அருணாசலக் கவிராயர் - க.நா.சு

தாயுமானவர் வேதாந்தக் கவி. அருணாசலக் கவிராயர் நாடகக் கவி; இசைக்கவி. எப்படிச் சொன்னாலும் சரிதான். புதுத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையான ஒரு கொள்கையை வளராமலேயே ஏற்றுக்கொண்டு கவிதை செய்தவர் அருணாசலக் கவிராயர். சிறப்பாகப் பாரதியாரில் வந்து முடிந்த கவிதை மரபுக்கு வழிகாட்டித் தந்தவர் என்று அருணாசலக் கவிராயரை நாம் பாராட்ட வேண்டும். கவிதையை அரும்பத அகராதிகள், வியவக்தியான கர்த்தாக்கள், அறிவுப்புலிகள் இவர்களிடமிருந்தெல்லாம் நமக்கு மீட்டுத் தரப் பாடுபட்டவர்களில் அருணாசலக் கவிராயரைக் காலத்தால் முதல்வராகச் சொல்லலாம்.

1712ல் பிறந்த அருணாசலக் கவிராயர் தனது அறுபதாவது வயதில் ராமநாடகக் கீர்த்தனைகளைப் பாடினார். அதற்குப் பிறகு அறுபத்தேழாவது வயது வரையில் இருந்துவிட்டு 1779ல் இறந்தவர். மாயூரத்துக்கருகிலுள்ள தில்லையாடி என்னும் கிராமத்தில் பிறந்த அருணாசலக் கவிராயர் சீர்காழி அருணாசலக் கவிராயர் ஆனதற்கு அவருடைய மதியையும் கவித்துவத்தையும் உணர்ந்த ஒரு சீர்காழி நண்பரான போஷகரின் செயல்தான் காரணம் என்று கதை சொல்வார்கள். காசுக்கடை வைத்துப் பொருளீட்ட முயன்றவர் அருணாசலக் கவிராயர். கவிராயருக்குக் காசுக்கடைக் கணக்குச் சரியாக வந்திராது என்றே நாம் ஊகித்துக்கொள்ளலாம். காசுக் கடையுடன் ராமாயணப் பிரசங்கமும் பிழைப்புக்காகச் செய்துவந்தவருக்குக் கம்ப ராமாயணத்தில் நல்ல பரிச்சயமிருந்ததில் ஆச்சரியமில்லை. பிரசங்கி என்று ஒருவன் எடுத்துச் சொன்னாலொழிய, கம்ப ராமாயணத்தில் பல பகுதிகள் சாதாரண மக்களுக்குப் புரிவதில்லை. அதற்குக் காலம் மட்டும் காரணமல்ல. இலக்கியமென்பது பேச்சு பாஷையை விட்டு விலகி நின்றதுதான் காரணமென்று புரிந்துகொள்ள அவருக்குப் பொதுவான சந்தர்ப்பங்கள் இருந்திருக்கத்தான் வேண்டும்.

ராமநாடகக் கீர்த்தனங்களைத் தவிர, அவர் சீர்காழிப் புராணம், சீர்காழிக் கோவை, அநுமார் பிள்ளைத் தமிழ், அசோமுகி நாடகம் முதலியனவும் பாடினார். ஆனால் அவருடைய ராமநாடகம்தான் முக்கியமாக மக்களின் மனத்தைக் கவர்ந்தது. ஸ்ரீரங்கத்தில் ராமநாடகக் கீர்த்தனங்களை அரங்கேற்றிவிட்டு அடுத்தபடியாக, தஞ்சை மராட்டிய அரசனாகிய துளஜராஜரிடம் அதை அரங்கேற்ற விரும்பினாரென்றும், அது அப்போது சரிப்படாது போகவே துளஜராஜருக்கு நெருங்கிய நண்பரான புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை முன் அரங்கேற்ற விரும்பினாரென்றும், துளஜராஜா கேட்காதபோது நான் கேட்பது சரியல்ல என்று ஆனந்தரங்கம் பிள்ளை அவரைத் தமது நண்பர் சென்னை முத்துக்கிருஷ்ண முதலியாரிடம் அனுப்பினார் என்றும் ஒரு கதையுண்டு. அந்த நாட்களில் கவியென்றால் உலகம் அறிந்திருக்கவும் வேண்டும், உலகில் அங்குமிங்கும் ஓடியாடி உலகை ஒத்துப் பாடியாடித் திருப்தி செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பத்திரிகை யுகமாகிய இந்தக் காலத்துக்கும் அந்தக் காலத்துக்கும் அப்படி வித்தியாசம் ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

புராணம், கோவை முதலிய நூல்களால் கவியாக யாருடைய பெயரும் இனிப் பரவவில்லை என்பது பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியிலேயே தெளிவாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தும் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாகவே இந்தத் துறைகளில் உழைப்பவர்களுக்குப் பஞ்சம் ஏற்படவில்லை. பத்தொன்பதாம் நூற்றண்டின் முடிவு வரையில் எழுதிக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அருணாசலக் கவிராயரும் தம் நூலைப் போஷகர் முன் அரங்கேற்ற முற்பட்டாலும்கூட, ஒரு பொதுஜன யுகம் வர இருப்பதை உணர்ந்துதான் இந்தக் கீர்த்தனங்களை இயற்றினார் என்று சொல்வது மிகையாகாது. ஆனால் பொதுஜன யுகம் வந்துவிடவில்லை அப்போது. பெஷி வசனத்தில் கடத்திய காரியத்தை, ஆனந்தரங்கம் பிள்ளை தமது தினசரிக் குறிப்புகளைத் தமக்காக எழுதிக்கொண்ட காரியத்தை, அருணாசலக் கவிராயர் ஒருவிதத்தில் சாதித்தார். இசையும் நாடகமும் தமிழும் கலந்து செய்தார். அறுபது வருஷங்கள் அப்பெயர் தமிழ்நாட்டில் அப்படியொன்றும் அதிகமாகப் பரவிவிடவில்லை. தில்லையாடியிலிருந்து சீர்காழி வரையில்தான் பரவியிருந்தது. ராமநாடகக் கீர்த்தனைகளுக்குப் பிறகு அவர் புகழ் தமிழ்நாடெங்கும் பரவிவிட்டது. அறுபத்தியேழாவது வயதில் அவர் இறக்கும்போது அவர் கீர்த்தனங்கள் எங்கும் பிரசித்தமாக இருந்தன. அவரே பல இடங்களிலும் பாடி அவற்றைப் பிரசங்கித்தார். அவர் சிஷ்யர்கள் பலரும் வெற்றிகரமாகச் செய்தார்கள். ஒரு நூற்றைம்பது வருஷங்களாகத் தமிழ்நாட்டிலே ராமநாடகக் கீர்த்தனைகள் பிரபலமாகவே இருந்திருக்கின்றன என்று சொல்வது பிசகாகாது.

கம்பராமாயணப் பிரசங்கத்தையும் தன் தொழிலாகக் கொண்ட அருணாசலக் கவிராயருக்கு ராமகதையை இசையாகத் தொகுக்க வேண்டுமென்று தோன்றியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அவரிடம் தமிழ் கற்றுக்கொண்ட மாணவர்கள் இருவர் இசை வல்லவர்களாகவும் இருந்ததனால் இது சுலபமாகவே சாத்தியமாயிற்று. எளிய சந்தம், எளிய பதங்கள், எளிய கதை என்று பாரதியார் பிறகு - ஒரு நூற்றைம்பது வருஷங்களுக்குப் பிறகு, சொன்னாரே - அத்துடன் இசையையும் சேர்த்துச் செய்துவிட்டார் அருணாசலக் கவிராயர். அதை நாடகமாகச் செய்யலாம் என்று செய்ததை ஒரு தனிப்பெருமையாகச் சொல்லலாம்; ராமகீர்த்தனைகளாக மட்டுமில்லாமல் இவை ராமநாடகக் கீர்த்தனைகளாகவும் அமைந்ததுதான் விசேஷம் என்று சொல்ல வேண்டும்.

இன்று நாம் சொல்லிக்கொள்வது போலவே, அன்றும் முத்தமிழ் என்றும், இயல், இசை, நாடகம் என்றும் முழங்கிக்கொண்டுதான் இருந்திருப்பார்கள். கோயில்களில் நாட்டிய நாடகங்கள் இருந்தன என்பது நமக்குப் பலதரப்பட்ட கல்வெட்டுக்களால் தெரியவருகிறது. அருணாசலக் கவிராயர் காலத்திலே நாடகம் அப்படியொன்றும் பிரமாதமான வளர்ச்சி பெற்றிருக்கவில்லை என்பதும் உண்மைதான். வடமொழிக் கதையான ராமாயணத்தைக் கம்பன் அற்புதமான காவியமாகச் செய்துவிட்டான். சிலப்பதிகாரத்தைப் போலவே அந்தக் காவியத்திலும் நாடகப் பண்பு நிறைந்திருக்கிறது என்பது உண்மைதான். கம்பராமாயணப் பிரசங்கியாகிய அருணாசலக் கவிராயருக்கு, இன்றைய கம்பராமாயணப் பிரசங்கிகளைப் போலவே கம்பராமாயணத்தின் நாடகப் பாங்கு முழுதும் நன்கு தெரிந்துதானே இருக்க வேண்டும்? இந்நாடப் பாங்கை அழுத்தமாக வெளிக்கொணர ஒருவர் முயன்றால் தவறு ஒன்றுமில்லை. கம்பராமாயணத்தை யொட்டியேதான் அருணாசலக் கவிராயர் தமது ராமநாடகக் கீர்த்தனைகளைச் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். தெளிவான தமிழில் அரும்பத அகராதியையோ வியாக்கியான கர்த்தாக்களின் உதவியையோ நாடாத வகையிலே நாடகப் பாங்கை மட்டும் மனத்தில் கொண்டு அருணாசலக் கவிராயர் இந்தக் கீர்த்தனங்களைப் பாடிவிட்டார்.

இசையாக ராமநாடகக் கீர்த்தனைகளை மதிப்பிட எனக்குத் தெரியாது - அப்படி மதிப்பிட வேண்டிய இடமும் இதுவல்ல. ஆனால் நாடகமாகவும் இலக்கியமாகவும் மதிப்பிடும்போது ராமநாடகக் கீர்த்தனைகளின் நயம் தெளிவாகவே விளங்குகிறது என்று சொல்லலாம். இந்த நாடகம் நமக்குப் பழக்கமான இன்றைய நாடகங்களைப்போல இல்லைதான். ஆனால் இதில் நாடகத்தன்மை இருக்கிறது என்பது வெளிப்படை. சிலப்பதிகாரத்தை நாடக நூல் என்று பலவகைகளில் சொல்லலாம். பழைய பந்தாவில் நாட்டியத்தைப்பற்றிச் சொல்லியது என்பதாலும், நாடகத்தன்மை, அதாவது சம்பவ மோதல்கள் சிறப்பாக உள்ளது என்பதாலும் அதை நாடக நூல் என்று சொல்லலாம். சீர்காழி அருணாசலக் கவிராயர் காலத்தில் சிலப்பதிகாரம் வழக்கத்திலிருந்ததா? அவர் அதை அறிந்திருந்தாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அந்த அளவுக்கில்லாவிட்டாலும், குறிப்பிட்ட ஒரு அளவுக்குள் ராம கதையை நாடகமாக்கிவிட்டார் அவர். தமிழில் பிற்காலத்தில், அதாவது பத்தொன்பதாவது நூற்றண்டின் தொடக்கத்திலிருந்து இறுதிவரையில் வெளிவந்து நடிக்கப்பட்ட நாடகங்களுக்கெல்லாம் ஆதர்சம் என்று ராமநாடகக் கீர்த்தனையைத்தான் சொல்ல வேண்டும். இன்றுள்ள நாடக மேடை, சினிமாவுக்கும் ராமநாடகக் கீர்த்தனை வழிகாட்டியாக, முன்னோடியாக இருந்துவருகிறது என்று சொல்வது பொருந்தும் என்றே தோன்றுகிறது. தெரிந்தோ தெரியாமலோ, இந்த முதல் நூலை ஓரளவு பின்பற்றித்தான் கோபாலகிருஷ்ண பாரதியார் தம் நந்தன் சரித்திரத்தில் பிரமாதமான வெற்றி பெற்றார் என்று சொல்ல வேண்டும். வேதநாயகம் பிள்ளை தம்முடைய பெண்மதி மாலையிலும், சர்வ சமரஸக் கீர்த்தனைகளிலும்கூட இந்தக் கீர்த்தனைகளின் நாடகப் பண்பையும் இசையையும் பின்பற்றி எழுதவே ஓரளவு முயன்றார் என்றுகூடச் சொல்லலாம்.

இலக்கியமாக மதிப்பிடும்போது, இந்த ராமநாடகக் கீர்த்தனைகளுக்கு எந்த அளவில் இடமுண்டு என்று கேட்கத் தோன்றலாம். ‘மக்கள் இலக்கியம், மக்கள் இலக்கியம்’ என்று இந்தக் காலத்தில் ஒரு கொள்கை பரவிப் பிரமாதப்படுகிறதே - அதற்கு ராமகதை ஆதாரமாக அமையக்கூடாது என்று வேண்டுமானால் மக்கள் இலக்கியக்காரர்கள் சொல்லலாம். ஆனால் அருணாசலக் கவிராயர் இந்த ராமநாடகக் கீர்த்தனைகளை மக்கள் இலக்கியமாகக் கருதியேதான் செய்து வெளியிட்டார் என்று சொல்ல வேண்டும். ராவணனுக்கு விபீஷணன் புத்தி கூறும்போதும், ராமனுக்கும் சூர்ப்பனகைக்கும் சம்வாதம் கடக்கும்போதும், அநுமான் சீதையைச் சந்தித்து அசோகவனத்தில் பேசும்போதும் இசையை விலக்கிவிட்டு நாடகமாக மட்டும் நாம் கவனித்தால், இது தெளிவாகவே விளங்கும். மக்கள் மாறிவிடுவதில்லை. மேலெழுந்தவாரியான பல வியவகாரங்கள் மாறுகின்றன; சுலோகங்கள் மாறுகின்றன. மனிதர்கள் இன்னும் ராமராஜ்யத்தை எண்ணிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறர்கள். மகாத்மா காந்தி ராமராஜ்யம் என்கிற பெயரைச் சொல்லித்தான் சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார். அந்த ராம ராஜ்யத்தையும், அதற்கு ஆதாரமான ராஜ்யத்தையும் தமிழருக்கெல்லாம் தெரிவிக்க இக் கீர்த்தனைகளும் பிரயோசனப்பட்டன என்பது அவற்றின் தனிப்பெருமை. 

மற்ற இந்திய மொழிகளிலே ராமாயணத்துக்குப் பலப்பல மொழிபெயர்ப்புகள் உண்டு. தமிழிலோ கம்பனுடையதும், அருணாசலக் கவிராயருடையதும்தான். இலக்கியபூர்வமாக அவையே போதும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

***

‘கல்கி’, 8 பிப்ரவரி 1959


Share:

இரு மனங்கள், இரு தீர்வுகள் - அ.க. அரவிந்தன்

கவிதை முழுமையான இலக்கிய வடிவம் என்று எனக்கு தோன்றும். புனைவு இயல்பிலேயே சிக்கலை அறுதியிட்டு தீர்வை முன்வைக்க முயற்சி செய்வதாக இருக்கும்.வலுவான சிக்கல்-கண்ணியான தீர்வு-இலக்கிய பெறுமானம் இவை மூன்றும் புனைவைப் பொருத்தவரை அடுத்தடுத்த படிநிலையில் நிகழவேண்டியது.இதனால் அகவயமான ஏற்பு வாசகனுக்கு கிட்டுவதில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகிவிடும்.ஆனால் கவிதை வெறுமனே ஒரு விஷயத்தைக் கவனப்படுத்த முயற்சி செய்கிறது.

கவனப்படுத்த விரும்பும் விஷயம் வாசகனின் கண்ணிற்கு தெரிகிறதா? இல்லையா? என்பதே கேள்வி. அதனால்தான் “என்கவிஞர்” என்றும் “என்கவிஞர் இல்லை” எனவும் வாசகர் சொல்வதைக் கேட்க முடிகிறது.ஆக, கவிஞனின் சுயத்திற்கும் வாசகனின் இயல்புக்கும் கணநேர உரையாடலைதான் நாம் கவிதானுபவமாக சொல்கிறோம்.பின்பு, அதை ஒட்டியப் பேச்செல்லாமே அந்த அனுபவத்தை விளக்குவதே.இதனால் புனைவில் கவிதானுபவத்தை உத்தேசிக்கும் ஆக்கங்கள் வெற்றியடையாமல் போய்விடுவதையும் பார்க்கிறோம்.

கீழே வரும் இரு கவிதைகள் பற்றிப் பேசவதே என் நோக்கம். 

துக்கம் ஒரு பரிசுப்பொருள் நெடுநாள்

என் மேசை மீது கிடக்கிறது ஒவ்வொரு நாளும் அதைப் பிரிக்கிறேன் 

சரிகை முடிச்சிடுகிறேன்

தூங்கச் செல்கிறேன் 

அது அங்கேயே கிடப்பதில்

சந்தோஷம்தான் எனக்கு

பிறந்த குழந்தை போல

அது அங்கேயே கிடக்கிறது

அது தவழ்வதில்லை

நடக்கவும் செய்யாது

அது ஒரு எளிய அற்புதப் பொருள்

அதன் தொனி மெளனம்

அதன் பணி பிணியறுப்பு

- மதார் (வெயில் பறந்தது)


துக்கம் — ஒன்றினுள்

இன்னொன்று

அதனுள்

பிறிதொன்று என

எண்ணிறந்த பெட்டிகளை

உள்ளடக்கிய

ஒரு பெரிய பெட்டியைப் போன்றது.

மகிழ்ச்சி — சளைக்காமல்

அவற்றை

ஒவ்வொன்றாகத்

திறந்துகொண்டேயிருப்பது.

-வே.நி.சூர்யா (அந்தியில் திகழ்வது)

இவ்விருகவிதைகளில் ஒருவித தீர்வு தட்டுப்படுகிறதோ என்று தோன்றுகிறது. அதுவே இதை குறித்து பேச ஆர்வம். அதுவும் சிக்கல்-காரணம்-தீர்வு என்ற அறிவியல் பார்வை அல்ல. அறிவியல் பார்வை தற்காலிக அறிதி பார்வை. இதை கலைப் பார்வை என்று பிரிக்கலாமா? 

இவ்விரு கவிதைகளும் ஒரே பேசுபொருளைக் கொண்டிருந்தாலும் முற்றிலும் வேறான அனுபவத்தைத் தருகிறது. மதார் கவிதையில் வெளிப்படும் சுயம்: அனைத்தும் அதன் கையில் இருப்பதாக முன்வைக்கிறது. துக்கத்தை நயந்து அணிந்துக்கொள்ளும் வஸ்திரத்தைப் போல சுட்டுகிறது. மேலும் அந்தத் துக்கத்திற்கு ஒரு பொறுப்பை தருகிறார். பொறுப்பின் நிமித்தம் நிவாரணம் சாத்தியப்படுகிறது. "பிணியறுப்பு" அதன் வேலை என்று சொல்லும் போது, துக்கம் எடை குறைந்து குழந்தையாகவே மாறுகிறது. ஒவ்வொரு குழந்தையும் நோய் தீர்க்கும் வேலையைச் செய்கிறது. அது நம்மை மகிழ்விக்க முயற்சி செய்வதில்லை. துக்கத்தை எடுப்பார் கைப்பிள்ளையாக்கி வேடிக்கை பார்க்க செய்யும் மனநிலையே தீர்வு என்று எண்ணவைக்கிறது. 

இறுதியில் யாவுமே தருணங்கள்தானா? 

என்ற தலைப்பில் உள்ள பத்து பிரிவுகளில், ஒன்றில் உள்ளதே மேலே உள்ள வே.நி. சூர்யாவின் இக்கவிதை. 

இதில் மகிழ்ச்சியை உத்தேசிக்கிறார். அவர் எதையும் மாற்ற விழையவில்லை. மேலும் அனைத்துமே தருணமா? என்று சந்தேகிக்கிறார். துக்கம் எடுத்து கையாளக் கூடிய, ஒன்றுடன் ஒன்று பிணைந்தது. அதை எதுவாகவும் அறிதியிட  முடியாது.அது ஒரு “எண்ணிறந்த” பெட்டி. அதனாலேயே அது எடையுடன்  இருக்கிறது. ஏனெனில் அது “பெரிய”தாக உள்ளது. இதற்கு சரிக்கு சரியாக நிற்கும் வல்லமை மகிழ்ச்சிக்கு உள்ளதாக கவிஞர் முன்வைக்கிறார். ஆனால் நாம் மகிழ்ச்சியை அடைய “சளைக்காமல்” இருக்கவேண்டும். 

இருவேறு தருணத்தில் சிக்கலையும் தீர்வையும் காணவாய்ப்பதாகவும் யோசிக்கமுடியும். 

ஒரு மனம் துக்கத்தை தன்வயப்படுத்த உருமாற்றத்தை கோருகிறது. பிரிதொன்று துக்கத்தை எதிர்கொள்ள உத்தியை கற்றுத் தருகிறது.(சளைக்காமல் இருப்பது) 

பேசுபொருளில் உள்ள ஒற்றுமையால் இவ்விரண்டு கவிதைகளையும் ஏதோவொரு கணத்தில் அருகருகே வைத்துவிட முடிகிறது. துக்கம் ஒரு பொருளாக இருப்பது இந்தத் தசாப்தத்தின் கவிதையாக இக்கவிதைகளை மாற்றுகிறது. கவிதையில் நிகழ்வுகளுக்குதான் பஞ்சமிருக்காது. பொருள்கட்கள் வந்து விழுவது அபூர்வமே. கவிதையில் ஒரு பறவை வருகிறது என்றால் பறத்தல் என்ற நிகழ்வு கவிதையில் பேசபொருளாக உள்ளது என்று கொள்ளலாம்.ஆனால் பொருட்கள் நிகழ்வதில்லை. நிகழ்வு வந்தால் கூடவே காலமும் வந்துவிடும். மாறாகப் பொருட்கள் அணுகுமுறை சார்ந்து அர்த்தம் தரும் ஒரு வஷ்து மட்டுமே. மேலும் துக்கம் என்ற அகவயமான உணர்வை புறவயமான பொருளாக மாறியிருக்கிறது. ஆகவே சற்றே உறுதி கூடுகிறது. 

1992 - உலகமயமாதலுக்கு பிற்பாடு… என்ற விளக்கம் கலை, அறிவியல், பொருளாதாரம் என்று அனைத்திற்குமே பொருந்தும். அதை ஒத்திவைத்துவிட்டு அன்றாடத்தில் பார்த்தால், ஒரு மனிதன்  வாழ எவ்வளவு பொருட்கள் தேவையாக இருக்கிறது என்று ஆச்சரியமடைய வைக்கிறது. வரலாறு நெடுக முன்னெப்போதும் இல்லாத அளவு இன்றுதான் நாம் அதிக பொருட்களைப் பயன்படுத்துகிறோம் என்பது யாவரும் ஏற்றுக்கொள்ளும் விஷயமே. சிக்கல் என்னவென்றால் அந்த பொருட்கள் அனைத்துமே நமக்கு அவசியம் என்று எண்ணுகிறோம். மேலும் பொருட்கள் நமக்கு மகிழ்ச்சியை தருகிறது.மதார் அந்த மகிழ்ச்சியின் பொருட்டே அதை குழந்தையாக மாற்றுகிறார்.சூர்யா துக்கத்திற்கு எதிராக மகிழ்ச்சியை வைக்கிறார்.துக்கத்தை மாற்றுவதும், துக்கத்திற்கு எதிர் ஒன்றை முன்வைப்பதும் அவரவர் திராணிக்கு உட்பட்டதே.சட்டென்று இந்தக் கவிதை நினைவில் ஆட்படுகிறது.

இந்தச் செருப்பைப் போல்

எத்தனைப் பேர் தேய்கிறார்களோ

இந்தக் கைக்குட்டையைப் போல்

எத்தனைப் பேர்/பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ

இந்தச் சட்டையைப் போல்

எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ

அவர்கள் சார்பில்

உங்ளுக்கு நன்றி

இத்துடனாவது விட்டதற்கு

(நன்றி நவிலல்) 

- ஆத்மாநாம்

ஆத்மாநாமின் இக்கவிதையில் பொருளுக்கும் தனிமனிதனுக்கும் இருக்கும் இடைவெளி இன்மையை சுட்டுவதாக வாசிக்கமுடியும். துயர் பொருளாக பிரியாமல் இருப்பதைப் பார்க்கலாம். ஒவ்வொரு இயல்புக்கும் ஒரு பொருளைக் கண்டறிந்த காலத்தின் ஆவணமாக இந்தக் கவிதையைச் சுட்டலாம். ஆனால் மேற்கண்ட இரு கவிதைகள் இந்தத் தசாப்தத்தின் கவிதையாக மாறியிருப்பதற்கு காரணம், மனிதனின் இயல்புக்கு ஒரு பொருளை சுட்டமுடியாது என்பதும், மனிதர்கள் பொருட்களைப் போன்றவர்கள் அல்ல என்பதும், அவர்களுக்கு துக்கம் பொருட்களின் பெயரில் யாராலோ அல்லது அவனாலேயேகூட ஏற்படுத்திக் கொள்ளும் விஷயம் மட்டுமே என்ற கண்டுபிடிப்புதான். தீர்வை மேலேயே பார்த்து விட்டோம் அல்லவா? 

“துக்கத்திற்கு காரணம் ஆசை” என்ற பழைய கண்டுபிடிப்பு உயிர்ப்புடன் இருக்கக் காரணம், தீர்வு இயல்பாகவும் எளிதாகவுமில்லை என்பதோடு அது காலம்தோறும் மாறக்கூடியதாகவும் இருக்கிறது என்பதால்தான். இந்தக் காலத்திற்கான இரு தீர்வுகளால் இக்கவிதைகள் நினைவில் இருக்கிறது.

***

ஆத்மாநாம் தமிழ் விக்கி பக்கம்

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்

மதார் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

சில மராட்டி கவிதைகள் - தமிழில் ஆர். தீபா

வாமாங்கி (இடபாகத்தாள்)

சமீபத்தில் ஒரு நாள் பண்டர்பூர் கோயிலுக்கு சென்றிருந்தேன். 


அங்கு விட்டலனைக் காணவில்லை.

ரகுமாயியின் பக்கத்தில் அவன் நின்றிருக்கும் பீடம் மட்டுமே இருந்தது.


நான் நினைத்துக் கொண்டேன்.

 சரி , 

   விட்டலன் இல்லையென்றால்  

என்ன?

   ரகுமாயி இருக்கிறாளே! யாரோ ஒருவரது காலில் தலையை வைத்து வணங்கி விட்டால் போதும்.


முன்னும் பின்னும் மோதிய கூட்டத்தின் நடுவே ரகுமாயியிடம் கேட்டேன்?

எங்கே உன் விட்டலனைக் காணும்? ,எங்கே போனான்?


அவள் ஆச்சரியத்துடன் , எங்கே போனான் என்றால்?

அவன் என் வலது பக்கம் தானே நின்று கொண்டிருந்தான், ஏன் இப்போது இல்லையா ? 


நான் திரும்பவும் ஒருமுறை பார்த்து விட்டுச் சொன்னேன், அங்கு அவன் இல்லை! 


அவள் உடனே,

என் பக்கத்தில் இருப்பது கூட எனக்கு சரியாகத் தெரிவதில்லை! 


கல்லைப்போல ஆகிவிட்டது 

என் கழுத்து. 

அதை இப்படி அப்படி கூடத் திருப்ப முடியவில்லை! 


அவன்,

எப்போது வருகிறான்? எப்போது செல்கிறான்? 

எங்கே செல்கிறான்?   

என்ன செய்கிறான்? என்று எனக்கு ஒன்றுமே தெரியவில்லை!


அவன் என் தோளோடு தோள் தொட்டபடி எப்போதும் பக்கத்தில் இருக்கிறான் என, முட்டாள்தனமாக இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறேன்!


ஆடி மாத ஏகாதசி காலங்களில் எத்தனை கோடி மக்கள் வருகிறார்கள்! ஆனால், ஒருவரும் ஏன் என்னிடம் ஒன்றுமே 

சொல்லவில்லை?


இன்று ஏன் திடீரென என்னைச் சந்திக்க ஓடி வந்திருக்கிறது இருபத்தெட்டு யுகங்களாகக் காத்திருந்த  தனிமை!


அவள் திரும்பவும் கல்லானாள்!

- அருண் கோல்ஹட்கர்

***

அம்மாவின் மறைவுக்கு பின்  அப்பா

அம்மாவின் மறைவுக்கு பின் தான் அப்பா மௌனமானார்.


முன்பு போல் சமையலறை மூலையில் உள்ள பூஜை அறையில்  

  கடவுளைக் குளிப்பாட்டி, 

உணவு படைக்கிறார்.   

  ஆனால், ஆரத்தி எடுக்கும்போது 

கை நடுங்குகிறது. 


அம்மா வைத்த பாதாம் மரத்தின் கீழ் சேர்ந்த குப்பைகளை சுத்தம் செய்யும் பொருட்டு,

அவள் நினைவில் வாழ அங்கேயே நிழல் ஆகிறார்.


வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.


கட்டி வைத்த பழைய நூல்களை எடுத்து மீண்டும் கட்டி வைக்கிறார்.


செய்தித்தாளை கண்ணுக்கு மிக அருகில் வைத்து படிக்க முடியாதபடி படிக்கிறார்.


சாப்பாட்டுக்குப் பிறகு ஊதுபத்திக் குச்சியால் பல்லின் இடுக்குகளைக்

குத்தியபடியே இருக்கிறார்.


காய்ந்த மாம்பழக் கொட்டையிலி ருந்து வரும் 

தளிர் பச்சை முளை போல, பழைய நினைவுகளைச் சொல்ல எண்ணித் தன் மௌனத்தைக் கலைக்கிறார்,

ஆனால் எப்போதாவது.!

- தாஸு  வைத்ய்

***

நிழல்

மதிய நேரமிது.

நான் சாலையின் ஓரத்தில் நின்றிருக்கிறேன். என் வலது பக்கமாய் ஒரு பெரிய அடர்ந்த மரம். 


அதன் நிழல் என் முன்னால் விழுகிறது.


மரத்தின் தண்டு கருமையானதாகவும் ,

கிளைகள் சாம்பல் பழுப்பிலும், இலைகள் தளிர் கரும் பச்சையாகவும், அழகிய வண்ண மலர்களும் கூடியதாய்,

 நீல வானின் கீழ் நின்றிருக்கிறது.


அதன் கிளையில் மின்னும் கருப்பில் காகம் அமர்ந்திருக்கிறது.


மரம் தன்னுள் பல நிறங்களைக் கொண்டிருந்தாலும்,

 அதன் நிழலில் இலைகள், தண்டு கிளைகள், பூ, காகம்,  என அனைத்துமே கருப்பானது.


நிழல் மரத்தின் அத்தனையையும் ஒன்றாக்கிவிட்டது. 

 பார்க்க போனால் பேதமற்ற நிழலில் தான் மரத்தின் ஒட்டுமொத்தமும் ஒன்றாய் உயிர்த்துள்ளது!

- ஷாந்தா  ஷேல்கே

***

கவிதைகள், தமிழில் ஆர். தீபா

Share:

இருப்பின் நெசவு - அஜிதன் நேர்காணல்

புனைவெழுத்துக்கு அப்பால் நீங்கள் கவிதை எழுத முயற்சி செய்தது உண்டா? கவிதையுடனான உங்களது உறவு குறித்துச் சொல்லுங்கள்? 

ஆம். நான் முதன்முதலாக ஏதேனும் 'படைப்பூக்கத்துடன்' எழுதியது கவிதைதான். ஷோபன்ஹாவரின் தத்துவத்தின் பாதிப்பில் அப்போது அதை எழுதினேன். அதன் ஒரு சிறிய வடிவம் என்னுடைய ‘காப்பன்’ என்ற குறும்படத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் இடம்பெறும். உண்மையில் அது ஒரு அரைகுறை முயற்சிதான். ஆனால் அதை கவிதை வடிவில் எழுதிச்சென்று தந்தையிடம் காண்பித்தபோது அவர் சொன்னது எனக்கு சில தெளிவுகளை அளித்தது. ”கவிதை என்பது சிறிய முனையில் நிகழ்வது. அது மொழியின் வெவ்வேறு சாத்தியங்களை வைத்து விளையாடிக் கொண்டிருப்பவர்களுக்கானது. உன்னுடைய களம் தத்துவமும் இலக்கியமும், அதன் பாதையில் எந்த கவிஞனுக்கும் இணையான கவித்துவமும் ஆழமும் உன்னால் அடையமுடியும். கவிதை கவிஞர்களுக்கானது, அதன் மேன்மையும் அதன் மிகப்பெரிய எல்லையும் அந்த குறுகிய தளம்தான்.” 

உண்மையில் இந்த விளக்கம் எனக்கு பலவகைகளில் கவிதையை அணுக கற்றுக்கொடுத்தது. முக்கியமாக கவிதையின் எல்லைகள்தான் என் தளம் என்று எனக்கு அது உணர்த்தியது. நான் முன்பு 'மைத்ரி' நாவலின் வெளியீட்டு விழாவில் நீட்ஷேவை துணைகொண்டு சொன்னதையே இப்போதும் சொல்வேன். உரைநடை என்பது எப்போதும் கவிதையை தவிர்ப்பதிலேயே (resist) அதன் உச்சத்தை அடைகிறது. அது கவிதையின் அகவயம், உணர்ச்சிகரம், இசைமை, பொதுமை போன்ற அலகுகளில் நிகழ்கிறது. ஒரு வெற்றிகரமான உரைநடையின் விவரிப்பு என்பது அது எத்தனை நெருக்கமாக சென்று கவிதையை தவிர்த்திருக்கிறது என்பதன் கதைதான் என நினைக்கிறேன். தோற்கும் தருணங்கள் மகத்தானவையாக இருக்கலாம், ஆனாலும் அவை தோல்விகளே.

கவிதை என்றும் உரைநடை என்றும் இங்கு எதை வரையறை செய்கிறீர்கள்?

இங்கு முக்கியமான ஒரு தெளிவை நாம் கொண்டிருக்க வேண்டும். கவிதை என்று நாம் இப்போது சொல்வது, உரையாடுவது எல்லாம் நவீன கவிதையையே. அது மரபின் தனிப்பாடல்கள் (lyrical poetry) என்னும் வகைமையில் இருந்து உருவாகி வந்தது. அந்த வகைமையின் ode, elegy போன்ற மரபுகள் படிப்படியாக எதுகை, மோனை, அசை, சீர் போன்ற வடிவ கட்டுப்பாடுகளை இழந்து இப்போதைய நவீன கவிதையாக ஆனதை நாம் காண்கிறோம். ஆயினும் நவீனக்கவிதையின் பேசுபொருள் இன்னமும் தனிப்பாடல்களின் நினைவுகளை கொண்டிருப்பதே. அது உணர்வுக்கும், அகவயத்துக்கும், Rhetoric-குக்கும் முக்கியத்துவம் அளிப்பது. செய்திகளையும், பொருண்மைகளையும் தவிர்ப்பது. சங்கப்பாடலில் தலைவன், தலைவி, தோழி, திணைகள் என எல்லா கருவிகளும் பொதுமையை (universal) நோக்கி செலுத்துவதே. நவீன கவிதையிலும் அதே தன்மை இருப்பதை காணலாம், குழந்தை, அன்னை, காதலி, மரணம் என.

அதற்கு எதிராக மரபின் காவிய கவிதை (epic poetry) என்ற வகைமை இப்போதைய உரைநடையின் பேசுபொருளையும் விரிவையும் கொண்டது. அதன் கதாபாத்திரங்களும் உணர்வுதளங்களும் மேலும் தனித்தன்மை (particularity) கொண்டவை. இன்று கம்பன் இருந்திருந்தால் அவன் உரைநடையிலேயே வெளிப்பட்டிருப்பான். அதனால் அவன் இழப்பதை விட பெருவது அதிகமாக இருந்திருக்கும் என்பதை உண்மையான உரைநடை வாசகர்கள் அறிவார்கள். 

ஆகவே நாம் நவீன கவிதையை குறித்தும், உரைநடையை குறித்தும் பேசும்போது இந்த புரிதலை கொண்டிருக்க வேண்டியது அவசியமானது. கம்பனையோ, சிலப்பதிகாரத்தையோ முன்வைத்து நவீன கவிதையில் அத்தகைய உச்ச நாடகீயம் இல்லை, புனைவு தருணங்கள் இல்லை என்று சொல்வது சரியல்ல. நவீன கவிதையின் தளம் அதுவல்ல. அதன் தொடர்ச்சி சங்கப்பாடலிலும், பக்தி இலக்கியத்திலும் உள்ளது.

உரைநடையும் கவிதையும் வேறுபடும் இடங்களாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்? 

’கவிதை – உரைநடை’ என்ற எதிரீட்டில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்பது, இயல்பாக கவிதைக்கு வந்துவிடும் மையத்தன்மை. நான் ஏற்கனவே முதல் கேள்விக்கு சொன்ன பதிலிலும் இந்த தொனி வந்துவிட வாய்ப்பிருக்கிறது. கவிதையல்லாதது உரைநடை எனும்போது இயல்பாகவே ஒரு இரண்டாம் பட்சம் உரைநடைக்கு விதிக்கப்பட்டதாக எண்ணலாம். அதன் அடுத்தகட்டமாக சில உரைநடையாளர்களே கவிதை தூயது என்றும், உரைநடை என்பது கவிதையின் நீர்த்த வடிவம் என்றும் எண்ணிக்கொள்கிறார்கள். தங்களை தோற்றுபோன கவிஞர்களாக பாவித்துக்கொள்கிறார்கள். இதன் மோசமான பின்விளைவென்பது “நீர்த்த” உரைநடையை கவிதையின் தன்மைகளை கொண்டு செறிவாக்க செய்யும் முயற்சிகள். அவை உரைநடையின் விசாலத்தையும் வீச்சையும் இல்லாமல் செய்கின்றன, அதை ஒரு வாழிடமாக ஆக்கிக்கொள்ளும் வெளியை- இடைவெளியை தரமறுக்கின்றன. அத்தகைய உரைநடைகள் ஒரு வகையில் ஆசிரியரின் மூச்சுக்காற்றால் நிரம்பி வழிகின்றன. 

ஏனென்றால் அவ்வளவு இடத்தை நிரப்ப அவனிடம் புறமோ, அனுபவங்களோ, கற்பனையோ இல்லை, பிதற்றல்களே உள்ளன. உரைநடையின் கட்டின்மை பிதற்றல்களை பெருக்குகின்றன. பிதற்றல்கள் என்பது வெறுமனே மொழியின் வழிப்படுதல். கவிதையில் மொழி வழிப்படுதல் பலம். ஆனால் உரைநடையின் கட்டின்மை அதை பலவீனமாக்குகிறது. தன் உரைநடையின் பிதற்றலுக்குள் தன்னை இழந்தவன் முடிவில்லாது அதில் மூழ்கி இறக்கிறான். ஏனென்றால் மொழி தன்னளவில் தனித்தன்மைகளுக்கு எதிரானது. “காலம் இன்மையை சுழித்துக் கடக்கிறது” என்பது போன்ற வாக்கியங்கள் மொழியின் தளத்தில் மட்டுமே நிகழ்வன. உரைநடையின் பிரதான சுபாவம் துல்லியமும் விழிப்புநிலையும்தான். இங்கு விழிப்புநிலை என்பது கனவுக்கும், கற்பனைக்கும் எதிரானதாக எண்ணவேண்டியதில்லை, அது அருவமான சிந்தனை சட்டகங்களுக்குள் வீழாமல் இருத்தல். ஒரு அந்தியை துல்லியமாக பிரிதொன்றிலாததாக விவரிக்க, அல்லது அகத்தூண்டலாக அளிக்க இயலாதவன் அதை “அம்மாவின் மௌனத்தை போல” என்று ஏதேனும் முதிரா கவிதை வரியை சொல்லி நிரப்புகிறான். அது ’அந்த’ தனித்துவமான அந்தியை மறைத்து, பொதுவான அந்தியென்றாக்கி அதற்கு மற்றுமொரு பொதுவான பிம்பத்தை ஒப்புமைசெய்து கடக்கிறது.

இதற்கு நேர்மாறாக மோசமான கவிதை தெளிவடைந்து தெளிவடைந்து நேரடிக்கூற்றுகளாக ஆகி வெறும் சொல் அறிக்கைகளாக (manifesto) மாறுகிறது. வெறும் அகவுணர்வின் நேரடி வெளிப்பாடு. இரண்டுமே அதனதன் வீழ்ச்சிகள்.

’உண்மையில் கவிதையல்லாதது உரைநடை’ என்பது அல்ல, மாறாக ’உரைநடை அல்லாதது கவிதை’ என்பதே இப்போது (புனைவெழுத்தாளர்களுக்கு) தேவையான பார்வை. தெரிதாவின் இருமைகளின் தலைகீழாக்கத்தை போல இங்கு நாம் உரைநடையை மையத்துக்கு கொண்டுவந்து சிந்தித்து பார்க்கலாம். அதற்கு சாதகமான சில வாதங்களையும் நாம் முன்வைத்து பார்க்கலாம். உதாரணமாக, கவிதையே மூத்தது, உரைநடை ஒரு நவீன கண்டுபிடிப்பு என்ற கூற்று பரவலாக இங்கு திகழ்கிறது. வரலாற்று ரீதியாகவே அது தவறு. உரைநடையின் உச்ச சாத்தியங்களான பைபிளும், பிளேட்டோவின் உரையாடல்களும், உபநிஷதங்களும், புத்த ஜாதக கதைகளும் காலத்தால் மிக முந்தயவையே. அதல்லாமல், எழுதப்படும் கவிதை வடிவம் எழுதப்படாத ஒரு உரைநடை தளத்தையே எப்போதும் தன் பின்புலமாக கொண்டுள்ளது. வாய்மொழிக்கதைகள் உரையாடல்கள் என மொழியின் சாத்தியங்களின் மீதே கவிதை நிகழ்கிறது.  

அதாவது முன்பு சொன்னதை போல கவிதை என்பது மொழியின் சாத்தியங்கள் அல்ல, அசாத்தியங்களின் கலை. அது நிகழ்வது சாத்தியங்களின் பின்புலத்தில். உரைநடையே மொழியின் சாத்தியம், அதன் விசாலம். மொழியின் சிறையை தகர்க்க முயற்சிக்கும் ஒருவன் அதன் சுவர்களில் மீண்டும் மீண்டும் மோதி தலையுடைக்கிறான், அவன் வாழ்க்கை ஓரங்களுக்கு விதிக்கப்பட்டது. மொழியின் சிறையை தன் பார்வைமாடமாக ஏற்றுக்கொண்டவன் அதன் மையத்தில் அமர்ந்து உலகை காண்கிறான். கவிதைக்கு மொழிதான் பிரதான அக்கறை என்றால், உரைநடை உலகை தன் பிரதான அக்கறையாக கொள்கிறது.

ஒரு புனைவெழுத்தாளருக்கு கவிதை வாசிப்பு எந்த அளவுக்கு உதவிகரமாக அமையும் என்று நினைக்கிறீர்கள்?

புனைவெழுத்தாளன் முதலில் அறியவேண்டியது உலகை. அதன் விசாலத்தை. அதை மொழியின் அத்தனை விரிவையும் கொண்டு அள்ளும் பெரும்செயல் அவனுடையது. அந்த பெரும்செயலில் இயல்பாக அவனுக்கென்று சில பாணிகள் வந்துவிடுவதுண்டு. அது இன்றியமையாததும்தான். அந்த பாணிகள் அவனது சிக்கனத்தின் வெளிப்பாடு. அது ஒரு வகையில் அவன் தன்வயப்படுதலில் இருந்து தவிர்க்கிறது. வழக்கமாக நாம் எண்ணுவதற்கு மாறாக, பாணி என்பது தன்னில் இருந்து விடுபடுவதற்கான வழியே. அது அவனை மொழியின் மீதான கவனத்தில் இருந்து விடுவிக்கிறது. அவன் கவனம் முழுக்க உலகை நோக்கி, அதன் நுண்மைகளை நோக்கி திறந்திருக்கிறது. (இங்கு ’மொழியும் உலகும் வெவ்வேறு அல்ல’ என்று வாதிடும் பின் அமைப்பியல் தரப்பை மறுக்கும் ஒரு வலுவான எதிர்தரப்பில் நின்று பேசுகிறேன். மொழிக்கு வெளியிலான ’யதார்த்தம்’ குறித்த விரிவான உரையாடல் தமிழ்சூழலில் நிகழ வேண்டியிருக்கிறது.) 

ஆனால் சில சமயம் புனைவெழுத்தானின் பாணி ஒரு சிந்தனை பாங்காக குறுகிவிட வாய்ப்புகள் உள்ளன. அதுவே உலகின், யதார்த்தத்தின் நுண்மைகளை அள்ளமுடியாமல், அவற்றை புனைவு சாத்தியங்களுக்குள் கொண்டுவரமுடியாமல் செய்ய வாய்ப்பிருக்கிறது. ஆயுதம் இங்கு கைவிலங்காக மாறுகிறது. அவ்வப்போது மொழி மீதான கவனம் அதை தவிர்க்க உதவும் (கத்தியை கூர்தீட்டுவது முழுநேர பணியல்ல). அந்தவகையில் நவீன கவிதை வாசிப்பு புனைவெழுத்தாளனுக்கு முக்கியமானது என நினைக்கிறேன். மறுபுறம் தத்துவ வாசிப்பும் அதேபோல சிந்தனை மீதான கவனத்தை அளித்து, அவன் வளர்ச்சியில் அதே இடத்தை பெறுகிறது. கவிதையும் தத்துவமும் அவ்வகையில் நெறுக்கமானவை.

ஆனால் அதைத்தாண்டி ஒருபடி மேலாக, கவிதை அகவயத்தையும் உணர்ச்சிகரத்தையும் மொழிப்படுத்தும் உச்சங்கள் எப்போதும் எல்லா புனைவெழுத்தாளர்களும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று. பாரதி இல்லாமல் ஜெயகாந்தன் முழுமையடைவதில்லை, ஷில்லர் இல்லாமல் தாஸ்தயேவ்ஸ்கியும் அப்படித்தான்.

ஆனால் அத்தகைய கவித்துவம் தற்போதைய கவிதைகளில் பெரும் அளவில் நிகழ்கிறதா என்பது கேள்வியே.   

சில கருக்கள் மனதில் தோன்றும்போதே இது சிறுகதைக்கு இது நாவலுக்கு என மனம் பகுக்கும். அப்படி செய்கையில் இது கவிதைக்குரியதாயிற்றே என்று எதுவும் தோன்றியதுண்டா. அப்படி இருந்தால் அதைப் பகிருங்களேன்…

முன்பு சொன்னது போல கவிதை எப்போதும் என் தேர்வுகளில் ஒன்றாக இருந்ததில்லை. ஆனால் அகவயத்தன்மை அதிகமாக கொண்ட சில படைப்புகளை ஒரு கவிஞர் கவிதையாக எழுதிப்பார்த்திருக்க சாத்தியங்கள் இருக்கிறது என தோன்றுகிறது. நிலைவிழி, மருபூமி, ஓர் இந்திய ஆன்மீக அனுபவம் போன்றவற்றை அப்படி சொல்லலாம். மருபூமியின் சில பகுதிகள் எழுதும்போது வால்ட் விட்மேனின் ‘Song of myself’ இன் பாதிப்பு இருந்தது. மைத்ரியின் சில பகுதிகளும் கவிதைக்கான சாத்தியங்கள் கொண்டவையாக சொல்லாம்.

ஒரு நல்ல கவிதையில் இருந்து நீங்கள் எதிர்ப்பார்ப்பது என்னனென்ன விஷயங்கள்? அவை குறித்துச் சொல்லுங்கள்.

விட்கென்ஸ்டீனியன் பாணியில் சொல்லவேண்டுமெனில் நல்ல கவிதை என்ன என்று வரையறுக்க முடியாது, அதை விவரிக்கவே முடியும். மேற்சொன்ன அகவயத்தன்மை, உணர்ச்சிகரம், மொழியின் அசாத்திய பயன்பாடுகள் எல்லாம் அந்த விவரிப்பின் பகுதிகளே. இவையல்லாது கவிதையின் முக்கியமான குணங்களில் ஒன்று அதன் இளமை. இளமையின் இன்னொரு பெயர் அனுபவமின்மை என்றும் சொல்லலாம். ஆனால் கவிதை அனுபவக்குறைவை தன் தீவிரத்தின் கருவியாக பயன்படுத்துகிறது. அனுபவம் என்பது கடந்த காலத்தின் சுமைகளும் கூட. எல்லா தீவிரங்களையும் மட்டுறுத்தும் அவற்றின் மறுபக்கத்தை காட்டி நிகர்செய்யும் தன்மை அனுபவத்துக்கு வந்துவிடுகிறது. கவிதை அதை தவிர்க்கிறது. கவிதைக்கு மரணமும், பிறப்பும், பிரிவும், காதலும் எல்லாம் முதல் முறையாக நிகழ்கின்றன. அதன் அதீத நம்பிக்கையும், நம்பிக்கையின்மையும், வெற்றிக்களிப்பும் தோல்வித்துவர்ப்பும் இந்த அனுபவக் குறுகலின் தீவிரம்தான். அதன் மொழி துணிச்சலையும் இதன் விளைவாக பார்க்கலாம். 

கலை என்பதன் முக்கியமான கூறு தன்னிழப்பு என்று ஷோபன்ஹாவர் சொல்வதை நாம் ஏற்போம் என்றால், உரைநடையும் கவிதையும் அதை இரண்டு திசைகளில் சென்று நிகழ்த்துகின்றன. வைட்ஹெட் (A.N. Whitehead) ஓர் இடத்தில் சொல்கிறார், “இளமை தன் விசையிலேயே தன்னை இழக்கிறது”. ’என் உற்சாகம்’ ஒரு உச்சத்தில் ’உற்சாகம்’ மட்டுமென்றாகிறது. அது வைட்ஹெட் சொல்வதை போல ”தன்வயப்படுத்தும் பொருட்டு தனக்கு வெளியே செல்லுதல்”. பைரனின் வரிகள் இங்கு நினைவு கூறலாம் “I live not in myself, but I become Portion of that around me: and to me High mountains are a feeling”. அவ்வகையில் உணர்ச்சியாகாத, தீவிரம் அடையாத ஒன்றுக்கு கவிதையில் இடமில்லை. தீமை அல்ல கவிதையின் பிரதான எதிரி, மரத்துபோதலே. கவிதையின் உலகு பிரதானமாக அழகியல் சார்ந்தது. தீமையை கூட அது அழகற்றது என்ற வகையில்தான் விமர்சனம் செய்ய முயலும்.

உரைநடை அனுபவங்களின் வழியாக அதே தன்னிழப்பை நிகழ்த்துகிறது. ஒவ்வொன்றையும் நிகர் செய்வதன் ஊடாக, ஒப்புமைபடுத்துவதன் ஊடாக அது அனுபங்களை கோர்த்து ஓர் உலகை உருவாக்குகிறது. அங்கு தனி அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒட்டுமொத்தத்தின் பகுதியாகவே பொருள்படுவதன் வழியாக தன்னிழப்பு நிகழ்கிறது. என் உற்சாகம் பிறரது உற்சாகங்களின் ஒப்புமையோடும், என் பிற உணர்வுகளின் வேற்றுமையோடும் கொள்ளும் உறவால் பொருள்படுகிறது, தனி உணர்வாகிறது. என் உற்சாகம் பிறரது பிற உணர்வுகளுடன் நிகர் நிற்கும்போது அழுத்தம் பெருகிறது, நாடகீயம் பிறக்கிறது. நான் பிறரின், ஒட்டுமொத்தத்தின் பகுதி. தீமை என்பது தனிமைபடுத்துவது, தன்வயப்படுவது என கொள்வோமென்றால், தீமையே உரைநடையின் பிரதான எதிரி. உரைநடையின் உலகு பிரதானமாக அறம் சார்ந்த ஒன்று. 

இதனால் கவிதையும் உரைநடையும் முரண்படும் இடங்கள் தெரிகின்றன. உரைநடைக்கு கவிதை சமயங்களில் பொறுப்பற்றதாக தெரியும்போது, கவிதைக்கு உரைநடை சுவாரஸ்யமற்றதாக தெரியலாம். இது காலம் காலமாக நிகழ்ந்து வரும் தந்தை-மகன் (தாய்-மகள்) நாடகம் என்றே நினைக்கிறேன். ஆனால் இது வெறும் மோதல் மட்டுமல்ல, மிகுந்த நேசமும் அதற்குள் இருக்கிறது. இரண்டின் இறுதி குறிக்கோளில் நிறைய ஒப்புமைகளும். நல்ல உரைநடை முதிர்ச்சியானது, நல்ல கவிதை இளமையானது.

கவிதைக்கும் அழகியலுக்கும், உரைநடைக்கும் அறத்துக்குமான மேற்சொன்ன உறவை சற்று விரிவாக்க முடியுமா?

கவிதையும் உரைநடையும் முரண்படும் சில இடங்களை வைத்து அதை புரிந்துகொள்ளலாம் என நினைக்கிறேன். 

உதாரணமாக, கவிதையில் சட்டென்று எழும் மூர்க்கமும், கோபமும், பொறாமையும் கூட அது தன்னிச்சையாக (spontaneous) எழும் எனில் அழகே. அதன் தற்காலிகத்தன்மையே அதை அழகாக்குகிறது, அதன் உயிர்துடிப்பே அதை உணர்ச்சிகொள்ள செய்கிறது. அதேநேரம் நன்மையே எனினும் அதில் புதுமையோ, மாற்றமோ, தன்னிச்சையோ இல்லை என்றால் அது கவிதையின் பேசுபொருளாகாது. நீதியுரைகள் கவிதைக்கு எதிரானவை. ஆனால் அதேபோல தீமையும் கூட தன்னிச்சையாக இல்லாமல் திட்டமிட்ட, தேங்கிய வெளிப்பாடாக இருக்குமெனில் அது அழகில்லாதாகிறது. கோபத்துக்கும் வஞ்சத்துக்குமான வேறுபாடு அது.

ஒரு கவிதை கோபத்தின் விளைவாக அல்லாமல் வஞ்சத்தின் குரலாக இருக்கும்போது அது அழகை இழக்கிறது. கவிதை அல்லாதாகிறது.

இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, கவிதை எப்படி அதன் உணர்ச்சிகரத்தை பெறுகிறது என்பதை. முரண் இல்லாமல், வேறுபாடு இல்லாமல் எப்படி வெறும் உணர்ச்சி தோன்ற முடியும்? முன்பு சொன்னது போல கவிதை தன் பின்புலமாக அமைந்த வாழ்க்கையினோடு கொண்ட முரண் வழியாக தோன்றுகிறது. கவிதை எப்போதும் தனக்கு வெளியே விரிந்து கிடக்கும் பின்புலத்தை சார்ந்தே எழுகிறது. தனக்கென்று உலகை கட்டமைக்க வேண்டாத சுதந்திரமே கவிதையின் அழகு.

கவிதை இரண்டு விதத்தில் இதை நிகழ்த்தலாம். ஒன்று, தனித்துவங்களில் இருந்து பொதுமையை பிரித்தெடுத்தல், அதுவழியாக அது தன்னை உலகில் இருந்து விடுவித்துக்கொள்கிறது. குழந்தை, மரணம், இருண்மை, ஒளி, காலம் என. அச்சொற்களின் அர்த்த தளத்தை கவிதை அளிப்பதில்லை, அதை நாம் நம் அனுபவங்களின் ஊடாக கவிதைக்கு அளிக்கிறோம். இரண்டாவது சுவாரஸ்யமான வகைமை ஒன்று உண்டு. அது தனித்துவமான செய்திகளில் இருந்து இணைப்புகளை துண்டித்தல். அப்போது அவை ஒவ்வொன்றும் விதவிதமான பின்புலங்களுடன் இணைய சாத்தியம் கொண்டு தம்மளவில் பொதுமைகளாக மாற்றமடைகின்றன. உதாரணமாக ஒரு கவிதை ஒரு மரணவீட்டில் நிகழும் தனித்துவமான உரையாடல்களை எந்த தொடர்பும் இல்லாமல், யார் யாரிடம் கூறியது என்று இல்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக கலைத்து கூறுமெனில் அது "மரணவீடு" என்ற பொதுமையின் குறியீடாக மாறுகிறது. ஒரு இலக்கிய மொண்டாஜ். T.S. Eliot இன் Wasteland-இல் இடம்பெரும் காட்சிகளும் உரையாடல்களும் இதற்கு சிறந்த உதாரணம்.

இவ்வாறு கவிதை உலகின் முன் நின்று தான் கண்ட அழகை பேசுகிறது. உலகின் அத்தனை பொருள்களும் அதன்முன் நின்று தங்கள் அழகியல் மதிப்பீட்டை பெருகின்றன. முடிவில்லாது மறுவரையறை செய்யப்படுகின்றன.    

கவிதைக்கு இத்தகைய ஓர் அடித்தளத்தை கொடுத்த பின்பு உரைநடை ’வெறும்’ அறம் சார்ந்தது என்று சொல்லும்போது, அதன் தளம் சட்டென்று சுருங்கிவிடுவது போல தோன்றலாம். நம் வாழ்க்கையில் அறம் சார்ந்தது என எண்ணி நாம் எதிர்கொள்ளும் செய்கைகளும், சம்பவங்களும் மிகச்சிலவே. மேலும் இது உரைநடையாளர்களை, ஏற்கனவே பல முக்கியமான எழுத்தாளர்களின் மீதுள்ள குற்றச்சாட்டான, வெறும் அறவாதிகளாக குறுக்குவது போல தோன்றுகிறது.

ஆனால் இலக்கியத்தின் அறம் என்பது மிக விரிவான தளத்தில் இயங்குவது. உலகின் அனைத்தையும் தன் பார்வைக்குள் கொண்டுவந்து பொருத்துவது. சிறுவயதில் நாம் கதைகேட்க துவங்கும் முன்னே கேட்கும் அந்த முதல் கேள்வியே கடைசிவரை இலக்கியத்தின் அடிப்படையாக இருக்கிறது. ”அந்த **** நல்லதா? கெட்டதா?”. நாம் வளர வளர இந்த இருமை எண்ணில்லா வர்ண வேறுபாடுகள் கொள்கிறது. பலவகையான நன்மைகள் இருக்கலாம், பல வகையான தீமைகளும் இருக்கலாம், எல்லாம் இருப்பின் நெசவில் ஒன்றோடொன்று பிணைந்திருக்கின்றன. அவை அதன் இசைவில் தங்கள் மதிப்பை பெருகின்றன. ஐரிஸ் முர்டாக் (Iris Murdoch) சொல்லும் அந்த “இருப்பின் நெசவே” (fabric of being) இலக்கியத்தின் பேசுதளம். அதில் நற்செயல், தீச்செயல் என்ற தெளிவாக வரையறுக்கப்பட்ட குறுகிய வட்டம் இல்லை. அது ஒருவனின் ஒவ்வொரு செயலிலும், சிரிப்பிலும், பேச்சிலும், சிந்தனையிலும் மெல்லிய நெசவாக ஊடுருவியிருக்கிறது, எண்ணில்லா பிறவற்றுடன் உரையாடுகிறது. (a continuous fabric of being is shown in their mode of speech or silence, their choice of words, their assessment of others, their conception of their own life, what they think attractive or praiseworthy, what they think funny. - Iris Murdoch) 

ஒரு கதாபாத்திரம் அறிமுகமாகும் தருணமே நாம் அவனை, அவன் செயல்களை, அவன் உலகோடு கொண்டுள்ள உறவை மதிப்பிடுகிறோம். அது நல்லது தீயது என்ற எளிய சூத்திரத்தில் இல்லை. நாம் அவனை அவனது தளத்தில் வைத்து மதிப்பிட முயல்கிறோம். உரைநடை என்பது தொடர்புறுத்தல்களின் கலை. ஒப்புமைகளும் முரண்களும் இருவகையான தொடர்புறுத்தல்கள். அது ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எண்ணில்லாத தொடர்புறுத்தல்கள் வழியாக, தருணங்கள் வழியாக தொட முயல்கிறது. 

இந்த இடத்தில் மதிப்பீடு என்னும் வார்த்தையே பிழைப்புரிதலுக்கு காரணமாக தோன்றலாம். புனைவாசிரியன் முதன்மையாக அற மதிப்பீடுகள் கொண்டவன் அல்ல, அறப் புரிதலே அவனுக்கு பிரதானம். அதனூடாகவே எந்த பொருளும் அவனிடம் அதன் இரண்டாம் பட்சமாக தங்கள் மதிப்பீட்டை பெருகின்றன. ஆம், ”பொருட்களும்” கூட புனைவிலக்கியத்தில் ஒருவகையில் அற மதிப்பீட்டையே பெருகின்றன. ஒன்று மற்றவைகளுடன் எத்தனை விதமாக தொடர்புறுகிறது, எத்தனை விரிவாக அதன் பிணைப்புகள் பரவியிருக்கின்றன என்பதை கொண்டு அவை தங்கள் மதிப்பை பெருகின்றன. அதில் அழகியல் பார்வைக்கு இருக்கும் அதே விரிவு அறப்பார்வைக்கும் இருக்க முடியும். பாலை தீயது, மழைக்காடு நல்லது என்றல்லாமல், இரண்டுமே இரண்டுவித நன்மைகளாக, அவற்றுக்கே உரிய முழுமையுடனும் பிணைப்புகளுடனும் திகழ முடியும். அவ்வாறு இணையாத குறுகிய வட்டம் கொண்ட பொருள் தீயதாக மதிப்பிடப்படலாம். அதையே நாம் செயற்கை என்கிறோம்.

நன்மை, தீமையை உரைநடை அதன் எல்லைவரை சென்று புரிந்துகொள்ள முயல்கிறது, அவ்வாறு புரிந்துகொள்ளாத போது அது தன்னளவில் தீமை அடைகிறது. உரைநடையின் பிரதான எதிரி தீமை என்று கூறியது இந்த அர்த்தத்தில் தான். தீமை வெளிப்படும் படைப்புகள் என்பன தீமையை சித்தரிக்கும் படைப்புகள் அல்ல, அவை தன்னளவில் அறப் புரிதல் இல்லாத படைப்புகள். எனவே தான் பிரச்சார படைப்புகள் கவிதைகளில் பல சமயம் ஏற்றுக்கொள்ளபடுகையில், உரைநடையில் அவை எப்போதும் மோசமான இடத்தையே பெருகின்றன. பார்வை குறுகல் கொண்ட, ஒற்றைப்படையான இலக்கியம் எல்லாவகையிலும் தீயது. அவ்வகையில் பெரும்பாலான அறவாத இலக்கியமும் தீயதே, மோசமானதே. 

நல்ல இலக்கியம் அற மதிப்பீட்டை முன்வைப்பது அல்ல, அறப் புரிதலை முன்னேடுப்பது, அதன் வழியாக அற மதிப்பீடுகளை மறுவரையறை செய்வது. இலக்கியத்துள் அறவாழி என்றும் சுழன்றபடியே இருக்கிறது.      

உங்களது வாசிப்பில், கவிதை எனும் வடிவம் சந்திக்கிற சவால்கள்/ பிரச்சனைகள் என நீங்கள் எவற்றைக் குறிப்பிடுவீர்கள்? 

ஒட்டுமொத்த கவிதையின் வடிவம் சந்திக்கிற பிரச்சனைகளை சொல்வதானால் அது கவிதையின் பலங்களையே பலவீனங்களாக சொல்வதாகவே முடியும். ஒரு உரைநடையாளனாக அதை சொல்வது எளிதாக இருக்கலாம். ஆனால் அதை சொல்ல ஒரு இலக்கிய இடத்தை அடைய வேண்டும். தால்ஸ்தாய் சொல்லலாம், அஜிதன் இன்னும் சொல்வதற்காகவில்லை. ஆனால் கவிதையின் மரபுக்குள் சமகால தமிழ் கவிதைகள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றை முக்கியமாக கவனிக்கிறேன். 

சமகால கவிதைகள் குறுவடிவில் (5-6 வரிகளுக்கு கீழ்) இருக்கும்போது அடையும் வெற்றியை சிறுவடிவில் பெரும்பாலும் அடையவில்லை. இதற்கு காரணம் குறுவடிவில் பெரும்பாலும் ஒற்றை அனுபவமும் அதன் தீவிரமும் இருக்கிறது, அவ்வனுபவத்தை அதன் தீவிரம் குறையாமல் மொழிப்படுத்தும்போது அது பிற எல்லாவற்றையும் (கவிதைக்கு வெளியே) பறந்தெழச்செய்ய போதுமானதாக இருக்கிறது. ஒரு சிறிய மந்திரக்கோலை போல.

ஆனால் சிறு-கவிதை ஒன்றுக்கும் மேற்பட்ட அனுபவங்களை இணைக்கிறது. அது படிப்படியாக ஒன்று மற்றொன்றை என உயர்த்துகிறது. ஆனால் அதன் கடைசி பறந்தெழல் அக்கவிதையை ஒட்டுமொத்தமாக உயர்த்த வேண்டும். அது அந்த அனுபவங்களுக்குள் மேற்பார்வைக்கு ஒரு இணைப்பை காட்டிவந்து கடைசி வரிகளில் ஒட்டுமொத்தமான, இன்னும் ஆழமான ஒரு இணைப்பை காட்டவேண்டும். அவ்விணைப்பு கவிதைக்கு வெளியே பல சாத்தியக்கூறுகளுடன் இணைய வேண்டும், அப்படியே கவிதைக்கு வெளியே எல்லா அனுபவங்களுடனும் தன்னை இணைத்து அவற்றை பறந்தெழச் செய்யவேண்டும். ஆனால் அத்தகைய இணைப்பை நிகழ்த்த கவிஞனுக்கு தன்னியல்பான ஒரு விரிந்த பார்வை இருக்கவேண்டும், அது நம்பிக்கையில் இருந்து எழவேண்டும் (ஆம், அந்த வார்த்தையை சொல்ல கவிஞர்கள் தயங்க வேண்டியதில்லை). 

உண்மையில் சிறுகவிதையின் கடைசி இருவரிகள்தான் கவிஞனின் மிகப்பெரிய சவால். அதை இரண்டு வழிகளில் சமகாலத்து கவிஞர்கள் தவிர்கிறார்கள். ஒன்று அதுவரை தொடுத்து வந்த இணைப்பை கலைப்பதோ அல்லது மேலதிகமான இணைப்பு ஒன்றும் இல்லை என்று அதை அர்த்தமிழப்பாக பிரகடனப்படுத்துவதோ வழியாக. இது நவீன கவிதையில் மிகுந்து காணப்படுகிறது. அது கவிதைக்கு தேவையான ஒரு உணர்வுத்தீவிரத்தை தந்தாலும், அர்த்தமிழப்பு என்பது ’ஒரு’ உணர்வுதான். அதுவே மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் அயர்ச்சி நவீனக்கவிதையை பீடித்திருக்கிறது. இது கதைசொல்லலில் ஒருவன் கற்பனையை பெருக்கி பெருக்கி முடிவில் எல்லாம் கனவுதான் என்று சொல்வது போல. ”கனவு” என்பது ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தத்தை இணைக்கிறது, அதேநேரம் “அவற்றுக்குள் எந்த இணைப்பும் இருக்க வேண்டியதில்லை” என்றவகையில் அதை நிகழ்த்துகிறது. முதிரா கதைசொல்லிகள் கடைபிடிக்கும் இந்த உத்தியை போலதான் சில சமயம் நவீன கவிதைகளிலும் இதற்கு இணையான பாவனை வெளிப்படுகிறது. ஆம், நவீன கவிதையில் நம்பிக்கையிழப்பு என்பது படைப்பூக்கமின்மையின் ஒரு பாவனைதானோ என சந்தேகிக்கிறேன். 

கவிதைக்குள்ளில் இருக்கும் அனுபவங்களுக்கு எந்த அர்த்தபூர்வமான இணைப்பும் இல்லை என்பதன் வழியாக அந்த அர்த்தமிழப்பின் உணர்வை கவிதைக்கு வெளியே கசிய செய்யும் அந்த உத்தி சற்று பழையதாகிவிட்டதாக உணர்கிறேன்.  

இதல்லாது சில கவிஞர்கள் கைகொள்ளும் இரண்டாவது வழி, ஏற்கனவே சொல்லப்பட்ட மானுடவாத, ஆன்மீக அல்லது மதம் சார்ந்த விடைகளில் இருந்து அந்த இணைப்பை சமைப்பது. இது வேறொரு வகையில் ஏமாற்றம் தருவது. இவ்வாறு செய்யும்போது அப்பார்வை கவிதைக்கு வெளியே நீளாமல் கவிதைக்குள்ளேயே அடங்கிக்கொள்கிறது. 

இந்த இரண்டில் இருந்தும் வெளிவரவேண்டும் எனில் கவிஞர்கள் கவிதைக்கு வெளியே முடிவில்லாத தேடல் கொண்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். புனைவு, தத்துவம், அறிவியல், மதம் (நம்பிக்கை அல்ல), இசை, பறவை பார்த்தல் என எல்லா திசைகளிலும் அவர்களது தேடல் விரிய வேண்டும். 

தமிழில் சமீபமாக மதாரின் கவிதைகளில் அந்த இறுதிவரி பறந்தெழல் நிகழ்கிறது. உதாரணமாக: 

ஒரு மீன்

ஒரு கணம் நின்றது

ஒரு சொல்லானது

அது அசைந்து நிற்கவே

ஒரு வார்த்தையானது

நீந்தி நீந்தி

நீண்ட சொற்றொடரானது

சொற்களின் பெருக்கமானது

பூரணமானது

அடுத்த ஓர் அசைவில்

அது மீண்டும்

ஒரே சொல்லானது

மறு அசைவில்

அதுவொரு மீனானது

இக்கவிதையை உண்மையில் நேரடியாகவே நாம் முன்பு சொன்ன மொழியின் அசாத்தியத்தை தொடும் ஒரு முயற்சியாக காணலாம். கடைசி வரியில் ”மீன்” ஒரே நேரத்தில் சொல்லாகவும் (’மீனானது’), சொல்லுக்கு அப்பாற்ப்பட்டதாகவும் மாறுகிறது. அந்த இருமையின் அழுத்தமே அதை உயர்த்துகிறது. மொழியின் சாத்தியங்கள் வழியாக ஞானத்தை பெருக்கி பூரணத்தை அடைந்த பின்னும் ”மீன்” மொழிக்கு வெளியில் செல்கிறது. அல்லது ஞானத்துக்கு பின் மொழி தன் கட்டை அவிழ்த்து இல்லாதாகிறது. மேலும் இக்கவிதையில் ”மீன்” எப்படி ஒரு கணம் நின்றதும் சொல்லாகிறது என்பதும், சொல் எப்படி அர்த்தச்சலனத்தை அடைந்து வார்த்தையாகிறது என்பதும் முக்கியமான தருணங்கள்.  

அதேபோல தற்காலத்தில் எழுதுபவர்களில் கவிஞர் இசை இத்தகைய கவித்தருணங்களில் மாஸ்டர். இசையின் கவிதைகள் கீழிறக்குவதன் பாவனையில் சிறு துரும்புகளையும் சேர்த்து பறந்தெழச்செய்பவை. சமீபத்தில் அதிகமாக பேசப்பட்ட இந்த கவிதை ஓர் உதாரணம்.

மகா நிர்வாணம்

செருப்புக்கடைக்கு

செருப்புக்கடை  என்றே

பெயர் சூட்டியுள்ளான் ஒருவன்


உனக்கு 

அம்மை அப்பன்

யாருமில்லையா?


பெண்டு பிள்ளை சேர்க்கவில்லையா?


காதலி...

பழைய காதலி...

பால்ய சகி ...

ஒரு நினைவும் இல்லையோ உனக்கு?


அபிமான நடிகன்

அபிமான நடிகை

இப்படி

அபிமானம் ஏதுமில்லையோ?


உன் தலைக்கு மேல் வானமில்லையா?


பூவோ, புழுவோ 

இல்லையோ உன் நிலத்தில்?


கொள்கை? 

கோட்பாடு ?


தெய்வம் என்று

ஒன்று கூட இல்லையா உனக்கு?


செருப்புக்கடைக்கு

செருப்புக்கடை  போதும் 

என்று முடிந்தது

பெருஞ் சலிப்போ? அன்றி

தெள்ளிய ஞானம் தானோ?


சலிப்பும், ஞானமும்

அவ்வளவுக்கும்

அருகருகோ!

இக்கடைசி வரிகள் ஞானியை சலிப்புற்ற செருப்புக்கடைக்காரனாக்குகிறதா, அல்லது செருப்புக்கடைக்காரனை மறுபுறம் செலுத்துகிறதா என்பதே கவிதையின் இறுதியுச்சம். செருப்புக்கடைக்கு செருப்புக்கடை என்பதை தவிர வேறு எல்லா பெயர்களையும் வைக்க நினைக்கும் கொள்கைகள், கோட்பாடுகள், அபிமானங்கள், கடந்த காலம் (அம்மை அப்பன்), எதிர்காலம் (பெண்டு பிள்ளை), மரபு, தத்துவம் என எல்லாம் கொண்ட நாம் அவன் முன் கூசி நிற்கிறோம். அல்லது எல்லாம் வெறும் சலிப்புதானோ? என சந்தேகமும் கொள்கிறோம்.  

உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள்/ பிடித்த கவிதைகளைக் குறித்துச் சொல்லுங்கள். வாய்ப்பிருந்தால் ஏன் என்பதையும் பகிரலாம்.

நான் மேற்சொன்ன பாணியின் சிறுகவிதைகளில் நான் மாஸ்டராக கருதுபவர் Gerald Manley Hopkins. அவரது God’s Grandeur மற்றும் Pied Beauty என்ற இரண்டு கவிதைகளும் என் வாழ்வில் மறக்கமுடியாத பாதிப்பை ஏற்படுத்தியன. அவை என்னை ஷோபன்ஹாவரின் கசப்பில் இருந்து மீட்டளித்தன.

God's Grandeur

The world is charged with the grandeur of God.

    It will flame out, like shining from shook foil;

    It gathers to a greatness, like the ooze of oil

Crushed. Why do men then now not reck his rod?

Generations have trod, have trod, have trod;

    And all is seared with trade; bleared, smeared with toil;

    And wears man's smudge and shares man's smell: the soil

Is bare now, nor can foot feel, being shod.


And for all this, nature is never spent;

    There lives the dearest freshness deep down things;

And though the last lights off the black West went

    Oh, morning, at the brown brink eastward, springs —

Because the Holy Ghost over the bent

    World broods with warm breast and with ah! bright wings.

இக்கவிதையின் இறுதியில் இருக்கும் மரபான ஆன்மீக படிமம் ஒன்று வெறும் வெளிப்பாட்டில் இருக்கும் நேர்மையினால், உணர்ச்சிகரத்தால் எல்லாவற்றுக்கும் மேலாக அதன் துல்லியத்தால் மொத்த கவிதையையும் உயர்த்துகிறது. அந்த கணத்தில் கவிஞருடன் சேர்ந்து நாமும் அந்த மகத்தான ஒளிச்சிறகுகளை பார்க்கிறோம்.

நீள் கவிதைகளில் இந்த ’கேள்வி-பதிலால்’ தூண்டப்பட்டு இளமையில் நான் ரசித்த ‘Wasteland’ மற்றும் ‘Song of myself’ இரண்டையும் மறுவாசிப்பு செய்தேன். சில இடங்களை தவிர “Wasteland” என்னை இம்முறை கவரவில்லை. அதே நேரம் “Song of myself” இன்னமும் அதே மகத்தான வீரியத்துடன் இருக்கிறது. நவீன கவிதையின் துவக்கத்திலேயே அகவயத்தின் ஒருமை, மாற்றமின்மை, உடல்கடந்த தன்மை என்ற எல்லா மரபான நோக்குகளையும் கேள்விக்குட்படுத்தி, தகர்த்து ஆனால் இறுதியில் அதன் இருப்பை பன்மடங்கு பெரிதாக்கிய படைப்பு அது. A grand treatise on subjectivity.  

***
இசை தமிழ் விக்கி பக்கம்:




அஜிதன் தமிழ் விக்கி பக்கம்:


மதார் தமிழ் விக்கி பக்கம்:


***





Share:

திருவள்ளுவரும் அவரது திருக்குறளும் - க.நா.சு

என் பள்ளி, கல்லூரிக் காலம் முழுவதும் நான் சமஸ்கிருதத்தைப் பெரிய ஆர்வத்துடன் கற்றவன் அல்ல. எனவே, ஆங்கிலத்தில் கொஞ்ச காலம் எழுதிவிட்டு, முப்பதுகளின் நடுப்பகுதியில் தமிழில் எழுதத் தொடங்கியபோது, தமிழ்ச் செவ்வியல் ஆக்கங்கள் குறித்து அதிகம் அறிமுகமில்லாமல் இருந்தேன். நான் அவற்றைக் கற்கத் தொடங்கியது சுப்ரமணிய பாரதியிலிருந்துதான். அவ்வாறு நவீனக் காலத்தில் ஆரம்பித்து, படிப்படியாகப் பின்னோக்கி நகர்ந்து தொன்மையைச் சென்றடைந்தேன். இப்பயணம் பல வகையிலும் என் மனதிற்கு நெருக்கமாக இருந்துவந்துள்ளது. நான் இறக்கும் நாளில்கூட இது முடிந்துவிட வேண்டும் என நான் எண்ணவில்லை. ஜைனர்களைப் போல, தமிழ்ச் செவ்வியல் ஆக்கங்களை முழுமையாகக் கற்று முடிக்க இன்னொரு பிறவியில் நம்பிக்கை வைக்கிறேன்.

குறிப்பாக, இரண்டு காரணங்களுக்காக திருக்குறளைப் படிப்பது எனக்கு முக்கியமானதாக இருந்தது. ஒன்று, தமிழர்கள் உதட்டளவில் இந்த நூலுக்குக் கொடுக்கும் அளவுக்கு அதிகமான புகழ்ச்சி; ஆனால் அதற்குரிய சீரிய, ஆழமான ஆய்வுகள் அதிகமாக செய்யப்படவில்லை. இரண்டாவது, இதுவொரு அறநெறி போதிக்கும் நூலாக இருக்கும் அதே சமயத்தில் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாகவும் இருப்பது. லட்சியவாத எழுத்தின் மீதான மதிப்பு இன்றைய காலத்தில் அதிகரித்து வந்தாலும், பெரும்பாலான லட்சியவாத எழுத்தாளர்கள் தங்கள் சிறிய படைப்புகளால் தோல்வியடைந்த எழுத்தாளர்களாக இருப்பதையே வரலாறு நமக்கு காட்டுகிறது.

லியோ டால்ஸ்டாய் நிச்சயமாக ஒரு நவீனக் காலத்து விதிவிலக்கு. அவ்வாறே திருவள்ளுவர் என்னளவில் பண்டைய காலத்து விதிவிலக்கு. தங்கள் அறவுணர்வை சிறந்த இலக்கியமாக வெளிப்படுத்திய மிகச்சில அறநெறி எழுத்தாளர்களில் ஒருவராக திருவள்ளுவரைக் கருதலாம்.

திருக்குறளை முதன்முறை படித்தபோது, அந்நூலில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே  சிறந்த கவிதைப்பண்புடன் இருப்பதாகத் தோன்றியது. ஆனால் தொடர் வாசிப்பில் என் கருத்து மாறியது. தற்போது ஒரு பங்கை வேண்டுமானால் நிராகரித்துவிடலாம், மிச்சம் ஐந்தில் நான்கு பாகம் சிறந்த கவிதைகளாகச் சொல்லத்தக்கவை என்ற நிலைக்கு வந்திருக்கிறேன். இன்னும் கொஞ்ச காலம் இந்நூலுடன் செலவழித்தால் சற்றுக் குறைவாகத் தோன்றிய பாகமும் என் கருத்தை மாற்றிச் சிறந்தவையாகத் தோன்றக்கூடும் என நினைக்கிறேன்.

கற்றறிந்த உரையாசிரியர்கள் தங்கள் விளக்கவுரைகளால் குறளில் உண்டாக்கிய சிக்கல்களிலிருந்து அப்பிரதியைப் பிரித்து எடுப்பதை எனக்கே ஒரு விளையாட்டு போலச் செய்து பார்த்தேன். உரையாசிரியர்கள் கற்றவர்களாக இருந்தாலும் எனக்கு அசௌகரியமாய் இருந்தனர். அவர்களை ஒதுக்கிவிட்டு கவிஞனின் உள்ளத்திலிருந்து குறளை அணுக முயன்றேன். நேரடியாக சொற்களின் வழியாகவும் செறிவுமிக்க அதன் சொற்றொடர்கள் வழியாகவும் அணுகினேன். பத்து வருடங்களுக்கு முன்பு இவ்வாறு எனக்கு நானே உரைநடை வடிவில் செய்துகொண்ட மொழியாக்கம் மிகவும் களிப்பூட்டும் பயிற்சி அனுபவமாக இருந்தது.

பிறருக்குத் தீங்கு செய்யாமையை ஒட்டுமொத்தமாக வலியுறுத்துவது, யாரையும் காயப்படுத்தாமல் அஹிம்சை வழியைக் கடைபிடிப்பதன் மேன்மை, துறவு நெறியின் சிறப்பு போன்றவற்றை குறள் தொடர்ந்து எடுத்துரைப்பதைக் காணலாம். இதுபோக, காலக்கணக்கு மற்றும் இதரக் கருத்துகளுக்கு நான் சார்த்திருக்கும் எஸ். வையாபுரிப்பிள்ளை போன்ற அறிஞர்களின் கருத்துப்படியும் குறளை இயற்றியவர் பிறப்பாலோ அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலோ ஒரு சமணராக இருக்கலாம் என்கிற வலுவான எண்ணம் எனக்கு உள்ளது. தமிழ் அறிஞர்களைப் பொறுத்தவரை, என் கருத்து என்னவென்றால், இலக்கியத்தைக் காட்டிலும் மதம் சார்ந்த பற்றுகளே அவர்களின் இலக்கிய நிலைப்பாடுகளைத் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. சங்க இலக்கியத்தில் சமணர்களின் பங்களிப்பு வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்படுவதைவிட மிகவும் பெரிது என்றே நான் நினைக்கிறேன். மேலும் சமணர்கள் அன்றைக்கு நிலவிய சமஸ்கிருத மைய இலக்கியப் போக்குகளை எதிர்த்து நடத்திய போராட்டமும் தமிழ் மொழி தன் பேச்சுவழக்கு எனும் நிலையிலிருந்து இலக்கிய நிலைக்கு உயர முக்கியக் காரணியாக இருந்திருக்கலாம். இவை அனைத்தும் இப்போதைக்கு ஆராய்ச்சிக் கருத்துகளே; தெளிவான ஆதாரங்களாக இன்னும் உருவாகவில்லை.

இந்த நிலைமையில்தான் பாரதிய ஞானபீடத்தின் ஆலோசகர் திரு எல். சி. ஜெயின், வள்ளுவரின் மீது நான் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கினார். தினசரி வாழ்வில் குறள் வலியுறுத்திய அஹிம்சை, அதன் சமூக மற்றும் மனிதநேயப் பார்வை ஆகியவற்றைத் தொகுத்து நோக்கினேன். குறளின் பல்வேறு அதிகாரங்களின் ஊடே மீண்டும் மீண்டும் வாசித்தபோது, நாளுக்கு நாள் இன்னும் தெளிவாக நான் உணர்ந்தது என்னவென்றால், கவிஞர் சொல்வதான மானுடப் பொதுநெறி, சமண மதப் பின்னணியிலிருந்து தோன்றியிருக்க வேண்டும் என்பதே.

பேராசிரியர் அ. சக்கரவர்த்தி, தன் முடிவுகளின்படி, குறளின் ஆசிரியர் ஸ்ரீ குந்தகுந்த ஆச்சாரியர் என்றும் அவரது சீடர் காஞ்சிபுரம் பகுதியின் அதிகம் அறியப்படாத சிற்றரசரான சிவகுமார மஹாராஜா என்றும் அடையாளப்படுத்தியுள்ளார். இது மிகைப்படுத்தப்பட்டது போலத் தோன்றினாலும் அவரது ஆய்வு முடிவுகளை முழுக்கச் சாத்தியமற்றவை என்று சொல்லிவிட முடியாது. சமண மரபு பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இதனுடன் குறளிலிருந்து அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட பெரும்பாலான நூல்கள், சமண நூல்கள் என்பதையும் இணைத்துப் பார்க்கும்போது திருவள்ளுவர் ஒரு சமணர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிறது.

நான் சக்கரவர்த்தியின் அறிமுகத்தில் இருந்தும் பிற முக்கியக் கட்டுரைகளிலிருந்தும் அதிகமாக மேற்கோள் காட்டியிருக்கிறேன். என் பார்வையில் வடக்கு-தெற்கு என்றோ, தமிழ்-சமஸ்கிருதம் என்றோ பிரிவினைப் பார்வைகளைக் கொண்டிருப்பதைக் காட்டிலும் திருவள்ளுவரை ஒரு கவிஞராகவும் உலகை நோக்கி சில நித்திய உண்மைகளைப் பாட முயன்றவராகவும் காண்பதே குறளுக்குச் செய்யும் நியாயமாக இருக்கும். அதன் அறநெறிப் பார்வை சமணத்திலிருந்து வந்திருக்கலாம். ஆனால் குறள் நிச்சயமாக மதம் அல்லது அதுபோன்ற வேறெந்த குறுகிய பிரிவுக்குள்ளும் அடங்கிவிடாத புத்தகம். அது அன்பைப் போல விசாலமானதும் கடலைப் போல அகன்றதும் வானத்தைப் போல உயர்ந்ததுமான ஒன்று. பண்டைய நூலாக இருந்தாலும், நவீன மனிதன் விரும்புகிற அளவுக்கு என்றும் நவீனத்தன்மையுடன் இருப்பதே அதன் மிகப் பெரிய கவர்ச்சி.

குறளிடம் ஒவ்வொரு மனிதனுக்கும் சொல்வதற்கு ஒன்று இருக்கிறது. அது கவிதையாகவோ ஞானமாகவோ இருக்கலாம். மனிதராய் பிறந்த அனைவரும் அதன்வழி பயனடைய முடியும். உலகின் சிறந்த அறநெறி நூல்களின் வலிமை இதில்தான் உள்ளது. அவ்வகையில் உலகுக்குக் கிடைத்துள்ள மிகச்சிறந்த அறநெறி நூல்களில் ஒன்றாக குறள் இருந்தாலும் உலகின் பெரும்பகுதி அதுபற்றிய அறிமுகம் இல்லாமலே உள்ளது. தேவையான விமர்சன ஆழத்துடன் உலக அரங்கில் குறள் முன்வைக்கப்படாததே அதன் காரணம்.

க. நா. சுப்ரமண்யம்

புது தில்லி

தமிழ்ப் புத்தாண்டு நாள், 1986

***

[க. நா. சுப்ரமண்யம் திருக்குறள் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய Tiruvalluvar And His Tirukkural (1987) என்ற நூலின் முகவுரை. தமிழில், டி. ஏ. பாரி.]

***

க.நா.சுப்ரமண்யம் தமிழ் விக்கி பக்கம்:


டி.ஏ. பாரி தமிழ் விக்கி பக்கம்





***

Share:

மராட்டிய கவிதைகள் - தீபா.ஆர்

1

பைடணி*

-ஷாந்தா ஷேலகே

பழைய மர அலமாரியின் அடியில்,  பதுங்கி இருந்தது ஒரு துணி மூட்டை. 


அதில் பழைய உடைகள்,                          

அலங்காரமாக கைவினை செய்யப்பட்ட குழந்தையின் குல்லாய்கள், ஷால்கள் இவற்றோடு, சதுரமாய் மடிக்கப்பட்ட பைடணி  புடவை.       


தேங்காய் நிற முந்தியும், தங்க ஜரிகையும் சேர்ந்து செல்வச் சீருடன் தெரிந்தது.


என் பாட்டி இதே பைடணியைத் தான் அவள் திருமணத்தில் உடுத்தி  

இருந்தாள்.


இதன் முந்தானையை கையில் பிடித்த படியே மூத்தோர் கால்களை வணங்கி, ஆசிர்வாதம் பெற்றாள். 


இந்த பைடணியைச் சுற்றித்  தவழ்கிறது ஒரு மென்மையான மணம். 

நான் அறிந்ததும், அறியாததுமான காலத்தை இணைக்கும் ஒரு உள்ளுணர்வு.


விளக்கு, தூபம் கற்பூரம் எரிந்த எத்தனை ஆவணி மாதங்கள்,

பண்டிகை நாட்கள் ஓடிவிட்டன. 


அவளின் விரல்களின் ஈரத்தை, அதன் மென்மையை அவள் உடலை, அதன் நறுமணத்தை, ஏன் அவளின் மனதையும் கூட தெரிந்து வைத்திருந்தது, ஆண்டுகளாய் அவள் உடுத்திய பைடணி!

 

புதிதின் மிடுக்கில் இருந்த பைடணி  மெல்ல மிருதுவாகி விட்டது. 

அதன் ஒவ்வொரு மடிப்பிலும் வாழ்வு விரிந்ததில், வருடங்கள் ஓடி ,

தன்னை அறியாமலேயே, அவள் மரணித்தும் போனாள்.


எப்போதாவது இந்த பைடணியை  நான் மார்போடு அணைத்துக் கொள்கிறேன். 


அதன் மென்பட்டு தொடுதலில் பாட்டி நெருக்கமாக அமர்கிறாள். எங்களுக்கு நடுவில் காலம் விலகி நின்று  தாழிடுகிறது.


காற்றே, என் நலத்தைக் கூறி என் பாட்டியின் நலத்தை விசாரித்தேன் என்று சொல்லு!

------------------------------------------------------------

*பைடணி - பட்டுச் சேலையின் பெயர்

***

2

தாகினா*

- சஞ்சய்  சௌத்ரி

அழகு மகள் கேட்டாள், 


"அம்மா, உன் கை விரல்களில், 

வைரம் போல ஜொலிக்கும் கற்களுடன்,  மோதிரம் 

ஏன் இல்லை?

 

அம்மா சொன்னாள் ,

"கண்ணம்மா! 

உன் பிஞ்சு விரலால் என் விரலை சுற்றிக்கொள்.

இதை விட விலையுயர்ந்த மோதிரம் இருக்கிறதா என்ன?"


ஆசை மகள் மீண்டும் கேட்டாள், 


"அம்மா ,

உன் கழுத்தில் மஞ்சள் மின்னும் தங்க மாலைகளும், அட்டிகைகளும் 

ஏன் இல்லை?"


அம்மா சிரித்துக் கொண்டே சொன்னாள், 

 "குட்டி , உன் மென்மையான கரங்களால் என் கழுத்தைக் கட்டிக்கொள், 

உன் சிறு இதயம் என் மார்பில் துடிக்கட்டும்.

இதைவிட மேலான ஆபரணம் உலகிலுண்டா?"


குழந்தை அம்மாவின் விரலைப் பிரித்துக் கொண்டு, 

கழுத்தை இருக்கமாகக் கட்டிக்கொண்டு, மார்போடு அணைத்துக் கொண்டாள்!


அம்மாவின் கண்களிலிருந்து விழுந்த வெண் முத்துக்கள் மகளின் கருங்கூந்தலை நனைத்தது.


அம்மா சொன்னாள்,

"குட்டி ,

நம் உள்ளம் மலர்ந்திருப்பது தான் நமக்கு உண்மையான நகை!


எந்த மரமும் வேறொரு மரத்தின் பூவைச் சூடிக்கொண்டு தன்னை அழகாய்க் காட்டிக்கொண்ட வரலாறு இதுவரை நிகழ்ந்ததே இல்லை."

-------------------------------------

*தாகினா - அணிகலன்

***

(கவிதைகள், தமிழில்: தீபா.R)

சாந்தா ஷேலகே:                                                            

                                                







Share:
Powered by Blogger.

இசுமி சிகிபு கவிதைகள் - கடலூர் சீனு

இசுமி சிகிபு, 10 ஆம் நூற்றாண்டு ஜப்பானின் முக்கிய கவிஞர். ஹெயான் அரசவையை சேர்ந்த அரசவை  கவிஞர். அரசவைக்  காதல் பாடல்கள் எனும் வகைமையில், தங்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (14) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் (1) ஆனந்த் குமார் (9) இசுமி சிகிபு (1) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (286) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (2) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (7) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (31) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (4) பாபு பிரித்விராஜ் (2) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (4) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (2) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (15) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (2) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (14) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் (1) ஆனந்த் குமார் (9) இசுமி சிகிபு (1) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (286) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (2) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (7) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (31) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (4) பாபு பிரித்விராஜ் (2) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (4) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (2) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (15) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (2) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive