தமிழ்க் காவியம் சிலப்பதிகாரம் - க.நா.சு

தமிழ் மரபில் உருவாகிவந்த சிறப்பானதொரு காப்பியம் சிலப்பதிகாரம். இது இன்று அறியப்படுவதைக் காட்டிலும் தமிழர்கள் அல்லாதவர்களிடமும்கூட இன்னும் அதிகமாக அறியப்பட வேண்டிய ஒரு படைப்பு. சிலப்பதிகாரத்திற்கு தற்போது ஆங்கிலத்தில் இரண்டு உரைநடை வடிவ மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஒன்று டாக்டர் வி. ஆர். ராமச்சந்திர தீட்சிதர் அவர்களால் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி ப்ரஸ் மூலம் வெளியிடப்பட்டது. மற்றொன்று அலைன் டேனிலோ அவர்களால் அமெரிக்காவின் நியூ டைரெக்ஷன்ஸ் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது. டேனிலோ தனது பதிப்பில் இக்காப்பியத்தின் சில பாடல்களை புதுக்கவிதையாக மொழியாக்கம் செய்துள்ளார்.

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகக் கருதப்படும் சிலப்பதிகாரம், இலக்கியத் தரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது அவற்றில் சிறந்ததாகத் திகழ்கிறது. பிற காப்பியங்களில் முழுமையான வடிவில் இன்று கிடைப்பவை இரண்டு மட்டுமே. மற்ற இரண்டு காப்பியங்களும் சில துணுக்குகளாகவும் பின்னாளில் எழுதப்பட்ட சுருக்கமான குறிப்புகளாகவும் மட்டுமே கிடைக்கின்றன.

இந்த ஐந்து காப்பியங்களும் தமிழ்ப் பெண்கள் அணியும் அணிகலன்களின் பெயர்களால் அழைக்கப்படுகின்றன: சிலப்பதிகாரம், காலில் அணியும் சிலம்பு. மணிமேகலை, இடையணியாகிய மேகலை. சிந்தாமணி, கழுத்தணியான சிந்தாமணி மாலை. வளையாபதி, கைகளில் அணியும் வளையல். குண்டலகேசி, காதில் அணியும் குண்டலம். இந்த ஐந்து காப்பியங்களும் தமிழ்ப் பண்டிதர்களின் சொல்வழக்குப்படி தமிழ்க் கலைமகளின் ஐந்து ரத்தினங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. எனினும், இலக்கியத் தரத்தின் அடிப்படையில் அவை அனைத்தும் சமமானவை அல்ல. சிலப்பதிகார நாயகன்-நாயகியின் மகளுடைய கதையைப் பேசுவதே மணிமேகலை. அது மதத்திலும் சமூகத்திலும் நிலவிய பல்வேறு அம்சங்களின் பின்னணியுடன் அக்கதையை விவரிக்கிறது. சிந்தாமணி மரபான செய்யுள் வடிவங்களை நீண்ட கதை வடிவில் பயன்படுத்திய விதத்தில் சாதனைமிக்க ஓர் இலக்கிய ஆக்கம். இதில் கதாநாயகனின் பலவிதமான மணவாழ்க்கை சார்ந்த சாகசங்கள் கொஞ்சம் சலிப்பூட்டும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளன. மற்ற இரண்டு காப்பியங்கள் குறித்து இன்று நமக்குக் கிடைப்பது அவற்றின் மேலோட்டமான கதைச் சுருக்கங்கள் மட்டுமே. இங்கு கருத்தில்கொள்ள வேண்டியது யாதெனில், இந்த ஐந்துமே காப்பியத்திற்கான பண்புகள் கொண்டவை என்பது அக்காலத்தைய சமஸ்கிருத மரபுவாதிகள் உருவாக்கிய பிம்பம் மட்டுமே. உண்மை என்பது அவ்வாறல்ல.

இன்று நமக்கு முழுமையாகக் கிடைக்கின்ற மூன்று தமிழ்க் காப்பியங்களில், அநேகமாக சிலப்பதிகாரமே மிகப் பழமையானது. இது இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த படைப்பாகவும், சந்தம் இல்லாத ஆனால் குறிப்பிட்ட தாள நடையில் [meter] அமைந்த அகவற்பா வடிவத்தின் (blank verse) உச்ச நிலையாகவும் காணப்படுகிறது. இச்செய்யுள் வடிவம், இங்கிலாந்தின் எலிசபெத்திய காலத்தைச் சேர்ந்த மர்லோவும் ஷேக்ஸ்பியரும் பயன்படுத்திய தாளக் கவிதைகளுக்கு மிகவும் நெருக்கமானது. இக்காப்பியத்தின் காலத்தைப் பற்றிய கேள்வி விவாதத்திற்குரியது; அதற்குப் பின்னர் வருகிறேன்.

இந்தக் காப்பியத்தை சமணர், பௌத்தர், இந்துக்கள் எனப் பல மதக்குழுக்களும் தங்களுடையதாகக் கூறுகின்றன. ஆனால், இதை எழுதியவர் பிற சமயத்தாரோடு இணக்கமாக வாழ்ந்த ஒரு சமணத் துறவி என்பது கிட்டத்தட்ட நிரூபணமான விஷயம். கதைகளின்படி இளங்கோவடிகள் (அதாவதுஅடிகளான இளவரசன்’) என்பவர், தூரத் தெற்கிலிருந்த ஒரு சேர மன்னனின் இளைய மகன் ஆவார். ஒருநாள் ஜோதிடர் ஒருவர், முடிக்குரிய மூத்த மகன் உயிரோடு இருக்கும்போதே இளையவன் தந்தையின் அரசை ஏற்கப் போகிறான் என்று கணித்துள்ளார். உடனே அந்த இளையவர் உலகத்தைத் துறந்து துறவியாக ஆனார்; இதனால் ஜோதிடரின் கணிப்பு பொய்யாகி, தம் அண்ணன் அமைதியாக ஆட்சி செய்ய முடியும் என நம்பினார். இந்த அண்ணன், சேர மன்னன், காப்பியத்திலேயே ஓரிடத்தில் இடம்பெறுகிறார்.

சமணத் துறவியாக நம்பப்படும் இளங்கோவடிகளுக்கு பல்வேறு கலைகள், மதங்கள், அரசுகள் பற்றி இருந்த ஆழமான புரிதல் சிலப்பதிகாரத்தை பல்வேறு களங்களைத் தொட்டு செல்லும் படைப்பாக ஆக்குகின்றது. மனித நடத்தைகளின் மீதான நேர்மையான விசாரணை இதனை ஆர்வமூட்டும் மானுட ஆவணமாகவும் வாசிக்க வைக்கிறது.

இளவரசராக இருந்த துறவி எவ்வாறு காப்பியம் படைப்பவராக மாறினார் என்பதும் இந்தக் காப்பியத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. காப்பியத்தில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு நேரில் சாட்சியாக இருந்த ஒருவர், அவரிடம் வந்து கதையை விவரிக்கிறார். அவர் தானே ஒரு கவிஞர் என்பதால், காப்பிய நாயகியின் மகளைக் குறித்து ஒரு செய்யுள் படைத்ததையும் சொல்கிறார். இதுவே இளங்கோவடிகளை அக்கதையைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டியது. அவர் தன் காப்பியத்தை இயற்றியபோது, அவருடைய அண்ணன், சேர மன்னன் படைப்பின் மீது கொண்ட ஈடுபாட்டால் வடக்கே போர் நடத்திச் சென்று, இமயமலையிலிருந்து கற்களையும், கங்கையிலிருந்து நீரையும் கொண்டுவருகிறார். தெய்வ நிலையை அடைந்துவிட்ட காப்பிய நாயகிக்கு ஒரு கோயில் அமைக்கிறார். இதுவே காப்பியத்தின் மூன்றாம் பகுதியாக விவரிக்கப்படுகிறது. காப்பியத்தின் முதல் இரண்டு பகுதிகள் முறையே காவேரியின் முகத்துவாரத்தில் அமைந்த புகழ்பெற்ற சோழர் தலைநகரான புகாரிலும் பாண்டியரின் தலைநகரான மதுரையிலும் நடக்கின்றன. மூன்றாம் பகுதியோ சேர அரசின் தலைநகரமான வஞ்சியில் நிகழ்கிறது. இன்று இந்நகர் வெவ்வேறு இடங்களுடன் அடையாளம் காணப்படுகிறது.

கதையின் சாரம் முழுமையாகத் தமிழ் மரபிலிருந்து கிளைத்த ஒன்று. ஆனாலும், புத்த, சமண மரபுகளில் இதேபோன்ற கதைகள் சமஸ்கிருதத்தில் பின்னாளில் தோன்றியிருப்பதாகத் தெரிகிறது. அவை இக்கதையின் பாதிப்பால் தோன்றியிருக்க வேண்டும். உள்ளூர் நாயகி ஒருத்தி அந்நிலத்தால் வழிபடப்படும் தெய்வமாக உயர்வது இக்காப்பியம் கூறும் முக்கிய அம்சங்களில் ஒன்று. சமீப நாட்களில், சில அறிஞர்கள் தென் தமிழகம் மற்றும் சேரப் (கேரள) பிரதேசங்களில் வழிபடப்படும் பகவதி எனும் தெய்வத்துடன் இந்த நாயகி வழிபாட்டை ஒப்பிட்டுக் காண முயன்றுள்ளனர்.

காவிய ஆசிரியர் தன் தனித்துவமான செய்யுள் பாங்கில், அக்கால மக்களிடையே பரவலாக அறியப்பட்ட ஒரு சமீபத்திய நிகழ்வின் கதையையே விரித்துரைக்கிறார். மனிதர்களின் வாழ்க்கையில் விதியின் வழிகளைப் பின்தொடர்வதும் அதை விளக்குவதுமே படைப்பின் நோக்கமாகத் தோற்றமளித்தாலும், மனித வாழ்க்கை குறித்தோ அல்லது விதி குறித்தோ எந்தத் தத்துவார்த்தமான விவாதத்தையும் அவர் முன்வைப்பதில்லை.

இந்தக் காப்பியத்தை கவிஞரின் காலத்து மூடநம்பிக்கைகளையும் சமயப் பின்னணியையும் மட்டும் நீக்கிவிட்டு பார்த்தால், இப்போது சொல்லப்படும் சமூக யதார்த்தவாத அழகியலியன்படி அமைந்த ஆவணமாகவே கொள்ளலாம். இந்த அழகியலை ஆதரிப்பவர்கள், ஒரு தெய்வம் உருவாகிவரும் சித்திரத்தை விரிவாகப் பேசும் காப்பியத்தின் மூன்றாம் பகுதியை மட்டும் குறைவுடையதாய் கருதலாம். இப்பகுதி பின்னாளில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் வேறொரு கவிஞரால் எழுதப்பட்டிருக்கலாம் என்று வாதிடுபவர்களும் உண்டு. ஆனால் இந்த வாதம் ஏற்புடையதல்ல. காரணம், முதல் இரண்டு பகுதிகளிலும் இதேயளவிற்கு அக்காலத்தின் பொதுவான பழக்க வழக்கங்களும் மத நம்பிக்கைகளும் பேசப்பட்டுள்ளன. மூன்று பகுதிகளும் ஒரே மகத்தான தமிழ் கவிஞரின் படைப்புகளே. பல நூற்றாண்டுகளாக நூற்றுக்கணக்கானப் பெரும் கவிஞர்கள் சிறிய படைப்புகளுக்கே அகவற்பாவை சிறப்புற பயன்படுத்தி வந்தனர். அவ்வரிசையில் சற்றே சுதந்திரமளிக்கும் செய்யுள் வடிவமான அகவற்பாவின் உச்ச நிலையில் உருவானது சிலப்பதிகாரம்.

சூரியனை, சந்திரனை, நட்சத்திரங்களை, மழையைச் சுருக்கமாகப் புகழ்ந்து வர்ணித்தபடி காப்பியம் தொடங்குகிறது. பின்னர் சோழ அரசின் தலைநகரமான புகாரைப் புகழ்கிறது. அங்கு பல பெருவணிகர்கள் வாழ்ந்தனர்; அவர்கள் உள்நாட்டிலும் கடல் வழியிலும் வியாபாரம் செய்து, செல்வ வளத்துடன் இளவரசர்களைப் போன்று வாழ்ந்தனர். அப்படியான வணிக இளவரசர்களில் ஒருவரான கோவலன் என்பவரின் திருமண நிகழ்வை ஆசிரியர் விரிவாக வர்ணிக்கிறார். அவர் மற்றொரு செல்வந்த வணிகரின் மகளான கண்ணகியை மணக்கிறார். அக்கால வழக்கம்போல், திருமணத்தின்போது நடன நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்நிகழ்ச்சியில் வசீகரிக்கும் அழகும் நடனத் திறனும் மிகுந்த மாதவி அற்புதமாக நடனம் ஆடுகிறார். அவர் அங்கே இருந்த அனைவரின் இதயத்துடன் மணமகனின் இதயத்தையும் சேர்த்தே கவர்ந்துவிடுகிறார். இது தமிழ் அகத்துறை படைப்புகளில் பரவலாகக் காணப்படும் ஒரு வழக்கமான சூழல். கணவன் வேறொரு கணிகையின் தந்திரங்களால் கவரப்பட்டு மனைவியைப் பிரிந்து செல்வான், மனைவியோ அவன் மனம் மாறித் திரும்ப வரும்வரை பொறுமையாகக் காத்திருப்பாள். அவன் திரும்பி  வரும்போது பிரிவின் காரணமாக இன்னும் அதிகமான பாசத்துடன் அவனை ஏற்றுக்கொள்வாள்.

இளங்கோவடிகளும் இந்த இலக்கிய மரபைத் தொடர்கிறார், ஆனால் அதைத் தனக்கே உரிய தனித்துவத்துடன் உயர்த்துகிறார். காப்பியத்தில் வரும் மாதவி அவைகளில் ஆடும் நடன மங்கை என்பதில் மாற்றமில்லை. ஆனால் அவள் தன் கலையில் மிகுந்த தேர்ச்சியடைந்தவள். நடனத்தில் அவளின் தேர்ச்சியை விவரிக்கும்போது, துறவியாகிய இளங்கோவடிகளுக்கும் அக்கலையில் உள்ள ஈடுபாடு வெளிப்படுகிறது. மேடை அமைப்பு, நடனத்துக்குத் துணைபுரியும் இசைக்கருவிகள், அவளது கலைநயத்தின் நுட்பங்கள் என அவர் வழங்கும் நுண்விவரங்கள் யாவும் ஆழமும் வியப்பும் மிக்கவை. மேலும், இக்காப்பியத்தில் மாதவி ஒரு பத்தினியாகவே காட்டப்பட்டிருக்கிறார். ஒருமுறை கோவலனின் அன்பைப் பெற்றதும், அவள் அவனை முழு மனதுடன் நேசிக்கிறாள். அவனுக்கு உண்மையாக வாழ்கிறாள். இவர்களின் இணைவில் ஒரு மகள் பிறக்கிறாள், அவளே பின்னர் வந்த புத்த மதக் காப்பியமான மணிமேகலையின் நாயகி.

கணவன் மீது பற்று கொண்டவளாகிய கண்ணகி, தன் கணவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள். இல்லத்தரசியாக தன் கடமைகளைத் தெய்வ நம்பிக்கையுடன் நிறைவேற்றிக்கொண்டு, விட்டுச் சென்ற கணவனின் மீது கொண்ட அன்பை உள்ளத்தில் பாதுகாத்து வாழ்கிறாள். மாதவிக்கும் கோவலனும் இடையே ஒரு தவறான புரிதலால் பிரிவு ஏற்பட்டபோது, கோவலன் மீண்டும் தன் மனைவியிடமே திரும்புகிறான். பொருளாதார ரீதியில் ஏழ்மையடைந்திருந்தாலும், மனைவியின் அன்பால் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான். அவன் தான் இழந்த தனது செல்வத்தை மீட்டெடுக்க வேண்டிய நிலை வருகிறது. தன்னை யாரும் அறியாத வேறொரு நகரில் அது எளிதாக இருக்கும் என்று எண்ணி, பாண்டியர்களின் தலைநகரமான மதுரைக்குப் புறப்பட முடிவு செய்கிறான். கண்ணகியும் அவனுடன் செல்லத் தீர்மானிக்கிறாள். பூம்புகாரிலிருந்து மதுரை வரையிலான அந்தப் பயணம் விரிவான சூழல் விவரங்களுடன் வர்ணிக்கப்படுகிறது. அக்காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலைகளைப் பற்றிய சித்திரம் நமக்கு இப்பயணத்தின் மூலம் கிடைக்கிறது. கணவனும் மனைவியும் பயணத்தில் இருக்கும்போதே, தன் காதலனிடமிருந்து பிரிவைத் தாங்கமுடியாத மாதவி உலக வாழ்க்கையைத் துறந்து துறவியாகிவிட்டாள் என்கிற செய்தி அவர்களுக்குக் கிடைக்கிறது. பின்னர் அவளுடைய மகளும் அதே பாதையைத் தேர்ந்தேடுக்கிறாள்.

பயணத்தின் சோர்வு காரணமாக மதுரையின் புறநகரை அடைந்தபோது, கண்ணகி இடையர்களான ஆய்ச்சியரிடம் அடைக்கலம் பெறுகிறாள். கோவலன் மட்டும் கண்ணகியின் மதிப்புமிக்க சிலம்பை விற்க நகருக்குள் செல்கிறான், அதன் மூலம் வியாபாரம் தொடங்குவதற்குத் தேவையான பணத்தைத் திரட்டிவிடலாம் என நம்புகிறான். ஆனால் இங்கே விதி குறுக்கிடுகிறது. தமிழ் மரபில் காட்டப்படும் அனைத்து பொற்கொல்லர்களைப் போலவே இங்கும் அரசின் பொற்கொல்லன் ஒரு கள்வனாக இருக்கிறான். அவன் அரசியின் ஒரு சிலம்பைத் திருடி வைத்திருக்கிறான். அப்போது ஒரு அந்நியன் சிலம்பை விற்க முன்வந்ததைப் பார்த்ததும், அவனைத் திருடனாகக் காட்டி பாண்டிய மன்னரின் அவைக்குக் கொண்டு செல்கிறான். விதியின் கொடுமையாக, மன்னன் விஷயத்தை ஆழமாக விசாரிக்காமலும் ஒருவேளை அரசியை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும் உடனடியாக கோவலனுக்கு மரண தண்டனை விதித்துவிடுகிறான்.

இதற்கிடையில், விசுவாசமான மனைவியான கண்ணகியைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த ஆய்ச்சியர் பல தீய சகுனங்களைப் பார்க்கிறார்கள். தங்கள் தெய்வத்தை சாந்தப்படுத்துவதற்காக அவர்கள் பாடல்களைப் பாடி, நடனம் ஆடுகிறார்கள். அவற்றை இன்றைய மொழியில் சொன்னால், நாட்டார் பாடல்கள் மற்றும் நாட்டார் நடனங்கள் என்று வகைப்படுத்தலாம். இதையும் கவிஞர் விரிவான விவரங்களுடன் வர்ணிக்கிறார். ஆனால் இவை யாவும் பலனளிக்காமல் போகின்றன. கண்ணகி கணவனைத் தேடிப் புறப்படும்போது, கோவலன் ஏற்கெனவே இறந்துவிடுகிறான். இதை அறியும் கண்ணகி பழிவாங்கும் தெய்வம் போல மதுரையின் வீதிகளில் நடந்து செல்கிறாள்.

கண்ணகி பாண்டிய மன்னரின் முன் தோன்றி, அவன் இழைத்தது மாபெரும் அநீதி என்கிறாள். இதை அவன் திட்டமிட்டே செய்ததாகவும் குற்றம் சாட்டுகிறாள். அரசியின் சிலம்புகளுக்கும் தன் சிலம்புகளுக்கும் உள்ள வேறுபாட்டை, நிரூபிக்கிறாள். தன் சிலம்புகளில் உள்ள ரத்தினங்களும் மணிகளும் வேறு எனக் காட்டி, தன் தரப்பை கோபாவேசத்துடன் முன்வைக்கிறாள். தான் செய்த பெரும் அநீதியின் முழுப் பரிமாணத்தையும் உணர்ந்த பாண்டிய மன்னன் அதிர்ச்சியில் உயிர்துறக்கிறான், அவனது அரசியும் உடன் உயிர்நீங்குகிறாள். ஆனால் மன்னனும் அரசியும் இறந்தபோதிலும் கோபம் தணியாத கண்ணகி, இறை ஆணையின் மூலம் மதுரை நகரைத் தீக்கிரையாக்குகிறாள். அந்நகரமே அழிந்துவிடுகிறது. தன் கடமையை நிறைவேற்றிய விசுவாசமான மனைவியாக, கணவனுடன் சேர்ந்து அவள் விண்ணுலகம் சேர்கிறாள்.

மதுரையில் நடந்த இந்த அதிசய நிகழ்வுகளுக்கெல்லாம் சாட்சியாக இருந்த ஒருவர், இவற்றை இளங்கோவடிகளுக்கு எடுத்துரைக்கிறார். இளங்கோவின் சகோதரரும் சேர மன்னருமானவர், இந்த தெய்வீகப் பெண்ணுக்கு ஓர் ஆலயம் அமைப்பதாக சபதம் ஏற்கிறார். தன் படைகளைத் திரட்டி, வெற்றிப் பயணம் மேற்கொண்டு, இமயமலையிலிருந்து கல்லையும் கங்கை நதியிலிருந்து நீரையும் வென்ற அரசர்களின் தலைமேலேயே சுமக்கச் செய்து கொண்டுவந்து, தன் நகரத்தை ஒட்டிய காடுகளில் கண்ணகிக்கான கோவிலை அமைக்கிறார். அந்த ஆலயம் அமைந்ததும் தெய்வமாகிவிட்ட கண்ணகி வழக்கமான சமய மரபின்படி தன் பக்தர்களின் வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறாள். இப்பகுதியில் பக்தி இலக்கியக் கவிஞர்களின் மரபை ஒத்த பாடல்களும் இடம்பெறுகின்றன.

இந்தக் காப்பியம் கதைசொல்லல், பாடல்வரிகள் (lyric), இசைப்பாடல்கள் (song) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வடிவமாக உள்ளது. இதன் பெரும்பகுதி நெகிழ்வான அகவற்பா வடிவில் அமைந்துள்ளது. இது கவிஞரின் காலத்திலிருந்த பேச்சு ஒலியமைப்புகளுக்கு நெருக்கமாக இருந்திருக்கலாம். மிகுந்த உணர்ச்சியைக் கொண்ட இந்தக் கதை, எந்த உணர்ச்சி வெளிப்பாடுமின்றி சொல்லப்படுகிறது. நிகழ்வுகள் ஒருவிதமான ஆர்வமற்ற, விலகிய பார்வையுடன் முன்வைக்கப்படுகின்றன. இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட வெளிப்பாடு அதிக விளைவை உண்டாக்கக்கூடியதாய் இருந்தாலும் இளங்கோவடிகளுக்கு முன்பு தமிழில் இதைப் பயன்படுத்தியவர் யாரும் இல்லை. பின்னாளில் கம்பன், தன் இராமாயண மறுகூறலில் இதே வகையான கட்டுப்படுத்தப்பட்ட வெளிப்பாட்டை பயன்படுத்தியிருக்கிறார்.

கவிஞர் அகவற்பா வடிவத்தில் மட்டுமல்ல, இசைநயத்துடன் யாப்பில் அமைந்த  செய்யுள்கள் புனைவதிலும் வல்லவராகத் திகழ்கிறார். மதுரையின் ஆய்ச்சியர் பாடும் சமயப் பாணியிலான நாட்டார் பாடல்களை ஒத்த கவிதைகளைப் பற்றி முன்பே நான் குறிப்பிட்டிருந்தேன். மாதவியும் கோவலனும் பிரிய நேரும் தருணத்தில், அது என்றென்றைக்கும் நிகழும் பிரிவாக, ஓர் இசைநயம் மிக்க பாடல் காட்சி வருகிறது. அவ்வகையில் அது தமிழ்க் கவிதையில் எழுதப்பட்ட மிகச் சிறந்ததாக படைப்பாகக் கருதப்படுகிறது. மீண்டும், இறுதிப் பகுதிகளில், பக்திக் கவிஞர்களின் இசைநயத்தை கொண்டுவருவதிலும் கவிஞர் தன் வல்லமையைக் காட்டுகிறார். மீண்டும் மீண்டும் பாடும் தன்மை கொண்ட அந்த யாப்பு, ஆழ்ந்த சமய உணர்ச்சியைத் தூண்டுவதாகவும், ஓர் எல்லையில் தெய்வீகப் பரவசநிலைக்கு ஆட்படுத்துவதாகவும் உள்ளது. பல்வேறு யாப்பு வடிவங்களோடு சேர்த்து, சில இடங்களில் கவிஞர் உரைநடையையும் பயன்படுத்துகிறார். சில பகுதிகளை இணைக்க இந்த உரைநடை உதவுகிறது. அது ஷேக்ஸ்பியர் பாணியை நினைவூட்டுவதோடு, தமிழ்மொழியின் காலவரிசையில் முதன்முதலில் தோன்றிய உரைநடை முயற்சிகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்தக் காப்பியத்தைத் தவிர, இளங்கோவடிகள் எழுதியதாக வேறு படைப்புகள் ஏதும் இல்லை.

பண்டைய தமிழ்நாட்டின் மூன்று நகரங்களில் வாழ்ந்த மக்களிடையே நிலவிய மறைமுகமான மனநிலை வேறுபாடுகள் இன்றைய வாசகனின் கவனத்திற்குரியவை. பூம்புகாரில் வாழ்ந்த மக்கள் உலகியல் அறிவு கொண்டவர்களாகவும் பொருளாதார முன்னேற்றம் அடைந்தவர்களாகவும் காணப்படுகிறார்கள். அது வணிகர்களின் நகரம்; பரத்தையரும் வாழ்க்கையின் பல இன்பங்களும் செழிப்பான வாழ்விற்குரிய அம்சங்கள் பலவும் நிறைந்த நகரம். அவர்கள் அழிவின் விளிம்பில் நின்றிருந்தாலும் அதை உணர்வதில்லை. ஒரு நகரத்தின் திருவிழா மிக நுட்பமாக விவரிக்கப்படுகிறது, அதன் உளநிலை இன்றைக்கும் நாம் நெருக்கமாக அறியக்கூடியதாகவும் உள்ளது. பயணிகள் பாலைவனங்களையும் காடுகளையும் கடந்து செல்வதும் விரிவாக வர்ணிக்கப்படுகின்றன. பாண்டியர்களின் தலைநகரமான மதுரை நீதியின் நகரமாகத் திகழ்கிறது. ஆனால் அந்த நீதி தவறும்போது, அந்நகரம் தன் மன்னரையும் தன்னையும் அழிக்கக்கூடிய சக்தியாக ஆகிறது. நகர்ப்புற எல்லைகளில் வாழும் ஆயர்கள் ஒழுக்கமும் எளிமையும் நிறைந்த சமய வாழ்க்கையை வாழ்கிறார்கள். பலருக்காக ஆடப்படும் கணிகையரின் அவை நடனங்களுக்கு பதிலாக, இங்கு தீமையைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மக்களின் நடனமும் பாடல்களும் இடம்பெறுகின்றன. சேர நாட்டின் மக்கள் மூன்றாவதாக வேறொரு வர்ணத்தை அளிக்கின்றனர். அவர்கள் லட்சியத்திற்காகப் போராடும் வீரர்கள்; இறைநம்பிக்கையை பக்திப் பாடல்களாக வெளிப்படுத்திப் போற்றி பாடுபவர்கள். தங்கள் மரபான தெய்வங்களை வழிபடுவதோடு, புதிய தெய்வங்களையும் வரவேற்று, வழக்கமான பாணியில் பாடல்கள் பாடி வணங்குகிறார்கள். வெற்றிகொள்ளப்பட்ட ஆரிய அரசர்கள் இமயமலையின் கல்லையும் கங்கை நீரையும் சுமந்து வருகிறார்கள் என்கிற விவரம், நெடுங்காலம் முன்பு ஆரியர்கள் தென்னாட்டை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தபோது தோன்றிய ஒரு வீரக் கனவாகவே இருக்கலாம்.

இக்காவியத்தின் காலக்கட்டம் எவ்வளவு பழமையானது என்பது முக்கியமான கேள்வியாக இருந்தாலும், தற்போது அதற்கான துல்லியமான விடை இல்லை. அறிஞர்கள் இக்காவியத்திற்குப் பலவாறாக காலம் நிர்ணயித்துள்ளனர். பொதுவாக இரண்டாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலப்பரப்பு குறிப்பிடப்படுகிறது. இளங்கோவடிகள், காப்பியத்தில் விவரிக்கப்படும் நிகழ்வுகளுக்கு சமகாலத்தவராகக் கருதப்படுகிறார். காப்பியத்தின் நிகழ்வுகள், பூம்புகார் கடலில் மூழ்குவதற்கும் சோழர்கள் உள்நாட்டிலுள்ள உறையூருக்கு இடம்பெயர்வதற்கும் முன்பு நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது. மேலும், கண்ணகி கோயில் குடமுழுக்கு விழாவிற்கு இலங்கை அரசன் ஒருவன் வந்ததாகவும் காப்பியம் குறிப்பிடுகிறது. பிரதியில் காணப்படும் ஜோதிட மற்றும் வானியல் குறிப்புகளும் முன்வைக்கப்படுகின்றன. இவை யாவும் இந்தக் காப்பியத்தின் காலம் பழமையானது என்பதற்கு ஆதரவாகச் சொல்லப்படுபவை. ஆனால் மறைந்த அறிஞர் வையாபுரிப் பிள்ளை இவ்வாதங்களை ஏற்க முடியாதவை என நிராகரிக்கிறார். தமிழில் சொற்களின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட மொழியியல் சான்றுகளை முன்வைத்து, இக்காப்பியம் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என வாதிடுகிறார்.

இளங்கோவடிகள் பயன்படுத்தும் அகவற்பா வடிவம் மிகுந்த நுட்பமும் செம்மையும் கூடியது. இத்தகைய முழுமைநிலை பல நூற்றாண்டு பயிற்சியின் மூலம் மட்டுமே அடையக்கூடியது. மேலும், இக்காப்பியம் தன்னளவிலேயே நுட்பமான நவீனப் படைப்பாகும்; முதிர்ச்சியற்ற தொடக்கநிலை படைப்பல்ல. இது காவியங்களுக்கு உரிய சமஸ்கிருத மரபுச் சட்டங்களைத் திட்டவட்டமாக மீறுகிறது. இதில் ஒரு பெண் நாயகியாக இருக்கிறாள்; இக்காவியத்தில் நிலம், நதி, அரசு அல்லது தலைநகரம் போன்றவற்றை அக்கால சமஸ்கிருத காவியங்களில் காணப்படும் வழக்கமான வர்ணனைகளின் அடிப்படையில் விவரிக்கவில்லை. இவ்வாறு, இளங்கோவடிகள் எனும் கவிஞர், மரபுகளுக்கு எதிரான ஒரு மறைமுக எதிர்ப்பாக, தனித்துவமான, ஆழ்ந்த மானுட ஆவணமாகும் ஒரு படைப்பை உருவாக்க விரும்பினார் என்றே தோன்றுகிறது.

தமிழில் டி. ஏ. பாரி

ஆங்கில மூலம்: Indian and Foreign Review, March 15, 1967

***

க.நா. சுப்ரமணியம் தமிழ் விக்கி பக்கம்

சிலப்பதிகாரம் தமிழ் விக்கி பக்கம்

டி.ஏ. பாரி தமிழ் விக்கி பக்கம்

***

Share:

மாயம் செய்யும் கவிதை: 'காலண்டர்' - விக்ரமாதித்யன்

 காலண்டர்

ஆள் பார்த்து

அனுப்பி வைத்தானே,

காலண்டர் எனக்கெதற்கு?

ஆனாலும் நன்றி- 

அனுப்பி வைத்தவருக்கு,

பணம்,

உறவு,

உலகளக்கும் வாய்மரக்கால் - 

ஒரு தொடர்பும் இல்லையே.

ஆனாலும்

அங்க சங்கமற்ற ஆளுக்கு,

துணையற்ற வழிப்போக்கனுக்கு,

தனக்குள்ளே தூர் எடுக்கும்

சஞ்சாயக்காரனுக்கு

வழிபாடாய் வந்த

காலண்டருக்கு நன்றி.


அண்டாத ஆழத்தில்

கால் அண்ட

காலண்டர் கைக்கோலா?

தனக்கென்று தலைவைத்துப் படுக்க

அகமில்லார்க்கு

காலண்டர் குடைநிழலா?

உள்ளுக்கும் வெளிக்கும்

கணநேரக் கடலில்

கடியார மின்றி

நகரும் கப்பலுக்கு

காலண்டர் துருவமீனா?

ஜன்னல் வழி ரவி விரல்

கடிகார முள்ளும்,

கருங்காக்கை நிழலமர்

பகல் முள்ளும்,

மஞ்சள் வலைவீசும்

மாலை முள்ளும்

பார்த்து,

மேடேறி

பள்ளத் திறங்கி

கோடி காணப்போகும் கண்ணுக்கு

காலண்டர் எதற்கு?


கடிகாரம் சிலந்தி

காலண்டர் வலை.


கருத்துகள் காற்றாடி.

காற்றில் பறக்கவிட

நூல் வேண்டும்.

தூக்கிவிட ஆள் வேண்டும்.

காலம் வெளி

காரண காரியத் தொடர்பு-

அவ்வளவும்

நான் விட்ட பட்டங்கள்

காலண்டர் வால்தானே.


ஆனாலும்

காலண்டர் அனுப்பிய

நினைப்புக்கு வணக்கம்

குழந்தைகளுக் காகும்.

- ந. பிச்சமூர்த்தி

('பிச்சமூர்த்தி கவிதைகள்' தொகுப்பு, பக்கம் 155, 156)

புதுக்கவிதை முதல்வர் ந. பிச்சமூர்த்தியின் ஆளுமையை கவிமனத்தைக் காட்டும் ஓர் அருமையான கவிதை இது. இதுபோலக் கவிதைகள்தாம் உள்ளபடிக்கே நவீன கவிதைகள். ந. பிச்சமூர்த்தி தான் புதுக்கவிதையைத் தோற்றுவித்த பெரியவர். இன்றைய தினம் எவரெவரோ அந்த உரிமை கொண்டாடுகிறார்கள். வரலாற்றைத் திரிபுசெய்வது கண்டனத்துக்குரியது.

(எல்லையற்ற, முடிவுறாத காலத்தைக் 'காலாதீதம்' என்பார் ந. பிச்சமூர்த்தி. அவரை முழுமையாகப் படிக்காமல், இந்தச் சொல்லாட்சி பிரமிளினுடையது என்று 'கவிதைரசனை' யில் தவறாகக் குறிப்பிட்டிருக்கும். இன்றுவரை இந்தத் தப்பை இங்கே யாரும் சுட்டிக்காட்டவில்லை என்பது வருத்தம் தருகிறது. இந்த இடத்தில் அது நேர் செய்யப்படுகிறது. பிரமிள், ஒரு கவிதையிலிதே சொல்லைப் பிரயோகித்திருப்பார். இது தான் குழப்பத்துக்குக் காரணம்,

நாம்தான் வருஷம், மாசம், தினம், மணி, நிமிஷம் என்றெல்லாம் வகுத்து வைத்திருக்கிறோம். சௌகரியத்துக்காக. நமக்குக் கடிகாரமும் காலண்டரும் இன்றியமையாதவை. ந. பிச்சமூர்த்திக்கு வேண்டியதில்லை. உலகியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நியமப்படி வாழ்ந்துகொடிருப்பவர்களுக்கு, கடிகாரம், நாள்காட்டி, நாள்குறிப்பேடு எல்லாமே வேண்டியவைதாம்.

வேலைபார்க்கிறவர்கள், விடுமுறைநாளை எதிர்ப்பார்த்திருப்பவர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் இப்படி. இப்படி இருப்பவர்கள் காலண்டர் இல்லாமல் இருக்க முடியாது. கால ஓர்மைகொண்டு இயங்க வேண்டியவர்களுக்குக் கடிகாரம் இல்லாமல் தீருமா. என்ன தேதி, என்ன கிழமை, வங்கி விடுமுறைநாளா, அஞ்சலக விடுமுறைநாளா, அரசு விடுமுறைநாளா என்றெல்லாம் யார் யார் தெரிந்துவைத்திருக்க வேண்டும். இலௌகிகமாக வாழ்பவர்கள்தாம். ந. பிச்சமூர்த்தி இதைக் கடந்துவிட்டவர்.

'காலண்டர்' கவிதை, பொருள் செறிவோடு திகழ்கிறது. முன்வைக்கப்படும் விஷயம் முக்கியமானது. மொழியப்படும் முறை கவனம் கொள்ள வேண்டியது. வெளியரங்கமாய்ச் சொல்லியிருப்பதால், விஷயம், ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. கவிஞரின் 'தன்மை'யைக் (Self) காட்டும் கவிதை.

இரண்டிரண்டு சீர்களிலேயே கவிதை கட்டப்பட்டிருக்கிறது. உரிய இடங்களில் ஒரே சீர்.

முதல் பத்தியில் ஆறாவது, ஏழாவது அடிகள், "பணம்", "உறவு" தனித்தனிச் சீர்களாக - பிரித்துப் பேசும்விதமாக. பத்தாவது வரி, "ஆனாலும்"; ஒரு தனிச்சொல்.

இரண்டாவது பத்தியில், ஐந்தாவது அடி, "அகமில்லார்க்கு", இரு சொற்கள் கூடிய ஒரு சொல்லாக மற்றும் பதினெட்டு, பத்தொன்பதாவது வரிகள், "பார்த்து" "மேடேறி" - ஒரொரு சொல்லில்.

நான்காவது பத்தியில், ஐந்து - ஆறாவது வரிகள், "காலம்", "வெளி" பிரித்துக்காட்டும் முறையில் - ஒரொரு சீராக. பதினோராவது வரி - "ஆனாலும்" ஒரு தனிச்சொல்.

இவ்வளவு விரிவாகக் கவிதைக் கட்டமைப்பை விவரிக்கக் காரணம் - ந. பிச்சமூர்த்தி, நாற்பதாண்டுகளுக்கு முன்னமேயே கவிதையியலில் கொண்டிருந்த ஞானத்தைக் காட்டத்தான். இப்படிக் கட்டியிருப்பதுதான் இந்தக் கவிதைக்கு ஏற்றதாக இருக்கிறது. வேறுவிதமாக எழுதியிருந்தால் இந்த வீச்சு, இந்த ஓட்டம் வாய்த்திருக்காது. எழுதிப் பழகிய கை; கவிதைப்புலமை கூடியதில் பெற்ற பேறு.

கடைசி நான்கு அடிகளில், சரியான முடிப்பு.

முதல் பத்தி, முழுக்கவும் வாக்குமூலமாக/அறிக்கையிடலாக. இரண்டாவது பத்தி, கேள்விகளாக. மூன்றாவது பத்தி, உருவகம் அல்லது படிமமாக. நான்காவது பத்தி, வாக்குமூலம் தான்; ஆனால் விளக்க உரையால் ஆனது.

தொடக்கம், பேச்சுத் தோரணையில்; நடு, உருவக/படிமங்களில்.

ஆரம்பத்தில், மூன்றாவது வரி: "காலண்டர் எனக்கெதற்கு?" இரண்டாவது பத்தியின் இறுதி வரி: "காலண்டர் எதற்கு?" இயல்பாகவே வந்து அழுத்தம் தருவதாக அமைகிறது..

"ஆனாலும் நன்றி" - "அனுப்பி வைத்தவருக்கு"

"காலண்டருக்கு நன்றி"

"ஆனாலும் / காலண்டர் அனுப்பிய / நினைப்புக்கு வணக்கம். குழந்தைகளுக் காகும்."

ந. பிச்சமூர்த்தியின் மனநுணுக்கம் கவனம் கொள்ள வேண்டிய ஒன்று.

முதல் இது, உண்மையிலேயே நன்றிநவிலல்.

இரண்டாவதாக உள்ளது, ஒரு சிறு பரிகாசம்.

மூன்றாவதாக வருவது, மறுபடியும் அந்த அன்பைப் போற்றுவதும் திரும்பவும் ஒரு சிறு எள்ளலும்.

காலண்டர், கவிஞர் இல்லத்தில் எப்படிப் பயன்படும். குழந்தைகள் கிழித்துக் கப்பல் செய்ய?

இந்தக் கவிதைமீது ஒரு மெலிதான விமரசன்ம்:

மூன்றாவது பத்தியிலேயே கவிதை முற்றுப்பெற்று விடுகிறது.

நான்காவது பத்தியின் இறுதி நான்கடிகள் நீங்கலாக, மற்றவை தேவையில்லை. அதிகப்படியான வரிகளைச் சுமந்து நிற்பதாகத் தோன்றுகிறது; விரிவாக்கமாகவும் படுகிறது.

இந்த கவிதையில் இரு வார்த்தைகளுக்குச் சரியான அர்த்தம் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஒன்று "அங்கசங்கமற்ற", தஞ்சை. மாவடா வழக்காகவோ பார்ப்பன வழக்காகவோ இருக்கலாம். "அக்குதொக்கு" என்ற சொல், நெல்லைப் பழகுதமிழில் 'தனியாள்' என்ற பொருளில் புழங்கப்படுகிறது. அதுமாதிரி இருக்குமாய் இருக்கும் இதுவும். இரண்டு "சஞ்சாயக்காரன்" வடசொல் அகரமுதலியைப் பார்த்துத்தான் நேர்ப்பொருள் காணவேண்டும். 'விசாரம் உள்ளவன்' எனும் அர்த்தமாக இருக்கலாம். இந்த இரண்டு சொற்களுக்கும் பொருள் புரியாவிட்டாலும், கவிதையோட்டத்தில் அது பெரிய விஷயமாக இல்லைதான். யூகித்துக்கொள்ள முடிகிறது.

***

ந. பிச்சமூர்த்தி தமிழ் விக்கி பக்கம்

விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

அந்தரத் திணை கவிதைகள் - சிறில் அலெக்ஸ்

பழந்தமிழ் இலக்கியம் நிலவகைகளின் படி ஐந்திணைகளைக் கொண்டு பகுக்கப்படுகிறதை நாம் அறிவோம். இவை ‘அகநிலக் காட்சிகள்’ (Interior Landscapes) என்று A.K. ராமானுஜம் போன்றோர் அடையாளப்படுத்துகின்றனர். நிலக் காட்சிகள் அகமுணரும் அனுபவத்தின் உருவகங்களாய் புனையப்படுவதை அறிய உதவும் கருவிகள் திணை பகுப்புக்கள். பழந்தமிழ்க் காலம் மட்டுமல்ல பழங்கால மானுட வாழ்வே முற்றிலும் நிலம் சார்ந்த ஒன்றே. ஒப்பீட்டளவில் பதினாறாயிரம் அடிகள் பாய்ந்திருக்கும் இந்த அதி நவீன காலத்திலும் நிலத்திலிருந்து, பூமியிலிருந்து மனிதன் முற்றிலும் விடுபடவில்லை. உணவு, தட்பவெப்பம், பருவகாலங்கள், பண்பாடு, வளம், வளமின்மை என நிலம் நம் வாழ்க்கையை கட்டுக்குள் வைத்திருக்கத்தான் செய்கிறது. 

ஆனால் ஐந்திணைகளை விட்டு மேலெழுந்து அந்தரங்க வெளியில் ஒரு புதுத்திணையை உருவாக்கி அதில் விதவிதமான நிலக்காட்சிகளையும், மானுடர்களையும் உருவாக்கி உலவவிடுபவர்கள் கவிஞர்கள். மனமும் மனம் சார்ந்த இடமும் அந்தரத் திணை எனப்படும். அங்கே தொழில் சிந்திப்பதும் சிந்தனையைத் தூண்டுவதும். அதன் நிலம் அரூப வெளி. அதன் மக்கள் சாமானியன் சாமானியத்தி. அங்கே இரவும் பகலும் பொழுதுகளும் பருவங்களும் நினைத்தாற்போல் தோன்றும், இருளும் ஒளியும் ஒரு சேர உலவும், எண்ணற்ற சூரியன்கள் எண்ணிய கணம் தோன்றி மறையும், அங்கே தூரங்கள் ம்னதின் வேகத்தில் கணக்கிடப்படுகின்றன, ஒற்றை மணல் ஒழுகும் கடிகாரம் ஒன்று காலத்தை அளக்கிறது, இன்னொரு நீர்க்கடிகாரத்தில் காட்டாறு மேலிருந்து கீழே வழிகிறது. பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்து மறைந்த ஒரு நட்சத்திரத்திலிருந்து விடுபட்ட ஒற்றை ஒளித்தூளாக. பூமியை நெருங்கி வருகிறான் கவி. அவனே பூமியில் நின்று அதைக் காணவும் செய்வான். அந்தரத் திணையில் ஒழுங்கற்றிருப்பதே ஒழுங்கு. சீரற்றிருப்பதே சீர். அங்கே கடுகளவு மலை உண்டு, மலையளவு மடு உண்டு, காலைச் சூரியனில் கொழுந்துவிட்டெரியும் ஆறுகள் ஓடுகின்றன, பற்றி எரியும் வயல்களும், குளிரான நெருப்பும் தரும் தலைகீழ் உணர்வுகள் நம் புலன்களைத் தீட்டும். வண்ணங்கள் மாறி வெவ்வேறாய்த் தோன்றும். அந்தரத் திணையின் வேதியல் விதிகளற்றது, அதன் இயற்பியல் நியமங்களற்றது. அதன் வரலாறு கலைத்துப்போடப்பட்ட ஜிக் சா புதிர்போன்றது. அதன் தெய்வம் முருகனோ, வேந்தனோ, வருணனோ அல்ல, அதைப்படைத்த கவிஞனே அதன் கடவுள். 

ஆ. அமிர்தராஜின் கவிதைகள் இத்தகைய அந்தரத்திணை கவிதைகளே. குறிப்பாக அவரது முதல் தொகுப்பான ‘பொற்கணம்’ முற்றிலும் இவ்வகைக் கவிதைகளால் ஆனது. மௌனியின் கதைகளை நவீன ஒவியங்களைப் போல புரிந்துகொள்ள முடியும். அவை போன்றவையே இக்கவிதைகள். கோணம் மாறிய வடிவங்கள், பொருந்தா வண்ணங்கள், புலன்களைத் தூண்டும், ஏமாற்றும் யுக்திகள், எதிர்பாராத இடைவெளிகள், சீரற்ற சீர்மை என நவீன ஓவியம் கையாளும் அனைத்தும் இக்கவிதைகளில் கையாளப்படுகின்றன. முதல் பார்வையில் அவை நம்மை ஈர்க்கின்றன, பின் நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றன, தியானத்தில் ஆழ்த்துகின்றன. 

ஆ. அமிர்தராஜின் ஒவ்வொரு கவிதையிலும் ஓரிரு வரிகள் நேரடியானவையாகவும் வியப்பூட்டுபவையாகவும் இருக்கின்றன. ‘விரைந்துகொண்டிருந்த இருக்கையில் நான்’ என்ற வரி அவர் கவிதைகளில் என்னை ஈர்த்த முதல் வரி. அது ஒரு இயற்பியல் மனச் சோதனையை நினைவூட்டுவதுபோல இருந்தது. ‘தட்டையான சிக்கலான தாமரையாய்’ சிலந்திவலை ‘உள்ளேயிருந்து பூட்டப்பட்டு கதவு வாயடைத்து நிற்கிறது… நாசியற்ற அறையில் சுற்றியலைவதில் அர்த்தமில்லாததால் கதவடியில் நுழைந்து ஆள்தேடி வெளியேறுகிறது புகை.’ ‘வெறுமையிலே உண்டான வெளிச்சப் புள்ளி விரிந்து உதடானதும் மலர்ந்தது சொல்.’ ‘வெறுமையல்ல இன்றின் இருள்’ ‘சீறி நோக்கக் குழையும் இரத்தச் சிவப்பு’

இரண்டாம் தொகுப்பில் சற்று தரையிறங்கி பூமியில் முளைத்த கவிதைகள் சில காணக் கிடைக்கின்றன. காதலின் வசந்தம் காற்றில் வீச, தத்துவத்தின் போதை நம்மை மீண்டும் அந்தரத்தில் அழைத்துச் செல்கிறது. எண்ணம் எதுவானாலும் அது நிகழ்வது அமிர்தராஜ் சமைத்த ஒரு தனியுலகில். கவிஞனின் சிருஷ்ட்டியில். ஒரு ஆதிக் கதையின் முதல் மொழி போல கவி சொல்லத் துணிவதெல்லாம் ‘கவிதை உண்டாகக்கடவது!’ என்பது மட்டும்தான். வார்த்தைகள் உருவாகிப் பலுகிப் பெருகி மனவுலகை நிரப்புகின்றன. 

மூன்றவது தொகுப்பில் சிங்களமும் தமிழும் இலங்கையில் காதலிக்க முடியாமல் கடல் கடந்து சென்று ஐரோப்பாவில் உறவு கொள்கின்றன. சாலமனின் இனிமைமிகு பாடல்களின் நிழல்வரிகளாக நீள்கின்றன இக்கவிதைகள். 

அமிர்தராஜ் இக்கவிதைகளை எழுதிய காலத்தில் ஈழப்போராட்டத்தின் வெடிமருந்து  மணம் கடல்கடந்து நம் கரைகளை அடைந்த காலம். எனவே ஈழப் போர் குறித்த சில கவிதைகளைத் தவிற காதலும், இருத்தலின் சுமையும், தத்துவங்களும் அவர் கவிதைகளின் பாடு பொருட்களாக உள்ளன. புதுக்கவிதை என்றாலும் அமிர்தராஜ் காட்சி வழியே கவிதையைச் சொல்வதில் சங்கக் கவிகளை ஒத்திருக்கிறார். அதேபோல தமிழ் புதுக்கவிதைகளில் வழக்கமாகக் காணக் கிடைக்காத சங்கப் பாடல்களில் திகட்டத் திகட்டக் காணக் கிடைக்கிற உரிச்சொற்றொடர்களை நுட்பமாக பயன்படுத்தியுள்ளார்.  ‘உன்முகப் பெண்மையின்..’  ‘வெகு பார்வையைக் கோரும்…’ ‘பனிமய அன்னம்’ ‘இணைவட்ட உறவு’ ‘வலைமலர்’ (சிலந்தி வலை), ‘நனி பேரிஷ்டம்’ ‘நீணிலம்’ எனப் பல பதங்களை பயன்படுத்தியுள்ளார். அமிர்தராஜின் கவிதைகளில் இது ஒரு தனிச் சிறப்பு என்றே சொல்லலாம். 

தமிழ்க் கவிதையைப் பொறுத்த மட்டில் நான் ஒரு சாதாரண வாசகன்தான் தமிழின் புகழ் பெற்ற கவிதைகள் பலவற்றையும் ஒருமுறையேனும் வாசித்திருப்பேன். நண்பர்களுக்கு சில கவிதைகளை செப்பனிட உதவியிருக்கிறேன். தேவதேவன் எனக்கு மிகப் பிடித்த தமிழ்க் கவி. ஒருமுறை ஹேமா என்ற பெயர ‘ஹே… மா…!’ என உச்சரித்து அதையே ஒரு கவிதையாக நிகழ்த்திக்காட்டினார் தேவதேவன். அதைப் புரிந்துகொண்டு மலைத்துப் போகும் அளவுக்கு  எனக்கு தமிழ்க் கவிதைகள் பரிச்சயம் என்று சொல்லலாம். ஆ. அமிர்தராஜின் கவிதைகள் ஒரு வினோத தனித்தன்மையுடையவையாக எனக்குப் பட்டன. அவரது புது மொழி, abstract பாணி, அவர் உருவாக்கும் உலகம், விரிந்து பரவி அந்தரத்தில் அவர் நிகழ்த்திக் காட்டும் கலை எல்லாம் என்னைக் கவர்ந்தன. ஒரே தொகுப்பில் ஒளிவேகத்தில் நகரும் காட்சிகளைக் கொண்ட கவிதைகளையும் படிக்கட்டில் ஏறும் உடலை தியானிக்கும் காலத்தை மெல்லோட்டக் காட்சியாக்கிக் காண்பிக்கும் கவிதையையும் அவரால் எழுதமுடிகிறது.

ஆ. அமிர்தராஜின் அடர்த்தி மிகுந்த கவிதை வரிகளுக்கு மிகச் சிறந்த உதாரணமாக பொற்கணம் தொகுப்பின் ‘நிலாக் குருவி’ கவிதையில் வரும் ஒரு வரியைச் சொல்லலாம்.

‘நேய நிலவில் திளைத்து - சிட்டின்

உற்சாக சிறுநிழலோ கீழே

தடமற்ற கோடிழுத்து உற்ற - உறவின்

அட்ச தீர்க்க வலையில்

வளைக்கும் புறஉலகை.’

இந்தக் காட்சியே மிக மாயத் தன்மை உடையது. பறக்கும் சிட்டின் உற்சாக நிழல் தனித்த உயிர் பெறுகிறது. அட்ச தீர்க்க ரேகைகள் தடமற்றவை, கற்பனையானவை, அவை வலைபோலப் பின்னி பூமி மீது கிடக்கின்றன. அதைப் பற்றிக்கொண்ட அந்தக், குருவி அல்ல, குருவியின் நிழல் ‘புற உலகை வளைக்கும்’. நிஜம், நிழல், கற்பனை மூன்றையும் ஒரே கோட்டில் இணைக்கும் இந்த வரியில் ஆ. அமிர்தராஜின் கவிநுட்பம் அபாரமாக வெளிப்படுகிறது. 

1980களின் இறுதியிலும் 90களின் துவக்கத்திலும் எழுதப்பட்ட ஆ. அமிர்தராஜின் இக்கவிதைகளை மீண்டும் தொகுக்கும் இப்பணியை எனக்கு அளித்த பதிப்பாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவை தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் அல்ல, முந்தைய தொகுப்புக்களின் தொகுப்பாகும். இத்தொகுப்புக்கு ஒரு சிறப்பான முன்னுரையை அளித்து சிறப்பித்த எழுத்தாளரும் நண்பருமான ஜெயமோகன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். மிக சிரத்தையுடன் இதை பதிப்பிக்கும் முயற்சி எடுத்த பதிப்பாளர் ஜீவ கரிகாலன் அவர்களுக்கும் என் நன்றிகள். ஊக்கமளித்து ஆதரவு தந்த நண்பர் கவிஞர். மோகன ரங்கன் அவர்களுக்கும் என் நன்றிகள். 

இக்கவிதைகள் மெதுவாக, மீண்டும் மீண்டும் வாசிக்கத் தகுந்தவை. ஆ. அமிர்தராஜின் கவிதைகள் தமிழ் மொழியின் நவீன சாத்தியங்களை செய்து காட்டியவை, தமிழ்க் கவிதை பரப்பில் ஒரு திருப்பதைக் கொண்டு வந்தவை என்று சொல்லத் தகுந்தவை. 

தமிழவன் பொற்கணத்தின் முன்னுரையில் குறிப்பிடுவதைப் போல ‘ஒட்டுமொத்தமாகப் படித்துப் பார்க்கும் போது நமக்குத் தெரிந்த மொழிக்கு ஒரு மாற்றுத் தமிழை இவர் கவிதைகள் உறுதிப்படுத்துகின்றன…. அமிர்தராஜிடம் மிகவும் முதிர்ச்சியடைந்து வெளிப்படும் கவித்வம் தமிழுக்கு மாற்றுத் தமிழை சிருஷ்டிப்பதாய் மாறுகிறது.” (1996)

ஆ. அமிர்தராஜின் சில கவிதைகள்,

போர்க் காலம் 1984

மருத்துவமனைப் படுக்கையில் 

கிடந்தாலும் 

வாசிக்க ஆரம்பித்துவிட்ட 

புஸ்தகத்தின் எழுத்துக்களில்

தோய்ந்துள்ளது 

வெடிமருந்து


உனது வலது தோளில் 

காயம் 

வேகமாய் ஆறிவருகிறது


இயக்கத் துவக்காகி 

உன் தோள் தொங்கத் 

துடிதுடிக்கிறது 

நாளைய காலம்


அன்றைக்கோ 

உன் வீட்டுப் படிப்பறையின் 

தனிமையில் 

விரும்பி ஒதுங்கியிருந்தாய் 


வசதியான மேஜையில் ஊன்றி

கை உயர்ந்து 

தடித்த பாட புஸ்தகத்தை 

விரித்துப் பிடித்திருந்தது


பாதி சாய்ந்து போய் 

உன் முகம் பார்த்திருந்த 

அப்புத்தகத்தின் வெளியிலோ 

காடையர் வீசிய தீ 

நெருங்கிக் கொண்டிருந்தது 

வீடு வீடாய்த் தின்று


சூறையாட 

வழியமைத்து 

சீறி வந்த தோட்டா ஒன்று உன் படிப்பைத் துளைத்து

தோள் மூட்டை 

உடைத்தது


சிகிச்சை பெற்று 

கண்விழித்த பின் 

மயிர்கண் எங்கும் 

சமர் நெருப்பின் தெறிப்புடன் 

நீ படிக்கின்ற புது 

புஸ்தகத்திலிருந்து சில வரிகள்: 


“ஞாலமே குலை நடுங்க 

எம் குரல் நாண் தெறிக்க 

ஓலமிட்டுத் 

தன் தலை முதல் கால்வரை

தர்மம் எம்மூரில் தீப்பற்றி எரிகிறது.

தனியே நேரமொதுக்கி 

சர்வதேச மேடையிட்டு 

எவ்வேளையும் வேண்டிய 

தாட்சண்யம் பற்றிய 

கூட்டு ஆராய்ச்சி 

தற்சமயம் எந்த புத்தனுக்கும் அடுக்கா

தர்ம விரோதம்.”

(1984)

காலப் படியேறும் கால்கள் 


முதற் திட்டாய் உள்ள படிக்கு 

கால்களிரண்டில் ஒன்று 

முழங்கால் மடங்க மேலெழும்பி 

அமரும்


புரிந்து கொண்டு 

உடல் கொஞ்சம் முன் சரியும் 


மேற்படியில் இருக்கும் 

அவ்வொற்றைக் கால் மேல் 

பளு இறங்கும் 


கீழ் மறுகாலின் பாத நுனி 

தன் படியில் உடனே அழுந்தி 

மேல் முகமாய் உந்தி உடலை 

ஏற்றிவிடும் 


துணிந்து மேலேறி மடங்கி நின்ற 

முழங்கால் மாயமாய் நிமிர்ந்திருக்கும் 

தன் சுமை உடலை 

அம் மேற்படியினிலே சேர்ந்திருக்கும் 


ஒரு நொடி முன்னர் 

கீழ் நின்ற கால் ஆனால் 

முந்திக் கொண்டு மேலெழும்பிச் சென்று 

முடிந்த மேற்படியிலிருந்து உயர்ந்து 

அடுத்ததாய் உள்ள புது மேல்படிமேல் 

அமரும்


அக்கணமே 

உடல் சரி சொல்லும் 

முன்போல் முன் சரியும்.

(1986)

பொற் கணம் 

கீழ் வானில் 

மத்தளம் முழங்க 

விழித்த வெறுங்காலடியில் 

செம்மண்ணிலிருந்து 

தாளம் கிளம்ப 

அம்மத்தளமும் 

என் தசைத் திரளும்

கிளர்ந்து 

உயரச் சுழன்றன


அதிரும் காற்றில் 

அந்தரத்தில் 

புணர்ந்தன 


தம் நொடிகளின் வியர்வையைக் 

கீறிக் கடந்து 

உன்மத்தமாய் 

ஆகாயத்திலோர் 

ஒத்திசைவுப் பொறியாகி 

எரிந்துள்ளொடுங்கின 


தாளாது நெகிழ்ந்து 

தணியாச் சுடர் முன் 

தரை சரிகின்றன 

என் 

கரித்த செந்நீரும் 

புளித்த நிணமும்


திரும்பிப் பாராது 

அகன்று தொலைந்தன 

நினைவும் 

பயமும் 

நானும் யாரும்


ஆடுபவன் ஓய 

இசைப்பவன் இரசிப்பவன் 

முகங்கள் கலைய 

தீயிசைப் பொறி 

தித்தித்து 

ஒரு மௌன முறுவல் 

உயிர்த்த விழ்கிறது 


வழிகிறது 

அனாதரவெளி நிரப்பி 

பிரக்ஞையின் பாடலாய் 

இரகசியக் குரலில் 


நிலமிறங்கி 

தானே முகம் அமைத்து 

சீராய் உடலசைத்து 

அசல் 

ஐம்பூத அபிநயசரங்களின் 

நேரமற்ற தொடர்பதிவாய் 

என்புலன் வழியாயும்

நேரடியாய் 

ஒய்யார ஆட்டம்


மினுக்கும் 

சொற்சேற்றை 

நாகரீக நாணலை 

நதிக்கரையை 

நகர்சேரிகளை 

நரகலை 

ஆசை நட்சத்திரத்தை என

எல்லாம் விழுங்கி 

துள்ளி விரிகிறது 

கொண்டாட்டம் 


இசைந்தாடி வியந்து 

எண் திசையும்

உச்சந்தலையில் 

பளிச்சென சூரியன்கள் 


கோடியுகம் கழித்து 

மீண்டும் 

தன்னுணர்வில் சிலிர்த்து 

உள்ள ஒரே சாட்சியென 

கால் செம்மண் பொன்னாகிறது

(1995)

நிலாக் குருவி 


கோடையென் றாலும் அந்திவரை 

கொட்டிய அடை மழையால் 

கரைதொட் டோடும் ஆற்றிலே 

யாரும் அள்ள நினையாத 

கலங்கல் நீர் நடுவே 

வடிவு கலங்கா அழகாய் 

அபூர்வ முழுமையிலே நிலா 


பகலிலே படுநிஜம் போல 

கண்ட இரு கரைகள் 

நிலாநாடி நீரிறங்கி நெருங்கிய 

காலடியி லோ நிலைகுலைய 

நனைந்த நடை நிலவொளித் 

தெளிவிலே கண்டதோ சித்தம் 

வெவ்வே றாய்ச் சிதறா 

ஒருமை அச்சில் பதிந்த வினோத 

வட்ட சதுர பூமி 


கால்சொல்லித் தலைதட்டும் பொறியி 

லேயுருகி உடன்பட்டு ஒன்றாகும் 

ஊனுட லோடு மனம்


ஆள்முழு தாகிக் காணாக் 

குரவராகக் கரை மீண்டு 

மூச்சிரைத்தும் நடந்த போது 

முந்தி நெருங்கியது மலைமுகடு 

தடுத் தாண்டு கீழே நிறுத்தவோ 

கனன்றது பின் னிருந்து பட்ட 

வினை நெருப் பூ! 


விடா வெறுங் காலிருந்து பற்றிக் 

கொண் டெரிந்து நித்தி யத்தின்

நீறான வேளை 

நகல் மனிதங் கடந்து காடுமலை 

கட்டறுத்த காற்று காட்டாறு வேண்டி 

விடுபட்டுக் கிளம்பியது உயிர்ச் சிட்டு 


இவ்வினிய குருவியினி நனிபே ரிஷ்டம் போல் 

அகாலக் காற்றலையில் மிதக்க வழிசொல்லி 

விரியும் நிலவொளி ஆரம் 


சிட்டின் அசலுயிர் மூச்சு சப்தத்தில் 

பசும்புல் வெளியெல்லாம் பனியீரம் 

நுரைத்துத் தெளிந்த பாசத்தில் 

கோடைமீறிச் சிலிர்க்கிறது ஆகாசம்


மோகத் திரையற்ற கர்மத் 

தீயற்ற வெளிர்நீல உயர்வில் 

நிமிர்கின்ற பயணி யாருக்கும் 

மிக அருகில் பனியில் கரையாமல் 

நொடியும் அகலாமல் அதே நிலா. 


நிலவொளி நிசப்த ஆணையில் 

சிட்டுக் குருவி நெஞ்சில் 

குன்றி அணைகிறது நாட்பட்ட நெருப்பு 

திசையின் வயற் சதுரம் 

இரவோ டிரவாக காய்கனியாய் 

விளைந்து சொரிகிறது வான்தொட்டு 

வட்டமிடும் ஒற்றைக் குருவிக்காய் 


நேய நிலவில் திளைத்து சிட்டின் 

உற்சாக சிறுநிழலோ கீழே 

தடமற்ற கோடிழுத்து உற்ற உறவின் 

அட்ச தீர்க்க வலையிலே 

வளைக்கும் புற உலகை 


வட்ட சதுரம் பாரம் 

துருவங்கள் தூர மென்றாலும் 

லாவகமாய் மென்னலகால் மேலிழுத்து 

சலிக்காமல் சிறகடிக்கும் நீரெங்கும் 

நீணிலமெங்கும் 


(1996)

***
(நன்றி: காலம் இதழ்)
Share:

நித்தியத்துவத்தின் பாணர்கள் - ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்

(தென்காசி பொருநை இலக்கிய விழா - 2026ல் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)

மேக்ஸ் முல்லர்
கவிஞர் தேவதேவன் தன் ‘கவிதையின் மதம்’ கட்டுரை தொகுப்பில் கவிதையின் நித்தயத்துவம் பற்றி சொல்கிறார். அதாவது, உலகில் ஒன்று நித்தியமாக நிலைக்கும் என்றால் அது கவிதை ஒன்றே. கவிதை வழியாக கவிஞனும் அந்த நித்தியத்துவதை அடைகிறான் என்கிறார்.

பாரதி, “கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல – நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?” என்று முழங்க சொன்ன கவிதை வரியின் மென்மையான அதே நேரம் உறுதியான வரிகள் தேவதேவன் தன் கட்டுரையில் சொன்னவை. இருவரும் தமிழின் மகாகவிகள்.

என்றும் அழியாத ஒன்றின் பகுதியாக தன்னை நிறுத்திக் கொள்ளும் விசை பெரும் எழுத்தாளுமைக்கு மட்டும் தான் உள்ளதா? அல்லது அந்த நித்தியமான ஒன்று தன்னால் மட்டும் படைக்க முடியும் என்ற அவனது கர்வமா?

இந்தியவியல் ஆய்வாளரான மேக்ஸ் முல்லர் ஒரு கட்டுரையில், ஆதி பழங்குடி தெய்வங்கள் என பூசகன், கையில் குழந்தையுடன் கூடிய அன்னை இருவருமே உலகளாவ பிரதான ஆதி தெய்வங்கள் என்கிறார். இந்த தெய்வம் என்ற கொள்கைக்குள் தன்னை செலுத்திக் கொண்ட பழங்குடிகள் வரலாற்றில் பரிணாமம் அடைந்து வந்தனர். அந்த கருதுகோளுக்குள் செல்லாத பழங்குடிகள் வரலாற்றில் காணாமல் அழிந்திருக்கலாம் என்கிறார். மேலும் பூசகன், அன்னை சித்திரத்தை/படிமத்தை உருவாக்கியவன் கவிஞன் என்றே குறிப்பிடுகிறார். நம் மரபில் வேத ரிஷிகள் அனைவரும் கவிஞர்கள் என்றே குறிப்பிடும் வழக்கம் உள்ளது. கவி என்பவன் அழியா ஒன்றை தன் அகத்தே தன்னிச்சையாக (Intuitive) அறிந்து சொல்லாக்கியவன்.

இன்று தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஊழி பெருநடனம் புரியும் ஆடவல்லான் (நடராஜர்) ஆதி வடிவம் பூசகன். உலகத்தை காத்து ரட்சிக்கும் சர்வசம்ரக்ஷகியான அன்னையின் படிமமே கோவிலுள் குடிக்கொள்ளும் உலகம்மை.

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கம்பீரமாக திகழும் ராஜ கோபுரம் இன்றிலிருந்து முப்பத்தைந்து ஆண்டுகள் முன் கட்டப்பட்டது. அதற்கு முன் முந்நூறு ஆண்டுகளாக தீக்கிரையாக்கப்பட்டு மொட்டை கோபுரமாக திகழ்ந்தது. தமிழகத்தில் வேறு எந்த கோவில் கோபுரத்திற்கும் ஏற்படாத அநீதி அது. பாளையக்காரர்களின் வரிவசூல் விவரம் இக்கோபுரத்தில் பாதுகாக்கப்பட்டதாகவும் அதனை அழிக்க ஒரு பாளையக்காரர் செய்த கொடுஞ்செயல் இது என   

1960-ல் தென்காசிக்கு ஒரு மாநாட்டிற்கு வந்த காமராஜர் கோவில் கோபுரத்தை மீட்டெடுக்கும் எண்ணத்தை முதலில் முன்வைக்கிறார். 1981ல் சிவந்தி ஆதித்தனார் தலைமையில் குழு அமைத்து மறுபுணரமைப்பு செய்யும் பணி நிகழ்ந்தது. சிவந்தி ஆதித்தனார் இக்கோபுரத்தை மீட்கும் பொறுப்பேற்ற போது சொன்னது. தென்காசியை ஆண்ட பாண்டிய மன்னர்களிலேயே தலையாயவன் பராக்கிரம பாண்டியன் அவன் இந்த கோபுரத்தை கட்டத் தொடங்கும் போது,

‘மேலே விரிவு செய்தே புரப்பாரடி வீழ்ந்தவர் தம்

பாலேவல் செய்து பணிவன் பராக்கிரம பாண்டியனே’

எனப் புரப்பவர் பாதம் தொட்டு பணிவதாகப் பாடி வைத்தான். அவன் சொல்லுக்காக எழும்ப போவதே இந்த ராஜகோபுரம் எனச் சொல்லி 1990 களில் கோபுரம் எழுப்பப்பட்டு கும்பாபிஷேகமும் நிகழ்ந்தது. பராக்கிரம பாண்டியனின் அந்த செய்யுள் கோபுர நுழைவு வாயிலில் இன்றும் காணப்படுகிறது. பல கட்ட இடிப்பாடுகளுக்கு பின் நிர்மூலமான ஒன்று திரும்ப சொற்களால் மீட்டுருவாக்கப்படுகிறது.

பொ.யு. 15 ஆம் நூற்றாண்டு பாண்டியன் காலம் தொடங்கி தென்காசியில் எப்போதும் முதன்மை தமிழ் கவிஞர்கள் உருவாகிக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.

மதுரையில் நாயக்கர் ஆட்சியும், தென்காசியில் பாண்டியர் ஆட்சியும் இல்லாத 18 ஆம் நூற்றாண்டு, திருநெல்வேலி, தென்காசி பகுதியை பாளையக்காரர்கள் ஆட்சி செய்த காலம் (ஏறத்தாழ இதே காலகட்டத்தில் தான் கோபுரம் தீ வைக்கப்பட்டது). நிலையான அரசியல் சூழல் இல்லாத காலம். இலக்கியங்களும் பெரிதாக உருவாகாத காலம். தமிழகத்தில் பொ.யு. 13 ஆம் நூற்றாண்டிற்கு பின் செவ்விலக்கியம் தோன்ற அடுத்த எழநூறாண்டுகள் ஆகியது.

17, 18 ஆம் நூற்றாண்டு தமிழக இலக்கியத்தை சிற்றிலக்கியம் காலம் என வகைப்படுத்தலாம். தொன்னூற்றாறு வகை சிற்றிலக்கியங்களின் முதன்மையான வகை குறவஞ்சி அதல் தலையாயது திருக்குற்றாலக் குறவஞ்சி. குற்றாலத்தில் இருக்கும் திருக்குற்றாலநாதனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து திரிகூடராசப்ப கவிராயர் பாடியது.

“தேன் அருவித் திரை எழும்பி வான் வழி ஒழுகும்

செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

கூனல் இளம்பிறை முடித்த வேணி அலங்காரர்

குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே”

என்ற வரியை மனப்பாடம் செய்யாத பள்ளி மாணவர்கள் தமிழகத்தில் இன்றிருக்க முடியாது. அனைத்தும் சிதைந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இங்கிருந்து ஒரு கவி குற்றாலநாதரையும் அவர் வாழும் மலை வளத்தையும் துதிப்பாடிக் கொண்டிருந்தான்.

தமிழில் பெண் கவிஞர்கள் என சிறு பட்டியலே உள்ளது. ஆனால் அவர்கள் அனைவரும் முதன்மையானவர்கள். காரைக்கால் அம்மையாரை பற்றி குறிப்பிடும் போது “பேயார்க்கும் அடியேன்” என சுந்தரர் பாடுகிறார். ஔவையாரை புகழாத கவிஞர்கள் இல்லை. அவர்கள் வரிசையில் வருபவர் செங்கோட்டை ஆவுடையக்காள். செங்கோட்டை ஆவுடையக்காளை நவீன இலக்கியத்திற்கு அறிமுகம் செய்தவர் ஆய்வாளர் வேதசகாயகுமார். குமார், நாஞ்சில் நாடனிடம் ஆவுடையக்காள் பற்றி கேட்க நாஞ்சில் அவரை பற்றி தேடி தகவல் சேகரிக்கிறார். ‘ஆவுடையக்காள் ஆத்ம அனுபூதியில் லயித்தவர், உன்மத்தையாக இருந்தவர், பண்டிதர் - பாமரர் என்று எல்லோராலும் கொண்டாடப்பட்டவர்’ என நாஞ்சில் நாடன் குறிப்பிடுகிறார். "செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு" நூலின் சமர்ப்பணம் பகுதியில் ஸ்ரீ ஞானானந்த நிகேதனம் நித்தியானந்த கிரி சுவாமிகள், ஆவுடை அக்காள் தமிழ் நாட்டின் பெருமை மிக்க பெண் ஞானிகளில் ஒருவர் என்று குறிப்பிடுகிறார்.

ஆவுடை அக்காளின் வாழ்க்கை வரலாறு சுவாரஸ்யமானது. இவர் பதின்ம வயதை எய்தும் முன் விதவையாகிறார். பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். 19 ஆம் நூற்றாண்டு விதவை பிராமணப் பெண் என்றால் அதன் பின் எஞ்சிய வாழ்க்கையெல்லாம் வீட்டில் சிறைவாசம் தான்.

ஆவுடையக்காள் தன் வீட்டை துறக்கிறார். திருவிசைநல்லூர் ஶ்ரீ வெங்கடேச அய்யாவிடம் மந்திர தீக்‌ஷை பெற்று, அவரிடமே வேதாந்த ஞானமும் உபதேசமும் பெறுகிறார். அந்தணப் பெண் விதவையான பின் கல்வி கற்றதால் அவரை ஊர் மக்களால் ஜாதி பிரஷ்டம் செய்யப்படுகிறார்.

ஆவுடை அக்காள் அனைத்தையும் துறந்து துறவற வாழ்க்கை வாழ்கிறார். அக்காலகட்டத்தில் வேதாந்த மெய்யியல் சார்ந்த கவிதைகள் பல எழுதுகிறார். அவை தொகுக்கப்பட்டு ‘செங்கோட்டை ஶ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு’ என வெளிவந்துள்ளது. பாரதியார் ஆவுடை அக்காளின் வாழ்க்கை வரலாற்றை அறிய முயற்சி செய்துள்ளார். பாரதியின் கவிதைகளில் அக்காளின் செல்வாக்கு அதிகம் காணப்படுகிறது.

ஆவுடையக்காளின் ஒரு கவிதை,

கடத்தை இடித்தால் தாண்டி

கடம் ஆகாசம் ஆகும் என்றாண்டி

புரத்தை இடித்தால் தாண்டி

பரிபூரணம் ஆகும் என்றாண்டி

இறுதியாக, நாம் வாழும் இந்த நூற்றாண்டில் இதே தென்காசியில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர் கவிஞர் விக்ரமாதித்யன். விக்ரமாதித்யனின் வாழ்க்கை பெரும் அகப்பொருளியல் அலைகழிப்பிற்கு நடுவே நிகழ்ந்தது. விக்கிரமாதித்யன் மளிகைக்கடைப் பையன், சித்தாள், இட்லி-வடை விற்பவன், சலவைநிலைய எடுபிடி, மெத்தைக்கடைப் பையன், காயலான்கடை உதவியாள், ஓட்டல்-க்ளீனர், சர்வர், கட்பீஸ் ஸ்டோர் பணியாள், குன்றகுடி ஆதீன அட்டெண்டர், ஜலகன்னி, தம்போலா, வளையமெறிதல் ஸ்டால்களில் கேஷியர், சீட்டு கிளப் கேஷியர், ஊர் ஊராகப் போய் புத்தக வியாபாரம், அச்சக உதவியாளர், பிழை திருத்துபவர், துணையாசிரியர், பொறுப்பாசிரியர், நடிகர், ஜோதிடர் எனப் பல பணிகளை தன் வாழ்நாளில் மேற்கொண்டவர். தன் அப்பாவின் மேல் கொண்ட வஞ்சத்தால் குடிக்குள் சென்றவர்.

இத்தனை வேஷத்திலும் தன்னை கவிஞன் என்றே நிறுவிக்கொண்டவர். யார் அவரிடம் கேட்டாலும் தன்னை கவிஞன் என்றே அடையாளம் சொல்பவர். கவிஞனாக வாழும் சித்தர்.

விக்கிரமாத்தியன் கவிதையில் மரபிலக்கியம், சைவ சமயம் சார்ந்த பாதிப்புகள் அதிகம் காணப்படுகிறது. அதே வேளையில் கவிதையில் படிமங்கள் இல்லாத நேரடி தன்மையையும், அன்றாடத்தன்மையையும் கொண்டுவந்தவர்.

அவரது ஒரு கவிதை,

அபிராமி

பிச்சி தான்

மிக இஷ்டம்

முல்லைக்கு

மறுப்பொன்றுமில்லை

மனோரஞ்சிதம் தான்

வெகுவாக விருப்பம்

ரோஜா சூடிக்கொள்வதும்

சம்மதமே

அபிராமி மனம்போல்

அவள் வாழ்வு

மலை வளம் பாடும் ராசப்ப கவிராயர், பிரம்ம ஞானம் பாடும் ஆவுடையக்காள், அபிராமி துதியை நவீன மொழியில் பாடும் விக்ரமாதித்யன் மூவரும் வெவ்வேறு வகையில் அலைகழிப்பு வாழ்க்கை வாழ்ந்தவர்கள். ஆனால், அதற்கு மாறாக அவர்களது கவிதையில் அலையாத, மாறாத நிரந்தர ஒன்றை நோக்கி பாட நினைத்தவர்கள்.

அந்த நிலையான ஒன்றை பாடும் தருணத்தில் அவர்கள் தங்களை நித்தியமானவர்களாக உணர்ந்திருக்கக் கூடும் அல்லது அந்த கணத்தில் அவன் பெயர் இறைவன்.

***

திரிகூடராசப்ப கவிராயர் தமிழ் விக்கி பக்கம்

ஆவுடை அக்காள் தமிழ் விக்கி பக்கம்

விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்

தென்காசி கோவில் தமிழ் விக்கி பக்கம்

தென்காசி கோவில் கல்வெட்டுகள் தமிழ் விக்கி பக்கம்

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

பாரதியார் தமிழ் விக்கி பக்கம்

மேக்ஸ் முல்லர் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

சில தமிழ் கவிதைகள் - சோலைக்கிளி

 நான் சந்தோஷமாக இருந்த அன்று

என்னைச் சுமந்தபடி போயின

வண்ணத்துப் பூச்சிகள்.

கொண்டுபோய்;

ஒரு மரத்தின் பழுத்த இலையில் வைத்தன

இருக்க.


தூங்குக என்று

பூக்களைக் கொண்டுவந்து விசிறியாய் வீசின

காற்று மணக்க மணக்க

பூச்சிகள்.

உண்ணத் தேன் கொடுத்தன வாய்க்குள்.

நான் அங்கிருந்து பாடிய கவிதையை

சிறகிற்குள் பத்திரமாய்

கொண்டு சென்று பூமரத்தின் கன்னிக்குள்

ஊற்றன,

நாளைய மலர்கள் இனிக்க.

***

பொன் ஆற்றின் ஒரு கதை

குளித்து முடிந்ததா சூரியனே!

மீன்கள் கடித்தனவா!

தாமரைக்குள் நீ விழுந்து

குளிக்கும் அழகே தனி.


மஞ்சள் அரைத்துக் கரைத்த ஆறு இது.

ஆம்,

பொன் அருவி!

எருமைமாடுகளும் தங்கமுலாம் பூசிய

அழகுப் பதுமைகள்போல்

எந்த நேரத்திலும்

இந்த ஆற்றில்

குளிக்கும்.


ஒருநாள்

ஒரு தங்க எருமைமாட்டிற்கும்

அழகிய ஒரு வெண் கொக்கிற்கும்

காதல் மலர்ந்தது,

இந்த ஆற்றில்தான்!


பிறகென்ன;

கொக்கு

மீன் தேடுவதே இல்லை.

அந்த எருமைமாட்டில் மையல் கொண்டு

தினம் தினம் இந்த ஆற்றைச் சுற்றிப்

பறக்கத் தொடங்கியது.


தங்க எருமைமாடும் அப்பிடித்தான்

கொக்குப் பறக்காத நேரத்தில்

சோர்ந்திருக்கும்.


ஒருநாள்

தாமரைகள் அதிகம் பூத்திருந்த தினத்தில்

தவளைகள் கீதம் பாட

தங்க எருமைமாட்டைத் தூக்கிப் பறந்தது

அந்த வெண்கொக்கு.

எருமைமாடு

அட்டையைப்போல அதன் காலில்

ஒட்டியிருந்தது

காதலில்.

***

Share:

ஆழத்தில் மணக்கும் மலர்கள் - இசை

கல்பற்றா நாராயணன் எழுதிய இக்கட்டுரைகள் ‘அகழ்’ இதழில் வெளியான போதே பரவலான வாசககவனம் பெற்றவை.  இதில் மூன்று கட்டுரைகள் புனைவு சார்ந்தவை. ஏனைய யாவும் கவிதை  குறித்து எழுதப்பட்டவை. புனைவு குறித்து எழுதப்பட்டவையும் தனது  கவித்துவச்  செறிவால் கவிதையைப் பேசுவது போன்றே மயக்கம் தருகின்றன. மேலும் அந்த மூன்று கட்டுரைகளும் சில பிரமாதமான கவிதைகளின் ஊற்றுமுகமாய் இருக்க வாய்ப்புள்ள கட்டுரைகள். கவிஞர்களின் கட்டுரைகள் அவை.  ஆகவே இந்நூலை கல்பற்றா,  கவிதை குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு என்று சுட்டவே விரும்புகிறேன்.

‘விரித்தால் சுவை குன்றுவது கவிதை’   என்பதே பொதுவான அபிப்ராயம். ஆனால் விரித்து விரித்து மேலும் சுவை கூட்டும் கட்டுரைகள் இவை. ஒரு கவிதையை எவ்வளவு நீட்டிப் பார்க்க முடியுமோ அவ்வளவு நீட்டிப் பார்க்கிறார் கல்பற்றா. அதாவது மனித குல வரலாற்றில் எவ்வளவு நீளம் போகுமோ அவ்வளவு நீளம் நீட்டிப்பார்க்கிறார். இந்தக் கட்டுரைகளை வாசித்து முடித்ததும் எனக்குத் தோன்றியது…” உலகிலேயே மிக நீளமானது கவிதைதான்  போல?”  

கவிதை என்றால் என்ன  என்கிற பழம்பெரும் கேள்வி பேசித் தீராதது. 

ஆயிரம் கவிதைகள் எழுதி முடித்து விருதுகள், பாராட்டுகள் என்று வாங்கி அடுக்கி வைத்திருக்கும் ஒரு கவியும், அந்தக் கேள்வியின் முன்னே ஆர்வம் கொப்பளிக்கும் ஓர் இளம் மாணவன்தான். ஏற்கனவே சொன்ன பதிலை கொஞ்சமே கொஞ்சமாக மாற்றிச்  சொன்னால்,  அதைப் புதிது போன்றே  கேட்பவன் . . ஏற்கனவே சொன்ன பதிலை அப்படியே திருப்பிச் சொன்னால், அதையும் புதிது போன்றே கேட்பதில் வல்லவன் . ஒவ்வொரு முறையும்  ஒரு ரகசியத்தைக்  கேட்கும் கூர்த்த  கவனத்துடனும், இன்பத்துடனும் அதற்குச் செவி மடுக்கிறான் அவன்.

“ஒரு வகையில் கவிதை என்பதே கழிவிரக்கத்தின் வெளிப்பாடு தானோ? செய்ய வேண்டியதைச்  செய்ய வேண்டிய தருணத்தில் செய்யாமல் இருந்தவனின் மொழியா?.....பெரும்பாலான கவிதைகளும் ஒரு வகையான பெருமூச்சுக்கள்தான்”

“சொல்லா முடியாததைச் சொல்வது என்கிற மொழியின் புராதன கடமை கவிதையில் ஒவ்வொரு முறையும் நிறைவேற்றப்படுகிறது”

“கவிதையின் வடிவில் அல்லாமல் வேறெப்படியும் சிலவற்றை வெளிப்படுத்த முடியாது”

“மொழியின் எல்லையால் பத்தி தாழ்த்தப்பட்ட பாம்பு போல நிறைவின்மை கொண்ட சில மனங்கள் மொழியில் நிகழ்த்தும் எல்லை மீறலாக கவிதையை நாம் யோசித்துப் பார்க்கலாம்”

கவி புனையும் கட்டுரைகளுக்கென்றே ஒரு பிரத்யேக நறுமணம் உண்டு. அந்தக்  கிறங்கடிக்கும் தன்மை வியாபித்துள்ள எழுத்துக்கள் இவை. கட்டுரையின்  சில வரிகளை தீவிரமாக மனம் கொண்டு தொடர்ந்தால் செறிவான இன்னொரு கட்டுரை பிறக்கும் வாய்ப்புண்டு. இதில் கிடைக்கும்  தொன்மக் கதைகளும் சுவாரஸ்யமானவை. சில வரிகள் மனித குல வரலாற்றின் கவித்துவமான திருப்பங்களைத்  தொட்டுச் சுடர்கின்றன.  

“எப்போது என்று உறுதியாகச் சொல்லமுடியாத தொல் பழங்காலத்தில் , இன்றைய நவீன மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியுடன் ஒப்பிட்டால் அதன் குழந்தைப் பருவத்திலிருந்த மனிதன் தன் தோற்றத்தை  / ‘ சுய’ ரூபத்தை நீர்ப் பிம்பத்தில் கண்டுகொண்டுதான் அவனாக ஆகத் தொடங்குகிறான். அது நீர்ப் பிம்பமாக இருக்கலாம் அல்லது பிளாட்டோ சொல்வது போல எரியும் நெருப்பிற்கு பின்புறம் உள்ள குகைச் சுவற்றில் பதிந்த நிழலாக இருக்கலாம்…

“இரவில் நெருப்பைச்  சூழ்ந்து அமர்ந்திருத்தலிருந்துதான் கதையும், கவிதையும், இசையும், நடனமும், தத்துவசிந்தனையும் வரலாறும், அறிவியலும் உருவெடுத்தது”

கவிஞர் உடற்பயிற்சியை  ‘பரிகாசத்திற்கு உரிய விஷயம்’ என்கிறார். அதனால் பலன் அடைந்தவன் என்பதால் என்னால் அப்படிக் கருத முடியவில்லை. ஆனால் அவர் சொல்வது போன்றே நடைப்பயிற்சிக்கும் எழுத்திற்குமான உறவை நான் உறுதியாக வழி மொழிகிறேன். என் பெரும்பாலான கவிதைகள் காலை நடையில் எழுதப்பட்டவைதான். “காலை நடை முடித்து வீட்டிற்கு திரும்புவது புறப்பட்ட நான் அல்ல” என்கிறார். நானும் அப்படியே உணர்ந்திருக்கிறேன். ஆயிரம் துரதிர்ஷ்டங்களுக்கு மத்தியிலும் அள்ள அள்ளத் தீராத பொக்கிஷமாக வெளி திறந்து விரிந்து  கிடக்கிறது. 

கல்பற்றா தீவிர விராட் கோலி ரசிகர்.  கிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஹாக்கி, வாலிபால், கபடி , கூடைப்பந்து என எல்லா விளையாட்டிலும் கோலியை “ Non playing captain “ஆக நியமிக்க வேண்டும் என்று அனுஷ்கா ஷர்மாவோடு சேர்ந்து அரசுக்கு கோரிக்கை வைக்குமளவு ரசிகர். இந்தக் கட்டுரைகளை கோலியின் ஸ்டைலான பவுண்டரிகள் மற்றும் ஆக்ரோஷமான சிக்‌ஷர்கள் என்று வர்ணனை செய்தால் நிச்சயம்  அவர் மகிழ்வார். அப்போது அவர் முகத்தில் தவழும் அந்தப் புன்னகையையே தமிழின் பரிசாக அவருக்குச்  சூட்டி மகிழ  விரும்புகிறேன். 

படைப்பாளி படைப்புக்கான ஊக்கம் பெறும் வழியும் அவ்வளவு துலக்கமாக  இல்லை. கவி கண்ணீரையும் இரத்தத்தையும் சரிவிகித சமானத்தில் கலந்து வார்த்தாலும், சமயங்களில்  அங்கு கவிதைக்கு பதிலாக வேறொன்றே  தோன்றி நிற்கும்.  அப்போது அவன் எவ்வளவு பாவம் என்பதை அவன் மாத்திரமே அறிவான்.

“சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்த நாட்களில், மிகச் சொற்பமான ரன்களில் வெளியேறிய நாட்களில் , நான் ஆற்றிய மேடையுரைகளின் வரைபடம் உயர்வு தாழ்வுகளாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்… பொறுமையில்,  படைப்பூக்கத்தில், விழிப்பு நிலையில் எல்லாம் எனக்குச்  சிறந்த விளையாட்டு வீரர்கள் தூண்டுதலாக இருந்திருக்கிறார்கள்..”  என்கிறார்.   ஜனரஞ்சக சினிமாக்கள் என்று எள்ளப்படும் சினிமாக்களிடம் இருந்து கூட   நான் தூண்டுதல் பெற்றிருக்கிறேன்.  கார்த்திக் சுப்புராஜின்  “ பீட்சா” படம் எனக்குப் பிடித்திருந்தது. அதன் சுவாரஸ்யம் புத்துணர்ச்சி அளித்தது.  அந்தப் படம் பார்த்து வந்த மாலையில்தான் “ லியூகோடெர்மா கன்னியின் விநாயகர்” என்கிற கவிதையை எழுதினேன்.  இப்போதும் எனக்குப் பிடித்த கவிதைகளின் பட்டியலில் அது உண்டு. அந்தப் படத்திற்கும் கவிதைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.  இல்லை, அப்படி ஒரேயடியாக சொல்லிவிட முடியவில்லை. அந்தக் கவிதையின் புனிதத்தில் தூசு படிந்துவிடும் என்று இத்தனை நாளும் இந்த ரகசியத்தை மறைத்து வந்தேன். 

“கவிதைக்கு வெளியே நடந்த சில வரிகள்” என்கிற கட்டுரையில் குறிப்பிட்ட கவிதைக்கு வெளியே மேலும் சுதந்திரமாகும் , மேலும் காத்திரம் கொள்ளும் வரிகளைக் குறித்து எழுதியுள்ளார்.  கம்பனில் ஒரு வரி உண்டு “ கைகடக்க விட்டிருந்து கட்டுரைப்பதென் கொலோ?”. சீதை தன் நெஞ்சிற்குச்  சொல்வதாய் அமைந்த எளிய காதல் கவிதை. இராமனைக்  கண்ட மாத்திரத்திலேயே அவனை இறுக அணைத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படியல்லாமல் அவனைக்  கடந்து செல்ல விட்டுவிட்டு இப்போது புலம்பித் தவித்து என்ன பயன்? என்று கேட்கிறாள். இவ்வரி அந்தக் கவிதைக்குள் அப்படியொன்றும் ஆகச்சிறந்த வரியல்ல. ஆனால் அவ்வரியை அக்கவிதையிலிருந்து விடுவித்து வெளியே கொண்டு வந்து வைத்தால்,  காலாதி  காலமாக  மனிதன் தவற  விட்டுவிட்டுத்  தவிக்கும்   அத்தனை துன்பங்களையும்  கோர்த்துக் கட்டிவிடுகிறது  இவ்வரி. 

இந்த நூலின் வழியே   20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில்  மலையாளத்தில் செல்வாக்கு செலுத்திய பல கவிஞர்களின் முக்கியமான வரிகள் தமிழுக்கு அறிமுகமாகின்றன. அவ்வரிகளின் வழியே அவர்களும். மலையாளக்கவி பி. ராமனுடனான ஒரு உரையாடலில் 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மலையாளத்தில் பல முக்கியமான கவிகள் தோன்றியதாகவும், ஆனால் அவர்கள் எல்லாரும் கடினமான   செய்யுள் வடிவங்களில் எழுதியதால் அவற்றை பிற மொழிகளுக்கு மொழி பெயர்க்க முடியாமல் போய்விட்டது என்றும் வருத்தப்பட்டார். அந்த மலையாளக் கவிதைகளின் வரிகளை வாசிக்கையில்.  அதே காலத்தில் தமிழில் செய்யுள்  வடிவில் இயற்றப்பட்ட கவிதைகளுக்கும் அவற்றுக்குமான வேறுபாட்டை உணர்ந்து கொள்ள முடிகிறது. செய்யுள் வடிவில் எழுதப்பட்டாலும்  மலையாளக் கவிதைகள்  நவீனக் கூறுகளுடனேயே வெளிப்பட்டிருக்கின்றன. மனித அகத்தை ஊடுருவிப் பார்ப்பதையே  அதிகம் விரும்பியிருக்கின்றன. குறிப்பாக அக்கவிதைகளில் உள்ள கசப்பையும்  இருட்டையும் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் நாம் ஒரே ஒரு பாரதியோடு வாழ்ந்து வந்துள்ளோம். அவரும் ‘ அன்புசெய்தால் போதும் பாடுபடாமலேயே பயிர் விளையும்’ என்று பாடும் அளவு பொன்னுலகப் பித்தராக  இருந்திருக்கிறார்.  

இத்தொகுப்பு  முழுக்கவே  இருள் நிரம்பியுள்ளது. 

“குற்றம் மீதான ஈர்ப்பு எவ்வளவு அபாயகரமானது! ஆனால் எவ்வளவு உண்மையானது.”

“நம் ஒழுக்கநெறிகள் அசைந்தபடியே உள்ள ஒரு கல்லில் அஸ்திவாரம் அமைத்து ஆலயம் போல நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது”

“எந்தப் பசியும் ஒன்றை விட மற்றது எளிமையானது அல்ல”

“தொன்மங்களும், மூட நம்பிக்கைகளும் மனிதனுக்கு அளித்த பாதுகாப்புணர்வை வரலாற்றாலும் அறிவியலாலும் அளிக்க முடியவில்லை”

“உறக்கம் ஒரு பிழையான செயல் அல்ல. ஆனாலும் அதில் தன்னலம் இருக்கிறது. ஒரு வகையான கண்டுகொள்ளாமை உண்டு. பாவம் உண்டு. நல்ல தூக்கம் என்ற சொல்லில் மேலே சொன்ன எல்லாமே உண்டு”

“மாண்பான நபர்கள் கொலையை கனவு காண்கிறார்கள். அப்படி அல்லாதவர்கள் அதை நிகழ்த்துகிறார்கள்”

“வெண்மை எவ்வளவு அருவருப்பானது. நன்நம்பிக்கை எவ்வளவு பொய் ஆனது இல்லையா?”

கும்மிருட்டு என்றாலும் இவை ஒரு கவி கட்டாயம் காண வேண்டிய இருட்டல்லவா? கவிதை எரி மூண்டு எழும் இருட்டல்லவா?

கொஞ்ச காலமாக எனக்கு ‘சித்தார்’ பைத்தியம் பிடித்திருந்தது. எப்போது  காரைக் கிளப்பினாலும்   அதை அனுஷ்கா ஷங்கர்தான் ஓட்டினார்.  பிறகு ‘சரோட்’  அறிமுகம் ஆனது. அதன் ஆழமான ‘ ட்வாங் ‘கை  கேட்டதும் அதுவே என் வாத்தியம் என்பதை உணர்ந்தேன். ஒரு நண்பருடனான  சமீபத்திய உரையாடல்  இப்படி அமைந்தது

“சித்தார் இல்ல, சரோட்தான் என் வாத்தியம்”

“ஏன், சித்தார்க்கு என்ன குறை?”

“துக்கம் பத்தல”  

“கொஞ்சம் கண்ணீர் கலக்காத வாழ்கைப் பலகாரம் எதற்கு?” என்று கேட்கிறார் இடச்சேரி கோவிந்தன். நீங்கள் கவலைப்படாதீர் கவிஞரே! கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டாலும் அது கிடைக்காது.

இந்த மொழியாக்கத்தின் வழியே தமிழ்க் கவிதையியலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச்  செய்துள்ளார் மணவாளன்.  கவிதை மொழியாக்கத்தைப் போன்றே கவிதை குறித்த எழுத்தை மொழி பெயர்ப்பதும் அடிப்படையில் சிக்கலானதே. ஆனால் அந்தச் சிக்கலை தீவிரத்துடனும்  பரவசத்துடனும்  எதிர் கொண்டிருக்கிறார். அடிக்குறிப்பு என்பதே  விளக்குவதை  நோக்கமாகக் கொண்டது மணவாளன் அதிலும் செறிவைக் கைவிடாதவராக உள்ளார். “ உம்பம்” என்கிற சொல்லிற்கான அடிக்குறிப்பு இது…  “  உம்பம்- அம்மாக்கள் குழந்தைகளிடம் உரையாடும் மலையாளத்தில் தண்ணீர் ‘உம்பம்’ என்று சொல்லப்படுகிறது” எனக்கு மலையாளம் தெரியாது. ஆனால் அம்மாக்கள் குழந்தைகளிடம் உரையாடும் மலையாளம் தெரியும் என்று தோன்றியது. அது போன்றே அம்மாக்கள் குழந்தைகளிடம் உரையாடும் தெலுங்கும், அம்மாக்கள் குழந்தைகளிடம் உரையாடும் உருதும் எனக்குத் தெரியும் என்கிற எண்ணம் என்னை குதூகலம் கொள்ள வைத்தது. 

கல்பற்றாவுக்கு  சிரம் தாழ்ந்த வந்தனங்களைச் சொல்கிறேன். மணவாளனை இறுக அணைத்துக் கொள்கிறேன்..

“தீர்வு உள்ள பிரச்சனைகளுக்கு அல்ல, தீர்வே இல்லாத பிரச்சனைகளுக்குத்தான் எழுத்தாளன் உடனிருக்க வேண்டும்” என்கிறார் கல்பற்றா. 

தீர்வு இல்லாத சிக்கல்களில் சும்மா கூட  இருப்பதில் என்ன அருமை வந்துவிடப் போகிறது?  தீர்வே   இல்லாத சிக்கல்களில் கூடவே  இருப்பவனைக் காட்டிலும்  அருமையானவன்  இன்னொருவன் உண்டோ?

(கல்பற்றா நாராயணனின் கருப்பு இருட்டல்ல கட்டுரை தொகுப்பிற்கு கவிஞர் இசை எழுதிய முன்னுரை)

கருப்பு இருட்டல்ல (தமிழில் அழகிய மணவாளன்) நூல் வாங்க...

***





Share:

கவிதையின் நிலையான வடிவம் எது - லட்சுமி மணிவண்ணன்

வழக்கத்துக்கு மாறான ஒரு நிகழ்வு தென்படுகையில் திகில் உண்டாவது இயல்பு. வி. சங்கரின் கவித்துவ வெளிப்பாட்டை இத்தகையதொரு அனுபவம் எனலாம். அது நிச்சயமாக நவீன கவிதைகளின் வடிவில் இல்லை. ஆனால் அது நவீன கவிதைகள் தருகிற கவிதை அனுபவத்தைத் தருகிறது.

கவிதைக்கு இதுவே நிலையான வடிவம் என்று சொல்லத் தக்க வடிவங்கள் ஏதும் உண்டா? கவிதை இந்த வாகனத்தில் மட்டுமே ஏறி அமரும் என்று சொல்லத்தக்க நிலையான வாகனங்கள் ஏதும் உண்டா? கிடையாது. அது எப்படி வேண்டுமாயினும் வரலாம். நமக்கு அடையாளம் காணத் தெரிய வேண்டும் அவ்வளவே விஷயம். கவிதையின் முகம் காண நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். அது ஒன்றே விதி. 

அது எந்த வடிவத்திலும் வரலாம், எந்த பொருளின் பேரிலும் வரலாம்.நம்மாழ்வார் வடிவிலும் வரலாம், பாப் மார்லி வடிவிலும் தோன்றலாம். நாட்டுப்புற கீதத்திலும் வரலாம், நவீன கவிதையிலும் வரலாம்.எந்த வடிவில் வந்தாலும் அதில் கவிதை ஏறி அமர்ந்து இருப்பின் ஏற்பது ஒன்றே வழி. கவிதை ஏறி அமர்ந்து வரவில்லை எனில் நவீன கவிதை வடிவமே ஆனாலும் அதுவும் செய்யுளுக்கு சமமே.

ஒவ்வொரு காலத்திலும் கவிதை ஒவ்வொரு வடிவத்தில் நம் முன்னால் வந்து நிற்கிறது. செய்யுளின் வடிவத்தில் கவிதை வந்து நின்ற காலங்கள் உண்டு. யாப்பில், பாடலில், பழமொழிகளில், குறளில் என பல்வேறு வடிவங்களில் அது நம் முன்பாக வந்திருக்கிறது. ஒருவேளை காலம் தான் பொது வடிவை கவிதைக்கு தருகிறதோ என்னமோ? ஒரு காலம் முடியும் போது, கவிதையின் வடிவமும் முற்றுப் பெறுகிறது. அடுத்தது தொடங்குகிறது. தமிழில் நவீன கவிதைகளின் உரைநடை வடிவம் முடிவடைந்து வேறு உரு கொள்வதை வி. சங்கரின் இந்த கவிதைகள் உணர்த்துகின்றன.

இந்த தொகுப்பில் நெடிய மாலைகளை போன்ற நான்கு கவிதைகள் உள்ளன. ஒவ்வொரு மாலையிலும் தொடுக்கப் பட்டிருக்கும் பூக்கள் ஒவ்வொன்றும் மொத்தத்தோடு தொடர்பு கொண்டிருக்கின்றன. சில இடங்களில் தனித்தும் அவற்றுக்கு ஒரு அனுபவம் இருந்தாலும் கூட மொத்ததோடு அவை ஒன்றுபடுகின்றன. இந்த அமைப்பு முறை நவீன கவிதை வாசிப்பு பழக்கத்திற்கு உவப்பாக இல்லை.ஆனால் இதனால் உண்டாகும் கவிதை அனுபவம் சிறப்பாக இருக்கிறது. வி. சங்கரின் வெளிப்பாட்டுச் சிறப்பு இது 

தமிழில் நீண்ட நெடிய கவிதைகள் உண்டு. நவீன கவிதையில் நகுலன், விக்ரமாதித்யன் ஆகிய இருவரிடமும் நெடிய பாக்கள் உண்டு. சரக்கொன்றை போன்றவை அவை. தனித்து குறைவான பொருளும் ஒட்டு மொத்தத்தில் மிகுதியான பொருளும் தருபவை. வி. சங்கரை அப்படி சொல்ல முடியுமா என்றால் ஒரு ஒப்பீட்டுக்கு வேண்டுமானால் அப்படி சொல்லலாமே அன்றி மொழிப் பெருக்கில் இவர் புதியவராக இருக்கிறார் 

சங்கருக்கு விஷேசமான ஒரு மொழி மண்டலம் இந்த கவிதைகளில் அமைந்திருக்கிறது. ஒருவகையில் சொன்னால் நவீன தமிழ் கவிதைகள் தன்னில் இருக்கவே கூடாது என வகுத்துக் கொண்ட மொழி மண்டலமும்,அதனால் உருவாகும் சரளமுமே சங்கரின் கவிதைகள். 

நவீன தமிழ் கவிதையின் மொழிக் கொள்கைக்கு சங்கரின் கவிதைகளில் இடமே கிடையாது. ஆனால் நவீன தமிழ் கவிதைக்கு நிகரான கவிதை அனுபவத்தை சங்கரின் கவிதைகள் ஏற்படுத்துகின்றன. மாப்பிள்ளை காரில் வரலாம், எந்த காரில் வேண்டுமானாலும் வரலாம். அது ஏற்புடையது தான். திடீரென ஒரு மாப்பிள்ளை நடந்து வந்தால் மாப்பிள்ளை மாதிரியே தோன்ற மாட்டார் தானே இல்லையா? ஒருவேளை கவிஞன் கழுதையில் ஏறி வந்தால் எப்படி எடுத்துக் கொள்வது?

வி. சங்கரின் மொழி மண்டலமும், சரளமும் தமிழ் மரபின் ஆழத்தில் இருந்து வருவது போன்ற தோற்றத்தை புறவயமாக ஏற்படுத்துகிறது. ஆனால் அதன் நவீன அம்சம் வெண் முரசில் பெறப்பட்டதாக இருக்கிறது. சங்கரின் சரளத்தின் தோற்றுவாய் என ஜெயமோகனின் ' வெண் முரசு ' காவியத்தைச் சொல்லலாம். பெரிய காப்பியங்களில் இப்படியான துணைப் பிரதிகள் தோன்றும் சாத்தியங்கள் உண்டு. சங்கரின் கவிதைகளில் அவை சிறப்பாக உருமாறியிருக்கின்றன என்று சொல்லலாம் 

வி. சங்கரின் இந்த கவிதை நூல் தமிழ் கவிதைக்கு ஒரு புதுமையான வரவு என்பதில் சந்தேகமில்லை. நவீன தமிழ் கவிதைகளில் கிழடு தட்டி போயிருக்கும் விறைத்த வசனத் தன்மையில் இது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஒரு காலம் தனது அடுத்த அடியை எடுத்து வைப்பதை இந்த கவிதைகளில் உணர முடிகிறது. இக்கவிதைகளின் அடி நாதமாக, நிழலாக பரவியிருக்கும் ஆன்மீகம் நவீன கவிதைக்கு புதியது. கவிதை அதன் விழிப்புத்தன்மையில் இருந்து விழிப்பற்ற தளத்துக்குள் புரண்டு திரும்புவதை சங்கரின் தொகுப்பு அறிவிக்கிறது. இந்த தொகுப்பை சிலேட் மூலமாக கொண்டு வருவதில் மகிழ்கிறேன்

தமிழில் நவீன கவிதைகள் நிறைய சங்கர்களாலும் ஆகி வருகிறது. இது நன்மை தாமோ பராசக்தி?

(வி.சங்கரின் சூது பவளம் கண்டேன் அல்லேன் நூலுக்கு எழுதிய முன்னுரை)

***

சூது பவளம் கண்டேன் அல்லேன் நூல் வாங்க...

 

Share:

அருணாசலக் கவிராயர் - க.நா.சு

தாயுமானவர் வேதாந்தக் கவி. அருணாசலக் கவிராயர் நாடகக் கவி; இசைக்கவி. எப்படிச் சொன்னாலும் சரிதான். புதுத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையான ஒரு கொள்கையை வளராமலேயே ஏற்றுக்கொண்டு கவிதை செய்தவர் அருணாசலக் கவிராயர். சிறப்பாகப் பாரதியாரில் வந்து முடிந்த கவிதை மரபுக்கு வழிகாட்டித் தந்தவர் என்று அருணாசலக் கவிராயரை நாம் பாராட்ட வேண்டும். கவிதையை அரும்பத அகராதிகள், வியவக்தியான கர்த்தாக்கள், அறிவுப்புலிகள் இவர்களிடமிருந்தெல்லாம் நமக்கு மீட்டுத் தரப் பாடுபட்டவர்களில் அருணாசலக் கவிராயரைக் காலத்தால் முதல்வராகச் சொல்லலாம்.

1712ல் பிறந்த அருணாசலக் கவிராயர் தனது அறுபதாவது வயதில் ராமநாடகக் கீர்த்தனைகளைப் பாடினார். அதற்குப் பிறகு அறுபத்தேழாவது வயது வரையில் இருந்துவிட்டு 1779ல் இறந்தவர். மாயூரத்துக்கருகிலுள்ள தில்லையாடி என்னும் கிராமத்தில் பிறந்த அருணாசலக் கவிராயர் சீர்காழி அருணாசலக் கவிராயர் ஆனதற்கு அவருடைய மதியையும் கவித்துவத்தையும் உணர்ந்த ஒரு சீர்காழி நண்பரான போஷகரின் செயல்தான் காரணம் என்று கதை சொல்வார்கள். காசுக்கடை வைத்துப் பொருளீட்ட முயன்றவர் அருணாசலக் கவிராயர். கவிராயருக்குக் காசுக்கடைக் கணக்குச் சரியாக வந்திராது என்றே நாம் ஊகித்துக்கொள்ளலாம். காசுக் கடையுடன் ராமாயணப் பிரசங்கமும் பிழைப்புக்காகச் செய்துவந்தவருக்குக் கம்ப ராமாயணத்தில் நல்ல பரிச்சயமிருந்ததில் ஆச்சரியமில்லை. பிரசங்கி என்று ஒருவன் எடுத்துச் சொன்னாலொழிய, கம்ப ராமாயணத்தில் பல பகுதிகள் சாதாரண மக்களுக்குப் புரிவதில்லை. அதற்குக் காலம் மட்டும் காரணமல்ல. இலக்கியமென்பது பேச்சு பாஷையை விட்டு விலகி நின்றதுதான் காரணமென்று புரிந்துகொள்ள அவருக்குப் பொதுவான சந்தர்ப்பங்கள் இருந்திருக்கத்தான் வேண்டும்.

ராமநாடகக் கீர்த்தனங்களைத் தவிர, அவர் சீர்காழிப் புராணம், சீர்காழிக் கோவை, அநுமார் பிள்ளைத் தமிழ், அசோமுகி நாடகம் முதலியனவும் பாடினார். ஆனால் அவருடைய ராமநாடகம்தான் முக்கியமாக மக்களின் மனத்தைக் கவர்ந்தது. ஸ்ரீரங்கத்தில் ராமநாடகக் கீர்த்தனங்களை அரங்கேற்றிவிட்டு அடுத்தபடியாக, தஞ்சை மராட்டிய அரசனாகிய துளஜராஜரிடம் அதை அரங்கேற்ற விரும்பினாரென்றும், அது அப்போது சரிப்படாது போகவே துளஜராஜருக்கு நெருங்கிய நண்பரான புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை முன் அரங்கேற்ற விரும்பினாரென்றும், துளஜராஜா கேட்காதபோது நான் கேட்பது சரியல்ல என்று ஆனந்தரங்கம் பிள்ளை அவரைத் தமது நண்பர் சென்னை முத்துக்கிருஷ்ண முதலியாரிடம் அனுப்பினார் என்றும் ஒரு கதையுண்டு. அந்த நாட்களில் கவியென்றால் உலகம் அறிந்திருக்கவும் வேண்டும், உலகில் அங்குமிங்கும் ஓடியாடி உலகை ஒத்துப் பாடியாடித் திருப்தி செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பத்திரிகை யுகமாகிய இந்தக் காலத்துக்கும் அந்தக் காலத்துக்கும் அப்படி வித்தியாசம் ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

புராணம், கோவை முதலிய நூல்களால் கவியாக யாருடைய பெயரும் இனிப் பரவவில்லை என்பது பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியிலேயே தெளிவாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தும் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாகவே இந்தத் துறைகளில் உழைப்பவர்களுக்குப் பஞ்சம் ஏற்படவில்லை. பத்தொன்பதாம் நூற்றண்டின் முடிவு வரையில் எழுதிக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அருணாசலக் கவிராயரும் தம் நூலைப் போஷகர் முன் அரங்கேற்ற முற்பட்டாலும்கூட, ஒரு பொதுஜன யுகம் வர இருப்பதை உணர்ந்துதான் இந்தக் கீர்த்தனங்களை இயற்றினார் என்று சொல்வது மிகையாகாது. ஆனால் பொதுஜன யுகம் வந்துவிடவில்லை அப்போது. பெஷி வசனத்தில் கடத்திய காரியத்தை, ஆனந்தரங்கம் பிள்ளை தமது தினசரிக் குறிப்புகளைத் தமக்காக எழுதிக்கொண்ட காரியத்தை, அருணாசலக் கவிராயர் ஒருவிதத்தில் சாதித்தார். இசையும் நாடகமும் தமிழும் கலந்து செய்தார். அறுபது வருஷங்கள் அப்பெயர் தமிழ்நாட்டில் அப்படியொன்றும் அதிகமாகப் பரவிவிடவில்லை. தில்லையாடியிலிருந்து சீர்காழி வரையில்தான் பரவியிருந்தது. ராமநாடகக் கீர்த்தனைகளுக்குப் பிறகு அவர் புகழ் தமிழ்நாடெங்கும் பரவிவிட்டது. அறுபத்தியேழாவது வயதில் அவர் இறக்கும்போது அவர் கீர்த்தனங்கள் எங்கும் பிரசித்தமாக இருந்தன. அவரே பல இடங்களிலும் பாடி அவற்றைப் பிரசங்கித்தார். அவர் சிஷ்யர்கள் பலரும் வெற்றிகரமாகச் செய்தார்கள். ஒரு நூற்றைம்பது வருஷங்களாகத் தமிழ்நாட்டிலே ராமநாடகக் கீர்த்தனைகள் பிரபலமாகவே இருந்திருக்கின்றன என்று சொல்வது பிசகாகாது.

கம்பராமாயணப் பிரசங்கத்தையும் தன் தொழிலாகக் கொண்ட அருணாசலக் கவிராயருக்கு ராமகதையை இசையாகத் தொகுக்க வேண்டுமென்று தோன்றியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அவரிடம் தமிழ் கற்றுக்கொண்ட மாணவர்கள் இருவர் இசை வல்லவர்களாகவும் இருந்ததனால் இது சுலபமாகவே சாத்தியமாயிற்று. எளிய சந்தம், எளிய பதங்கள், எளிய கதை என்று பாரதியார் பிறகு - ஒரு நூற்றைம்பது வருஷங்களுக்குப் பிறகு, சொன்னாரே - அத்துடன் இசையையும் சேர்த்துச் செய்துவிட்டார் அருணாசலக் கவிராயர். அதை நாடகமாகச் செய்யலாம் என்று செய்ததை ஒரு தனிப்பெருமையாகச் சொல்லலாம்; ராமகீர்த்தனைகளாக மட்டுமில்லாமல் இவை ராமநாடகக் கீர்த்தனைகளாகவும் அமைந்ததுதான் விசேஷம் என்று சொல்ல வேண்டும்.

இன்று நாம் சொல்லிக்கொள்வது போலவே, அன்றும் முத்தமிழ் என்றும், இயல், இசை, நாடகம் என்றும் முழங்கிக்கொண்டுதான் இருந்திருப்பார்கள். கோயில்களில் நாட்டிய நாடகங்கள் இருந்தன என்பது நமக்குப் பலதரப்பட்ட கல்வெட்டுக்களால் தெரியவருகிறது. அருணாசலக் கவிராயர் காலத்திலே நாடகம் அப்படியொன்றும் பிரமாதமான வளர்ச்சி பெற்றிருக்கவில்லை என்பதும் உண்மைதான். வடமொழிக் கதையான ராமாயணத்தைக் கம்பன் அற்புதமான காவியமாகச் செய்துவிட்டான். சிலப்பதிகாரத்தைப் போலவே அந்தக் காவியத்திலும் நாடகப் பண்பு நிறைந்திருக்கிறது என்பது உண்மைதான். கம்பராமாயணப் பிரசங்கியாகிய அருணாசலக் கவிராயருக்கு, இன்றைய கம்பராமாயணப் பிரசங்கிகளைப் போலவே கம்பராமாயணத்தின் நாடகப் பாங்கு முழுதும் நன்கு தெரிந்துதானே இருக்க வேண்டும்? இந்நாடப் பாங்கை அழுத்தமாக வெளிக்கொணர ஒருவர் முயன்றால் தவறு ஒன்றுமில்லை. கம்பராமாயணத்தை யொட்டியேதான் அருணாசலக் கவிராயர் தமது ராமநாடகக் கீர்த்தனைகளைச் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். தெளிவான தமிழில் அரும்பத அகராதியையோ வியாக்கியான கர்த்தாக்களின் உதவியையோ நாடாத வகையிலே நாடகப் பாங்கை மட்டும் மனத்தில் கொண்டு அருணாசலக் கவிராயர் இந்தக் கீர்த்தனங்களைப் பாடிவிட்டார்.

இசையாக ராமநாடகக் கீர்த்தனைகளை மதிப்பிட எனக்குத் தெரியாது - அப்படி மதிப்பிட வேண்டிய இடமும் இதுவல்ல. ஆனால் நாடகமாகவும் இலக்கியமாகவும் மதிப்பிடும்போது ராமநாடகக் கீர்த்தனைகளின் நயம் தெளிவாகவே விளங்குகிறது என்று சொல்லலாம். இந்த நாடகம் நமக்குப் பழக்கமான இன்றைய நாடகங்களைப்போல இல்லைதான். ஆனால் இதில் நாடகத்தன்மை இருக்கிறது என்பது வெளிப்படை. சிலப்பதிகாரத்தை நாடக நூல் என்று பலவகைகளில் சொல்லலாம். பழைய பந்தாவில் நாட்டியத்தைப்பற்றிச் சொல்லியது என்பதாலும், நாடகத்தன்மை, அதாவது சம்பவ மோதல்கள் சிறப்பாக உள்ளது என்பதாலும் அதை நாடக நூல் என்று சொல்லலாம். சீர்காழி அருணாசலக் கவிராயர் காலத்தில் சிலப்பதிகாரம் வழக்கத்திலிருந்ததா? அவர் அதை அறிந்திருந்தாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அந்த அளவுக்கில்லாவிட்டாலும், குறிப்பிட்ட ஒரு அளவுக்குள் ராம கதையை நாடகமாக்கிவிட்டார் அவர். தமிழில் பிற்காலத்தில், அதாவது பத்தொன்பதாவது நூற்றண்டின் தொடக்கத்திலிருந்து இறுதிவரையில் வெளிவந்து நடிக்கப்பட்ட நாடகங்களுக்கெல்லாம் ஆதர்சம் என்று ராமநாடகக் கீர்த்தனையைத்தான் சொல்ல வேண்டும். இன்றுள்ள நாடக மேடை, சினிமாவுக்கும் ராமநாடகக் கீர்த்தனை வழிகாட்டியாக, முன்னோடியாக இருந்துவருகிறது என்று சொல்வது பொருந்தும் என்றே தோன்றுகிறது. தெரிந்தோ தெரியாமலோ, இந்த முதல் நூலை ஓரளவு பின்பற்றித்தான் கோபாலகிருஷ்ண பாரதியார் தம் நந்தன் சரித்திரத்தில் பிரமாதமான வெற்றி பெற்றார் என்று சொல்ல வேண்டும். வேதநாயகம் பிள்ளை தம்முடைய பெண்மதி மாலையிலும், சர்வ சமரஸக் கீர்த்தனைகளிலும்கூட இந்தக் கீர்த்தனைகளின் நாடகப் பண்பையும் இசையையும் பின்பற்றி எழுதவே ஓரளவு முயன்றார் என்றுகூடச் சொல்லலாம்.

இலக்கியமாக மதிப்பிடும்போது, இந்த ராமநாடகக் கீர்த்தனைகளுக்கு எந்த அளவில் இடமுண்டு என்று கேட்கத் தோன்றலாம். ‘மக்கள் இலக்கியம், மக்கள் இலக்கியம்’ என்று இந்தக் காலத்தில் ஒரு கொள்கை பரவிப் பிரமாதப்படுகிறதே - அதற்கு ராமகதை ஆதாரமாக அமையக்கூடாது என்று வேண்டுமானால் மக்கள் இலக்கியக்காரர்கள் சொல்லலாம். ஆனால் அருணாசலக் கவிராயர் இந்த ராமநாடகக் கீர்த்தனைகளை மக்கள் இலக்கியமாகக் கருதியேதான் செய்து வெளியிட்டார் என்று சொல்ல வேண்டும். ராவணனுக்கு விபீஷணன் புத்தி கூறும்போதும், ராமனுக்கும் சூர்ப்பனகைக்கும் சம்வாதம் கடக்கும்போதும், அநுமான் சீதையைச் சந்தித்து அசோகவனத்தில் பேசும்போதும் இசையை விலக்கிவிட்டு நாடகமாக மட்டும் நாம் கவனித்தால், இது தெளிவாகவே விளங்கும். மக்கள் மாறிவிடுவதில்லை. மேலெழுந்தவாரியான பல வியவகாரங்கள் மாறுகின்றன; சுலோகங்கள் மாறுகின்றன. மனிதர்கள் இன்னும் ராமராஜ்யத்தை எண்ணிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறர்கள். மகாத்மா காந்தி ராமராஜ்யம் என்கிற பெயரைச் சொல்லித்தான் சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார். அந்த ராம ராஜ்யத்தையும், அதற்கு ஆதாரமான ராஜ்யத்தையும் தமிழருக்கெல்லாம் தெரிவிக்க இக் கீர்த்தனைகளும் பிரயோசனப்பட்டன என்பது அவற்றின் தனிப்பெருமை. 

மற்ற இந்திய மொழிகளிலே ராமாயணத்துக்குப் பலப்பல மொழிபெயர்ப்புகள் உண்டு. தமிழிலோ கம்பனுடையதும், அருணாசலக் கவிராயருடையதும்தான். இலக்கியபூர்வமாக அவையே போதும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

***

‘கல்கி’, 8 பிப்ரவரி 1959


Share:

இரு மனங்கள், இரு தீர்வுகள் - அ.க. அரவிந்தன்

கவிதை முழுமையான இலக்கிய வடிவம் என்று எனக்கு தோன்றும். புனைவு இயல்பிலேயே சிக்கலை அறுதியிட்டு தீர்வை முன்வைக்க முயற்சி செய்வதாக இருக்கும்.வலுவான சிக்கல்-கண்ணியான தீர்வு-இலக்கிய பெறுமானம் இவை மூன்றும் புனைவைப் பொருத்தவரை அடுத்தடுத்த படிநிலையில் நிகழவேண்டியது.இதனால் அகவயமான ஏற்பு வாசகனுக்கு கிட்டுவதில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகிவிடும்.ஆனால் கவிதை வெறுமனே ஒரு விஷயத்தைக் கவனப்படுத்த முயற்சி செய்கிறது.

கவனப்படுத்த விரும்பும் விஷயம் வாசகனின் கண்ணிற்கு தெரிகிறதா? இல்லையா? என்பதே கேள்வி. அதனால்தான் “என்கவிஞர்” என்றும் “என்கவிஞர் இல்லை” எனவும் வாசகர் சொல்வதைக் கேட்க முடிகிறது.ஆக, கவிஞனின் சுயத்திற்கும் வாசகனின் இயல்புக்கும் கணநேர உரையாடலைதான் நாம் கவிதானுபவமாக சொல்கிறோம்.பின்பு, அதை ஒட்டியப் பேச்செல்லாமே அந்த அனுபவத்தை விளக்குவதே.இதனால் புனைவில் கவிதானுபவத்தை உத்தேசிக்கும் ஆக்கங்கள் வெற்றியடையாமல் போய்விடுவதையும் பார்க்கிறோம்.

கீழே வரும் இரு கவிதைகள் பற்றிப் பேசவதே என் நோக்கம். 

துக்கம் ஒரு பரிசுப்பொருள் நெடுநாள்

என் மேசை மீது கிடக்கிறது ஒவ்வொரு நாளும் அதைப் பிரிக்கிறேன் 

சரிகை முடிச்சிடுகிறேன்

தூங்கச் செல்கிறேன் 

அது அங்கேயே கிடப்பதில்

சந்தோஷம்தான் எனக்கு

பிறந்த குழந்தை போல

அது அங்கேயே கிடக்கிறது

அது தவழ்வதில்லை

நடக்கவும் செய்யாது

அது ஒரு எளிய அற்புதப் பொருள்

அதன் தொனி மெளனம்

அதன் பணி பிணியறுப்பு

- மதார் (வெயில் பறந்தது)


துக்கம் — ஒன்றினுள்

இன்னொன்று

அதனுள்

பிறிதொன்று என

எண்ணிறந்த பெட்டிகளை

உள்ளடக்கிய

ஒரு பெரிய பெட்டியைப் போன்றது.

மகிழ்ச்சி — சளைக்காமல்

அவற்றை

ஒவ்வொன்றாகத்

திறந்துகொண்டேயிருப்பது.

-வே.நி.சூர்யா (அந்தியில் திகழ்வது)

இவ்விருகவிதைகளில் ஒருவித தீர்வு தட்டுப்படுகிறதோ என்று தோன்றுகிறது. அதுவே இதை குறித்து பேச ஆர்வம். அதுவும் சிக்கல்-காரணம்-தீர்வு என்ற அறிவியல் பார்வை அல்ல. அறிவியல் பார்வை தற்காலிக அறிதி பார்வை. இதை கலைப் பார்வை என்று பிரிக்கலாமா? 

இவ்விரு கவிதைகளும் ஒரே பேசுபொருளைக் கொண்டிருந்தாலும் முற்றிலும் வேறான அனுபவத்தைத் தருகிறது. மதார் கவிதையில் வெளிப்படும் சுயம்: அனைத்தும் அதன் கையில் இருப்பதாக முன்வைக்கிறது. துக்கத்தை நயந்து அணிந்துக்கொள்ளும் வஸ்திரத்தைப் போல சுட்டுகிறது. மேலும் அந்தத் துக்கத்திற்கு ஒரு பொறுப்பை தருகிறார். பொறுப்பின் நிமித்தம் நிவாரணம் சாத்தியப்படுகிறது. "பிணியறுப்பு" அதன் வேலை என்று சொல்லும் போது, துக்கம் எடை குறைந்து குழந்தையாகவே மாறுகிறது. ஒவ்வொரு குழந்தையும் நோய் தீர்க்கும் வேலையைச் செய்கிறது. அது நம்மை மகிழ்விக்க முயற்சி செய்வதில்லை. துக்கத்தை எடுப்பார் கைப்பிள்ளையாக்கி வேடிக்கை பார்க்க செய்யும் மனநிலையே தீர்வு என்று எண்ணவைக்கிறது. 

இறுதியில் யாவுமே தருணங்கள்தானா? 

என்ற தலைப்பில் உள்ள பத்து பிரிவுகளில், ஒன்றில் உள்ளதே மேலே உள்ள வே.நி. சூர்யாவின் இக்கவிதை. 

இதில் மகிழ்ச்சியை உத்தேசிக்கிறார். அவர் எதையும் மாற்ற விழையவில்லை. மேலும் அனைத்துமே தருணமா? என்று சந்தேகிக்கிறார். துக்கம் எடுத்து கையாளக் கூடிய, ஒன்றுடன் ஒன்று பிணைந்தது. அதை எதுவாகவும் அறிதியிட  முடியாது.அது ஒரு “எண்ணிறந்த” பெட்டி. அதனாலேயே அது எடையுடன்  இருக்கிறது. ஏனெனில் அது “பெரிய”தாக உள்ளது. இதற்கு சரிக்கு சரியாக நிற்கும் வல்லமை மகிழ்ச்சிக்கு உள்ளதாக கவிஞர் முன்வைக்கிறார். ஆனால் நாம் மகிழ்ச்சியை அடைய “சளைக்காமல்” இருக்கவேண்டும். 

இருவேறு தருணத்தில் சிக்கலையும் தீர்வையும் காணவாய்ப்பதாகவும் யோசிக்கமுடியும். 

ஒரு மனம் துக்கத்தை தன்வயப்படுத்த உருமாற்றத்தை கோருகிறது. பிரிதொன்று துக்கத்தை எதிர்கொள்ள உத்தியை கற்றுத் தருகிறது.(சளைக்காமல் இருப்பது) 

பேசுபொருளில் உள்ள ஒற்றுமையால் இவ்விரண்டு கவிதைகளையும் ஏதோவொரு கணத்தில் அருகருகே வைத்துவிட முடிகிறது. துக்கம் ஒரு பொருளாக இருப்பது இந்தத் தசாப்தத்தின் கவிதையாக இக்கவிதைகளை மாற்றுகிறது. கவிதையில் நிகழ்வுகளுக்குதான் பஞ்சமிருக்காது. பொருள்கட்கள் வந்து விழுவது அபூர்வமே. கவிதையில் ஒரு பறவை வருகிறது என்றால் பறத்தல் என்ற நிகழ்வு கவிதையில் பேசபொருளாக உள்ளது என்று கொள்ளலாம்.ஆனால் பொருட்கள் நிகழ்வதில்லை. நிகழ்வு வந்தால் கூடவே காலமும் வந்துவிடும். மாறாகப் பொருட்கள் அணுகுமுறை சார்ந்து அர்த்தம் தரும் ஒரு வஷ்து மட்டுமே. மேலும் துக்கம் என்ற அகவயமான உணர்வை புறவயமான பொருளாக மாறியிருக்கிறது. ஆகவே சற்றே உறுதி கூடுகிறது. 

1992 - உலகமயமாதலுக்கு பிற்பாடு… என்ற விளக்கம் கலை, அறிவியல், பொருளாதாரம் என்று அனைத்திற்குமே பொருந்தும். அதை ஒத்திவைத்துவிட்டு அன்றாடத்தில் பார்த்தால், ஒரு மனிதன்  வாழ எவ்வளவு பொருட்கள் தேவையாக இருக்கிறது என்று ஆச்சரியமடைய வைக்கிறது. வரலாறு நெடுக முன்னெப்போதும் இல்லாத அளவு இன்றுதான் நாம் அதிக பொருட்களைப் பயன்படுத்துகிறோம் என்பது யாவரும் ஏற்றுக்கொள்ளும் விஷயமே. சிக்கல் என்னவென்றால் அந்த பொருட்கள் அனைத்துமே நமக்கு அவசியம் என்று எண்ணுகிறோம். மேலும் பொருட்கள் நமக்கு மகிழ்ச்சியை தருகிறது.மதார் அந்த மகிழ்ச்சியின் பொருட்டே அதை குழந்தையாக மாற்றுகிறார்.சூர்யா துக்கத்திற்கு எதிராக மகிழ்ச்சியை வைக்கிறார்.துக்கத்தை மாற்றுவதும், துக்கத்திற்கு எதிர் ஒன்றை முன்வைப்பதும் அவரவர் திராணிக்கு உட்பட்டதே.சட்டென்று இந்தக் கவிதை நினைவில் ஆட்படுகிறது.

இந்தச் செருப்பைப் போல்

எத்தனைப் பேர் தேய்கிறார்களோ

இந்தக் கைக்குட்டையைப் போல்

எத்தனைப் பேர்/பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ

இந்தச் சட்டையைப் போல்

எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ

அவர்கள் சார்பில்

உங்ளுக்கு நன்றி

இத்துடனாவது விட்டதற்கு

(நன்றி நவிலல்) 

- ஆத்மாநாம்

ஆத்மாநாமின் இக்கவிதையில் பொருளுக்கும் தனிமனிதனுக்கும் இருக்கும் இடைவெளி இன்மையை சுட்டுவதாக வாசிக்கமுடியும். துயர் பொருளாக பிரியாமல் இருப்பதைப் பார்க்கலாம். ஒவ்வொரு இயல்புக்கும் ஒரு பொருளைக் கண்டறிந்த காலத்தின் ஆவணமாக இந்தக் கவிதையைச் சுட்டலாம். ஆனால் மேற்கண்ட இரு கவிதைகள் இந்தத் தசாப்தத்தின் கவிதையாக மாறியிருப்பதற்கு காரணம், மனிதனின் இயல்புக்கு ஒரு பொருளை சுட்டமுடியாது என்பதும், மனிதர்கள் பொருட்களைப் போன்றவர்கள் அல்ல என்பதும், அவர்களுக்கு துக்கம் பொருட்களின் பெயரில் யாராலோ அல்லது அவனாலேயேகூட ஏற்படுத்திக் கொள்ளும் விஷயம் மட்டுமே என்ற கண்டுபிடிப்புதான். தீர்வை மேலேயே பார்த்து விட்டோம் அல்லவா? 

“துக்கத்திற்கு காரணம் ஆசை” என்ற பழைய கண்டுபிடிப்பு உயிர்ப்புடன் இருக்கக் காரணம், தீர்வு இயல்பாகவும் எளிதாகவுமில்லை என்பதோடு அது காலம்தோறும் மாறக்கூடியதாகவும் இருக்கிறது என்பதால்தான். இந்தக் காலத்திற்கான இரு தீர்வுகளால் இக்கவிதைகள் நினைவில் இருக்கிறது.

***

ஆத்மாநாம் தமிழ் விக்கி பக்கம்

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்

மதார் தமிழ் விக்கி பக்கம்

***

Share:
Powered by Blogger.

தமிழ்க் காவியம் சிலப்பதிகாரம் - க.நா.சு

தமிழ் மரபில் உருவாகிவந்த சிறப்பானதொரு காப்பியம் சிலப்பதிகாரம். இது இன்று அறியப்படுவதைக் காட்டிலும் தமிழர்கள் அல்லாதவர்களிடமும்கூட இன்னும் அத...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (8) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (16) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (251) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (28) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (8) மரபு கவிதை (8) மராட்டி (2) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (10) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (8) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (16) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (251) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (28) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (8) மரபு கவிதை (8) மராட்டி (2) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (10) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive