1
சமாதானமாகிக்
கொண்டே வந்தன
ஒவ்வொரு திருப்பமும்
திருப்தியுற முடியாத
எதுவொன்றினாலோ
ஆனதோ
நேரான பாதை
ஒவ்வொரு திசையாய்
தொலையத் தொலைய
ஒரு திசை தொலையாது
நிரந்தரமாக இருக்கிறது
***
2
வேர்கள் தெரியும் நீரில்
ஒளிந்து கொள்ள இயலாது
வேறு வழியொன்றை
கரம் குவித்து வைத்திருந்தேன்
உருண்டு விழுந்தது உறக்கம்
என் கனவின் மீது
மிகச் சரியாக பொழிகிறது
மழை
இப்படித்தான்
முழுமையாக மூழ்குகையில்
குமிழிகளடங்கியதும்
நானேவொரு
குமிழியாக வந்ததாகச் சொன்னார்கள்
***
3
கதை
இந்தக் கதையை
முடிக்குமுன்னரே
அது முடிந்து விட்டது
காய்ந்து கிடந்த நதியில்
நடந்து போனபோது
விழுந்த ஒரு துளியால்தான்
அக்கதை
தொடங்கியிருந்தது
தன் போக்கில் போகும்
அனுமதியை
பார்த்த பிற்பாடுதான்
தோன்றியது
இந்நதியில் நீராடிய
யாரேனும் ஒருவரால்தான்
அக்கதையின் இறுதி
அத்தியாயம்
எழுதப்பட்டிருக்கக்கூடும்
என்று.
***
4
உரியவர் வரும் வரை
அது கீழே கிடந்த
பொருளாகவே இல்லை
உருவமிலாத உண்மைக்கு
உரிமையாளரும்
இல்லைதானே!
***







0 comments:
Post a Comment