- ரெய்னர் மரியா ரில்கே
கவிஞர் ஆனந்த்குமாரின் முதல் தொகுப்பான டிப் டிப் டிப் 2021 ஆம் ஆண்டில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற தொகுப்பு. எளிமையும், குழந்தைகள் உலகும், கவிஞன் எட்டும் ஆன்மீகத் தளமும் அத்தொகுப்பின் சிறப்புகளாக அமைந்திருந்தன. நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு அவரது இரண்டாவது தொகுப்பான ப்ளம் கேக் வெளிவந்துள்ளது. விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழாவில் கவிஞர் ஆனந்த் குமார் தன் கவிதை வெளிப்பாட்டை 'ஒரு குழந்தை நமக்கு அளிப்பது அளப்பரியது' என்று தனது இரண்டு மகன்களுக்கும் நன்றியாகக் கூறுகிறார். இந்த இரண்டாவது தொகுப்பில் அவர் தந்தையினின்றும் கூடுதலாக ஒரு காதலனாக மலர்ந்துள்ளார். பொதுவாகவே அவரது மனம் ஒரு காதலனுக்கான மனம். காணும் யாவையும் காதலுடன் பார்ப்பவனே கவிஞன் எனச் சொல்லலாம்தானே. அந்த வகையில் ஆனந்த்குமாரின் 'மனம்' அவரை ஒரு கவிஞராக தொடர்ந்து நிலைநிறுத்துகிறது. அம் மனமே மொழியைத் தீர்மானிக்கிறது. கவிதையாகிறது. இரண்டு வகையான கவிஞர்கள் உண்டு. ஒன்றிலிருந்து வேறொன்றைக் கண்டறிந்து எழுத முனைபவர்கள். ஒன்றையே எழுதி எழுதிச் செல்பவர்கள். முதல் தரப்பில் தேவதச்சன், சுகுமாரன் போன்ற கவிஞர்களை வைக்கலாம். இவர்கள் கவிதைக்குப் புதிதாக எதையேனும் செய்யத் துடிப்பவர்கள். இரண்டாவது தரப்பில் தேவதேவன், கல்யாண்ஜி போன்ற கவிஞர்களை வைக்கலாம். அவர்களோடு சேர்த்து ஆனந்த்குமாரையும் வைக்கலாம். இவர்கள் தன் கவிதா ஆற்றலின் வீச்சால் முன் நகர்பவர்கள். கவிதை மீது அதீத பித்துடையவர்கள். இந்த இரு தரப்பினருமே கவிதைக்குத் தேவையானவர்கள்.
உனக்காக மட்டும்
நிறைத்துவைத்த பாத்திரத்தில்
ஒருவாய் அள்ளக்
கைவிடவும்
அண்டமெல்லாம்
பொங்கிவழியுது
நீர்
(ப்ளம் கேக் , பக்க எண் 63)
கவி ஆனந்த்குமாரின் டிப் டிப் டிப் லிருந்து ப்ளம் கேக் வேறுபடும் சிறிய இடமாக காதல் கவிதைகளைக் குறிப்பிடலாம். இந்த இடத்தில் காதல் கவிதை என்பதை அதன் வைரல் குணம் காரணமாகக் குறிப்பிடவில்லை. ஆனந்த் இயல்பாகவே தன் கவிதைப் பாதையின் 'வழியாக' அதைத் தேர்வு செய்கிறார். அதன் உச்சபட்ச சாத்தியங்களைத் தொடுகிறார்.
நீ இன்னும் வளையல்கள் அணிகிறாய்
பற்றியும் பற்றாமல்
பிடித்திருப்பதுதான்
எப்போதும் உன்
கைகளைச் சூழ்ந்திருப்பதன் ரகசியமா
உன்னில் ஓர் பிடியுமில்லை
என சொல்லிக்கொண்டே
இருக்கவேண்டுமா
நழுவிவிழும் தோரணையில்
உன் கைநுனிவரை சென்று
துடிக்கவேண்டும் இல்லையா
இந்த நாடகத்தை நீ
குறைந்தபட்சம் பார்க்கிறாயா
சின்னச் சிணுங்கல்களை
முனகல்களை கேட்கிறாயா
இந்தத் தேர் செல்லும் திசை
உனக்குத் தெரியுமா
முன்னும் பின்னும்
காலத்தில் ஓடும்
அந்த ஓட்டைச்சக்கரங்கள்
அப்படி
எங்குதான் கூட்டிச்செல்கின்றன உன்னை
அதன் மீது நீ
இப்படி அமர்ந்திருப்பதற்கு
ஆனந்த்குமாரின் காதல் கவிதைகள் மேலோட்டமானவை அல்ல. முதலிலேயே குறிப்பிட்டது போல் தன் 'மனம்' வழியாக அவர் அதைத் தொடும் இடங்கள் அபாரமானவை. ஏதோ ஒருவகையில் எல்லா நல்ல கவிதைகளும் காதல் கவிதைகளாகவே அமைகின்றன. இங்கே காதல் என்றால் எல்லா வகைக் காதல்களும். ஆனந்தின் காதல்கள் குழந்தை மீது, இயற்கை மீது, வெளி மீது, பெண் மீது நிகழ்கிறது.
மலைமேல் ஒரு பட்டாம்பூச்சி
மண்ணிற்கருகில்
பறக்கிறது
-
விரிந்து உதிர்ந்த மலரென
நகர் நடுவில் ஒரு மைதானம்
பொங்கி நிற்கும் நீரை
சுற்றிவரும் எறும்புகள் போல
அதிகாலையில்
அதன் ஆழத்தைப் பார்த்தபடி
எல்லையைச் சுற்றி நடக்கிறார்கள்
பெரியவர்கள்
ஒன்றுமில்லையெனக்
கிடந்த அந்த மலரை
இந்த விடுமுறைநாளில்
தொட்டது யார்
பூவெறும்புகளென உள்ளிருந்து
வெளிவந்துகொண்டே இருக்கிறார்கள்
பிள்ளைகள்
நுண்மையான விஷயங்கள் மீது ஆனந்தின் கவனம் குவியும் இடங்களில் பிறக்கும் கவிதைகளும் இத்தொகுப்பில் முக்கியமானவை.
காரின் பின்சீட்டில்
திரும்பி நிற்கும் குழந்தை
கைகளை விரித்து
கண்ணாடியில் வைத்திருக்கிறது
பின்னால்
நீண்டு விலகிச்செல்லும்
சாலையின் இருபக்கமிருந்தும்
சுருங்கிச் சுருங்கி
அதன் கைகளில்
சேர்ந்துகொண்டேயிருக்கிறது
உலகம்
-
நான் அவளை
சிறுவிரல் பற்றி
அழைத்து வருகிறேன்
அதற்குள்
நீங்கள் இந்த
உலகை கொஞ்சம்
ஒழுங்குபடுத்தி வைக்கிறீர்களா?
கவிதா ஆற்றலின் வீச்சால் அடித்துச் செல்லப்படும் இடங்களை ஒரு கவிஞன் அனுமதிக்க வேண்டும். அது பெரும் பேறு. ஆனந்த்குமார் அப்படி அனுமதித்த இடங்கள் தொகுப்பில் நிறைய உள்ளன.
அந்த ஆளுயர செம்பருத்திச் செடியில்
எத்தனையோ முறை நான்
பூப்பறித்திருக்கிறேன்
அதிலெதுவும் இப்போது
என்னிடம் இல்லை
மரம்தான் வைத்திருக்கிறது
இன்னும் அந்தப் பூவை
ஒவ்வொரு நாளும்
அதை மலர்த்திக் காட்டி
என்னை அழைக்கும்
ஒவ்வொரு முறையும்
நான் பறித்துவிட்டதாய்
நினைக்கையில்
நீர்ப்பறவைபோல மூழ்கி
மறுநாள்
மற்றோரிடத்தில் பூக்கும்
இன்னும் நான்
பறித்திடாத பூ
தொகுப்பில் பல கவிதைகள் மனதில் நிலைப்பவை. நான் தினமும் வேலைக்குச் செல்லும்போது என் இரண்டு வயது மகனை ஸ்கூட்டரில் ஒரு ரவுண்டு அடித்து இறக்கிவிட்டுச் செல்வது வழக்கம். அப்படி பிரிந்து செல்லும்போது மனம் இலேசாகக் கனக்கும். உடனே நான் மனதிற்குள்ளேயே இறைவா என் மகனை உன் பொறுப்பில் விட்டுப்போகிறேன். பத்திரமாக பார்த்துக்கொள் என்று வேண்டுவேன். நாட்கள் கூடக் கூட பட்டியல் நீண்டுகொண்டே போனது. மகனுடன் மனைவி இணைந்தார், அம்மா இணைந்தார், அண்டை வீட்டார் இணைந்தனர், இறுதியாக உலகோரெலாம் இணைந்தனர். நான் எழுத நினைத்த இந்தக் கவிதையை ஆனந்த் இத்தொகுப்பில் அழகான கவிதையாக எழுதியுள்ளார்.
