சற்றைக்கு முன்
சற்றைக்கு முன்
ஜன்னல் சட்டமிட்ட வானில்
பறந்துகொண்டிருந்த
பறவை
எங்கே?
அது
சற்றைக்கு முன்
பறந்து கொண்டிருக்கிறது.
*
காலம் தோற்றுவிக்கும் மாயத்தொடர்ச்சி
காலம் தன் வினோதத் தன்மையினால் கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும், நிகழ்காலத்தின் வழியாக ஒரு மாயத்தொடர்ச்சியை தோற்றுவிக்கிறது
இங்கு காலம் என்று நாம் குறுப்பிடுவது நம் மனம், அகம் சார்ந்த காலம்.
இங்கு பறத்தல் எனும் நிகழ்வு ‘ஜன்னல் சட்டமிட்ட வானம்’ எனும் வெளியில் நிகழ்கிறது.
எதிர்காலத்தில் இருந்த ஒரு பறவை, ஜன்னல் சட்டமிட்ட வானம் எனும் நிகழ்கால வெளியில் பறந்து, கடந்து, இப்போது கடந்த காலத்தில் பறந்துகொண்டிருக்கிறது-
அங்கு சற்றைக்கு முன் பறந்து கொண்டிருப்பது பறவையா? காலமா?
இங்கு 'ஜன்னல் சட்டமிட்ட வானில் ' எனும் சொற்களை நாம் கவனிக்க வேண்டும். காண்பவரின் இருப்பு சார்ந்த வரையறுக்கப்பட்ட, எல்லைக்குட்பட்ட ஜன்னல் சட்டமிட்ட வானில், பறத்தல் எனும் நிகழ்வு நிகழ்கிறது. அது காண்பவரின் மனம், அகம், சார்ந்த காலவெளியில் நிகழ்கிறது. அவருடைய அகம் 'சட்டமிட்ட வானிற்கு' வெளியே கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நாம் முன்னர் குறிப்பிட்ட காலத்தின் வினோத தன்மையினால் ஒரு மாயத்தொடர்ச்சியை உருவாக்கிக் கொள்கிறது.
அகத்தின் கடந்த காலத் தொடர்ச்சியின் ஊற்றுக்கண் அதன் அறிவே. அறிவு, அதன் நினைவுகளின் மலர்கள் கொண்டு காலம் தொடுத்த நீள்ச்சரம். கடந்த கால அனுபவங்களே வஞ்சம், துயரம், களிப்பு,என பல வாசமும் வண்ணமும் கொண்ட அந்த மலர்கள்.
அகம் என்பது நம் அனுபவங்களின் நீள்ச்சரம். முடிவிலி இழையில் காலம் தொடுத்த நீள்ச்சரம்.
காலம் எனும் வினோதம்
//ஆமைகள் பலகாலமும்
சிறுமீன்கள் சில காலமும்
ஒரே ஆயுளோடு இருக்கின்றன என்னுள்//
//உனக்கும் எனக்கும் இடையில்
கணக்கில் தான் வேறுபாடு
உன் பல நூறு வருடங்கள்
என் சிறுபொழுதில் விரைந்தோடும்
என் வானில் ஒரு பறவையின்
ஒரு சிறகடிப்பில்
உனக்கு முதுமை வந்து சேரும்//
இங்கு காலம் என நாம் குறிப்பிடுவது அகவயமான காலம். அனைவருக்கும் பொதுவான புறவயமான காலம் அல்ல.
எனவே ஒவ்வோர் அகத்திற்கும், ஒவ்வோர் அகத்தின் வெவ்வேறு அடுக்கிற்கும் காலம் என்பது தனித்தன்மையான பொருள்படுவது. என் சிறுபொழுதில் விரைந்தோடும் உன் பல நூறு வருடங்கள்.
காலத்தால், காலத்தில் நிலை கொள்ளும் துயரம்
//காலம் சேர்த்துவைத்த கனவுகள்
துயரமாய் தேங்க
மறுபுறச் சாளரத்தைத்
திறந்து வைத்தேன்
காற்றில் கரைந்தது காலம்//
//இருள் வெளியில்
மனப் பொய்யுலகம்
தன்னை மாற்றி மாற்றி காட்டிற்று .
சில பல உலகங்கள்
தோன்றி
இருந்து
கதைகளாய் மறைந்தன.
கதைகளின் அனுபவம் துயரமாயிற்று.
துயரம் காலமாயிற்று//
ஆனந்த் 'வானம் கீழிறங்கும்போது' நூலின் முன்னுரையில் இந்த மனம் வனையும் மாய உலகம் பற்றியும், காலத்தால் நிலை கொள்ளும் அனுபவங்களின் துயர் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
//என்னைப் பற்றி என் மனதில் நான் கட்டமைத்து வைத்திருந்த சுயபிம்பங்களின் அஸ்திவாரம் இல்லாமல் போனதால் இடிந்து விழுகின்றன. அகவெளி எங்கும் என் சுயத்தின் சில்லுகள் சின்னாபின்னமாக இறைந்து கிடக்கின்றன. சீரான சிந்தனை முற்றிலும் சாத்தியமில்லாமல் போகிறது. ஆழ்மன சக்திகளின் ஆவேச கூத்து உள்ளே புயலாய் வீசுகிறது. தாங்க முடியாத வேதனையும் அச்சமும் எந்நேரமும் மனத்தை தாக்குகின்றன.//
//சுழன்று தெறிக்கும் இந்த பெருவீச்சில் 'நான்' என்று தன்னை மைய்யமாக வைத்திருந்து சுற்றிலும் பார்த்து கொண்டிருந்த புள்ளி அச்சு சுழன்று காணாமல் போகிறது. பெரும்புயலில் நங்கூரமிழந்த கப்பல்போல் மனம் பேரலைகளில் அங்குமிங்கும் அலைக்கழித்து தவிக்கிறது. ஆழ்மன பிம்பங்கள் பெரும் வேகத்துடன் வெளிப்பட்டுக் கட்டுபாடற்று அகவெளியெங்கும் வீசித் தெறிக்கின்றன. ஆழ்தளங்களிலிருந்து வெளிப்பட்ட சக்தியின் வீச்சை தாங்கமுடியாமல் மனம் அல்லலுறுகிறது. அடங்காத துன்பத்தில் துடிக்கிறது. பேதலித்து போகிறது. பைத்தியம் பிடித்துவிட்டதென்ற பயம் மனதை உலுக்குகிறது. பைத்தியம் பிடித்துவிட்டதென்றே ஒரு கட்டத்தில் மனம் முடிவு செய்து விடுகிறது. தொடர்ந்து கட்டுப்பாடற்று மேலெழும் ஆழ்மன பிம்பங்களின் ஆட்டத்தை நிறுத்துவதென்பது என் கையில் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை//
கிளர்தெழுந்தாடும் மனம் வனையும் விசித்திர பாவைகளின் பாவனைகள் அகத்தின் அறிவுக்கு ஒரு ஒத்திசைவான பொருள் தருவதாய் இல்லை. அது அகத்தின் அறிவுக்கு அப்பாற்பட்ட வெளியில் நிகழ்கிறது. எனவே நிலை கொள்ளாமல் கிளைமேல் ஒரு பறவை என சிறகடிக்கிறது அகம். திரியில் காற்றில் என துடிதுடிக்கிறது அது.
மேலும் அவர், //சமூக- கலாச்சார சக்திகள், நனவு மனத்தையும் நனவிலி தளத்தையும்(Unconscious) பிரித்துவைப்பதற்காக உருவாக்கி வைத்திருக்கும் எல்லைக் கோடு கரைந்து இல்லாமல் போகிறது// என்கிறார்.
அக்கணம் நிகழ்கிறது அப்பிரளயம். அறிவு, அறியாததை தொடும் கணம் நிகழும் பிரளயம்.
அக்கணம், காலமும் வெளியும் தத்தம் வினோத தன்மையை வெளிக்காட்டுகின்றன.
விரிந்து சுருங்குகிறது வெளி.
நீண்டு குறுகுகிறது நேரம்.
நேற்றே முகர்ந்த
நாளைய மலர்கள்
இன்றே மலர்கின்றன
//எல்லாம் மாறிப் போகும்
கணத்திற்கு முன்னால்
கைகூப்ப மறுத்ததில்
ஒழுங்கு கலங்கியது//
//பித்தனும் சித்தனும்
குதிகாலைப் பிடித்திழுக்கும் வேளையில்
அடையாளம் காண முடியாமல்
அமைதி குலைந்தது.
விரிந்தன இதழ்கள்
வீட்டுக்கு வெளியில் ஒரு காலும்
உள்ளே ஒரு காலும் வைத்து
மனம் திரிந்து போனது.
மண்ணும் நீரும் சேர்ந்து
சேறாகக் கலந்து
நத்தைகள் புதிய பயணத்தைத்
தொடங்கின//
//மின்னும் நத்தைகள் சிறகு முளைத்து
முன்னும் பின்னும் பறந்து போகின்றன//
//பறவை சிறகு விரிந்து
மனவிளிம்பு
தாண்டிப் பறக்கையில்
நேற்று வருவான்
நாளை வந்தான்
என்ற மழலைமொழிகள்
பொருள் கொள்ளத்
தொடங்குகின்றன.//
கவிதையெனும் பேரருள்
பிரளயத்தின் கண் தப்பி கரை சேர்வது எளிதல்ல.
புயல் கண் தப்பிய புள்ளினம் ஒன்று திசையறியா வெளியில் பறந்து மீண்டும் சிறுகிளையில் தான் பின்னிய சிறு கூடு சென்று சேர வேண்டும்.
அதற்கு தெய்வம் காத்தருள வேண்டும்!
கை விடாதிருக்க வேண்டும்!
மீண்டும் கூடையும் அந்த பறவை அதே பறவை அல்ல,
கூடும் அதே கூடு அல்ல.
இந்த மீட்சியை, ஆனந்த் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
//எனக்குள் நிகழத் தொடங்கிய இந்த முறைப்பாடு (Process) மிகவும் அடிப்படையான முக்கியத்துவம் கொண்டதாக எனக்குப் பட்டது. ஆழ்மனத்தில் எனக்கு உள்ளூரப் புரிந்திருந்த விஷயங்கள் மேல்மனத்துக்கு தெளிவாக புரிவதற்கு இந்த முறைப்பாடு பெரிதும் உதவியாக இருந்தது. இது மேல்மன அமைப்பை மாற்றி மறுஉருவாக்கம் (Transformation) செய்யும் விதமாக அமைந்தது. வாழ்வனுபவத்தில் என்னை பற்றியும் வாழ்க்கை குறித்தும் புதிய வெளிச்சங்கள் தன்னியல்பாக வெளிப்பட்டன. மனத்தின் காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிப்போய் ஆழமான ஆறுதல் நெஞ்சில் நிறையத் தொடங்கியது//
//அந்த நேரத்தில் நான் கவிதையின் முறைபாட்டுக்கு என்னை முழுமையாக ஒப்புக்கொடுத்திராவிட்டால் என்னுள்ளே ஏற்பட்டிருந்த அகப்பிரளயத்தின் பெருவீச்சில் நான் சிக்குண்டு காணாமல் போயிருப்பேன் என்பதில் எள்ளளவும் எனக்கு சந்தேகமில்லை. இப்போது பின்னோக்கிப் பார்க்கும்போது கவிதை என்னைக் காப்பாற்ற வந்த பேரருளாகவே தோன்றுகிறது.//
காரணம்-விளைவு -காலம்
//அகவளர்ச்சியின் முறைப்பாடு நனவு மனதுக்கும் நனவிலிக்கும் இடையில் இப்போது மூடிவைக்கப்பட்டிருக்கும் கதவு திறப்பதிலிருந்து தொடங்குகிறது. இது எல்லோருக்கும் நடப்பதில்லை. யாருக்கு எப்போது இது நடக்கும் என்னும் இலக்கணத்தை முன்கூட்டி யாராலும் அறிய முடிவதில்லை. ஆனால் ஒருமுறை அந்த கதவு திறந்துவிட்டால் அதை மூடுவது சாத்தியமில்லை//
இங்கு ஆனந்த் குறிப்பிடும் 'கதவு திறந்து கொள்ளுதலின்' காரணத்தை அறுதியிட்டு கூறமுடியாது என்று குறிப்பிடுகிறார். அதன் விளைவுகளும் அவ்வாறே அறுதியிட்டு கூறமுடியாதவை.
அது விழைவால் நிகழ்வதா? காலத்தால் நிகழ்வதா?
//வனங்கள் எங்கும் திரிந்தாயிற்று
இந்த வரைபடம் உபயோகமில்லை
எந்த இடத்தில்
எந்த மரத்தில்
அந்த மலர் மலருமென்று
எந்த விதத்திலும் தெரியவில்லை//
//சொட்டு சொட்டென்று
சொட்டி
என் குடம் எப்போது நிறைவது?
மண்ணில் விதைகள்
மழை பார்த்து நிற்கின்றன.
தாகத்தில் உடல்
தன் உதிரத்தையே குடிக்கிறது.
தோல் வெடித்த பூமியின்
ஒரு வெடிப்பினினுள்ளிருந்து
அந்த மலர் மலரும் போது
காலையாகி இருக்கும்.//
//மேகம் கறுத்தபின்தான் வருவேன்
என்று சொல்கிறாய்.
இது வேனிற்காலம்.
நிலாக்கள் பல தேய்ந்து
வளரவேண்டும்.
வீதிகள் சுற்றி
தேர் நிலைக்கு வரவேண்டும்.
குளிர்காற்று வீசவேண்டும்
பனிமூட்டம் பரவவேண்டும்.
பறவை குடித்து
நீர் வற்றவேண்டும்.
நீ சொல்லும்
அந்தக் காலம் வருவதற்கு.//
கதவு திறந்துகொள்ளும் கணத்தில், காலமும், அதன் விளைவான நினைவுகளின் நீள்சரமான அறிவும் அற்றுப்போகிறது. காரணமும் விளைவும் ஒருங்கே நிகழும் அறிவிலுமேறிய கணம் அது.
முடிவிலி இழையில் ஆடிக்கொண்டிருக்கிறது நனவிலி.
அறுபடும் இழையில் உதிர்கின்றன ஆழ்கடல் முத்துக்கள்.
அகம் தன்மயத்தை இழக்கும் போது காலத்தின் விளைவான நினைவின் நீள்சரம் அறுபடுகிறது. அதன் நினைவுச்சுமை உதிர்ந்து நிகழ்கணத்தில் நிலைக்கிறது.
//ஆடுகள் மேய்ந்து
ஓய்ந்த வெளிகளில்
சிறிய வெள்ளைப்பூக்கள்
மெல்ல
மலரத் தொடங்குகின்றன.//
அக்கணத்தின் புத்தொளியில் பிரகாசிக்கிறது எல்லையற்ற வெளி.
காண்பவர், காணுதல், காட்சி என்றில்லாமல் காலமற்று, காண்பவரே காட்சி என்று ஆகிறது.
//அலைகளின்றிக்
கனத்துப் பெரிதாய்
தேங்கி நிற்கிறது கடல்.
சோர்வுடன் மெதுவே நகர்ந்த
பேராறுகள் கடைசியாய்
பெருமூச்சுடன் அதில்
கலந்து விட்டன.//
//இரைதேடிச்சென்ற பறவைகள் எல்லாம்
கூட்டில் வந்து அடைந்தன
கடைசியாய் வந்த சிறுகுருவியும்
கிளையில் அமர்ந்தது.
நினைவுகள் அற்றுப்போக
தரையில் இறங்கியது வானம்.//
//காண்பதுதான் காட்சி என்று காத்திருந்தபோது
காண்பவன்தான் காட்சி என்று தெரிந்தது இப்போது//
பாதைகளற்ற அடற்கானகத்தில் ஒலிக்கிறது
யாரும் இன்னும் கேட்டிராத பாடல்
//இலக்கு ஏதும் இல்லாததால்
பாதைகளும் இல்லை//
//போதுமிந்தப் போய்வரவு
ஆய்ந்து நீ கற்ற
அரும்பெரும் அறிவையெல்லாம்
அறவே விடுத்து
அன்பென்னும் அகல்விளக்கில்
அலை ஓய்ந்து உறங்கிடுவாய்//
//அறிவு கடந்து ஏகும்
அன்பு வெளியதனில்
அளவு இலா ஆழம்//
//எப்போதும்
துவங்கிக்கொண்டே இருக்கிறது
அவனுடைய கணம் //
// சொல்லப்போனால் இப்போது
அந்த ஒரு கணத்தில்தான்
பிரபஞ்சம் முழுவதும்
அடங்கி இருக்கிறது.//
//சொற்கள் குதித்தோடும் நதியின் மறுகரையில் தொடங்கும் பாதைகள் இல்லாத அடர்வனம்//
//கடந்துபோகும் பழையதும்
வந்துசேரும் புதியதும்
சந்திக்கும் விளிம்பில்
ஒயிலாக நிற்கும் அந்தப் பெண்
யாரும் இன்னும் கேட்டிராத
புதிய பாடல் ஒன்றை
மெல்லிய குரலில்
பாடிக்கொண்டிருக்கிறாள்//
//காலமும் பார்வையும்
காற்றில் கலந்தன
காலையில் கிழக்கில்
முளைத்த வெள்ளியைப்
பார்த்துச் சிரித்தது
அப்போதே மலர்ந்த
ஒரு சிறிய
வெள்ளைப் பூ//
அறிவு கடந்த வெளியில்
நினைவின் தடங்கள் இல்லை.
தன்மையம் அற்றுப்போனதால்,
தன்மையம் சார்ந்து கட்டுண்ட காலவெளியும் இல்லை.
அங்கு காலமே இல்லை.
அங்கு ஒலிக்கிறது யாரும் இன்னும் கேட்டிராத புதிய பாடல்.
அங்கு சிரிக்கிறது அப்போதே மலர்ந்த ஒரு சிறிய வெள்ளைப் பூ.
***
(நன்றி: ஜெ. கிருஷ்ணமூர்த்தி, நாராயண குரு)
ஆனந்த்குமார்







0 comments:
Post a Comment