நான் ‘பொக்கிஷங்களை’ நம்புவதில்லை. மாநகராட்சியின் மக்காத குப்பைத் தொட்டியில் இன்று வந்து விழுபவைகளுள் சில, ஒரு காலத்துப் பொக்கிஷங்கள்தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆகவே அவற்றைப் பூட்டிப் பாதுகாப்பது வேடிக்கையானது. ஆனாலும் நான் அப்படி பாதுகாக்கும் ஒரே ஒரு பொக்கிஷம், இதுவரை வெகுசிலரே பார்த்திருக்கிற, என் முதல் கவிதைத் தொகுப்பை வாசித்து விட்டு , சுகுமாரன் எழுதிய கடிதம் ஒன்றுதான். இதோ இந்தக் கட்டுரைக்கும் உதவும் சொற்கள் அந்தக் கடிதத்தில் இருந்தன.
கோவை காந்திபுரம் கணபதி விடுதியில் இளம் இளைஞனாக அவரோடு நிகழ்த்திய மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக நீண்ட உரையாடலும் இத்தருணத்தில் நினைவிற்கு வருகிறது. “ கவிதைக்கு பொய்யழகு” என்கிற கூடாரத்திலிருந்து வந்தவனின் நெஞ்சில் உண்மையே கவிதையின் ஆபரணம் என்கிற எண்ணத்தை ஆழ விதைத்துவிட்டவை அந்த உரையாடல்கள். மொத்த உலகத்தின் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு நான் சென்று வந்த 11 மணிக் காட்சிகள் குறித்து, முதன்முதலில் இன்னொரு மனிதரிடம் நான் பகிர்ந்து கொண்டதும் அவரிடம்தான். அதாவது என்னிடமே நான் சொல்லத் தயங்கிய பலவற்றையும் ஒரே மூச்சில் அவரிடம் சொல்லி முடித்தேன். அந்த உரையாடல் முடிந்த படியிறங்கிச் செல்கையில் இருந்த காலி மனத்திற்கும் இலக்கியத்திற்கும் வலுவவான தொடர்பிருந்தது என்றே கருதுகிறேன். எல்லாவற்றுக்கும் நன்றி தம்பி !
சுகுமாரனைக் குறித்தும் அவரது முந்தைய காலத்துக் கவிதைகள் குறித்தும் நான் ஏற்கனவே இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவை வாசிக்கக் கிடைக்கின்றன. ஆகவே இந்தக் கட்டுரை அவரது பிந்தைய கவிதைகளைக் கருதி எழுதப்படுகிறது. அவருடைய சமீபத்திய கவிதைத் தொகுப்பான “ இன்னொரு முறை சந்திக்க வரும் போது” என்கிற தொகுப்பில் உள்ள கவிதைகளையும், இதுவரை தொகுக்கப்படாத சமீபத்திய கவிதைகளையும் இங்கு அணுகிப் பார்க்கலாம்.
பொதுவாக நீண்ட காலமாக எழுதி வரும் எழுத்தாளரை மதிப்பிட அவர் எங்கு துவங்கி, எங்கெங்கு சென்றுவிட்டு, இப்போது எங்கு வந்து நிற்கிறார் என்பதைக் காண்பது ஒரு விமர்சன மரபு. “மனிதர் இப்போது எவ்வளவு கனிந்துவிட்டார் பாருங்கள்..” என்று சொல்வது அந்த மரபின் ஐதீகங்களில் ஒன்று. கனிவிற்கு கண்டிப்பாக கைதட்டி ஆக வேண்டும் இல்லையேல் நமது கல்நெஞ்சம் கையும் களவுமாகச் சிக்கிவிடும். ஆனால் இந்த மரபு ஒரு தோராயமான வரைபடத்தையே அளிக்க இயலும் என்று நினைக்கிறேன். எப்படியாவது தொகுத்துக் காணவேண்டும் என்பதற்காக இப்படிக் காண்கிறோம். ஒரு எழுத்தாளனின் பயணத்தை அப்படி துல்லியமாக வரையறுத்து விட இது பயன்படுமா என்பது சந்தேகமே. மனிதன் ஒரு நாளில் இச்சையின் பிடியிலும், மறுநாள் ஞானத்தின் ஒளியிலும் வாசம் செய்பவன். நமது ஒரு நாள் கூட ஒன்பது மெய்ப்பாடுகளாக உடைந்து விட வாய்ப்புண்டு தானே? கனிந்துவிட்டார் என்று நாம் சான்றிதழ் தரும் ஒருவர் மறுநாளே ஒரு கொலை செய்தாலும் செய்துவிடுவார். கவிஞரும் தன் சமீபத்திய தொகுப்பின் முன்னுரையில் இதை ஒத்துக் கொள்கிறார். “ மனிதர்கள் இவ்வளவு மகத்தானவர்களா என்ற பெருமிதமும் எத்தனை சல்லித்தனமானவர்கள் என்ற அருவருப்பும் இந்த நாட்களில் ஒருங்கே எழுந்தன”.
ஒரு எழுத்தாளரின் 50 வருடப் பயணத்தில் 45 ஆண்டுகளை கழித்து விட்டு 5 ஆண்டுகளை மட்டும் தனியே காண்பது சிரமமே எனினும் அவரது பழைய கவிதைகளை துணைக்கு அழைக்காமல் இந்தக் கவிதைகளை மாத்திரம் பேசிப் பார்க்க இங்கு முயலலாம். இந்த வகையில் ஒரு அனுகூலம் உண்டு. ஒவ்வொரு கவிஞனின் நெற்றியிலும் தலையெழுத்தைப் போல் பொறிக்கப்பட்டிருக்கிற, அவனது சில கவிதைகளிடமிருந்து அவனுக்கு விடுதலை அளித்துவிட முடியும்.
சுகுமாரனின் வாராணசி குறித்த கவிதைகள் குறிப்பிடத்தக்கவையாக இத்தொகுப்பில் உள்ளன. “காலம் “என்கிற தலைப்பில் முதல் கவிதை உள்ளது. அச்சமாகவும் விடுதலையாகவும் இருக்கிற, நிர்கதியாகவும், சரணாகதியாகவும் பொருள் படுகிற ‘மரணம் ‘ நிகழ்ந்து கொண்டேயிருக்கிற ஸ்தலத்தில் காலம் என்னவாக இருக்க முடியும்?
இங்கு
காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று
காலங்களுக்கு அப்பாலான காலம்
இங்கே
இன்று பிறந்த இன்றும்
நாளை பிறக்கும் நாளையும்
பிறந்ததுமே
இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன..
………
இங்கே
வாழ்வின் வேட்கைக்கு மரணம் காவலிருக்கிறது
சாவின் கொள்ளிகளுக்கு இடையில்
………….
………………
வாராணசி கவிதைகளில் அடுத்ததாக உள்ளது உஸ்தாத் பிஸ்மில்லாகானின் நினைவுகளூடாக எழுதப்பட்டிருக்கிற “ உஸ்தாத்” என்கிற கவிதை. அதாவது, ‘காலம் ‘என்கிற சோகமான தத்துவத்திலிருந்து , எப்போது நினைத்தாலும் அப்போது தித்திக்கிற பேரின்பத்திற்கான ஏக்கத்திற்கு தாவுகிறது கவிதை. இப்போது ‘காலம் ‘என்கிற முதல் கவிதை அர்த்தம் இழக்கிறதா? அல்லது கூடுதலாக வலுப்பெறுகிறதா?
வாராணசி கவிதைகளில் “முக்தி” மூன்றாவது கவிதையாகவும், “சுடர்கள்” கடைசிக் கவிதையாகவும் உள்ளன.
முக்தி
காசிக்கு வந்தால்
அதி விருப்பானதை
இங்கேயே கைவிட்டுப் போவது மரபு
……….
ஒவ்வொருவரும்
ஒவ்வொன்றைக் கைவிட்டுப் போகும்போது
காசியையும் கையோடு கொண்டு போகிறார்கள்
ஒவ்வொருவரும்
ஒவ்வொரு முறையும்
காசியை நினைக்கும் போது
கைவிட்டவையும் கூடவே வராதா?
“சுடர்கள்” கவிதை இப்படி முடிகிறது
“கங்கையில் மிதக்கவிடப்
பெண்கள் கொண்டுசெல்லும் அகல்களில்
அழியாச்சுடர்களை பார்த்தேன்…”
இப்படியாக இந்தக் கவிதைத் தொடர் அழிவில் துவங்கி அழியாச்சுடரில் நிறைகிறது. அழிவு உறுதியானதும் இறுதியானதும் என்பதை மனிதன் அறிய மாட்டானா என்ன? ஆனால் அதற்குள் அழியாச்சுடர்களை கண்டுவிட ஏங்குபவன் அவன். கண்டும் விடுபவன் என்றே தோன்றுகிறது
இந்த நாட்களில் இருட்டை அதிகம் சந்திக்கிறேன். இத் தொகுப்பிற்கு எழுதப்பட்டிருக்கிற முன்னுரையின் தலைப்பு “ இருட்டின் ஒளி”. ‘இருட்டும் ஒரு வெளிச்சம்தான் என்கிற அறிவை’ அடைந்ததாக முன்னுரை சொல்கிறது. முன்னுரைக்கு முன் அச்சிடப்பட்டிருக்கிற அப்பாஸ் கியரோஸ்தமியின் வாசகம் ஒன்று “முழு இருட்டிலும் கவிதை காத்திருக்கிறது. அது அங்கிருப்பது உனக்காகவே ” என்கிறது. . சமீபத்தில் வாசித்த சஹானாவின் கவிதை ஒன்று.. “ இருளே உண்மையான வெளிச்சம்” என்றது. எங்கும் விரவிக் கிடக்கிற வெளிச்சத்தில் விழிகள் தூக்கத்துள் செருகிக் கொள்கின்றன. இருட்டு நம்மை நன்றாக விழித்துக் காணச் சொல்கிறது. அப்போது காணாத பாதையெல்லாம் காணக்கிடைக்கின்றன. இப்படியாக தமிழின் மூத்த கவி ஆளுமை ஒருவரும், இளம் கவி ஒருவரும் இணைந்து இருட்டில்தான் தேடுகிறார்கள். இருட்டில்தான் அடைகிறார்கள். கவி இருளின் சிநேகிதராக இருப்பது அவசியம் என்றே நானும் நம்புகிறேன்.
தொற்றுக் காலத்தில் எழுதப்பட்ட இந்தக் கவிதைகளில் இயல்பாகவே "இருப்பு" குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
…..
நாம் இல்லாமற் போனால்
நமது பிரபஞ்சம் என்ன ஆகும்
நாம் இல்லாமற் போனால்
நாம் என்ன ஆவோம்?
நாம் இல்லையெனில் உறுதியாக பிரபஞ்சத்திற்கு ஒன்றும் ஆகாது. ஆனால் நாம் இன்றி நம்மால் இருக்க இயலுமா? நாம் எதுவோ அது இல்லையெனில் அது நாம் அல்ல அல்லவா? ( ஆஹா!!! எவ்வளவு அழகான சத்தங்கள் எழுகின்றன)
கவியின் பிந்தைய கவிதைகளில் அடிக்கடி மரணம் தலை நீட்டிப் பார்க்கிறது. கூடவே மரணத்திற்கு எதிரான காதலும். மரணத்திலிருந்து காக்கும் வேடிக்கைச் சிரிப்பையும் காண முடிகிறது. வேடிக்கை, தீவிரத்திற்கு எதிரானதென்பதே பொதுக் கருத்து. அது ஒரு தனித் தீவிரம்தான். இவ்வளவு தீவிரத்திற்கு இங்கு ஒரு அர்த்தமும் இல்லை என்று சொல்லும் தீவிரம். சமீபத்தில் ஸ்டீபன் ஹாக்கிங்ஸின் பொன்மொழி ஒன்றை வாசித்தேன்..” நாம் வேடிக்கையானவர்களாக இல்லையென்றால் வாழ்க்கை நரகமாகிவிடும்”
பெருந்தொற்றுக் காலத்தில் எழுதப்பட்ட இத்தொகுப்பில் உள்ள கவிதைகளில் தான் விரும்பிய “ எளிமையை” அடைய முடிந்திருப்பதாகச் சொல்கிறார் கவி. எளிமையினூடே கொஞ்சம் அசட்டையும் சேர்ந்து விட்டதோ என்று நான் சந்தேகிக்கிறேன். தொற்றுக் காலத்தின் சோர்வு இதன் சொற்களையும் பிணித்திருக்கலாம். எளிமையும், அசட்டையும் அருகருகே இருக்கும் ஆபத்துகள் தானே?
கதை சொல்லும் கவிதைகள் மேல் பெரிதாக எனக்கு ஈர்ப்பில்லை. ஆனால் இத்தொகுப்பில் இருக்கும் அப்படியான இரண்டு கவிதைகள் என்னை அதிகம் ஈர்த்தன. பிறழ்ந்த காதல் என்று சொல்லப்படுகிற காதல் கதைகளில் இடம்பெறும் இரண்டு ஆண்களுக்கு இடையேயான விரோதம், வெறுப்பு, கொலை வெறி போன்றவற்றை நாம் அறிவோம். ஆனால் அவர்களுக்கிடையே முகிழ்கும் அன்பையும், மதிப்பையும் பேசும் தமிழ்க்கவிதை வெகு அரிது என்றே நினைக்கிறேன். இந்தக் கதையில் காதலியின் பெயர்” லியான்ஹூவா” அவள் கணவனின் பெயர்” காங்க்மிங்க் ரேன்”. அவள் காதலனின் பெயர்” ருவான் ரே”. கணவன் காதலனை போனில் அழைக்கிறார்…
திரு. ருவான்ரேனின் காதலி
…….
……
……
“ ஹலோ, ருவான் ரே,
லியான்ஹூவா இங்கே ஓயாமல் அழுகிறார்
கூந்தலைப் பிய்த்து கூப்பாடு போடுகிறார்
சுவரில் முட்டிக் கபாலம் பிளக்கிறார்
நீங்கள் பேசினால் நிச்சயம் தணிவார்”
கைநடுங்க ரிசீவரைப் பற்றிக்
காதலிக்கு ஆறுதல் சொல்லும் போது
கலங்கிய விழிகளால் ருவான் ரே
ஜன்னலுக்கு அப்பால்
மண்ணிலிருந்து விண்ணுக்கு
நட்சத்திரம் ஒன்று ஒளிபரப்பிப் போவதை
அண்ணாந்து பார்த்து ஆச்சர்யம் அடைந்தார்
அந்த விண்மனமீனுக்கு
”காங்க்மிங்க் ரேன் ” என்று புதுப்பெயர் சூட்டினார்.
“லியான்ஹூவாவின் காதலர்” என்கிற அடுத்த கவிதையும் பிறழ்ந்த காதலின் வினோதமான மனநிலைகளில் ஒன்றை துல்லியமாகத் தொட்டு விடுகிறது.
….
…..
காதலியின் கணவர் மறைந்தால்
கைம்மைக்கு ஆளாவது காதலரே என்று
திரு. ருவான் ரே யாரும் காணாமல் தேம்பினார்
தான் அந்நியமானதை எண்ணி வெதும்பினார்……
இந்தக் கவிதைகளின் பாத்திரங்களுக்கு கந்தசாமி, முனுசாமி, கலைச்செல்வி என்றே கூட பெயர்கள் சூட்டி இருக்கலாம். ஆனால் அப்படிச் சூட்டினால் இவற்றை யாராவது வாசித்துவிடும் ஆபத்துண்டு என்பதால் கவிஞர் தவிர்த்து விட்டாரோ என்னவோ? அல்லது தமிழன் இன்னும் அவ்வளவு நாகரீகமடையவில்லை என்று கருதுகிறாரா ?
இந்தப் பிந்தைய கவிதைகளில் இசை அளிக்கும் பரவசங்கள் கவிதைகளாகி உள்ளன. “ ஒளி இடறி இடறி உரையாடும் அடர்வனம்” என்கிறார் M.D. ராமநாதனின் சஹானாவை. “ வகுளாபரணம்” எனும் ராகத்தின் உணர்வு நிலைகளை புறக்காட்சிகளாக எழுதிப் பார்க்க முயன்றிருப்பது புதிய அனுபவம்தான். அந்தக் காட்சிகளின் வழியே அந்த ராகத்தின் இனிமையை தொட முடிகிறது.
சரக்கொன்றை பாடும் சங்கீதமொன்றும் எனக்குப் பிடித்தமானது. கண் , காது வழிப் பார்க்கும் கவிதையிது. பளீரென்று ஒலிக்கும் பிரமாதமான பாடல் .
பருவ கானம்
நாள்தோறும் நடக்கும் வழியில்
நேற்றுவரை காணாத மலர்ச்சி
இன்று
ஆண்டு முழுவதும்
ஒத்திகை பார்த்த பாடலைப்
பாடிக் கொண்டிருக்கிறது
பொற்கொன்றை
ஒவ்வொரு மனிதனிடமும் வழியனுப்பி வைக்க வேண்டியவை என்று ஒரு பட்டியல் உண்டு. பிரியங்கள், ஆசைகள், பழக்கங்கள், நினைவுகள் என்று. மனிதன் அதற்கெதிராக சமரிடாமல் இல்லை. பயன்தான் பல உயிர்க்கும் வாய்ப்பதில்லை.
ஐ வல் யூ
காலம் கண்ணுக்குள் உறையக்
காட்சிகள் புரையோடுகின்றன
கால்கள் தளர்கின்றன
செவி மங்குகிறது
மொழி குழறுகிறது
இனிமேல் பயனில்லை
எனவே
கடைசியாக அலங்கரித்து
மனம் தளும்ப உபசரித்து
அழைத்துப் போய்
சொல் எட்டாத் தொலைவில்
விட்டு வந்தேன்
வரும் வழியில் உள்ளுருகி
அது இருந்த நாளையும்
அத்துடன் இருந்த பொழுதையும்
அதுவாக இருந்த நொடியையும்
நினைவில் ருசித்துக் கொண்டே திரும்பினேன்
நான் வந்து வீடடையும் முன்பே
அது வந்து வாசலில் நிற்கிறது
யுகயுகமாகக் காத்திருந்தாற் போல
துள்ளி ஓடி வந்து
அன்றலர்ந்த மலர்த்திரளை
ஆசையுடன் நீட்டுகிறது
முதன்முதலாகச் சொல்வது போல
அந்தரங்கமாகச் கிசுகிசுக்கிறது
“ ஐ வல் யூ”
“சொல் எட்டாத் தொலைவு” என்கிற தொலைவு இந்தக் கவிதையில் கவனிக்க வேண்டிய வரி. மேலும் இந்தக் கவிதையில் “ கடைசியாக” என்கிற சொல்லைப் பார்க்கப் பார்க்க பாவமாக இருக்கிறது. மனிதன் “ கடைசியாக “ என்று சொல்லும் அநேக தருணங்களிலும் அவன் பின்னால் நின்றுகொண்டு ஏதோ ஒன்று வாய் பொத்திச் சிரிப்பது போல் எனக்குத் தோன்றும்.
தவிட்டுப் பழத்தை வாயில் இட்டு காலத்தை மெல்லும் ஒரு கவிதையும் எனக்குப் பிடித்தமானது.
இது போர்களின் காலம். டி.விக்கள் நாள் தோறும் ஏதோ ஒரு போரைக் காட்டுகின்றன. இவற்றில் போர் குறித்து இரண்டு கவிதைகள் காணக்கிடைக்கின்றன. ஒரு கவிதை தெளிவாக போருக்கு எதிராகப் பேசுவது. காஸாவில் மண்ணை அள்ளித் தின்று காட்டிய ஒரு சிறுவன் வைரல் ஆனான். ஆனால் போர் என்ன ஆனது?
ஆயத்தம்
ஒரு யுத்தத்தை ஆரம்பிக்க
இரண்டு பேர் போதும்
எதிரியாக மாறிய நண்பனும்
நண்பனாக மாறிய எதிரியும்
ஒரு யுத்தத்தின் முடிவில்
ஐந்து பேர் எஞ்சுவார்கள்
இறந்தவன் ஒருவன்
சுமப்பவர் நால்வர்
ஒரு யுத்தம் புதிய சாதிகளை உருவாக்குகிறது
அங்கவீனர்கள்
அநாதைகள்
கைம்பெண்கள்
தரித்திரர்கள்
கூடவே
மூடர்களை
கல் நெஞ்சர்களை
இன்னொரு கவிதை” போரும் அமைதியும்”. இந்த இரண்டு கவிதைகளும் ஒரு வகையில் அருகருகே வைத்து வாசிக்கத் தகாதவை. ஒரு வகையில் அருகருகே வைத்து வாசிக்கத் தக்கவை. பின்னது என்னளவில் வெகு ஆழமானது. வீடுகளில் நடக்கும் போர்கள், உள்ளத்துள் நடக்கும் போர்கள் என நமது அன்றாடங்களின் யுத்தத்தையும் சேர்த்து அள்ளி வந்திருக்கிற கவிதை அது.
போரும் அமைதியும்
யுத்தமும் சமாதானமும் இரண்டல்ல
ஒன்றுதான்.
எப்போதும்
சமாதானத்துக்காகவே
காத்திருக்கிறது யுத்தம்
எப்போதும்
யுத்தத்தை எதிர்பார்த்திருக்கிறது
சமாதானமும்
இரண்டும்
எப்போது இன்னொன்று முடியும் என்றே
தொடங்குகின்றன
இரண்டும்
எப்போது தொடங்கும் என்றே
முடிகின்றன
ஒரு பொதுப் பகைவனைக் காட்டி
எல்லாரையும் கொல்கிறது போர்
ஒருவரையும் ஒருவரிடமும்
கொண்டு சேர்ப்பதில்லை அமைதி .
யுத்தம்
மரணத்தின் வெட்டியான்
சமாதானம்
வாழ்வைத் தொலைத்த அகதி.
எனவே
ஒன்றுதான்
போரும் அமைதியும்.
வாழ்வை தொலைத்து அடைகிற சமாதானத்தை எண்ணினால் குமட்டிக் கொண்டு வருகிறது. சமாதானமும் நீதியும் வேறு வேறல்லவா?
சுகுமாரனின் சில கவிதைகள் வெடிப்பதற்குப் பதிலாக ஒரு புள்ளியைச் சுற்றிச் சுற்றி வண்டு போல் ரீங்கரிப்பை. ஒரு விதத்தில் ஆலாபனை போல. அவரது இசை ஆர்வம் இந்த வடிவிற்கு அவரை இட்டுச் சென்றிருக்கலாம். அடுக்கி அடுக்கிச் சொல்லப்படுகிற அல்லது விஸ்தாரமாக நீட்டி முழக்கும் இந்த வகைமை மீது எனது ஆரம்ப நாட்களில் இருந்த மோகம் பின்னாட்களில் தேய்ந்து விட்டது என்பது உண்மை. அந்த வகையான கவிதைகள் அவரது பிந்தைய கவிதைகளில் குறைவு என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு உவப்பான செய்தி.
கட்டுரை முடிந்துவிட்டது. “ சமாதானம் வாழ்வைத் தொலைத்த அகதி” என்கிற வரி இன்னும் முடியவில்லை.
(ஆவடி இந்துக்கல்லூரியும், காலச்சுவடு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய “ சுகுமாரன் படைப்புப் பயணம் ’ “ நிகழ்வில் ஆற்றிய உரையின் விரிவான எழுத்து வடிவம்)