தனியான பிள்ளைகளே உறங்குங்கள்
நான் குழந்தைகளை
அணைத்துறங்கும் இவ்வேளை
கொஞ்சம் கையை நீட்டி
இந்த நகரையும்
அணைத்துக்கொள்கிறேன்
இருளோ
அன்னையைப்போல்
நமை சேர்த்தணைத்துக்கொள்கிறது
இன்றைய ஒளியின் சிறுமைகளை
நீவி அழிக்கிறது
அதன் கனத்த கரங்கள்
இவ்வளவு ஒட்டி
நாம் உறங்குகையில்
இனி
இடையில் எதுவும் புகாதேதான்
இன்னும் நெருங்கிப்படுங்கள்
குழந்தைகளே
மரங்களே
கடல்களே
இதே போல இந்தத் தொகுப்பின் இன்னொரு கவிதையும் நான் எழுத விரும்பிய ஒன்று
எனது வேலை
எனது வேலைக்கு
நீளமான உறுதியான கைகள்
எட்டு பக்கமும் கால்கள்
வேட்டை விலங்கின் கண்கள்
இரையின் காதுகள்
ஆனாலும்
சின்னப் பிரிவுக்கு வாடும்
வீட்டுச்செடியின் வாசனை அதற்கு
ஒருநாள் அதன்
உடலிற்குப் பொருந்தாத
இரண்டு குட்டிச்சிறகுகள் அதன்மீது
முளைத்திருப்பதைக் கண்டேன்
அதனிடம் சொன்னதும்
கிக்கிரி பிக்கிரியென சிரிப்பு
ஒரே துள்ளாட்டம்;
பறந்து பறந்து பார்த்தது
ஒரு கோழியைப் போல
கத்தரித்துக் கத்தரித்து நான்தான்
அதை பத்திரமாக
பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது
வெகுநெடுநாட்கள் கழித்து
வேலைக்குள் மூழ்கியிருந்த
ஒரு மழைநாளில்
சட்டென அது
தோகைவிரித்து ஆடத்தொடங்கியது
தொகுப்பில் மூன்று சமர்ப்பணக் கவிதைகள் உள்ளன. சம்பிரதாய சமர்ப்பணங்களாக இல்லாமல் நல்ல கவிதைகளாவும் அமைகின்றன அவை.
மதுர மலர்
இரண்டு டீயில்
ஒன்று சர்க்கரை இல்லாமல்.
இப்போது
எங்கள் முன் அமர்ந்திருக்கின்றன
ஒன்றையொன்று காட்டிக்கொடுக்காமல்
வெப்பம் அவிழும்
ஆவியில் மட்டும் சின்ன
நளின வேறுபாடு
நாங்கள் தேர்ந்தெடுத்தோம்
அவரவருக்குப் பிடித்த
ஒரு வசீகர நடனத்தை
ஒரு நொடி
நிலைகுலைந்தன
உலகின் மதுர விகிதங்கள்
செடிமாற்றிப் பூத்தன இரு
சின்னஞ்சிறிய மலர்கள்.
(கவிஞர் லஷ்மி மணிவண்ணன் அவர்களுக்கு)
தொகுப்பில் குட்டைச் சேற்றின் கேள்வி என்றொரு கவிதை உள்ளது. இதை நிறைய முறை யோசிக்க மட்டுமே செய்திருக்கிறேன். ஆனந்த் அதை அழகான கவிதையாகவும் எழுதியிருக்கிறார்.
குட்டைச் சேற்றின் கேள்வி
முன்பு
பத்தாம் வகுப்பு பாடம்
தீவிரமாய் போய்க்கொண்டிருக்கையில்
அவன் நினைத்தான்
இப்போது ஆறாம் வகுப்பில்
சேர்ந்து விட்டால்
எல்லாக் கேள்விகளுக்கும்
தனக்கு விடை தெரியுமென்பதை
அவன் முட்டி மண்டையுடைத்து
எம்பிக் காலுடைத்த
எல்லாப் சுவர்களையும்
ஒற்றை எட்டில்
தாண்டி வந்துவிடலாம் என்பதை
சட்டென பாடம் நிறுத்தி
அன்றில் இழுத்து வந்து
பத்தாம் வகுப்பு ஆசிரியர்
ஒரு கேள்வி கேட்டார்
அவன் அங்கே நின்று
முழித்துக்கொண்டு இருக்கிறான்
இன்று அவனுக்கு
அந்தக் கேள்விக்கு
தெள்ளத் தெளிவாக பதில் தெரியும்
மேலும் அவனுக்கு
நிறைய பதில்கள் தெரியும்
கேள்விகள்தான் பின்னால் கிடக்கின்றன
யோசித்துக்கொண்டே
நடந்து கொண்டிருந்தவனை
தடுத்து நிறுத்தியது
ஒரு சாலையோர குட்டை
பார்த்து பார்த்து என்றது
பத்தாம் வகுப்பு
குதி குதி என்றது
ஆறாம் வகுப்பு
அத்தனை பதில்களையும் தூக்கிக்கொண்டு
இதோ அவன்
குட்டைச் சேற்றின்மேல்
பறந்து கொண்டிருக்கிறான்
கவிஞர் வெய்யில் ஒரு மொழிபெயர்ப்பு கவிதையைக் குறிப்பிட்டு அதில் வருவது போல "கார்" என்கின்ற வாகனம் ஏன் தமிழ்க்கவிதையில் இயல்பாக வரவில்லை? ஏனென்றால் கவிஞர்கள் யாரிடமும் கார் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இந்தத் தொகுப்பின் பல கவிதைகளில் கார் இயல்பாக வருகிறது.
ஒரு புகைப்படக்காரனும் சரி கவிஞனும் சரி இருவருமே ஒரு தருணத்துக்காகக் காத்திருக்கிறார்கள். அத்தருணம் வந்ததும் அதைப் பிடித்துவிடுகிறார்கள். ஆனந்த்குமாரால் சரியான தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பாக ப்ளம் கேக் தொகுப்பைச் சொல்லலாம்.
ஆடை கண்ணாடியில் ஓடும் நதி, பீரோ கண்ணாடியில் மிதக்கும் மேகம், மீதி அப்பாவை விரும்பும் அக்கி, சிந்திக் கிடக்கும் பருக்கை குட்டிக்கரணம் அடிப்பவனுக்கு நட்சத்திரமாவது, மத்தியத்தை வெட்டி விடுபவள்,கடை அடைப்பவரின் சித்திரம், சிக்னலில் காத்திருக்கும்போது நிகழ்பவை, ஒரு மலரைத் தொடுவது எப்படி, பூமியுடன் விளையாடும் சிறுமி, மழை பெய்யாத ஊரைப் பார்க்கும் மழை, இயேசுகுட்டி... அலுவலகத்திற்கு வழிதவறி வந்த பள்ளிக்கூட தின்பண்ட டப்பா, கலர் டிரெஸ் குழந்தைகள் என தொகுப்பு முழுக்கவே ஒரு ஞாயிற்றுக்கிழமைத்தன்மை கரைந்து கிடந்து இனிக்கிறது.
***
ப்ளம் கேக் வாங்க :
தொடர்புக்கு - 9789878967 (சுரேன், வான்கா பதிப்பகம்)
***
ஆனந்த் குமார் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment