இறந்தவனின் ஆடைகள்
இறந்தவனின் ஆடைகளைஎப்படிப் பராமரிப்பதென்றே
தெரியவில்லை
இறந்தவனின் ஆடைகளை
அத்தனை சுலபமாய்
அணிந்துகொண்டுவிட முடியாது
அதற்காகவே
காத்திருந்தது போலாகி விடும்
அவை
இறந்தவனின் இடத்தில்
இருந்துவிட்டுப் போகட்டும்
என்றிருக்க இயலாது
இறந்தவர்களோடு
அவ்வளவு இயல்பாய்
உறவுகள் சாத்தியமல்ல
தானமெனக் கொடுக்கலாமெனில்
இறந்தவனின் சாயல்கள்
எதிர்பாரா இடங்களில்
எதிர்பாரா உடல்களிலிருந்து
நம்மை நோக்கி வரும்
இறந்தவனின் ஆடைகளை
அழித்து விடலாம்தான்
இறந்தவனைத் திரும்பத் திரும்ப அழிக்க
கைகள் நடுங்குகின்றன
இறந்தவனின் ஆடைகள்
ஆடைகள் போலில்லை
இறந்தவனின் தோலாக இருக்கிறது
- மனுஷ்யபுத்திரன்
– அபு என்கிற பக்கீர் முஹம்மதிற்கு –
('இடமும் இருப்பும்' தொகுப்பு, பக்கம்: 65)
கடந்த ஆண்டு (2005); ஆடி இருபத் தெட்டாம் நாள்; திருவரங்கத்தில், நண்பரும் 'பிரும்மராக்ஷஸ்' சிற்றிதழ் ஆசிரியருமான டி. கண்ணன் அவர்கள் வீட்டில் விருந்தாளியாக இருந்தேன். முதல் நாள் இரவே சென்றிருந்தேன். கண்ணன், முன்பெல்லாம் கொள்ளிடத்திற்குக் குளிக்கக் கூட்டிக்கொண்டு போவார், வழக்கமாக. வீட்டு மாடியிலேயே குளியலறை கட்டிவிட்டதால், இப்பொழுது, அந்தப் பழக்கம் விட் டுப் போயிற்று.
காவிரியில் தண்ணீர் திறந்து விட்டிருந்தார்கள். முதல் நாள் இரவே சொல்லியிருந்தேன், மறுநாள், காலையில், காவிரியில் குளிக்க வேண்டுமென்று. அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை என்று ஞாபகம் அல்லது ஏதோ ஒரு விடுமுறை நாள். வெளியில் கிளம்பி வந்தோம், டி.வி.எஸ். மொபட்டில்; ஊரைத் தாண்டி, பிரதான சாலையையொட்டி இருக்கும் ‘டாஸ்மாக்'கில் வந்து நின்றது வண்டி.
ஒரு மாறுதலுக்காகவே, விடுமுறை நாள்களில், காலையில் அளவாகக் குடிப்பது கண்ணனுக்குப் பிடிக்கும். எனக்கு இந்த விஷயத்தில் நேரம், காலமே கிடையாது என்பது தமிழ்கூறு நல்லுலகுக்கே தெரியும். சாவகாசமாகக் குடித்துவிட்டு, கூட வந்திருந்த குடிக்காத நண்பர்களுடன், அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்து சேர்ந்தோம்.
ஆடி பதினெட்டைப் போலவே, இருபத்தெட்டையும் விசேஷமாகக் கொண்டாடுவார்கள் அந்தப் பக்கத்தில் என்பது எனக்குப் புதிய விஷயமாக இருந்தது. காவிரிக்கரையிலும் சரி, படகுத்துறையி லும் சரி, நல்ல கூட்டம். ஆறு பெருகி வருகையில் கூட்டம் ஒரு பொருட்டில்லை.
காவிரி பெருக்கெடுக்கையில், அது ஒரு தனி அழகு. அந்த வேகம், அந்த இழுப்பு, அந்த ஓட்டம், அந்தச் சுழல், தமிழகத்தில் வேரொரு. நதிக்கும் கிடையாது. அது தான் காவிரி.
சந்தோஷமாகக் குளித்து முடித்துக் கரையேற வந்து கொண்டிருக்கிறோம். ஆற்றின் மின்னடித் தூரத்தில், இளம்பெண் ஒருத்தி, கலங்கிய கண்களுடனே, கண்களில் நீர் கசிய, கையிலிருந்த துணிப்பையிலிருந்து ஒவ்வொரு புடைவையாக எடுத்து ஆற்றில் விட்டுக் கொண்டிருக்கிறாள். இன்னும் சில துணிகளும்கூட இருந்தன. போதை மிச்சத்தில் ஏதோ ஒன்று பொறிதட்டியது.
பக்கத்தில் வந்ததும் கேட்டேன்;
"யாரு"
“அம்மா” என்றாள்.
"எந்த ஊர்”
“லால்குடி”
"சரி, என்ன செய்ய, மனசைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்”.
சங்கடமாக இருந்தது சிறிது நேரத்துக்கு.
இறந்தவளின் ஆடைகள் அவை.
அந்த நேரத்தில் நினைவில் ஊடாடியது,
இறந்தவனின் ஆடைகள் கவிதை.
கண்ணனிடம் கேட்டேன், “இப்படி வழக் கம் இந்தப் பக்கம் உண்டா?”
இந்தக் கட்டுரையில், இந்தப் பகுதியை எழுதிக் கொண்டிருக்கும்போது எங்கள் அம்மாவிடம் கேட்டேன், "நம் ஊர்ப் பக் கம் இதுபோலச் செய்வார்களா?"
இந்தக் கவிதை, எட்டாண்டுகளுக்கு முன்பு, 'தினமணி கதிர்' இல் வந்தபோதே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இச்க்ஷணம் வரையிலும் அவை நீடிக்கத் தான் செய்கின்றன.
மனிதனின் வாழ்வு ஒரு கட்டத்தில் முடிந்து போய்விடுகிறது. ஆனால், அதே சமயத்தில் அவன் விட்டுச்சென்ற எத்தனையோ பொருள்கள் இருந்து கொண்டிருக்கின்றன. அவற்றை என்ன செய்ய. குறிப்பாக, ஆடைகளை. ஆடைகள் தாம் அவன் உடலோடு ஒட்டியிருந்தவை. அவனை அதிகமும் நினைவு படுத்துபவை. அவனுடைய முக்கியமான அம்சமாக இருந்தவை.
காவிரிக்கரையில் கண்ட பெண், நதியில் விட்டுச்செல்கிறாள். அது குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் வழக்கமாக இருக்கலாம். மற்றவர்கள் என்ன செய்வார்களோ.
ஒரு ஜீவனின் மரணத்துக்குப் பிறகு, அந்த மனுஷன்/ மனுஷியின் உடைகளை என்ன செய்வது. இக்கட்டான நிலைமைதான். ஒன்றும் செய்ய முடியாது என்றாலும் ஏதோ செய்கிறோம் என்பதே எதார்த்தம்.
'இறந்தவனின் ஆடைகள்', எப்படிக் கவிஞனைத் தொந்தரவுபடுத்தினவோ அதற்கு இம்மியும் குறையாமல் இந்தக் கவிதை என்னையும் தொந்தரவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.
இறப்புக்குப் பின்னர், இறந்தவன் விட்டுச்சென்ற பொருள்கள் குறித்த சிந்தை கொண்டிருக்கும் இக்கவிதையை என்னவென்று சொல்வது. வாழ்வியல் கவிதை என்றால், அது வேடிக்கையாகப் போய்விடும். மற்ற கவிதைகளைச் சிலாகித்துச் சொல்வதுபோல, வழமையான முத்திரையிட்டு, நல்ல கவிதை, சிறந்த கவிதை, சீரிய கவிதை என்று சொன்னால், அதுவும் அபத்தமாக முடியும்.
இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ்க் கவிதையிலேயே யாரும் எழுதியிராத ஒரு பொருள், உண்மையாகவும் உள்ளத்தை உலுக்குமாறும் எடுத்துரைக்கப்படுகிறது. இதைக் காலமும் கண்டு கொள்ளும்; கவிதைமீது கரிசனம் கொண்டவர்களும் உணர்ந்து கொள்வார்கள்.
முதல் பத்தியில், இறந்தவனின் ஆடைகளை எப்படிப் பராமரிப்பது என்று தெரியவில்லை என்ற இயலாமை, கவலை தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாவது பத்தியில், அவற்றை அணிந்துகொள்ள முடியாது என்பதும், ஏன் அப்படி என்றும் கூறப்படுகிறது.
மூன்றாவது பத்தியில், அந்த ஆடைகள், அவைபாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டும் என்று இருக்கமுடியாத நிலைமையும் அது எதனால் என்பதும் சொல்லப்படுகிறது.
நான்காவது பத்தி, தானமாகக் கொடுக்க முடியாத சங்கடம்; அந்தமாதிரி கொடுத்தால் நேரும் அவஸ்தைகளை விவரிக்கிறது.
ஐந்தாவது பத்தி, அந்த ஆடைகளை அழித்துவிட முடியாத இக்கட்டையும், அப்படிச் செய்யமுடியாதது ஏன் என்பதையும் பேசுகிறது.
ஆறாவது பத்தி, அந்த ஆடைகள் இறந்தவனின் தோலாக இருக்கிறது என்று முடிகிறது.
வாழ்வின் அடிப்படைக் அடிப்படைக் கூறுகளைக் கண்டு சொல்லும் எந்த ஒரு கவிதையும் என்றென்றும் நின்று நிலைத்துக் கொண்டிருக்கவே செய்யும். 'இறந்தவனின் ஆடைகள்' அப்படியான ஒரு கவிதை. இறந்தவனின் ஆடைகள் குறித்துப் பேசும் ஒரு கவிதை என்றைக்கும் இருந்து கொண்டிருக்கும் என்பது கூட ஒரு வினோத முரண்தான் (irony).
நுட்பமான கவிஞன் ஒருவன், இதுபோலச் சன்னமான விஷயங்களை நுணுக்கமாய்க் கண்டுணர்ந்து, அவற்றை ஜன சமூகத்துக்குச் சொல்வதும் அப்படிச் சொல்லப்பட்டவை சாஸ்வதம் பெறுவதும் கவி வரலாற்றில் நிகழக்கூடியவை தாம்.
மாயம் செய்யும் கவிதை கட்டுரைத் தொகுப்பிலிருந்து
***
மனுஷ்யபுத்திரன் தமிழ் விக்கி பக்கம்
விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்
***







0 comments:
Post a Comment