குவது.
புன்னகைகள்தாம் மலர்கள்
என்றொரு வரி இத்தொகுப்பில் வருகிறது. மலர்தலும் உதிர்தலுமான மலரின் வாழ்வு ஒரு கவிதையில் சொல்லப்படுகிறது.
தேவதேவன் இயற்கைக் கவிஞர் என்று முத்திரை குத்துபவர்கள் உண்டு. அவர்கள் அவரது கவிதைகளை முழுதாகப் படிக்காதவர்கள் அல்லது ஆழமாகப் படிக்காதவர்கள் என்று சொல்லலாம். தேவதேவன் அளவுக்கு சமூகத்தை அரசியலை மனிதர்களை கவிதையில் எதிர்கொண்டவர் இல்லை என்றே சொல்லலாம். அதை அவர் எதிர்கொள்ளும் விதம் தனித்துவமானது. அவரே சொல்வது போல் அரசியலைக் கொண்டு கவிதையைப் பார்க்காதீர்கள், கவிதையால் உலகியலைப் பாருங்கள் என்பதே அவரது கவிதைகளைப் புரிந்துகொள்ள சிறந்த வழி. இந்தத் தொகுப்பில் வரும் மலருக்குப் பின் புறம் பிரபஞ்சம் உள்ளது. மனிதனின் பின் புறம் சாதியும், மதமும், போரும்.. என்று வரும் கவிதை அதற்குச் சான்று.
நடைவழியில் கிடந்த ஒரு மலரை குனிந்து கையிலெடுத்துப் பார்த்து
கையில் வைத்தபடி நடந்துகொண்டிருந்தான்
சிலநேரம் கழித்து ஓரமாய் ஒருபுறம் விட்டுவிட்டான்.
உதிர்ந்த மலர் அது
அவன் கைபட்டதும்
மீண்டும் மலர்ந்து
அவன் கையிலிருந்தும்
மீண்டும் உதிர்ந்தது
தேவதேவனின் கவிதையில் வரும் தனி ஆள் தேவதேவன் தான். அவர் அல்லாமல் வேறொரு ஆள் வந்தாலும் அவரைப் பற்றிச் சொல்லும் குரலாகப் பிண்ணனியில் ஒலிப்பதும் தேவதேவனின் குரல் தான். கவிதையிலிருந்து தன்னையும் தன்னிலிருந்து கவிதையையும் பிரித்தெடுக்க இயலாத ஒரு தவிப்பு நிலையிலேயே தேவதேவனின் கவிதைகள் நிகழ்கின்றன.
அதே போல் பெரும் படைப்பாளிகளிடம் ஒரு பண்புண்டு. அவர்கள் தாம் இயங்கும் கலை வடிவத்தைத் தெய்வமாகக் கருதுவர். இசையை இளையராஜா துதிப்பதைப் போல அதைப் பற்றியே ஓயாது பேசுவது போல கவிதையில் பலரைக் குறிப்பிடலாம். சட்டென நினைவுக்கு வருபவர்கள் தாகூர், பாரதி, தேவதேவன்.. ஆனால் தாகூரிடமிருந்தும் பாரதியிடமிருந்தும் தேவதேவன் பிரியும் இடம் அவர் கவிதைக்கு நிகராகக் கவிதையையே வைக்கிறார். தேவதேவனுக்கு நிகராக நாம் யாரை வைக்க?..
ஒரு கவிஞனுக்கு அவசியமானது அவன் ஒரு விஷயத்தைப் பார்க்கும் விதம். என்ன பார்த்தான் என்பதை விட எப்படிப் பார்த்தான் என்பது முக்கியம். தேவதேவனுக்கு இன்னமும் அந்தத் திறன் குன்றாதிருப்பது வரம். அதுவே அவரைக் கவிஞனாக்குகிறது. தேவதேவனை சந்தித்துவிட்டு திரும்பும் ஒவ்வொரு முறையும் மனம் படைப்பூக்கம் கூடி இருந்ததை உணர்ந்திருக்கிறேன். ஒருசமயம் அவரைப் பார்த்துவிட்டு திரும்பிய தூத்துக்குடி - திருநெல்வேலி இரவு நெடுஞ்சாலையில் மழைக்கு முந்திய மின்னல் பளீரென வெட்டியது. எனக்கு அப்போது தோன்றிய வார்த்தை "மின்னலின் பகல்". தேவதேவனைச் சந்திக்கும் கணங்கள் கிடைக்கும் அற்புதங்கள் அவை.
"அன்னையும் பிள்ளையுமாய் தென்னையும் அணிலும்..."
"ஒளி நோக்கி உன்னி
ஒளி கண்டு
தலை சாயும் மரம்..."
போன்ற வரிகள் தேவதேவனின் குன்றாத கவிதைப் பார்வைக்கு உதாரணங்களாக விளங்குபவை.
"ஏறிய இடத்தையும் மறந்து
இறங்குமிடத்தையும் மறந்து
ஓடும் ரயிலோடு
ஓடிக் கொண்டேயிருக்கும்
இயற்கையின் அழகு"
என்றொரு வரி இந்தத் தொகுப்பில் வருகிறது. என்ன அழகான பார்வை!
"விழித்திருக்கும் கண்களுக்கு
இரவைப் போலொரு காதலர் உண்டோஇந்தப் பூமியில்"
என்று இந்தத் தொகுப்பில் வரும் இவ்வரியைப் போல தேவதேவன் போலும் ஒரு கவிஞன் உண்டோ பூமியில் என்றொரு உணர்வெழுச்சியில் கேட்கத் தோன்றுகிறது.
தேவதேவனின் கவிமனம் தமிழ்க்கவிஞர்களில் சிலருக்கே வாய்த்தது. தேவதேவனின் வாழ்வு கவிவாழ்வு. தொல்காப்பியத்துக்கு எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே போல் தேவதேவனுக்கு எல்லாச் சொல்லும் கவி குறித்தனவே.
***
***
0 comments:
Post a Comment