தெய்வம்
பாருங்கள் என் துயரத்தை
இவ்வளவு காலமாக
இந்த விசயங்கள் எல்லாம்
தெரியாமலே வாழ்ந்து விட்டேன்
காலையில் சீக்கிரம் எழச் சொல்லி
அம்மா ஏன் வற்புறுத்தினாள்
அப்பா ஏன் அதிகமாக
ரயில்களில் பயணித்தார்
செடிக்கு தண்ணீர் ஊற்றும் போது
தாத்தா ஏன் சோகமாக இருந்தார்
என்பதெல்லாம்
இப்போதுதான் புரிகிறது
தங்கை அடம்பிடித்தால் மட்டும் ஏன்
அடி விழுவதில்லை
ஜிம்மி ஏன் செத்துப்போனது
பக்கத்து வீட்டு அக்கா ஏன்
தனியாக வாழ்ந்தாள்
என்பதெல்லாம் இப்போதுதான் புரிகிறது
இதுபோல
இன்னும் நிறைய நிறைய சம்பவங்கள்
ஆனால் எதுவும் நினைவில்லை
இன்னும் இதுபோல எவ்வளவு எவ்வளவு விசயங்கள்
தெரியாமல் வாழ்ந்திருக்கிறேன்
என யோசித்தால் பயம் வருகிறது
புரியாமலே இதுவரை வாழ்ந்தது போல நினைவு வராமல் தொடர்ந்து இருக்க ஏதேனும் தனி தெய்வம் இருக்கிறதாவென
தேடிப் பார்க்கப் போகிறேன்.
ஞானம் -1
பிராத்திக்கும் போது
ஒளியை மட்டும் பார் என்றார் குரு
எந்த ஒளியை என கேட்டேன்
பதிலில்லை
எல்லோரும் கண்களை மூடி
ஆழ்நிலைக்கு உயிர்
கொடுத்துக்கொண்டிருந்தார்கள்
நானும் கண்களை மூடினேன்
ரெம்பவே சுடுகிறது
அமைதிக்குள் இருக்கும் ஒளி.
ஞானம் - 2
பிராத்தனை முடிந்து வெளியேறும் போது
அவன் சொன்னான்
ஒருவேளை நான் மன்னிக்கப்பட்டால்
ஒரு ஒளியைப் போல அணைத்துவிடுங்கள்
இருந்த சுவடே தெரியக் கூடாது
உச்சிக்கு ஏறிய பிறகு
யாராவது அடிவாரத்தில் நகரும்
பூச்சியை கவனிப்பார்களா
அதுபோல என்னை தவறவிட்டு விடுங்கள்.
போதனை
என்னிடம் நதியொன்று இருந்தது
அசையாததைப் போல அசையும்
உறங்குவதைப் போல விழித்திருக்கும்
அதனிடம் இருந்துதான் வாழ்வின்
போலித் தனங்களை பயின்றேன்
யாருடைய கையையும்
மேல் விசாரணையின்றி
உடனே பற்றுகிற குணத்தை
அதுதான் எனக்கு கற்றுக்கொடுத்தது
ஒரு மத்தியானம்
எனது கால்களை அணைத்தபடி
“ஞானத்தின் உட்புற மர்மம் எப்போதுமே வலிமிகுந்தது”
என்பதையும் நதிதான் அழுதபடியே போதித்தது.
***
***
0 comments:
Post a Comment