மாற்றுச் சொற்கள்: 1 - மதார்

கேரள மாநிலம் பட்டாம்பி அரசுக் கல்லூரியில் கேரள பள்ளிக் கல்வித் துறையும் SNGS பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய Poetry carnival festival 2025 ல் தமிழிலிருந்து கவிஞர்கள் வே.நி.சூர்யா, பெரு.விஷ்ணுகுமார், ஆனந்த் குமார், சந்திரா தங்கராஜ், லாவண்யா சுந்தரராஜன் ஆகியோரோடு நானும் கலந்துகொண்டேன். ஜனவரி மாதம் 17,18,19 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெற்ற இக்கவிதைத் திருவிழா பெரும் உற்சாகத்தையும், மனநிறைவையும் தந்தது. பேராசிரியர் சந்தோஷ் HK இந்நிகழ்வுகளை சிறப்பாக ஒருங்கிணைத்தார். மலையாளக் கவிஞர் பி.ராமன் தமிழ் மலையாள கவிஞர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார். தன்னை "கவிதையின் உபாஷகன்" என்று அழைத்துக் கொள்ளும் கவிஞர் பி. ராமன் மகத்தான ஆளுமை. கேரள நவீன கவிதைக்குக் கிடைத்த கொடை என்றே அவரைக் குறிப்பிடலாம். தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் இயங்கும் இளம் கவிஞர்களின் கவிதைகளை அவர் தொடர்ந்து அவதானித்து வருகிறார். "புதியன புகுதல்" என்பதற்கு உதாரணமாய் கேரள நவீன கவிதையில் நிகழும் மாற்றங்களை வரவேற்பவராக உள்ளார். 1992 களில் எழுத்தாளர் ஜெயமோகன் ஒருங்கிணைத்த குற்றாலம் கவிதைப் பட்டறை மலையாளக் கவிஞர்களை பெருமளவு பாதித்தும், அவர்களது கவிதைகளில் செல்வாக்கு செலுத்தியும் உள்ளது. அதன் நீட்சியாக இன்றும் கேரளாவில் அத்தகு முயற்சிகளை பி.ராமன் முன்னெடுக்கிறார். (தமிழிலும் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற வேண்டும்).

கவிதைக்காக மூன்று நாட்கள். கவிதை சார்ந்தும், கவிதை வாசித்தும், கவிதை கேட்டும், கவிதை மொழிபெயர்த்தும், கவிதை கவிதை என மூன்று நாட்கள். கடிகாரத்தின் மூன்று முட்களும் பிடித்த தருணத்தில் உறைந்து நின்றது போல மூன்று நாட்கள். தவிர கல்லூரியின் அத்தனை நிகழ்வுகளுமே கவிதைக்காகத்தான். கவிதை அமர்வுகள், கவிதை சார்ந்த ஓவிய அரங்குகள், நோக்குத்தி (திருஷ்டி பொம்மை) அறை. இதில் நோக்குத்தி (திருஷ்டி பொம்மை) அறை என்பது எனக்குப் புதிதாக இருந்தது. ஒரு இருட்டான அறையில் திருஷ்டி பொம்மையின் மூன்று புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. மூன்றும் மூன்று நிலைகளில், மூன்றும் ஒன்றல்ல.. அந்தந்த புகைப்படங்களுக்குக் கீழே கம்பியில் தொங்கும் பெரிய ஒலிவாங்கி (headphone). ஒன்றை எடுத்து காதில் மாட்டினால் அதற்கு நேர் எதிரே இருக்கும் திருஷ்டி பொம்மையின் புகைப்படம் எடுக்கப்பட்ட பின் கதையை அது சொல்கிறது. 

(ஒரு நாள் நான் பேருந்துக்குக் காத்திருக்கையில் அந்தத் திருஷ்டி பொம்மையைப் பார்த்தேன். நான் அணிந்திருந்த அதே சட்டையை அணிந்திருந்ததும் ஒரு கணம் திடுக்கிட்டேன்,etc...)

இப்படி மூன்று புகைப்படங்களுக்கும் மூன்று கதைகள். இருட்டான அறைக்குள் அமைதியாக ஒலிக்கும் குரல் - ஒரு திகிலான தியான அனுபவத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அதுபோக சுவரில் மாட்டப்பட்ட ஐபேடில் ப்ளே செய்தால் ஓடும் திருஷ்டி பொம்மை வீடியோ, டிவியில் ஓடும் திருஷ்டி பொம்மை வீடியோவைப் பார்க்கப் போடப்பட்ட நீள் இருக்கை என கவிதைக்குத் துணை செய்யும் ஒரு அரங்கு - கவிதை படிமம் போல்.. 

கார்த்திக் கே

நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னரே வாட்ஸப் வழி மொழிபெயர்ப்புகளை முடிக்கச் சொல்லியிருந்தனர். ஆகவே தமிழ் மலையாளக் கவிஞர்கள் பன்னிருவரும் வீட்டுப் பாடத்தை முடித்து பள்ளிக்கு வந்த பிள்ளைகள் போலே மிதப்பில் இருந்தோம். வாட்ஸப் வழி கவிதை மொழிபெயர்ப்புகளைச் செய்தது ஒரு புதிதான அனுபவம். ஒரு மலையாளக் கவிஞருக்கு ஒரு தமிழ்க் கவிஞர் என mutual ஆகத் தேர்வு செய்து மாறி மாறி மொழிபெயர்ப்புகளைச் செய்வது எனத் திட்டம். என்னுடைய கவிதைகளை மலையாளக் கவிஞர் கார்த்திக் கே மொழிபெயர்க்க விருப்பம் தெரிவித்திருந்தார். கார்த்திக் கே மலையாளத்தின் இளம் கவிஞர்களில் முக்கியமானவர். 21 வயதே ஆன இவர் அபாரமான கவிதைகளை எழுதியுள்ளார். "க்ளிங்" என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. மாணவர். சாதாரண விஷயங்களில் ஒளிந்திருக்கும் அசாதாரணத்தைக் கண்டுபிடிப்பதே இவரது கவிதை உலகம். விளையாட்டுத்தனம் இவரது கவிதை வடிவமாகக் கைக்கொள்ளப்படுகிறது. என்னுடைய கவிதை உலகத்திற்கு மிக நெருக்கமானது கார்த்திக் கே வின் கவி உலகம். கார்த்திக் கே வின் கவிதைகளை கவிஞர் ஆனந்த் குமார் 2022 ல் கவிஞர் லட்சுமி மணிவண்ணன் நடத்திய கன்னியாகுமரி கவிதை முகாம் அமர்வில் மொழிபெயர்த்து வாசித்திருக்கிறார். எனவே எனக்கு ஏற்கனவே கார்த்திக் கே வின் கவிதைகள் பரிட்சயமானதாக இருந்தன. விருப்பத்திற்குரியதாகவும் இருந்தன.

கன்னியாகுமரி கவிதை முகாம் 2022 ல் கவிஞர் ஆனந்த்குமார் மொழிபெயர்த்த கார்த்திக் கே வின் இரண்டு கவிதைகள்


1

காலம் செல்லச்செல்ல மனிதன் கனிவுள்ளவனாகிறான்

சிறு குழந்தைகளுக்கு ஊட்டும்போது

அவர்கள்

தண்ணீர் பருகும் தேக்கரண்டிகளுக்கு

அடம் பிடிப்பார்கள்


நான் அப்படி அடம்பிடிக்கையில்

அப்பா

கரண்டியை ஒளித்துவைத்துவிட்டு

‘அதைத் திருடன் கொண்டுபோய்விட்டானே’

எனச் சொல்வதை கேட்டிருக்கிறேன்


நானே தனியாக அள்ளியுண்கையில்

நேற்று 

ஒரு குழந்தையின் அப்பா

கரண்டியை ஒளித்துவைத்துவிட்டு

‘அது தண்ணீரில் கரைந்துவிட்டதே’

எனச் சொல்வதை கேட்டேன்


சாப்பிட்டு முடிக்கும் முன்பே 

நான் புரிந்துகொண்டேன்

காலம் செல்லச்செல்ல

மனிதன் கனிவுள்ளவனாகிறான்


2

கடைசியாக வயிறு நிறைந்தது 

(கார்த்திக் கே)

ஹோட்டல் என்பது 

இந்தக் காட்சியின் பெயர்

ஒரு பிரியாணி பார்சல் வேண்டுமென்பது 

இதன் பின்னனி

எனக்கு நன்கு பசிக்கிறது என்பதே

நாடகத்தின் அடிநாதம்


காட்சியில்

கடைக்காரன் தன் 

கதாபத்திரத்தின் சூழல் மறந்து

பிரியாணி மடக்க எடுத்த 

பேப்பரில் இருந்த

ஒரு இளைஞனின் படத்தைக் கண்டு 

அசைவற்று நிற்கிறான்


காட்சி சொதப்புகிறது

பின்னனி மாறுகிறது

நாடகத்தின் அடிநாதம் உடைகிறது


‘நீங்கள் இதிலல்ல

அடுத்த காட்சியில்தான் நடிக்கிறீர்கள்’

கோபம் கொண்டு நான் 

பேப்பரிலுள்ள  இளைஞனோடு

மேடையிலிருந்து இறங்கிப் போகிறேன்.

இந்த இரண்டு கவிதைகள் போகவும் கணிசமான கவிதைகள் ஆனந்த் குமாரால் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. எனவே அவை அல்லாத வேறு கவிதைகள் இருந்தால் மொழிபெயர்க்க அனுப்பும்படி நான் கார்த்திக்கிடம் கேட்டிருந்தேன். எனக்கு மலையாளம் தெரியாது. ஆகவே அனுப்பிய கவிதையை வாசித்து அனுப்புமாறும் கேட்டிருந்தேன். அப்படி கார்த்திக் அனுப்பிய முதல் கவிதைதான் "உதயம்". மிக நல்ல கவிதை

ഉദയം

പതിവിലും നേരത്തെയെണീറ്റ്

ഉദയം കാണാൻ പോയതായിരുന്നു.

അപ്പോൾ

അടുത്തു വന്നിരുന്ന നായ്ക്കുട്ടി

അതിൻ്റെ പിൻകാലുകളിലൊന്നുയർത്തി

ഇനിയുമുണങ്ങാത്ത, നീരൊലിക്കുന്ന

വ്രണം 

കാണിച്ചു തന്നു.

കഴിഞ്ഞ രാത്രി മുഴുവൻ

വേദനിച്ചിട്ട്

അതിനുറക്കം കിട്ടിയിട്ടുണ്ടാവില്ല-

എന്നു തോന്നി

ഞാൻ മിച്ചം പിടിച്ച അൽപം ഉറക്കം

ഒന്നു തലോടുന്ന മട്ടിൽ

അതിനു കൊടുത്തു.

എൻ്റെ കണ്ണുകൾ

നിദ്രയിലേക്ക് സാവധാനം അടയാറുള്ള

അതേ പോലെ

നായ്ക്കുട്ടിക്കാലിലെ ചീഞ്ഞ വ്രണം

അതാ.. 

മിഴി പൂട്ടുന്നത് കണ്ടു.

உதயம்

வழக்கத்தை விடவும்

சீக்கிரமே எழுந்து

உதயம் காணச் சென்றேன்


அப்போது 

அருகே வந்த

ஒரு நாய்க்குட்டி

பின்னங்கால்களில் ஒன்றை உயர்த்தி

நீர் ஒழுகுகிற 

புண்ணைக் காட்டியது 


கடந்த இரவு முழுதும்

வேதனையில்

அது தூங்கியிருக்குமா 

எனத் தோன்றவே

நான் மிச்சம் பிடித்த 

சொற்ப தூக்கத்தை

தடவுவது போல்

அதற்குக் கொடுத்தேன்


மெல்ல

எனது கண்கள் 

துயிலில் மூடுவதைப் போலே

அதோ அதன் புண்ணும் 

மூடக் கண்டேன்

மேற்கண்ட தமிழ் மொழிபெயர்ப்பே நான் செய்த உதயம் கவிதையின் இறுதி வடிவம். கார்த்திக் வாசித்து அனுப்பியதும் அதை Google translator ல் போட்டும் கவி ஆனந்த்குமாரிடம் கேட்டும் நான் ஒரு மொழிபெயர்ப்பைச் செய்தேன்.

உதயம்


அன்றென்னவோ

கொஞ்சம் முந்திச் சென்றேன்

உதயம் காண - 

நீண்ட உறக்கத்தின்

சிறு சிமிழை

சேமிப்பில் வைத்து


வழியிடையே

குட்டி நாயொன்று

பின்னங்கால் தூக்கிக் காட்டியது

சீழ் பிடித்த புண்ணை, ரணத்தை


நானதன்

குட்டி விழிகளைப் பார்த்தேன்,

தூங்கியிராத வேதனையை


குட்டி நாய்க்குட்டியே

என் சேமிப்பின் சிமிழிலுள்ளது

சிறு உறக்கம்

நானதை உனக்குத் தருவேன்


ஆழ் தூக்கத்துள்

என் விழி மூடுவது போல

உன் புண் மூழ்கட்டும்

இதைக் கவி ஆனந்த்குமாருக்கு அனுப்பியதுமே அவர் கண்டுபிடித்தார் இதில் ஏதோ சரியில்லை என்று. மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பவன் தேடுவது வெறும் சொல் அல்ல. அது மாற்றுச் சொல். நேரடியாக எழுதும்போது கூட நேரடிச் சொல் ஒன்று வந்துவிழுந்து விடலாம். எல்லா இடங்களிலும் மாற்றுச் சொல் குறித்த யோசனை தேவைப்படாது. ஆனால் மொழிபெயர்ப்பு மாற்றுச் சொற்களால் ஆனது. இது பொருந்துமா இது சரியாக இருக்குமா என மனைவியை துணிக்கடைக்குக் கூட்டிச் சென்றது போல மாற்றுச் சொற்களை மாற்றி மாற்றிப் போட்டபடி இருக்கவேண்டும். ஆனந்த் குமார் இதில் என்னை மலையாள 'ஒலி' பொருந்தும்படியான தமிழ் மாற்றுச் சொற்களைப் போட்டுப் பார்க்கச் சொன்னார். பின்னர் எனக்கு சற்று புரிந்தது. தோசையைத் திருப்புவது மாதிரி அவர் கொடுத்த இந்த யோசனை எல்லா கவிதைகளுக்கும் பொருந்தாதுதான். ஆனால் இந்தக் கவிதைக்கு ஓரளவு பொருந்தி வந்தது. அதே போல மொழிபெயர்ப்பில் இரண்டு உண்டு. சொற்களை அப்படியே மொழிபெயர்ப்பது, சொற்களை நம் இஷ்டம் போல் மாற்றி அர்த்தத்தை மொழிபெயர்த்துவிடுவது. 

(இது குறித்து கவிதைகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த ஒரு உரையாடல் கட்டுரையில் பேசப்பட்டிருக்கும் -(நெல்லை சந்திப்பு) இந்தக் கவிதையில் மலையாளத்திற்கு இணையான தமிழ் வார்த்தைகளைப் போட்டும் கவிதை சரியாக அதன் அர்த்தத் தளத்தை அடைந்தது. கார்த்திக் கே வின் கவிதைகள் எளிய மொழியில் அமைந்தவை. ஆனால் அவை அடையும் கவித்துவ தருணம் ஆழமானவை. இந்த எளிய கவிதையை மொழிபெயர்க்கையிலும் நிறைய இடங்களில் சந்தேகம் வந்தது. "நாய்க்குட்டி பின் கால் தூக்கி" என்று முதலில் மொழிபெயர்க்க அது தமிழில் ஒரு நாய்க்குட்டி சிறுநீர் கழிக்கும் காட்சியைத் தந்தது. பிறகே பின்னங்கால்களில் ஒன்றை உயர்த்தி என்று மாற்றினோம். அதே போல மலையாளத்தில் "அல்பத் தூக்கம்" என்றிருந்ததை தமிழில் "சொற்பத் தூக்கம்" என்று மாற்றினோம். அல்பம் என்பது தமிழில் கேலி செய்வதற்கும் பயன்படும் ஒரு சொல். ஆனால் மலையாளத்தில் "சொற்பம்" என்ற பொருள் மட்டும்தானாம். ஆகவே அதை சொற்பம் என்று மாற்றினோம். மொழிபெயர்ப்பில் பெரும் பங்கு ஆனந்த்குமாருடையதே. 

இரண்டாவதாக கார்த்திக் கே அனுப்பிய கவிதை "நடுக்கம்" அதையும் மேல்சொன்ன கவிதைக்கு செய்த அதே முறைமைகளைப் பின்பற்றி செய்து பார்த்தேன். ஆனால் மொழிபெயர்ப்பு சரியாக அமையவில்லை.

நடுக்கம்

கண்ணாடிக்கு முன்னால் நின்று 

தெரிந்தவர்களை நடித்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது


ஒருதடவை மட்டும் 

கண்ணாடி 

நடுங்கும் பாவத்தில் 

ஒருவரை கண்டுபிடித்தது 


இந்த செய்தியை 

நான் அவரிடம் சொன்னபோது 

அதைவிட நடுங்கிய அவர் 

தானே உடைவது போலொரு 

சப்தத்தை எழுப்பினார் 


அந்த செய்தியை 

நான் கண்ணாடியிடம் 

தெரிவித்தேன்


அப்போது கண்டுகொண்டேன் 

இதற்கெல்லாம் பின்னால் உள்ள 

அந்த 

உடைந்த ரகசியத்தை

கார்த்திக் கே வின் இந்தக் கவிதையில் மொழிபெயர்த்த எல்லா சொற்களும் எளியவைதான். ஆனால் சொற்களிலிருந்து விடுபட்டு கவிதை கவிதையை அடையும் இடத்தை எவ்வளவு முயன்றும் பிடிக்கவே முடியவில்லை. மலையாள மூலத்தை அதே செறிவோடு மொழியாக்கம் செய்வதில் பெரும் சவாலாக அமைந்தது இந்தக் கவிதை. இந்தக் கவிதைக்கு ஒரு abstract தன்மை உண்டு. பார்ப்பதற்கு எளியது போன்ற தோற்றம். மொழிபெயர்க்கையிலேயே அதன் சிக்கல் புரிந்தது. மலையாளக் கவிஞர் பி.ராமன் அவர்களிடம் இது குறித்து பேசிக்கொண்டிருந்தபோது தமிழில் யாருடைய கவிதைகளை மலையாளத்தில் மொழிபெயர்ப்பது எளிது என்று கேட்டோம். அவர் யோசிக்காமல் சுகுமாரன் என்றார். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சி தீர்வதற்குள் யாருடைய கவிதை மொழிபெயர்ப்பு கஷ்டமானது என்று சொல்லி அடுத்த அதிர்ச்சியையும் கொடுத்தார், அது - கலாப்ரியா. தமிழ் வாசிப்பில் இது தலைகீழானது. கலாப்ரியாவின் கவிதைகள் தமிழில் பார்க்க எளிமையானது போல் தோன்றினாலும் அதிக பண்பாட்டு/உறவுப் பின்புலங்களைக் கொண்டிருக்கும். அதை மலையாளத்திற்கு மொழிபெயர்ப்பது சிரமம் என்று கூறி எங்களுக்கு விளங்க வைத்தார். இன்னொன்று மலையாள மொழி இன்னொரு மொழியிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டு வளரும், சமஷ்கிருதத்திலிருந்து எடுக்கும்; தமிழிலிருந்து எடுக்கும், ஆங்கிலத்திலிருந்து எடுக்கும். பஸ் என்பது மலையாள வார்த்தைதான் தெரியுமா என்று சிரிப்போடு கேட்டார் முதல் நாள் பட்டறையில் ஜமீல் சார்.

அமித்

முதல் நாள் காலை பட்டறையில் ஜமீல் சார் தலைமை தாங்கினார். வே.நி.சூர்யா, பெரு.விஷ்ணுகுமார், சந்திரா தங்கராஜ், மதார், அமித் (மலையாளக் கவி), சரண்யா (ஒருங்கிணைப்பாளர்) ஆஜரானார்கள். மற்றவர்கள் மதியம் இணைந்து கொண்டனர். இதில் மேற்சொன்ன மலையாளக் கவி அமித்துக்கு தனிச்சிறப்பு உண்டு. அவர் ஒரு மோகினி ஆட்டக்காரர். சாயம் பூசாத தன் இயல்பான கருப்பு நிறம் கொண்டே மோகினி நடனம் ஆடுபவர். அவரது "நடன உலகம்/ நடன வாழ்வு" அவரது கவிதை உலகமாகவும் அமைகிறது என்பதே அமித்தைத் தனித்துக் காட்டும் ஒன்று. தமிழில் அப்படி யாருமே இல்லையென நினைக்கிறேன். மருத்துவர் மருத்துவ உலகை எழுதுவது/கொண்டு வருவது, நடனக்காரர் அல்லது பாடுபவர் அதைத் தன் படைப்புலகத்தோடு பொருத்துவது புனைவாசிரியர்களில் இருக்கலாம். அ-புனைவில் இருக்கலாம். கவிதையில் இல்லையென்றே நினைக்கிறேன். அப்படியே இருந்தாலும் குறிப்பிடும்படியான கவிதையை எழுதியுள்ளாரா? தெரியவில்லை. தொழில் உலகம் வேறு. கவிஞன் தன் ஆளுமைக்குள் அதைக் கொண்டு வந்து எழுதுவது அரிதினும் அரிது. அமித் அத்தகைய அரிய கவி. ஆனந்த்குமார் மொழிபெயர்த்த அமித்தின் சில கவிதைகள்,

1

நடனம் ஆடுகையில்

நான் 

தொடுவதெல்லாம் எனது.

நிலவும் ஆகாயமும் எனது.

அசைவுகள் நான் 

அளந்தெடுப்பதெல்லாம் எனது

பார்க்கும் திக்கெனது 


2

நர்த்தகன்

ஒரு நர்த்தகன்

ஓய்ந்தவொரு தருணத்தில் 

இறகுகளை அடுக்கும் 

பறவைபோல 

அசைவுகளை பூட்டிவைக்கிறான்


எத்தனை மலர்கள் 

விரல்களில் 

விரியாமல்

வாடாமல் 


அந்த மனிதன் 

கண்களை மூடுகிறான்

நூற்றியோரு மேடைகளில் 

ஆடிய பாடலில்

ஏதோவொரு நிமிடத்தில் 

இன்னுமொரு தடம்வைக்க 

சாத்தியம் இருப்பதை

சட்டென நினைக்கிறான்


ஏதோ நடனத்தில்

அமைதியாய் மிதக்கிறான்


3

நிற்றல்

பாதி உடலில் 

ஒரு பாம்பு

எழுந்து நிற்கிறது 


மிகவும் தனிமையாய் 

மண்ணில் இருந்து

ஆகாயத்திற்கு 

ஊர்ந்து ஏறி

வீழாமல் நிற்கிறது 


வெட்டவெளிக்கு 

முகம்காட்டி


கைகால்கள் எல்லாம் 

விரித்து

கைகால்கள் இல்லாமல் 


பாதி ஆகாயத்திலும்

பாதி மண்ணிலுமாய்

ஒரு பிரார்த்தனை 


சாத்தியமான உயரத்தில்

தியானம் போன்ற நடனத்தில் 

விரல்களில் நின்று

நான் நிகழ்த்துவது போல்

அசோகன் மறையூர்

மதிய அமர்வில் மலையாளக் கவிகள் அபிராம், அம்மு தீபா, அசோகன் மறையூர், ரெம்யா தெரவூர் ஆகியோர் இணைந்தனர். இதில் அசோகன் மறையூர் சந்திரா தங்கராஜின் கவிதைகளை மொழிபெயர்க்க விருப்பம் தெரிவித்திருந்தார். அபூர்வமான ஒற்றுமை என்னவெனில் இருவருமே நிலம் சார்ந்து எழுதுபவர்கள்/இருவருமே பக்கத்து பக்கத்து ஊர்க்காரர்கள். அசோகன் மறையூரை தன் "இணை-கவி" என்றே சந்திரா குறிப்பிட்டார். "நீங்கள் எழுதாத ஒன்றை நான் எழுதவேண்டும் என்பதே சவால்" என்று அசோகனும் சந்திராவிடம் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் சந்திரா தங்கராஜின் கவிதைகளை அசோகன் மறையூர் முன்னரே வாங்கிப் படித்திருக்கிறார் (இந்த நிகழ்வுக்காக அல்ல). அதே போல் மலையாளத்தில் எழுதி வரும் இளம் கவிஞர்கள் பலரும் தமிழ் நவீன கவிதையில் என்ன நடக்கிறது என்ன எழுதப்படுகிறது என்பதை தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். பி.ராமன் தமிழில் எழுதி வரும் பல கவிஞர்களின் கவிதைகளை மொழியாக்கம் செய்து பார்க்கிறார். தமிழ்க் கவிஞர்களே அதிகம் கவனிக்காத தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளையும் அவர் கவனிக்கிறார். அவரைப் பொறுத்தவரை கவிதையே முக்கியம். ஆகவே நல்ல கவிதைகளை அவர் தவறவிடுவதில்லை. அசோகன் மறையூரின் கவி உலகம் சந்திரா தங்கராஜின் உலகம் போலே நிலத்தால் கட்டமைக்கப்பட்டது. அசோகன் மறையூர் என்ற பெயரும் அவரது கவிதைகளும் தமிழ் வாசகர்களுக்கு நிர்மால்யா மொழிபெயர்த்த "கேரளப் பழங்குடி கவிதைகள்" (தன்னறம் வெளியீடு) தொகுப்பின் வழியாக ஏற்கனவே பரிச்சயமானது. அசோகன் மறையூர் சந்திரா தங்கராஜின் "மாய இழை" "மாய ராணி" உட்பட பல கவிதைகளை மொழிபெயர்த்திருந்தார். "இழை" என்ற தமிழ்ச் சொல்லின் மலையாள மாற்றுச் சொல் குறித்து பேசினார். சந்திராவின் "மாயராணி" கவிதை அங்கு பலரால் சிலாகிக்கப்பட்டது. சிறிய கவிதையாக இல்லாமல் அசோகனின் பெரிய கவிதை ஒன்றை சந்திரா மொழிபெயர்த்தார். சவாலான அந்தப் பணியை அவர் வெகுசிறப்பாகச் செய்தார். சந்திரா மொழிபெயர்த்த அசோகன் மறையூரின் சில கவிதைகள், 

1

இந்த ஆண்டு டிசம்பர் பூக்கள் தந்த ஏழு கவிதைகள்

மலையில் முதல் பருவத்தில்

எப்போதும் பயணப்படும் 

அதே காட்டுவழியில் நடக்கிறேன் 

கையில் பிடித்திருக்கும் 

என் ஊன்றுக்கோலுக்கு முன்னால்  

கூட்டம் கூட்டமாக

என்னை கடந்து செல்கின்றன பட்டாம் பூச்சிகள்

அதன் பின்னே வசந்தத்தை மேய்த்தபடி

நானும் போகிறேன்..



இரண்டாம் பருவத்தில் மலைக்காடு

இந்த ஆண்டிலேயே மிகவும குளிரேறிய‌ இரவுகளைக் கொண்டிருந்தன.

நான் குன்றின் மேலேறி

ஒரு பாறை இடுக்கினுள்‌ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு

கீழே சமவெளியைப் பார்க்கிறேன்.

குடுவையில் அடைக்கப்பட்ட மின்மினிப்பூச்சிகள்

ஒவ்வொன்றாக வெளியேறுவதைப்போல

ஒவ்வொரு பகலும் முடிந்து கொண்டிருந்தன.

ஒவ்வொரு பகலும் எனை   கடந்தகாலத்திற்கு அழைத்துச் சென்றது.

ஆனால்  வெகு  சீக்கிரத்தில் அவையெல்லாம் 

சில்வண்டுகளாக மாறின.

அவை ஒவ்வொன்றின் முதுகையும் துளைத்துக்கொண்டு

பல்லாயிரம் சில்வண்டுகள் வெளியேறின.

பாறைகளிலும் மரங்களிலும் அமர்ந்து 

சத்தமிடும் அவற்றின் ஓசையால் காடு நிறைகிறது.

குடுவையிலிருந்து வெளியேற விரும்பாத அந்த மின்னாம்மினியின் பகலில்

நமக்கான ஒரு வேனல்‌ மழை ஒளிந்திருக்கிறது..


மூன்றாம் பருவத்தில்

பூக்களில்

பார்வையற்றோர் எழுத்தை தொடுவதைப்போல 

எத்தனை முறைதான் ஒரு பட்டாப்பூச்சி

தன் கால்களால் 

ஒவ்வொரு வசந்தத்தையும்  தொட்டறிகிறது.


நான்காம் பருவத்தில் 

ஓராயிரம் விதிகளால் 

ஒரு நபர் வாழும்  உலகமாக மாறுகிறது காடு. 

மொத்த மழையும் நனைத்தாலும் 

அவை மழையோடு சேராமலும்

மொத்த வெயிலும் பிரகாசிச்சாலும்

அவை வெயிலோடு சேராமலும்

காதலால் முழுமையாக ஆட்கொண்டாலும் 

அவை காதலை நெருங்காமலும்

தனியே அலைகிறது

ஒன்று கேட்கட்டுமா

இப்படி இருந்துகொண்டு

காடே 

எனக்கு நீ தந்த  மெளனத்தை 

எத்தனை ஜென்மம் எடுத்துதான்

எழுதித் தீர்த்தாய்.


ஐந்தாம் பருவம்

விதைகளின் கர்ப்பபையில் 

எத்தனை அழகாக

ஒரு பட்டாம்பூச்சியைப் போல

முத்தம் இட்டுச் செல்கிறது

அப்போது குளிர்ந்த விதைகளின் மென்மைக்கு ஏங்கி

பட்டாம்பூச்சிகள் மரிக்கின்றன

அதுவும் இல்லையென்றால் 

ஒரு வசந்தத்திற்கு

என்னதான் மதிப்பு



ஆறாம் பருவத்தின் வேனல் சூட்டில்

டிசம்பர் பூவில் அமர்ந்திருந்த  பட்டாம்பூச்சியின்‌ றெக்கைகள் 

ஏரிவதைப்போல படபடக்கின்றன.


ஏழாம் பருவத்தில்

நாம் இல்லாத பொழுதில்

காற்றில் அலைந்த பட்டாம்பூச்சி 

இறுதியாக பறந்து செல்கையில்

தன்னோடு சேர்த்து காட்டின் வசந்தத்தையும்

எடுத்துச் சென்றது.


2

கடிகார ஆமை


என் வீட்டில்

ஒரு சாவி இயக்கியும்

நான்கு கால்களுமுடைய   

வார்கள் அறுந்த கடிகாரம் ஒன்றும் 

மேஜை மேலே வெறுமனே கிடக்கும்.

எப்போதும் வானொலியின் அருகில்தான் 

அதன் இருப்பிடம்.


அப்பா அதையே பார்த்தபடி இருப்பார் 

பின் திடீரென அதை கையிலெடுத்து

சாவி இயக்கியால் பலமுறை திருகுவார்

அது சிறியதொரு ஆமை 

குஞ்சினைப்போல

அவருடைய கைகளிலிருந்து ஓடத்தொடங்கும்.


ஒரு ஆமையைப்போல அதன் தலை

எப்போது  வெளியே நீளுமென்றும்

சாவி இயக்கியை எப்போது  திருகவேண்டுமென்றும் 

அப்பா மட்டுமே அறிவார்


பின் மெதுமெதுவாக என் அப்பாவும் ஆமைக்குஞ்சினைப் போலவே நடக்கத் தொடங்கினார்

இப்போது அப்பாவும் அந்தக் கடிகாரமும்

நாற்காலியில் அருகருகில்தான் இருக்கிறார்கள்.


அந்த இருப்பில் அப்பாவுக்குத் தெரியும்

சிலநேரங்களில் நேரமென்பது

ஆமையின் மேல்புறத்திலுள்ள கெட்டியான ஓடு என்றும் 

சிலநேரம் கண்ணாடியைப்போல 

ஒரு  விழுகையில் 

சில்லு சில்லென சிதறிப்போகுமென்றும்


மேலும்: மாற்றுச் சொற்கள் - 2

***

இசை தமிழ் விக்கி பக்கம்

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்

சந்திரா தங்கராஜ் தமிழ் விக்கி பக்கம்

பெரு. விஷ்ணுகுமார் தமிழ் விக்கி பக்கம்

ஆனந்த்குமார் தமிழ் விக்கி பக்கம்

கவிஞர் மதார் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

மாற்றுச் சொற்கள்: 2 - மதார்


அபிராம்
சந்திராவின் "மாயராணி" கவிதை போலவே பெரு.விஷ்ணுகுமாரின் "காலம் போல கல்" கவிதை மலையாளத்தில் சிலாகிக்கப்பட்டது. பெரு.விஷ்ணுகுமார் மலையாளக் கவி அபிராமின் இரண்டு கவிதைகளை மொழியாக்கம் செய்திருந்தார். அவை : 

1

எளிதல்ல இந்த முகபாவம்

1989-இல்

பகலென்று தோன்றாத

ஒரு பகலில்,

மழையென்று உறுதியாய் கூறமுடியாத 

ஒரு மழையில்


சுயம் இழந்த வண்ணத்துபூச்சிகளை

தேநீர் அருந்தும்போது

நினைத்துப்பார்க்கும் கிருஷ்ணன்குட்டியின் 

பிரத்யேக முகபாவம்

பின் எத்துனை முயன்றும்

அவனால் 

மீண்டும் கொண்டுவர இயலவில்லை 


மாற்றி மாற்றி 

எத்தனை பகல்கள் வந்தபோதும்

சலிக்கும் வண்ணம் 

எத்தனை மழை பெய்தபோதும்

வண்ணத்துப்பூச்சிகள் பற்றி 

எவ்வளவோ சிந்தித்தபோதும்

கிருஷ்ணன்குட்டிக்கு அந்த முகபாவம் 

வளைந்து கொடுக்கவில்லை 


கிருஷ்ணன்குட்டி ஒரு நடிகனாய் இல்லாதது

அவருடையதும் நம்முடையதுமான பாக்கியம்


மீண்டும் ஒருமுறை

அந்த முகபாவத்தை

நான் கண்டது

இதனை வாசித்துக்கொண்டிருக்கும்

உங்களிடம் தான்


உள்ளதைச் சொல்கின்றேன்

கிருஷ்ணன்குட்டியை விட

அந்த முகபாவம்

பொருந்துவது உங்களுக்கு தான்


நீங்கள் ஒரு மகாநடிகன் தான்...

2

வரைபடம்


ரவி ஆசாரி

எப்பொழுது வருவாரென

யார் அறிவார். 


வழியில் எத்தனை

பீடித்துண்டுகளை அடையாளமாக

வைத்து வந்தாரென 

யார் அறிவார். 


இனி இப்பொழுது வேலை துவங்கினால் 

மாந்த்ரீகம் செய்வதுபோல் 

எத்தனை பாழும் பலகைகளில் 

புள்ளிகள் வைத்துக்கொண்டிருப்பாரென்று 

யார் அறிவார்.


எத்தனை கூட்டிக் கழித்தலின் வழியே

அவர் இந்த புள்ளிகளை வரைகிறார்.


இனி இப்போது 

புள்ளிகளினூடே ஒரு பென்சில் ஓடினால்

கணக்கு சரியாகி 

அதிலொரு கப்பல் தெளிந்து வராதென்று 

யார் கண்டார்


மெருகேற்றி மெருகேற்றி

பெருகிவரும் மரச்சுருள்கள்

ஒரு கடல் போலாகுகையில் 

ரவியாசாரி அதில் தன் 

பாய்கப்பலை இறக்கமாட்டாரென

யார் கண்டார்.

இந்த இரண்டு கவிதைகளுமே ஒரு கதாபாத்திரத்துடன் துவங்கி அதன் பயணங்கள், குழப்பங்கள் என நீண்டு கவிதையின் முடிவிலா மர்மத்துக்குள் அமிழ்ந்து அழகாகின்றன. அபிராம் மலையாளக் கவிகளில் பன்முகத் தன்மைகொண்ட கவிதைகளை எழுதுபவர். இதுதான் இவர் உலகம் என வரையறுப்பது கடினம். விளையாட்டுத்தனமான மொழிநடையில் கோமாளி ஏறும் சிகரம் போல உயரத்தை அடைந்துவிடுவது. பெரு.விஷ்ணுகுமார் தன் உரையில் அபிராமின் கவிதை பற்றி குறிப்பிடுகையில் "'பிராந்தன்' என்பதற்கும், 'என்ன ஒரு பிராந்தன்' என்பதற்கும் வேறுபாடு இருப்பது போல அபிராம் தன் கவிதைக்குள் நகை உணர்வை அனாயசமாக, இயல்புக்கு அப்பாற்பட்டு கடத்திவிடுகிறார்" என்று குறிப்பிட்டார். அதே போல அபிராம் கவிதையை வாசித்த விதம் அது அற்புதமானது. தமிழில் கவிதைகளை படிப்போம், மலையாளத்தில் வாசிக்கிறார்கள், பாடுகிறார்கள், நடிக்கிறார்கள். அது அவர்களின் பண்பாட்டில் ஒன்றாக இருக்கிறது. தமிழில் எழுத்து/வானம்பாடி என்ற பிளவிலிருந்து கவிதை பிரிந்ததாலோ என்னவோ அவர்கள் செய்வதை இவர்கள் செய்யக்கூடாது,இவர்கள் செய்வதை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்ற யூத/இஸ்லாமிய நடைமுறை இருந்து வருகிறது. தமிழ் நவீன கவிதை கவிதையை மெளனமாக வாசிக்கவே சொல்கிறது. மேடை வாசிப்பு நமக்கானதல்ல என்று எண்ணுகிறது. ஆனால் மலையாளத்தில் அந்த பாகுபாடு இல்லை. அவர்கள் 'ஒலி' வடிவில் அதை அழகுறச் செய்கிறார்கள். தமிழிலும் அழகாக வாசிக்கும் கவிகளுண்டு. வெய்யில் அழகாகப் பாடவே செய்வார். மனுஷ்யபுத்திரன் அழகாக வாசிப்பார். இளம் கவிஞர்களில் சோ.விஜயகுமார் வாசிப்பை ஒரு கலையாக நிகழ்த்தி வருகிறார். இன்னும் பலர் உள்ளனர். இருந்தும் அந்த இறுக்கம் இன்னும் தளரவில்லை. அது தமிழிலிருந்து சென்றிருந்த எங்கள் அனைவரிடமுமே இருந்தது. நான் வாசித்த என் பூக்கடைக்காரி, காட்சி அதிசயம் கவிதைகளை மலையாளத்தில் கார்த்திக் கே வாசித்தபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆகவே தமிழ்க் கவிகள் நாங்கள் மலையாளத்திற்கு ஏற்றாற்போல் அங்கு சற்றி ஓங்கியே ஒலித்தோம். 

ரெம்யா தெரவூர்

மலையாளத்திலிருந்து இரண்டு இளம் பெண் கவிகள் வந்திருந்தனர் - அம்மு தீபா மற்றும் ரெம்யா தெரவூர். இதில் அம்மு தீபாவை ஆனந்த் குமார் மொழிபெயர்ப்பின் வழியாக தமிழ் வாசகர்கள் ஏற்கனவே அறிந்துள்ளனர். அவரது "குளம்" கவிதை குறித்த குறிப்பு கவிதைகள் இதழில் முன்பே வெளிவந்துள்ளது (அம்மு தீபா கவிதைகள்) அம்மு தீபா கவி ஆளுமையாகவும் பித்து நிலையிலேயே இருப்பவர். தமிழில் பிரான்சிஸ் கிருபாவை அப்படிச் சொல்வார்கள். 24 மணி நேரக் கவி வாழ்வு. பெண் கவிகளில் இது சாத்தியமா என்று கேட்டால் மலையாளத்தில் அம்மு தீபாவைக் காட்டலாம். என் முன் ஜென்மம் தமிழ் நிலத்தில் கழிந்தது என்று கூறும் அம்முவின் கவிதைகள் பெண் மனமே தொடும் ஆழமான விஷயங்களை எளிமையான மொழியில் தரிசனங்களாக முன்மொழிபவை. அம்மு தீபாவின் கவிதைகளைத் தமிழில் கவிஞர் லாவண்யா சுந்தரராஜன் மொழிபெயர்த்திருந்தார். அவற்றில் சில : 

1

முக்தி

இறந்து போன தாத்தா

ஒரு கிருஷ்ணப்பருந்தை

வீட்டைப் பாதுகாக்க அமர்த்தியிருந்தார்


வீட்டின் மேற்கூரைச் சுற்றி

அது எப்போதும்

வட்டமிட்டுப் பறந்துகொண்டிருந்தது


விடிந்தலிருந்து மாலை வரை

மங்கிய வெயிலில் விசுகென்று

ஒளியெழுப்பி

நாய்களை வெருளச் செய்யும்


"செத்தாலும் நிம்மதி

தரவில்லை கிழவன்"


தலை திவசத்தினத்தில்

பாட்டி

பருந்துகிரையாக கோழிகுஞ்சை பொறிக்குள் வைத்தாள்


பருந்து கீழிறங்கி

பொறிக்குள் வந்தது


நல்ல உச்சி பொழுதில்

புழுக்கத்தோடு

ஓராண்டு பசியில்

தாத்தா வந்திருந்தார்


பருந்தை பிடித்து நெருப்பிலிட்டு  

நல்ல மசால் தடவி பொறித்தாள்


அதை தலை வாழையிழையிட்டு  

படையலாக வைத்தாள் பாட்டி

2

நள்ளிரவில்

நள்ளிரவில்

மொட்டை மாடிக்கு

ஏறி வருபவள்


மிளாவின் கொம்பிலேறி

நிலாவொன்று

மலையை கடப்பதைக் கண்டாள்

அம்மு தீபா

அம்மு தீபாவின் கவிதைகளை மட்டுமல்லாமல் பலரது கவிதைகளையும் லாவண்யா சுந்தரராஜன் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். வாட்ஸப் க்ரூப்பில் புயல் வேகத்தில் தினசரி அவர் செய்துவந்த மொழிபெயர்ப்புகளைப் பார்த்து பலர் ஊக்கம் பெற்றனர். விட்டல் ராவ் - விளக்கு விருது நிகழ்வில் அவர் பேசவேண்டி இருந்ததால் இறுதி நாளிலேயே எங்களோடு இணைந்துகொண்டார். அவரது கவிதைகளை அம்மு தீபா மலையாளத்தில் மொழிபெயர்த்திருந்தார். 

ரெம்யா தெரவூரின் கவிதைகளை ஆனந்த் குமார் தமிழில் மொழிபெயர்த்தார். பெண் உலகை / பால்யத்தைப் பேசும் அவரது கவிதைகள் உணர்வுத் தளத்தை ஆதாரமாகக் கொண்டு எழுதப்படுபவை. 

1

மகள் வரைந்த வீடு

ஐந்து வயதுள்ள 

எனது மகள் 

அவளது வீட்டை வரைகிறாள் 


வீடு

மரம்

பூக்கள்

நடைவழி 

ஆறு 


வரைவதை நிறுத்தி பாதியிலெழுந்து

அவள் வெளியே ஓடுகிறாள் 


பென்சிலை எடுத்து நான்

வீட்டைச்சுற்றி நிறைய காற்றாடி மரங்களை அதில் 

வரைந்து சேர்த்தேன் 


எனது தலைக்குருதியின் 

பைத்திய மான்கள் ஓடும் 

இந்த காட்டை 

மகள் இதற்குமுன் பார்த்ததேயில்லை 


அவள் வரைந்த மரக்கிளைகளில் 

இணையை தொலைத்த கிளி 

எனது பெயரைச்சொல்லி அழைப்பதை  

அவள் கேட்டதே இல்லை


இடையிடையில்

எனது கரடிக்கண்களின் நிறம் படரும் இந்த பூக்கள் 

எத்தனை வருடங்கள் கழித்து 

அவளது மெலிந்த விரல்களுக்கிடையில்

பூக்கும்?


அவள் பாதி வரைந்த நடைபாதைக்கருகில் 

புன்னை மரத்தடியில் 

இரவுகளில் நான் 

பேய்போல் அலைவதை 

அவள் அறியப்போவதேயில்லை


வீட்டிற்கருகிலுள்ள 

ஆற்றின் கரையில் 

எனது ஏழாவது மரணமும் கடந்துதான்

நான் துவட்டி ஏறி அமர்ந்திருக்கிறேன் என்பதை 

அவள் 

யூகிக்கக் கூட முடியாது 


சிறிது கழித்து 

செம்பின் நிறமுள்ள முடிகள் கொண்ட 

எனது மகள் திரும்பி வந்தாள் 


நான் வரைந்த 

காற்றாடிக் காட்டின் இடையிலிருந்து 

வெளிச்சத்தின் ஒரு துண்டை எடுத்துக்கொண்டு 

அந்த பாதைகளில் ஓடிமறைந்தாள்

2

அம்மாவின் ஞாபகம்

  

அம்மாவிற்கு ஞாபகம் மறைந்து போனபின்  

இரவுகள் விடியாமலும்    

வெளிச்சம் இருளாமலுமானது  

  

மேற்கு அறையின் உத்தரத்தில்  

நீல விரிப்பின்மேல்  

நான்கு துண்டு மேகங்களை   

அம்மா எப்போதும் வெட்டித்தொங்கவிடுவாள்  

  

இடையிடையே வாசலில் வந்து  

நிற்கவைத்த இடத்திலேயே சூரியன் இருக்கிறதாவென  

எட்டிப்பார்ப்பாள்  

  

அவள் வளர்த்துவரும் ஒரு காயலின் குறுக்கே  

பாலம் வந்து வெகுநாட்களான பின்னும்  

இப்போதும் அம்மா  

ஒரு சட்டியும் முறமும் சுமந்து   

இல்லாத படகுதுறை ஏறி  

இல்லாத தேவாலயத்தின் திருவிழா முடித்து  

தினமும் மாலை திரும்பி வருவாள்  

  

பருவம் தப்பிய மழை  

என்னை எட்டிக்கடந்து  

அம்மாவிற்கு மேல் மாத்திரம்   

நின்று பெய்வதை நான் ஏக்கத்துடன் பார்த்திருப்பேன்   

  

கட்டில் கால்களில் கைகள் ஊன்றிக் குனிந்து  

ஒரு அறுவடைகாலத்தை மிதித்து முடிக்கையில்   

வரப்புகளிலிருந்து அனிலும் கீரியும்  

நூற்றாண்டுகள் பழக்கமுள்ள ஞாபகத்தில்  

அம்மாவைப்போல் தலைநீட்டிப் பார்க்கும்  

  

இறந்தவர்களின் மொழியை எவ்வளவு எளிதாக அம்மா பேசிவிடுகிறாள்  

அதுதான் 

பத்தாண்டுகளுக்கு முன்பு இறந்த கனவனின் ஓலம்  

தாழை முள்ளென அம்மாவின் இருபுறமும் துளைத்து முளைக்கிறதா   

  

ஞாபகங்கள் இல்லாததனால்தானோ என்னவோ  

அன்று வரப்பில் இருந்த   

பொன்மானும் கீரியும் நீர்கோழியும்  எல்லாம்

உள்ளறையின் வாசல்வந்து  

அம்மாவின் மொழியைப் பேசுகின்றன.

ஆனந்த் குமாரின் கவிதைகளை மலையாளத்தில் ரெம்யா தெரவூர் மொழிபெயர்த்திருந்தார். ஆனந்த் குமார், வே.நி.சூர்யாவின் கவிதைகளை மலையாளத்தில் விரும்பி வாசித்தனர். ஆனந்த் குமார் ஏற்கனவே மலையாளத்தில் அறியப்பட்டிருந்தார். ஆனந்தை அவர்கள் மலையாளக் கவியாகவே பார்த்தனர். வே.நி.சூர்யாவின் கவிதைகளை அமித் மலையாளத்தில் மொழிபெயர்த்திருந்தார். வே.நி.சூர்யாவின் "பிரிவைச் சந்திப்பு என்றும் சொல்லலாமா" கவிதையில் இடம் பெறும் பலவீன ரோஜா எப்படி ஒரு ஆழமான படிமமாக மாறுகிறது என்பது குறித்து சந்திரா தங்கராஜ் விளக்கினார். 

அதே போல இதற்கு முன் நடைபெற்றிருந்த தமிழ் மலையாள மொழிபெயர்ப்பு பட்டறைகள் குறித்தும் மலையாளக் கவிகள் சிலாகித்து பேசினர். கவிஞர் ச.துரையின் "ஆப்பிள்" கவிதை இன்றும் நினைவுகூறப்படும் ஒரு இனிய கவிதையாக அவர்களின் மனதில் தங்கிவிட்டது.

கூடைக்குள் வைக்கப்படுகிற

ஆப்பிளைப்போலத்தான்

ஒவ்வொரு இரவுகளிலும்

உன்னைத் தொட்டிலுக்குள்

வைப்பேன் மகளே

நீ அத்தனை சிவப்பு

மொழி அத்தனை இனிப்பு

அம்மா உனக்கு அழகான குடுமி இடுவாள்

அது அப்படியே ஆப்பிளின்

காம்பைப்போல்  இருக்கும்

அதே போல் இன்றும் நினைவுகூறப்படும் இனிய கவியாக அவர்களின் மனதில் தங்கிவிட்டவர் கவிஞர் இசை. இன்ப அதிர்ச்சியாக கவிஞர் இசையோடும் எங்களோடும் இணைந்து கொண்டார். நட்புக்காகவும், கவிதைக்காகவும் அவரது வருகை அமைந்தது. பாரதப் புழை ஆற்றில்"குத்துப்பாட்டின் அனுபூதிநிலை" பாடலை இசை வாசித்து பாடியதை மறக்கவே முடியாது. பாரதப் புழை ஆற்றில் கவிஞர் பி.ராமனோடு அவரது மனைவியும் கவிஞருமான சந்தியா, மலையாளக் கவி அணில் குமார், ஆதிரா, அசோகன் மறையூர், இசையோடு நாங்களும் சென்றோம். தமிழ்க் கவிதைகளில் ஆற்றை விட கடலே அதிகம் வருவதாக பி.ராமன் குறிப்பிட்டார். ஆற்றுப் பாலம் குறித்த இடசேரி கோவிந்தன் நாயரின் குட்டிப்புரம் பாலம் கவிதையை பி.ராமன் பாடினார். ஆற்றைப் பிண்ணனியாகக் கொண்ட பல கவிதைகளை நாங்களும் வாசித்தோம். கல்யாண்ஜியின் பல கவிதைகளை நான் வாசித்தேன். கல்யாண்ஜி பட்டாம்பி கவிதை திருவிழாவில் முன்னர் கலந்துகொண்ட இனிய அனுபவங்களை பி.ராமன் எங்களோடு பகிர்ந்து கொண்டார். கல்யாண்ஜி பேச ஆரம்பித்ததும் முழு அரங்கமும் அமைதியானதை இசை குறிப்பிட்டார். அவர் பேச்சுக்கு ஒரு இசைத்தன்மை உண்டு, அது மலையாளிகளுக்குப் பிடித்தது என்று பி.ராமன் பேசினார். அசோகன் மறையூர் இந்த நதிக்கு நீர் எங்கிருந்து வருகிறது தெரியுமா என்று "பேச்சின்" வழியாக அவர் ஊருக்கு சென்று சென்று வந்துகொண்டிருந்தார். நதியில் அமர்ந்து சூரிய அஸ்தமனம் பார்த்தபடி ஒரு மாலை அழகாகக் கழிந்தது.   

பி.ராமன் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கும் கவிதை மனநிலையிலேயே அவர் இருந்தார். எங்கும் அவர் அப்படித்தான் இருப்பார், ஒரு சிறுவனுக்கேயுரிய முகத்தோடு, சுறுசுறுப்போடு. அவர் தற்கால தமிழ்க் கவிதைகள் அனைத்தும் 'ஒன்றை' நோக்கி எய்யப்படுவதால் ஒன்று போலவே இருப்பது போல் தோன்றுகின்றன என்றும், தற்கால மலையாளக் கவிதைகள் பல்வேறு விஷயங்களை அனுமதித்துச் செல்கின்றன (பழங்குடிக் கவிதைகள், திருநங்கை கவிதைகள் , etc..) என்றும் குறிப்பிட்டார். தற்கால தமிழ்க் கவிதைகள் குறைவாகவும் மலையாளக் கவிதைகள் விரிவாகவும் பேசுகின்றன என்றார். அவையே இரண்டு மொழிக் கவிதைகளின் பலமாகவும் பலவீனமாகவும் அமைகின்றன என்றும் குறிப்பிட்டார். மேற்சொன்ன கருத்தோடு தமிழ்க் கவிகள் விவாதித்தனர்.

தமிழுக்கு மலையாளக் கவிதைகள் எழுத்தாளர் ஜெயமோகன் வழியாகவே கிடைத்தது, கிடைக்கிறது. தற்கால மலையாளக் கவிதைக்கான மொழிபெயர்ப்பை கவிஞர் ஆனந்த்குமார் தமிழில் செய்யவேண்டும். அது அவருக்கேயுரிய பணி. 

மலையாள பெரும்கவிகள் கே.சச்சிதானந்தன், கல்பற்றா நாராயணன், வீரான்குட்டி, அன்வர் அலி, பி பி ராமச்சந்திரன் எனப் பலர் வந்திருந்தனர். அனைவரையும் சந்தித்தோம். கல்பற்றா நாராயணனைச் சந்திக்கையில் பாரி மணவாளன் மொழிபெயர்த்து 'அகழ்' இணைய இதழில் வெளிவரும் கட்டுரைத் தொடரை விரும்பி வாசிப்பதாகவும் அதில் இடம்பெற்ற "கழுதையும் குதிரையும்" கட்டுரை அபாரமானது என்றும் பெரு.விஷ்ணுகுமார் ஒரு ரசிக மனோநிலையில் சிலாகித்து அவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

வீரான்குட்டி அமர்வில் அவர் வாசித்த "நியூட்டன் ஆப்பிள்" கவிதையை கவிதைகள் இதழுக்காகக் கேட்டபோது அவர் மனம் உவந்து அளித்தார். அன்வர் அலி வாசித்த "கபர் வீடு" "செராபுதீன்- பும் பும்" கவிதைகளும் நன்றாக இருந்தன. 

பட்டறை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய ஒரு வாரம் கழித்து தோழி நித்ய கெளசல்யா சமீபத்தில் அவர் எழுதியிருந்த கவிதைகளை எனக்கு அனுப்பியிருந்தார். சமீபத்தில்தான் அவர் குழந்தை பெற்றிருந்தார். தற்போது மகப்பேறு விடுப்பில் உள்ளார். கவிதை மேல் ஆர்வம் கொண்ட அவர் அதிகம் கவிதை எழுதியதில்லை. வாய் மொழியாகச் சொல்வார். தனக்குத் தோன்றிய இன்ன இன்ன கவிதைக் கருக்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார். ஆனால் எழுதிப் பார்த்ததில்லை. முதல் தடவையாக அனுப்பியிருந்தார்.

1

பருத்தியிலிருந்து வெடித்து வெளி வரும் பஞ்சு காற்றில் சுதந்திரமாய் மிதந்தது ...

கருப்பையிலிருந்து

வெடித்து வெளி வந்த

சேயோன்று அது போல்

கை கால்களை நீட்டி காற்றை தொட எத்தனிக்கிறது ...

உள்ளே புரள இட ஒதுக்கீடு பற்றாக்குறையால் ஒருக்களித்து படுத்த சேய் இன்று மல்லாந்து சுகம் கண்டது தாயருகில் ...

சுகமாய் மல்லாந்து தூங்கிய தாய் இன்று ஒருக்களித்து படுத்துக் கொண்டாள் பிரசவ வலியால் ...

கருப்பையில் சேய் -சேய் ...

நான் -தாய்...

இப்பொழுதோ சமயங்களில் சேய் -தாய் ...


நான் - சேய்...

2

புது வித சங்கீதம் தோன்ற சூழ்நிலை, திறமை வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை ...

தாயின் முலைக்காம்பும்...

சேயின் இதழும்

முத்தமிடும் தருணத்தில் பிரசவித்து விடுகிறது

எனக்கான சங்கீதம் ...

எனக்கு இந்த இரண்டு கவிதைகளிலும் உள்ள பாறையை இன்னும் கொஞ்சம் செதுக்கலாம் என்று தோன்றியது. சில மாற்றங்களை மட்டும் செய்தேன்.

1

பருத்தி பிளக்க

வெளி வந்த பஞ்சு 

காற்றில் 

சுதந்திரமாய் மிதந்தது 


கருப்பை பிளக்க

வெளி வந்த மகவும்

அதே போல

கை கால்களை நீட்டி 

காற்றைத் தொட 

எத்தனித்தது


இடப்பிரச்சினையால்

உள்ளே புரள

ஒருக்களித்து படுத்திருந்த

சேய் 

இன்று மல்லாந்து 

சுகம் காண்கிறது

தாயருகில்


சுகமாய் மல்லாந்து தூங்கிய தாய் 

இன்று 

ஒருக்களித்து 

படுத்துக் கொள்கிறாள் 

பிரசவ வலியில்


கருவில்

கரு கருவாய் இருந்தது

தாய் தாயாய் இருந்தாள்

இப்பொழுதோ 

சேய் தாயாகிவிட்டது

தாய் சேயாகிவிட்டாள்


2

உன்னத சங்கீதம்

புது வித சங்கீதம் 


அது தோன்ற 

புது வித சூழ்நிலை

தேவையில்லை


திறமை கூட வேண்டாம் போல 


தாயின் முலைக்காம்பு

சேயின் இதழ்

முத்தமிட்டுக் கொள்ளும் தருணம் 

உதித்து விடுகிறதொரு

உன்னத சங்கீதம்

திருத்தங்கள் செய்த இரண்டு கவிதைகளையும் அவருக்கு அனுப்பி வைத்தேன். மகிழ்ந்து போனார். இப்போது தொடர்ந்து எழுதுகிறார், வாசிக்கிறார். மேற்செய்த திருத்தங்கள் குறித்து யோசித்தேன். அது கேரள கவிதைப் பட்டறையின் விளைவே என்று தோன்றியது. மாற்றுச் சொற்கள் குறித்த கூருணர்வைக் கூட்ட அது தந்த பயிற்சி. முதல் கவிதையில் தாய் 'ஒடுங்கி' படுத்திருக்கிறாள் என்று திருத்தத் தோன்றியது. ஆனால் 'ஒடுங்குதல்' என்பது வேறு அர்த்தத் தளங்களையும் அளிக்கும் என்பதால் அதைத் தவிர்த்து விட்டேன். இது வழக்கமாகச் செய்வது தான். ஆனால் அந்தக் கூருணர்வு மாற்றுச் சொற்கள் குறித்த கவனம் இரண்டையும் கேரள கவிதைப் பட்டறை அளித்துள்ளது.

சரண்யா தமிழ் மலையாளக் கவிகளை சிறப்பாக ஒருங்கிணைத்தார். அவருக்கு இரு மொழிகளுமே தெரியும் என்பதால் ஆர்வத்துடன் அவ்வேலையை செய்தார். மலையாளத்தில் ஒவ்வொரு கவிகளையுமே வாசகர்கள் ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். பேராசிரியர் ஜகதி மொழிபெயர்ப்பாளரும் கூட மொழிபெயர்ப்பு பட்டறையில் தேவையான இடங்களில் கூர்மையாக தன் அவதானிப்புகளைக் கூறினார். 

தமிழ்க் கவிஞர்களில் வே.நி.சூர்யாவுடனும், ஆனந்த் குமாருடனுமே எனக்கு அதிகப் பழக்கம். இந்தப் பட்டறையால் சந்திரா தங்கராஜோடும், இசையோடும், பெரு.விஷ்ணுகுமாரோடும் எனக்கு நெருங்கிப் பழக வாய்ப்புக் கிடைத்தது. மலையாளக் கவிகளில் அம்மு தீபாவும், அமித்தும் தோன்றும்போதெல்லாம் இளையராஜாவின் பாடல்களைப் பாடி இனிமை சேர்த்தனர். அறையில், கல்லூரியில், கல்லூரியில் அமைந்த சிறு காட்டில், தேநீர் கடையில், ஆற்றங்கரையில், மகிழுந்தில், நடை வழியில் என எங்குமே கவிதை கவிதை கவிதை தான். ஊருக்குத் திரும்புகையில் நிறைவு, பிரிவு வருத்தம், கற்றல் என மனம் நிறைந்திருந்தது. கடிகாரத்தின் மூன்று முட்களும் பிடித்த தருணத்தில் உறைந்து நின்றது போன்ற மூன்று நாட்கள், நின்ற அந்த கடிகாரத்தில் பேட்டரி போடாமல் இருந்திருக்கலாம்.

***

Share:

கவிதை பற்றி இன்னும் சில குறிப்புகள் - க.நா.சு

‘என்னுள்ளேயே பல லட்சங்கள் அடங்கியிருக்கின்றன’ என்றும்,

‘முன்னுக்குப் பின் முரணாகப் பாடுகிறேனா? என்னுள்ளே பல முரண்கள் அடங்கியுள்ளன’ என்றும் வால்ட்விட்மன் கவிதை செய்தான்,

எல்லாக் கவிகளுள்ளும் பல லட்சங்கள் அடங்கியுள்ளன. லட்சங்கள் என்ன கோடிகள் அடங்கியுள்ளன. பல ஒன்றுக்கொன்று முரணாக விஷயங்கள் அடங்கியுள்ளன. இது எல்லாக் கவிகளுக்கும் பொருந்தும்.

பாரதியாரில் காணமுடியாத முரண்களா? அரசியல் எழுச்சியைத் தனிமனிதர்களின் செயலாகப் பாடுகிற அதே பாரதி அரசியல் புரட்சிகளையும் செயல்களையும் பராசக்தியின் செயலாகவே காண்கிறார். இதைவிட முரண்பட்ட பார்வைகள் வேறு என்ன வேண்டும்? பாரதியார் வெறும் அரசியல்வாதியா? வெறும் மதவாதியா? இரண்டும்தான். ஏனென்றால் இரண்டும் முரண்பாடான சிந்தனைகளானாலும் கவியுள்ளத்தில் அவை ஒன்றுக்கொன்று அனுஸரணையான விஷயங்களாகவும் செயல்படலாம். எதையும் விட்டுவிடக் கூடாது. துரும்பும் தூசியும் தேவவிக்கிரஹமும் உயர் கலையும் என் பார்வையில் ஒன்றுதான். அவை என் மனக்கண்களில் உலகத்தைப் படைக்கிற கலைப்பொருள்கள் என்றுதான் கவி ஒவ்வொருவனும் சொல்லுகிறான். சிலர் சொல்லாமல் சொல்லுகிறார்கள். சிலர் சொல்லிச் சொல்கிறார்கள். இதை நினைவில் வைத்துக்கொண்டால் முரண்கள் மறைந்துவிடும்.

முரண்களும் அழகாகத்தான் இருக்கின்றன. முரண்களே கவிகளுக்கு உணவு, கவிதைகளின் ஆதாரம் என்றும் சொல்லலாம்.

***

என் சமுதாயத்தின் பாதிப்பை நான் தவிர்க்க இயலாது. நான் பிறந்து வளர்ந்த சூழ்நிலையில் - ஆர்யப் பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த ஜஸ்டிஸ் கட்சி, த. மா. இயக்கம் இவற்றின் காலத்தில்கூட - ஒதுங்கி நின்று செயல்படுவது, சிந்திப்பது என்பது மனிதர்களிடையே ஒரு லட்சியமாக இருந்தது. தாமரையிலை நீர் போல என்பது வெறும் வார்த்தையல்ல. பல தடவை சொல்லிச் சொல்லித் தேய்ந்து கூர்மையிழந்த க்ளீஷேதான். ஆனால் அதற்கு இன்னமும் அர்த்தம் இருக்கிறது. பட்டும்படாமலும்தான் நம்மில் பலரும் வாழ்கிறோம். அதை ஒரு சிறப்பாகவும் கருதுகிறோம்.

இது ஓர் ஆன்மிகப் பயிற்சியினால் நம்மிடையே ஏற்பட்டது. தலைவலி வருகிறபோது என் தலையையா வலிக்கிறது என்று கேட்டுக்கொள்கிற வழக்கம் இருக்கிறது.

நம்மை ஆண்ட பிரிட்டிஷ்காரர்கள் வேறுவிதமான பட்டும்படாமலுக்கும் உதாரணமாக விளங்கினார்கள். அவர்கள் வியாபாரிகள். லோகாயதமாக வெற்றியை விரும்பியவர்கள். ஆனால் வெற்றியைக்கூடத் தங்கள் நிபந்தனைகளுடன் விரும்பியவர்கள். நாணயமாக இருப்பது அவர்கள் குறிக்கோள். நாணயம்தான் லாபம் தரும் என்கிற அளவில் நாணயமானவன் என்கிற புகழ் வேண்டும் என்று எண்ணியவர்கள். அவர்கள் கவிதைகள், கலை, இலக்கியம் பட்டும்படாமலும், ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பவைதான். ஆனால் இரண்டு விதமான ஒட்டியும், ஒட்டாமலும் இருப்பதும் மிகவும் வித்தியாசப்பட்டவை. ஒன்று ஆன்மிக ஆழத்தினால் ஏற்பட்டது. இன்னொன்று உலக நடப்பை நகைச்சுவையாகப் பார்ப்பதனால் ஏற்பட்டது.

உலக வாழ்க்கையையே மாயம் என்று சொன்ன, தீவிரமாக நம்பிய சங்கரர் ஏன் மக்கள் லாபமடைய மடங்களை நிறுவவேண்டும்? ஏன் தேவி ஸ்தோத்திரங்களைப் பாடவேண்டும்? ஆன்மிக அளவில் மாயை என்று உணருவதற்கும், மாயையில் அகப்பட்டுக்கொண்டு உழல்வதற்கும் நிறைய சம்பந்தமுண்டு. மாயை மாயை என்று சொல்லிக்கொண்டே உழன்றுதான் ஆகவேண்டும். தேவியைத் துதித்து எப்படியோ கரையேற முயல வேண்டும். பிரிட்டிஷ்காரன் தேவியைத் துதிக்கவில்லை. தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள மாயையும் பார்த்து நகைத்துக்கொண்டே வெளியேறினான்.

சமுதாயத்துக்குச் சமுதாயம் இந்த ஆன்மிக லௌகிக அடிப்படைகள் மாறுகின்றன. சரித்திரம் அதிகமில்லாத அமெரிக்கன் இருக்கிற சரித்திரத்தைப் புரட்சிகரமானதாகச் சொல்லிக்கொண்டு உலக விஷயங்களில் அதிகமாக உழல்கிறான். நேர்மாறாக, அதிக சரித்திரம் படைத்த சீனாக்காரன் மாயை என்று தெரிந்தும் அதை உண்மையாக மாற்றி, அதில் வாழக் கற்றுக்கொண்டுவிடுகிறான். ஜப்பான்காரன் எல்லாவற்றிலும் அழகு கண்டு அனுபவிக்கத் தெரிந்து சொல்கிறான்.

அவரவர் கவிதைகளைப் படிக்கும்போது அந்தந்த சமுதாயத்தின் போக்கு நிதரிசனமாகத் தெரியவருகிறது. வால்ட்விட்மன் தன் கவிதையில் எல்லோரையும் எல்லாவற்றையும் அணைத்துக்கொள்ளப் பார்க்கிறான். டி. எஸ். எலியட் ஒதுங்கி நின்று எல்லாவற்றையும் கண்ணோட்டமிடுகிறான். அவன் உண்மையில் இங்கிலாந்தைச் சேர்ந்தவன் அல்ல. அதனால் அவனிடம் நகைச்சுவையில்லை. சீனக் கவிதைகளைப் படிக்கும்போது குன்றுகள், பனிப்படலம், மேகங்கள் எல்லாமும்கூட உண்மை என்பதாகவே தோன்றுகிறது. ஜப்பானியக் கவிதையில் வானத்தின் அழகையும் பட்டாம்பூச்சியின் வர்ணங்களையும் காண முடிகிறது.

தமிழ்க் கவிதையில் ஒரு வறட்டு ஜம்பத்தையும் தன் பிச்சைக்காரப் பெருமை பேசும் போக்கையும் ஆரம்ப காலத்திலிருந்து காணமுடிகிறது. கம்பன் காலகட்டத்தில் வாழ்க்கையின் மேன்மையும் அந்த பொய்யை மெய்போல வாழும் போக்கும் வற்புறுத்தப்பட்டது. இன்று பாரதியார் பாரதத்தின் அபூரணத்தை திராவிட நிறைவில் பாடினார். புதுக்கவிதைக்காரர்கள் இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு முழுமை பெறாத அறிவுத் தளத்து உலகத்தை உருவாக்க முயலுகிறார்கள். இதில் பழைய ஜம்பமும் காண்கிறது. இன்றைய மாயை என்கிற நினைப்பும் காணப்படுகிறது.

இதிலே உலகம் பூராவும் பரவிவிட்ட ஒரு சித்தாந்தமாக ஒரு மார்க்ஸிஸ்டு பார்வை தொக்கி நிற்கிறது. அவர்களுக்கு மதம், ஆன்மா என்பதிலும் நம்பிக்கை கிடையாது. பொருளாதாரத்திலும் உழைப்பாளி அளவில் அல்லாது நம்பிக்கை கிடையாது. தங்கள் மெய்ம்மையில் நம்பிக்கையுண்டு. அதற்கு மேல் எல்லாம் மாயை, பொய். இது காரணமாக அவர்களுக்கு ஒட்டியும் ஒட்டாமலும் வரவில்லை. பிரிட்டிஷ் நாணயமும் வரவில்லை. சீன மாயையானாலும் மாயையல்லாதது போல வாழ்ந்துவிடுவதும் வரவில்லை. ஜப்பானியர்கள் போல அழகு ஈடுபாடும் வரவில்லை. ஓரளவில் அவர்கள் அமெரிக்கர்களுக்கு இணையானவர்கள். புது சரித்திரப் பார்வை உருவாக்கி மேற்கொள்ளப் பார்ப்பவர்கள். நான்தான் உலகத்தின் கடைசிக் கவிஞன் என்று ஒரு ருஷ்யக் கவியால் சொல்ல முடிந்தது போல! வால்மீகி என்பவரை ஆதி கவி என்று ஸம்ஸ்கிருதக்காரர்கள் சொல்லுவது போல!

கவிதையைத் தெரிந்தோ, தெரியாமலோ நம் தேவைக்கு ஏற்ப நாம் இனம் பிரித்துக் கண்டுகொள்கிறோம் என்பது உண்மை. இது அவசியமும்கூட. ஏனென்றால் இப்படி இனம் பிரிப்பது நமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள நமக்கு உதவுகிறது.

இந்த மாதிரிதான் பார்க்க வேண்டும் என்பதும் இல்லை. வேறு விதமாகவும் பார்க்கலாம் என்பதுதான் விஷயம். இலக்கியத்தில் மட்டும் எந்த ஒருவனுடைய பார்வையும் சரியானது என்று அடித்துச் சொல்லிவிட முடியாது. வாழ்க்கையில்கூட இப்படிச் சொல்லிக் கட்சி கட்டலாம். இலக்கியத்தில் முடியாது.

அதனால்தான் இலக்கியத்துக்கு முக்கியமாகக் கவிதைக்கு நிரந்தரமான பாதிப்பு சக்தி ஏற்படுகிறது.

***

எந்தக் கவிதையின் கருப்பொருளும் முடிவில்லாத இன்று என்கிற விநாடியில் தான் நிலைத்து நிற்கிறது.

கவி தெரிந்தே இந்த ‘இன்றைத்’ தன் கவிதைகளில் சொல்லியிருக்கிறானா என்பது முக்கியமல்ல. தெரியாமல் செய்யப்பட்டிருந்தாலும் இந்த இன்றின் முக்கியம்தான் கவிதையின் நிரந்தரத்தன்மைக்கு சாட்சி, நிரூபணம். அர்த்தமும்கூட.

***

கவி என்பவன் ஓர் இடத்தில் நிலைத்து நின்று தன் கவிதையை உருவாக்குகிறான். கவிதையும் அசையும் பொருள் - கவியும் அசையும் பொருள்தான். வாசகன் என்பவன் அநேகமாக அசையாப் பொருளாகவே செயல்படுகிறான். கவியின் அசைவு சக்திகள் அநேகமாக வாசகனுக்கு எட்டுவதில்லை. அதனால்தான் அவன் கவியாக மாட்டாமல் வாசகனாக நின்றுவிடுகிறான்.

வாசகன் என்று ஒருவனை எப்படித் தன் கவிதையை எட்டச் செய்கிறான் கவி என்கிற கேள்விக்கு இரண்டொரு பதில்கள் சொல்லிப் பார்க்கலாம்.

கவிதை படைக்கும்போது கவிக்கு வாசகன் நினைப்பே யில்லை என்பது ஒரு பதில். கவிதைப் படைப்பில் கவிதைக் கருவும் போக்கும், அதற்குத் தான் கொடுக்கப்போகிற உருவமும்தான் முக்கியமாக கவியின் மனத்தில் இருக்கின்றன. வாசகனைப் பற்றிய நினைப்பே யில்லை.

கவிதை எழுதி முடித்த பிறகும்கூட வாசகன் நினைப்பு கவிக்கு ஏற்படுகிறதா என்று சொல்ல முடியவில்லை. இந்தக் காலத்தில் வேண்டுமானால் கவிகள் தங்கள் கவிதைகளைப் படித்துக் கேட்டவர்கள் அதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நேரடியாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. விமர்சகர்கள் சிலர் வாசகர்களாகத் தங்கள் அபிப்பிராயங்களைச் சொல்லலாம். சமீபகாலம் வரையில் விமரிசகர்கள் தங்கள் காலத்து இலக்கியத்தைப்பற்றி அதிகமாகக் கவலை காட்டியதில்லை.

சம்ஸ்கிருத அலங்கார சாஸ்திரக்காரர்கள் வாசகர்களின் கவிதையுள்ளத்தை ஸஹ்ருதயர்கள் என்று குறிப்பிட்டு அவர்களை கவிகள் சுலபமாக எட்டுவதைக் குறிப்பிட்டார்கள். இது ஓரளவுக்கு இலக்கண சுத்தமாக இலக்கணத்தையும், இலக்கிய நோக்கங்களையும் பூரணமாக ஏற்றுக்கொண்டு இலக்கியம் செய்பவர்களிடையே பலிக்கலாம். சங்க இலக்கிய மரபுகள் போல இந்த மரம் பெயர் சொன்னால் இதைக் குறிக்கும், இந்தப் பூவின் பெயர் சொன்னால் இதைக் குறிக்கும் என்று ஏற்றுக்கொண்டால் ஸஹ்ருதயர்கள் கொள்கை சரிப்பட்டு வரும். இலக்கணத்தையோ, மரபுகளையோ ஏற்காத புதுக்கவிதைக்காரர்களுக்கு ஸஹ்ருதயர்களைக் கட்டாயப்படுத்தவேண்டிய அவசியம் இருக்கிறது. தானாக வரமாட்டார்கள். புதுக்கவிதையும் ஓர் இலக்கண வரம்பு, மரபு என்று ஏற்றுக்கொண்டு செயல்பட ஆரம்பித்துவிடுமானால் அது சாத்தியம்.

அதுவரை ஸஹ்ருதயர்கள் தேவையில்லை - வாசகர்கள் போதும். துர்ப்பாக்கியவசமாக புதுக்கவிதை வாசகர்கள் எல்லோருமே ஸஹ்ருதயர்களாகிப் பின்னர் கவிதையும் எழுதத் தொடங்கிவிடுகிறார்கள். இன்று புதுக்கவிதை எழுதுகிறவர்கள் அளவில் வாசகர்கள் எண்ணிக்கை இருக்கிறதா என்பது சந்தேகமே. வாசகர்கள் வாசகர்களாக மட்டும் இருக்க விரும்புகிற காலம் வரவேண்டும் என்று தோன்றுகிறது. ஆயிரம் வாசகர்களும் நூறு கவிகளும் இருப்பதற்குப் பதிலாக, ஆயிரம் கவிகளும் நூறு வாசகர்களும் இருக்கிறார்கள். இன்று வாசகர்களின் எண்ணிக்கையையும் தரத்தையும் கூட்ட ஏதாவது நடவடிக்கை, இயக்கம் வேண்டும் என்று தோன்றுகிறது.

***

கவிதை அதுவரை ஏற்படாத ஒரு அர்த்தத்தை நாம் வாழ்கிற வாழ்க்கைக்குத் தருவதாக இருக்கிறது என்று சிலர் சொல்லுகிறார்கள். இப்படிச் சொல்லுகிறவர்கள் தெரிந்து சொல்லுகிறார்கள் என்று வைத்துக்கொண்டால் இது ஒரு நியாயமான விஷயம் என்றே சொல்ல வேண்டும்.

எந்த இலக்கியமும் வாழ்க்கைக்கு அர்த்தம் தருவதற்காகவே எழுந்தது, படைக்கப்பட்டது என்று வைத்துக்கொள்ளலாம். நீங்கள் சொல்லுகிற குறிப்பிட்ட ஒரு அர்த்தத்தைத்தான் கவிதையோ, இலக்கியமோ ஏற்படுத்தித் தரவேண்டும் என்பது அல்ல. வாசகன் மனதில் அதுவரை தோன்றாத புது அர்த்தத்தை அது ஏற்படுத்தித் தரலாம். அப்படி ஏற்படுத்தித் தருவது இலக்கியத்தின் பரமசுகமான நோக்கங்களில் ஒன்று.

இதை ஏற்றுக்கொண்டு படிப்பவனும் அதிருஷ்டசாலி, அந்த மாதிரி ஒரு வாசகனைக் கண்டுவிட்ட கவியும் இலக்கியவாதியும் அதிருஷ்டசாலி என்று சொல்லலாம்.

வாழ்க்கைக்கு அர்த்தத்தை நூல்களில் தேடக் கூடாது - நேரில் அனுபவிப்பதிலிருந்துதான் அர்த்தம் தோன்ற வேண்டும் என்று சொல்பவர்கள் உண்டு. அனுபவம் என்பது பலதரப்பட்டது. எல்லா அனுபவங்களும் எல்லாருக்கும் ஏற்பட முடியாது என்பது ஒன்று. இரண்டாவது நூல்களில் படிப்பதும் உன் வாசக சக்தியைப் பொறுத்து ஒரு அனுபவமேயாகும். சில நேர் அனுபவங்கள் நெருப்புப் போலச் சுடலாம்; பனிக்கட்டி போலச் சில்லிடலாம். நேர்மாறாக சில அனுபவங்கள் பிறர் எடுத்துச் சொல்லும் வரையில் அனுபவமாக நம் மனத்தில் உறைப்பதில்லை. இந்த மாதிரி சில அனுபவங்களைப் பிறர் எடுத்துச் சொல்வது போல நூல்களில் சில இலக்கியாசிரியர்கள், கவிகள் கையாண்டிருக்கிறார்கள். இவர்கள் செய்கையில் அனுபவ முதிர்ச்சி ஒரு வாசகனுக்கு ஏற்படுவதை நாம் வேண்டாம் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. வாசகனும் ஏற்க மறுக்கவேண்டிய அவசியமில்லை.

***

நல்ல கவிதையை எல்லோரும் ரசிக்கும் சக்தியைப் பெற்றிருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதேபோல யாராவது ரஸிக்கிற, மிகவும் விரும்பி அனுபவிக்கிற கவிதை நல்ல கவிதையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. கம்பனைப் படிப்பவர்கள் அநேகமாக சிலப்பதிகார ஆசிரியரைப் படித்தனுபவிப்பதில்லை. டி.கே.சி சொன்னால் இளங்கோவின் வரிப்பாட்டுகளைத்தான் சொல்லுவார். இதனால் கம்பன் உயர்ந்த கவி என்றோ இளங்கோ உயர்ந்த கவி என்றோ ஏற்பட்டுவிடாது. சொல்ல வந்ததை வழிய விடாமல், அதிகமாகச் சொல்லாமல் சில விஷயங்களை மட்டும் பொறுக்கி எடுத்துச் சொல்லுவதில் தமிழில் ஒரே ஒரு கவியை மட்டும்தான் இளங்கோவுக்கு ஈடாகச் சொல்ல இயலும் - திருவள்ளுவரை. தேர்ந்தெடுத்துச் சொல்லுகிற விஷயங்களை சாதாரணமாக வார்த்தைகளில் வடித்துக் காட்டுகிற கவிதா சக்தி இருவருக்கும் நிறையவே இருந்தது. கம்பனால் அதிகமாகச் சொல்ல இயன்றது என்பது உண்மை; வில்லம்பு எய்துவதில் அம்பு குறியை எட்டாமல் விழுவதும் பிசகுதான்; தாண்டிப் போவதும் பிசகுதான் என்று கன்ஃபூசியஸ் ஒரு இடத்தில் சொல்லுகிறார். அதே மாதிரி கம்பனில் கவி சொல்ல வந்ததற்கு அதிகமாகவே சொல்லிவிடுகிற இடங்கள் அதிகம். இது ஒரு குறை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. வள்ளுவரிலோ இளங்கோவிலோ இந்த மாதிரிக் குறையை என்னால் காண முடியவில்லை. அதனாலேயே வள்ளுவரும் இளங்கோவும் கம்பரைவிடப் பெரிய உத்தம கவிகளாக எனக்குத் தோன்றுகிறார்கள்.

***

விமர்சனப் பார்வையுடன் ஆங்கிலக் கவிகளைப் பார்க்கிற அளவுக்குக்கூடத் தமிழ்க் கவிகளைப் பார்க்கிற பழக்கம் தமிழர்களிடையே ஏற்படவில்லை. கவிதையில் ஒரு பகுதியை நன்றாகப் பார்க்க, விமரிசன அளவில் டி.கே.சி. தெரிந்து வைத்திருந்தார். அந்தப் பார்வையையே அவர் சிஷ்யர்கள் சிலர் பின்பற்றுகிறார்கள். அது முழுமையான பார்வையல்ல என்றாலும் ஓரளவுக்கு விமரிசனப் பார்வையை சாத்தியமாக்கியது.

கம்பனில் முத்துக்குளிப்பது, அதைவிடச் சிரமமான காரியமாக சேக்கிழாரில் முத்துக்குளிப்பது என்பது நடைபெறுகிறது. வள்ளுவரில் முத்துக்குளிப்பது சாத்தியமே - இளங்கோவில் முடியாது. இளங்கோவை வரிப்பாட்டு உள்பட ஒரு கட்டாயமாகத்தான் பார்க்க முடியும். காரைக்காலம்மையாரை மதரீதியில் கடவுள் சிந்தனைகளைச் சொல்கிற அளவில் பார்க்க இயலுகிறதே தவிரக் கவியாக யாரும் காண முயற்சி செய்யவில்லை. இதேபோல தாயுமானவரையும் காண முயலலாம். ஜோதி ராமாலிங்கம் கவிதைகளில் உணர்ச்சிவசப்பட்டாலும், எத்தனை நிற்கும் என்பது தெரியவில்லை. விமரிசனபூர்வமாகப் பார்க்க வேண்டும். இலக்கணப் பண்டிதரான ஆறுமுக நாவலர் ராமலிங்கர் பாடல்களைத் திருவருட்பா என்று சொல்வது தவறு என்று மதரீதியாக வழக்குப் போட்டார். அவர் இலக்கண ரீதியாகவும் வழக்குப் போட்டிருக்கலாம். இலக்கணப் பிசகு என்றில்லை. பழசை மீண்டும் எடுத்து நீர் ஊற்றி இளக்கி கவிதையாக்குவது என்பது ஜோதி ராமலிங்கத்துக்குச் சுலபமாக வந்தது.

பக்திக் கவிதைகளை இலக்கியபூர்வமான விமர்சனம் செய்து அவற்றின் தரத்தை நிர்ணயித்துச் சொல்வது என்பது மிகவும் சிரமமான காரியம். ராமாயணத்துக்கும் பகவத் கீதைக்கும் விமரிசனம் ஒத்துவராது. வேதத்துக்கும் அப்படித்தான். பைபிளுக்கும் அப்படித்தான். குர்ஆனுக்கும் அப்படித்தான்.

***

‘தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல்’ என்று பாரதியார் கூறிய காரியம் இருக்கிறதே, அது வசனத்தில்கூட சிரமப்பட்டுத்தான் சாதிக்கவேண்டியதாக இருக்கிறது. கவிதையில் தெளிவுற அறிந்து தெளிவுற மொழிவது என்பது மிகச்சில மகாகவிகளுக்கே கைவந்திருக்கிற விஷயம் என்று சொல்லலாம். மிகத்தெளிவான நடையை உண்டாக்கிக் காட்ட கவி படுகிற பாடு வெளியே தெரிவதில்லை. அநாயாஸமாகச் செய்தது போல இருந்தாலும் நடைத்தெளிவு மிகவும் சிரமப்பட்டுத்தான் உண்டாகிறது என்று சொல்லுவது மிகையாகாது. ஏதாவது அகஸ்மாத்தாக ஏற்பட்ட விஷயமா இந்தத் தெளிவு அல்லது கலைஞனின் உழைப்பின் பயனா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. பாரதியில், இளங்கோவில் திருக்குறளில் இருக்கிற தெளிவு கம்பனில் இல்லை என்று சொன்னால் கம்பன் ரஸிகர்கள் கோபித்துக்கொள்ளக்கூடும். உண்மை அதுதான். கம்பன் இரண்டு பண்பாடுகளுக்கிடையில் அகப்பட்டுக்கொண்டவன்; தமிழ்ப் பண்பாடும், சமஸ்கிருதப் பண்பாடும் அவனை நெருக்குகின்றன. இளங்கோவுக்கு இரண்டாவது பண்பாடு பற்றி அக்கறையில்லை; வள்ளுவருக்கும்தான். பாரதியின் காலத்தில் மூன்று பண்பாடுகளுக்கு வாரிசு அவன் - ஆனால் அவன் எதைத் தேர்ந்தெடுத்தான் என்பது தெளிவு. அதில் குழப்பமில்லை.

***

ஒரு தெருக்காட்சியை நிலைக்கண்ணாடியில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா?

நேரிடையாக ஏற்படுகிற அனுபவத்துக்கும், கவிதை மூலம் ஏற்படுகிற அனுபவத்துக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என்று தோன்றுகிறது. அனுபவத்தில் தான் சம்பந்தப்படாத வரையில், தூர இருந்து பார்க்கும் வரையில் அதில் சம்பந்தப்பட்டவர்களை எட்டித் தொடலாம் போலத்தான் இருக்கிறது. அதேபோல ஒரு நிலைக்கண்ணாடியில் காண்கிற காரியங்களையும் எட்டித் தொடலாம் போலத்தான் இருக்கிறது - ஆனால் தொட முடியாது என்பதும் தெரிகிறது. வெளி நேரடி அனுபவத்திலும் ஒதுங்கி நின்றுதான் பார்க்கிறோம். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

கவிதை அனுபவத்தை உண்மையானதாக ஆக்க மறுபடி மறுபடி அதுபற்றிச் சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது. நேரில் காண்கிற அனுபவம் சிந்திக்கச் சிந்திக்க விலகுகிற மாதிரி, ஒதுங்கிப் போகிற மாதிரி இருக்கிறது. கவிதை அனுபவம் வார்த்தைகளாகத்தான் என்றாலும் நிலைத்து நிற்கிறது. நேரடி அனுபவம் கண் முன்னமே இல்லாமல் போய்விடுகிறது. காலமும் அதில் செயல்படுகிறது. கவிதை அனுபவத்தில் காலம் செயல்படுவதில்லை. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது கவிதை அனுபவமே அதிகப் பயன்தரக்கூடியதாகத் தோன்றுகிறது.

***

ஒரு சிட்டுக்குருவியின் விழுகையில்கூடக் கடவுளின் கையைக் காணமுடியும் என்று ஹாம்லட் சொல்லுவதாக ஷேக்ஸ்பியர் எழுதுகிறார். எல்லாக் கவிதைகளின் வரிகளிலும் கடவுளின் கையைக் காண முடியும். அதனால் சரஸ்வதி என்று கவிதை படைப்பவனை தேவியாக, சர்வவல்லமையுள்ளவனாகக் கொண்டாடவேண்டியதாக இருக்கிறது. இது ஒருவிதத்தில் உண்மை. என்றாலும், சரஸ்வதியாவது, சர்வவல்லமையுள்ள தேவியாவது. மனிதன் தன் சொந்த புத்தியினால், உணர்வுகளினால், சக்தியினால், தான் அறிந்த வார்த்தைகளினால் ஒரு கவிதையை வடிக்கிறான். அவன் புத்தி சாதுர்யப் போக்கிற்கும் சொந்த மேதைக்கும் ஏற்ப கவிதை அமைகிறது. எல்லாக் கவிதைகளையும் சரஸ்வதி தேவி எழுதினால் ஏன் அதில் இப்படித் தர வித்தியாசங்கள் இருக்கின்றன? ஒரு கவிதை நன்றாக இருப்பானேன் - சரஸ்வதி என்கிற சிந்தனையே பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் பம்மாத்துச் சிந்தனை என்று சொல்லலாம். அதுவும் சரியான விஷயம்தான் என்று தோன்றுகிறது.

ரிஷிமூலம், நதிமூலம் விசாரிக்கக் கூடாது என்பது மரபு. அதேபோலக் கவிமூலமும் விசாரிக்கக் கூடாது என்றுதான் சொல்ல வேண்டும். இதை இந்தியாவில் ஒரு மரபாக ஏற்றுக்கொண்டிருந்திருக்கிறார்கள் - கவிதையை அனுபவிக்கலாமே தவிர அலசக் கூடாது என்று. ஆனால் மரபில் அலசியும் பார்த்திருக்கிறார்கள்.

சிறுகதைகள், நாவல்களை அலசும்போது அவற்றின் ஆசிரியர்கள் நினைக்கவே நினைக்காத பல விஷயங்கள் தெரியவருகின்றன. கவிதையை அலசும்போது கவிக்கே தெரியாத விஷயங்கள் கவிதையில் இடம்பெற்றிருக்கின்றன என்று கவி ஏற்றுக்கொள்ளமாட்டான். அப்படியா, சரிதான்; இருக்கும் என்று நகர்ந்துவிடுவான். அதனால்தான் கவிதையை அலசுகிற காரியம் அதிகமாக மேலைநாடுகளில் நடக்கிறது. நாவல், சிறுகதையை அலசுகிற விஷயம் அவ்வளவாக நடைபெறுவதில்லை.

பூவைப் பிய்த்துப் பார்த்து அதன் அழகின் ரகசியத்தைக் கண்டுவிட முடியாது. அதேபோல கவிதையைப் பிய்த்துப் பார்த்து அதன் ஆன்மாவைக் கண்டுகொள்ள முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். எனினும் கவிதையை அலசிப் பிய்த்துப் பார்க்கும் காரியம் இடைவிடாமல் நடந்துகொண்டுதான் இருக்கும் போல இருக்கிறது.

***

கவிதையில் உணர்ச்சி தூக்கி நிற்க வேண்டும் என்றும் அறிவு தூக்கலாக இருக்கக் கூடாது என்றும் சொல்லுகிறார்கள். அப்படி அறிவைப் பிரிந்த உணர்ச்சிக்கு என்ன மதிப்பு இருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. பதிலுக்கு, உணர்ச்சியைப் பிரிந்த அறிவினால் என்ன பயன் என்று கேட்கலாம். உணர்ச்சியற்ற அறிவு ‘dry as dust’, பாண்டித்யம் போல உபயோகமற்றது என்று ஏற்றுக்கொள்ளலாம். அதேபோல அறிவற்ற உணர்ச்சியினாலும் பயன் இல்லை என்று ஏற்றுக்கொண்டால் போதுமே. அறிவோடு உள்ளத்து உணர்ச்சியைப் பார்க்க வேண்டும் என்றும் மில்டனுக்கு இந்த உணர்ச்சி கலந்த அறிவு கைவரவில்லை, வேர்ட்ஸ்வர்த்துக்குக் கைவந்தது என்றும் ஒரு கடிதத்தில் கீட்ஸ் எழுதுகிறார். இதற்கு அர்த்தம் இருப்பது போலவே தோன்றுகிறது.

***

‘ஒவ்வொரு கவிதைக்குப் பின்னரும் ஒரு கதை இருக்கிறது’ என்று வில்லியம் எமர்ஸன் என்கிற ஆங்கில விமரிசகர் கூறும்போது அது நியாயம் என்றே தோன்றுகிறது. அந்தக் கதையின் தொடர்ச்சியாகவே கவிதை உருப்பெற்றிருக்கலாம் அல்லது அந்தக் கதைக்கு எதிர்மாறாக வேறு பக்கத்தில் போவதற்காக கவிதை உருவாகியிருக்கலாம். இதனால் நற்றிணை கவிதைகளில் நாடகங்களைக் காணுகிற முயற்சியில் தமிழ்ப் புலவர்கள் ஈடுபடுகிறார்கள். அதேபோல, சிலப்பதிகாரத்தை நாடக காவியம் என்று சொல்லி ஒரு குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள். சிலப்பதிகாரம் நாடகம் இல்லை. நாடகத்தை நாட்டியம், இசை என்றும், அது ஒரு மேடையில் அளிக்கப்பட்டது என்றும் ஏற்றுக்கொண்டால் சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவுக்கு நாடக மேடை பற்றி, நாட்டியம் பற்றி, இசை பற்றி அறிவு இருந்தது என்று சொல்லலாம். அவர் நாடகக் காப்பியம் எழுதினார் என்று சொல்வதற்கு அர்த்தமே யில்லை.

சிலப்பதிகாரத்தை நாடகம் என்று சொல்வதற்குப் பதில் அகிலன் ஏதோ ஒரு தீபாவளி மலரில் எழுதியது போல அதை ஒரு நாவல் என்று சொல்லலாம். நாவலில் நாவலாசிரியன் சில விஷயங்களைச் சொல்லுகிறான்; சில விஷயங்களை விட்டுவிடுகிறான். அந்த மாதிரி ஒரு கைதேர்ந்த நாவலாசிரியர் போல பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார் - பல விஷயங்களைச் சொல்லாமல் விட்டிருக்கிறார். மதுரையிலும் புகாரிலும் இந்தச் சாமியாருக்கு விலைமாதர் தெருவில் என்ன வேலை என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் ஒரு விலைமாதையே கதாநாயகியாக ஏற்றுக்கொள்கிற தைரியம் இந்தச் சாமியாருக்கு இருந்ததுதான் விஷயம். துறவு மனப்பான்மையுள்ளவர்களுக்கு பணத்தியானால் என்ன? பரத்தியானால் என்ன?

‘கலை நுட்பங்கள்’, 1988

***



***
Share:

கிரிராஜ் கிராது கவிதைகள்

பெங்களூரு 4.0 


கார்கள் மூழ்குகின்றன ஸ்கூட்டர்கள் நீந்துகின்றன

துணிகளும் காண்டமும் காமவாசனைகளும் ஏழு வாரங்களுக்கு ஈரமாகவேயிருக்கும்

ஸ்விகி பிளிங்கிட் ஜமோடா அமேசான் அலிபாபாக்களின் டிரோன்கள்

கவலைகளுடன் சுற்றுகின்றன.

சிலைகள் சிலைகளாக கிடக்கும்

ஏரியின் கல்லறையின் மீது திருவிழா கொண்டாடினால் எத்தனை பிரமாதமாக இருக்கும்

***

லைவ்

 ஒரு கொலையை நேரடி ஒலிபரப்பு செய்வதென்பது சிறிதும் கஷ்டமில்லை,

அதிக ஆரவாரம் கூடாது.

ஒரு ஸ்மார்ட் போனும் ஐம்பது நூறு ரூபாய்க்கு டேடாவும் வைத்து

யார் வேண்டுமானலும் யூ ட்யூப் சேனலை உருவாக்க முடியும்

ராத்திரி அவசியமில்லை, பகல் வெளிச்சமிருந்தாலே வீடியோ நன்றாக வரும்

ஒரேயடியாக யாருமில்லாமல் இருப்பது ஆகாது,

எத்தனைக்கெத்தனை கூட்டம் உள்ளதோ அத்தனைக்கத்தனை நல்லது

கத்தி இருந்தால் நல்லதுதான் ஆனால் கட்டாயமில்லை.

மனிதனின் கையும் காலுமே போதுமானது.

             

போரை நேரடியாக ஒலிபரப்புகிறது சி என் என்

கொலை எண்ணத்தால் உற்சாகமடைந்து

கொலையை மக்களுக்குப் பிடித்த எண்ணமாக உருவாக்குகிறது பிரைம் டைம்

கொலையை நேரடியாக ஒலிப்பரப்பும் நாடாக ஆக்குகிறதா?

 ***

ஒரு அலைபேசி எண்ணைப் போல

 

உங்களை அழைப்பதாக இருந்தேன் நான்.

 

ஒரு நாள் நாம் இருவரும் ஒன்றாகவே படப்பிடிப்பை முடித்தோம்

இத்தனை சீக்கிரம், மூன்று நாட்களுக்கு உள்ளாகவே,

வேறுமாதிரியாகும் என்று எனக்குத் தெரியாது

இந்த மூன்று நாட்களில் பல முறை உங்களைப் பற்றி யோசித்தேன்

எந்த ஊரில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதுபோல

மந்தமாக, ஆகவே சற்று பின்தங்கியவராக,

இருபதாம் நூற்றாண்டிலேயே மாட்டிக் கொண்டவர் என்றும்

இப்போதெல்லாம் உங்கள் வேலையை நீங்கள் சொன்னபடி சரியாக செய்வதில்லை

இந்து குடும்பத்திலிருந்து வந்த உங்கள் மனைவி எப்படி இருக்கிறார்கள்

உங்களுக்குக் குழந்தைகள் உண்டல்லவா? அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?

இந்த ஊரிலிருந்து போய் விட்டீர்களா?

என்றெல்லாம் நான் யோசித்தேன்

 

உங்கள் கேமரா பழைய தூர்தர்ஷனின் தரத்துக்கு சமமாக இல்லாமல் இருந்திருக்கலாம்

ஆனால் அதன் உணர்வுகள் சரியாக பொருந்தியிருந்தன.

நாள் முழுவதும் உங்களுடைய கண்கள் மனிதர்களை அல்ல, ஒளியையே பார்த்திருக்கும்

ஜே பி, இந்திரா இருவரையும் நீங்கள் இதே கண்களால் நேரில் பார்த்திருக்க வேண்டும் என்று நான் நினைப்பது ஏனென்று எனக்குத் தெரியவில்லை

ஆனால் ஏதாவது செய்யுங்கள், உங்கள் உபகரணங்கள் பழசாகிவிட்டன

தூர்தர்ஷனை நீங்கள் வேலையாக மட்டும் பாருங்கள், காதலைப் போல் அல்ல.

 

ஆனால், உங்களைப் பற்றி பேச நான் உங்களிடம் வரவில்லை

அடுத்த படப்பிடிப்பு எப்போது என்று தெரியாது

உங்களுக்கான சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டது

இன்னும் நாம் நண்பர்களாகவில்லை

ஒருவேளை அது நடக்காமலும் போகலாம், ஏனெனில் எனக்கு நண்பர்கள் யாருமில்லை

இப்போதும் நான், இந்த எளிய நகரத்தில்

தற்பெருமை, அகங்காரம், சுயவிரக்கத்துடன் அலைந்து திரியும் கைவிடப்பட்டவன்தான்

நல்லது, நான் என்னைப் பற்றியும் உங்களிடம் பேச வரவில்லை

தவிர வேறெதையும் செய்வதுகூட இப்போது மேலும் சிரமமாக இருக்கிறது.

உங்களிடம் நான் ஒரு தாங்க முடியாத துயரத்தைப் பகிரவே வந்திருக்கிறேன்

 

என்ன நடந்தது என்றால் உங்களை நான் அழைப்பதாக இருந்தேன்

என்னுடைய அலைபேசியில் உங்களைப் பெயரை இட்டு,

தேடி வெகு நேரத்துக்குப் பிறகு கிடைத்தது

என் வாழ்வில் உள்ள இஜாஸ் நீங்கள் மட்டுமே அல்ல.

நண்பர்களற்று கைவிடப்பட்டு வருடக்கணக்கில் ஊர் ஊராக திரியும்

என்னுடைய அலைபேசியில் அந்த இன்னொரு இஜாஸின் எண்

எப்படி தங்கியதென்று எனக்குத் தெரியவில்லை

 

அந்த எண்ணையும் பெயரையும் கண்ட அந்த நொடியில்

எஞ்சியிருந்த இறகுகள் உடைந்து நொறுங்கின

நண்பர்களற்ற, கைவிடப்பட்ட ஒருவன் அழுவதுபோல அழுது கொண்டிருக்கிறேன்

நாற்பத்தி ஆறு டிகிரி கொதிக்கும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலில்

மோட்டர் சைக்கிள் ஓட்டியபடியே அழுது கொண்டிருக்கிறேன்.

 

உங்களுக்குப் புரிகிறதல்லவா? இஜாஸ் அகமது இந்த உலகில் இல்லை

இப்போது அவர் என் அலைபேசியில் உள்ள ஒரு எண்.

இஜாஸ் அகமது இல்லை என்பது

இப்போது எத்தனை துக்கம் அளிக்கக் கூடியதென்பதை

உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?

***

- தமிழில்: எம். கோபாலகிருஷ்ணன்

கிரிராஜ் கிராது:

நவீன ஹிந்தி இலக்கிய உலகில் தவிர்க்கமுடியாத பெயர் கிரிராஜ் கிராது. 

1975ல் ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் பிறந்தவர். பிரதிலிபி என்ற இருமொழி மாத இதழின் நிறுவனர். கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, பத்திரிக்கையாளர் என்று பலதுறைகளிலும் பங்களிப்பவர். இவருடைய கவிதைகள் இந்தியில் மிகவும் பிரசித்தி பெற்றவை என்றாலும் இதுவரையிலும் தொகுப்பாக வெளியிடப்படவில்லை.

வழக்கமான கவிதையின் வடிவத்தில் அல்லாமல் உரைநடையின் வடிவத்தில் இவரது பெரும்பாலான கவிதைகள் அமைந்துள்ளன. பல கவிதைகளில் இவர் முற்றுப்புள்ளிகளையோ பிற நிறுத்தற்குறிகளையோ இடுவதில்லை. காலங்காலமாக கவிதையில் சொல்லப்பட்டுள்ள பாடுபொருள்களை இவர் கவிதைகளில் காணமுடிவதில்லை. நவீன மனத்தின் சலனங்களை அபத்தங்களை கையாலாகத்தனங்களை நுட்பமாக சித்தரிக்கின்றன கிரிராஜ் கிராதுவின் கவிதைகள்.

அண்மையில் எழுதப்பட்ட அவரது இந்த ஏழு கவிதைகளும் ‘சமாலோசன்’ என்ற இணைய இதழில் வெளியானவை. 

(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு)

மேலே உள்ள கவிதைகள் சமாலோசன் இதழில் வெளியான கவிதைகளின் தமிழ் வடிவம்.

***

Share:

பறவைகளை அறிதல் - கேரி ஸ்னிடர்

பறவைகளை அறிதல்


நீ வாழும் நிலம்

அந்நிலத்தின் பருவகாலம்


அப்பறவைகள் பறந்தலையும் பரப்பு

புல்வெளியில்

புதரில்

கானகத்தில்

கற்பாறையில்

நாணல் இடையில்


தனியென

குழுவென

சிறுகுழுவென?


அதன்

உருவம்

விசை

பறத்தலில் தனி லாவகம்


அதற்கே உரிய

வினோதம்

வாலின் சிற்றசைவு

சிறகசைப்பு

தலைநாடல்


அவை உண்ணும் உணவை உன்னால் பார்க்கமுடிகிறதா?


அதன் 

அழைப்புகளை 

பாடல்களை?


இறுதியில்

உனக்கு வாய்க்குமெனில்


அவைகளின் வண்ணங்களை

இறகுகளின் வடிவங்களின் நுண்மையை- 

வரிகளை

புள்ளிகளை 

தீற்றல்களை


பறவைக்கு ஒரு பெயர் சூட்ட 

உனக்கு தேவையான

அனைத்தையும்

அந்த விவரங்கள் சொல்லும்,

ஆனால்


அதற்கு முன்னரே

இந்த பறவையை அறிவாய் நீ.

(Gary Snyder)

(தமிழில்: வேணு வேட்ராயன்)

***

Share:
Powered by Blogger.

கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் – 2: க.நா.சு

மனித இனத்தின்‌ முதல்‌ இலக்கிய வடிவம்‌ கவிதையே காவியங்களை பற்றி இவ்வளவு போதும்‌. இப்போது கவிதை என்று பார்க்கலாம்‌. பொதுவாக உலக மொழிகளில்‌ எல்...

தேடு

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (7) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (201) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (7) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (201) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive